ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு ஆயத்துக்கள்
(மனிதர்களே! நம்முடைய) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்ட (வேதத்)தை மெய்யாகவே நம்பிக்கை கொள்கின்றார். (அவ்வாறே மற்ற) நம்பிக்கையாளர்களும் (நம்பிக்கை கொள்கின்றனர். இவர்கள்) அனைவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்கின்றனர். தவிர அவனுடைய தூதர்களில் எவரையும் (தூதர் அல்லவென்று) நாங்கள் பிரித்து (நிராகரித்து) விடமாட்டோம் என்றும், "(இறைவனே! உன் வேத வசனங்களை) நாங்கள் செவியுற்றோம். (உன் கட்டளைக்கு) நாங்கள் வழிப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உனது மன்னிப்பைக் கோருகின்றோம். உன்னிடமேதான் நாங்கள் சேர வேண்டியதிருக்கின்றது" என்றும் கூறுகிறார்கள்.
(அல்குர்ஆன் : 2:285)
அல்லாஹ் யாதொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை. அவை தேடிக்கொண்ட நன்மை அவைகளுக்கே (பயனளிக்கும்). அவை தேடிக்கொண்ட தீமை அவைகளுக்கே (கேடு விளைவிக்கும்). "எங்கள் இறைவனே! நாங்கள் (எங்கள் கடமைகளைச் செய்ய) மறந்து விட்டாலும் அல்லது அதில் தவறிழைத்து விட்டாலும் அதைப் பற்றி நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! நீ எங்கள் மீது (கடினமான கட்டளைகளை விதித்து) பளுவான சுமையை சுமத்தி விடாதே. எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது (கடினமான கட்டளைகளை) நீ சுமத்தியவாறு (சுமத்தாதே!) எங்கள் இறைவனே! நாங்கள் தாங்க முடியாத கஷ்டங்களை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் (குற்றங்களை) அழிப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் பாதுகாவலன்! ஆகவே (உன்னை) நிராகரிக்கும் கூட்டங்கள் மீது (வெற்றி பெற) நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!
(அல்குர்ஆன் : 2:286)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி இரண்டு (திருக்குர்ஆன் 02:285 - 286) வசனங்களை இரவு நேரத்தில் ஓதுகிறவருக்கு (மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கப்) போதுமானதாக அவை ஆகிவிடும்.
இதை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் இப்னு யஸீத்(ரஹ்) கூறினார்.
அபூ மஸ்வூத்(ரலி) இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த போது அவர்களை நான் சந்தித்து இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டேன். அப்போது (அல்கமா - ரஹ்- அவர்களிடம் கூறியது போன்றே) என்னிடமும் அதைக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி 4008)
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு முறை ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் உட்கார்ந்திருந்த சமயம் வானில் ஒரு சலசலப்புக் கேட்டது. அவர்கள் தலையை உயர்த்தி, இப்போது வானத்தின் ஒரு கதவு திறந்துள்ளது. இதற்கு முன் அக்கதவு ஒருபோதும் திறக்கப்படவில்லை. அதிலிருந்து ஒரு மலக்கு இறங்கினார். அவர் இதற்கு முன் பூமிக்கு எப்போதும் இறங்கியதில்லை, அம்மலக்கு நபிகளாரின் சமுகம் வந்து ஸலாம் சொல்லிவிட்டு, எந்த நபிக்கும் கொடுக்கப்படாத இரு ஒளிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன என்ற நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒன்று சூரத்துல் ஃபாத்திஹா, மற்றோன்று சூரத்துல் பகராவின் கடைசி இரு ஆயத்துகள். தாங்கள் இதிலிருந்து எதை ஓதினாலும் அது தங்களுக்குக் கிடைக்கும்'' என்று சொன்னார்.
(முஸ்லிம்)
வானம், பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அல்லாஹ் ஒரு நூல் (புத்தகம்) எழுதினான். அந்த நூலிளிருந்து இரு ஆயத்துகளை இறக்கி வைத்தான். அதைக்கொண்டே சூரத்துல் பகராவை அல்லாஹ் முடித்துள்ளான். எந்த வீட்டில் இவ்விரு ஆயத்துகள் மூன்று இரவுகள் தொடர்ந்து ஓதப்படுமோ அந்த வீட்டை ஷைத்தான் நெருங்கவும் மாட்டான்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)
எவர் சூரத்துல் பகராவின் கடைசி இரு ஆயத்துகளை இரவில் ஓதுவாரோ அவருக்கு இவ்விரு ஆயத்துகளும் போதுமாகிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூமஸ்ஊத் அன்ஸாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(திர்மிதீ)
தெளிவுரை:- இரு ஆயத்துகளும் போதுமாகிவிடும் என்பதற்கு இரு கருத்துகள் கூறப்பட்டுள்ளன. முதலாவது, இதை ஓதுபவர் அந்த இரவு முழுமையும் எல்லாத் தீங்குகளிலிருந்தும் பாதுகாக்கப்படுவார் என்பதாகும். மற்றோரு கருத்து, இந்த இரு ஆயத்துகளும் தஹஜ்ஜத் தொழுகைக்குப் பகரமாகிவிடும் என்பதாகும். (நவவி)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஈஸா நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.