சூரத்துல் இஃக்லாஸ்
(ஏகத்துவம்)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹிம்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ
(நபியே! மனிதர்களை நோக்கி,) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன் தான்.
(அல்குர்ஆன் : 112:1)
اَللّٰهُ الصَّمَدُ
(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) (அல்குர்ஆன் : 112:2)
ۙ وَلَمْ يُوْلَدْ ۙ لَمْ يَلِدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவு மில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (அல்குர்ஆன் : 112:3)
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
(தவிர) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை. (அல்குர்ஆன் : 112:4)
இந்த சூரா இறங்கிய பின்னனி
நபி(ஸல்) அவர்களிடம் இணை வைப்பவர்கள் கேட்டார்கள், உமது இறைவனின் குடும்ப பரம்பரையைக் கூறுவீராக!
அப்போது அல்லாஹுத் தஆலா ஜிப்ரீல்(அலை) மூலம் இந்த அத்தியாயத்தை இறக்கி வைத்தான்.
மிகச்சுருக்கமான சிறிய இந்த அத்தியாயத்தின் மூலம் அல்லாஹ், தன்னைப்பற்றி கருத்தாழமிக்க தெளிவான விளக்கத்தை உலக மக்களுக்கு விளக்கி, "இறைவன் ஒருவன்" மட்டுமே என்ற ஏகத்துவ தத்துவத்தை தெளிவுபடுத்தியுள்ளான்.
முதலாவது வசனத்தின் மூலம், பல கடவுள் கொள்கையை இல்லாமல் ஆக்கி, 'இறைவன் ஒருவன்' என்பதை உறுதிப்படுத்தியுள்ளான்.
2-வது வசனத்தின் மூலம், அல்லாஹ்வுக்கு படைப்பினங்களிடம் எந்த தேவையும் இல்லை. அவனுடைய உதவி, கருணை இன்றி இவ்வுலகில் யாரும் வாழ முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளான்.
3-வது வசனத்தின் மூலம், அல்லாஹ்வுக்கு மனைவி-மக்கள் இல்லை. தாய்-தகப்பனும் இல்லை என்று கூறியதன் மூலம் அவனது பரம்பரை-வம்சாவழி பற்றி கேட்டவர்களின் வாயை அடைத்து விட்டான்.
4-வது வசனத்தின் மூலம், அவனுடைய எந்தப் பண்புகளிலும் அவனுக்கு நிகராக யாரும், எங்கும், எப்பொழுதும் இல்லை எனக்கூறி, தன்னைப்போல் யாரும் இருக்க முடியாது. தான் மட்டுமே (இறைவன்) அல்லாஹ் என்ற ஏகத்துவ தத்துவத்தை எடுத்தியம்பியுள்ளான்.
இந்த அத்தியாயத்தின் சிறப்புகள்
குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி:
உங்களில் எவருக்கும் ஓரிரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலாது?'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) கேட்டதற்கு, ஒரு இரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை எவரால் ஓத முடியும்?' என ஸஹாபாக்கள் கேட்டார்கள். ''குல்ஹுவல்லாஹு அஹத்'' சூரா ஓதுவது 'குர்ஆனின் மூன்றிலொரு பகுதி ஒதியதற்கு சமம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.(முஸ்லிம்)
சுவர்க்கத்திற்கு சொந்தக்காரர்:
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ''ஒரு முறை நான் நபி (ஸல்) அவர்களுடன் வந்த சமயம், ஒருவர் குல்ஹுவல்லாஹு அஹத் சூரா ஓதுவதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், கடமையாகிவிட்டது'' என்றார்கள். யாரஸூலல்லாஹ், என்ன கடமையாகிவிட்டது? என்று நான் கேட்க, ''சொர்க்கம் கடமையாகிவிட்டது'' என்று சொன்னார்கள். ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அந்த மனிதரிடம் சென்று இந்நற்செய்தியைச் சொல்ல விரும்பினேன். ஆயினும் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களுடன் மதிய உணவு உண்பது தவறிப் போய்விடுமே என்ற எண்ணத்தால் உணவிற்கு முதலிடம் கொடுத்தேன். (நபி (ஸல்) அவர்களுடன் உணவு அருந்துவது பெரும் பாக்கியம் ஆகும்) அதன் பிறகு அம்மனிதர் இருந்த இடத்திற்கு வந்த போது அவர் அவ்விடத்திலிருந்து சென்றுவிட்டிருந்தார்''. (முஅத்தா இமாம் மாலிக்)
அல்லாஹ்வின் நேசம்:
ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ''நபி (ஸல்) அவர்கள் ஒருவரை ஒரு குழுக்கு தலைவராக நியமித்து அனுப்பி வைத்தார்கள், அவர் நண்பர்களுக்குத் தொழ வைப்பார். (எந்த சூராவை ஓதினாலும் கடைசியில் ''குல்ஹுவல்லாஹு'' சூராவை ஓதிமுடிப்பார். அவர்கள் திரும்பி வந்த பின், நபி (ஸல்) அவர்களுக்கு இதைப்பற்றித் தெரிவித்தார்கள், ஏன் இவ்வாறு செய்தார்? என அவரிடமே கேளுங்கள்', என்று நபி (ஸல்) அவர்கள் கூற, மக்கள் அவரிடம் கேட்டனர். 'இந்த சூராவில் ரஹ்மானின் தன்மைகள் வர்ணிக்கப்பட்டுள்ளன, அதனால் இதை அதிகமாக ஓத என் மனம் விரும்புகிறது' என்றார், அவரது இந்த பதிலைக் கேள்விப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வும் அவரை நேசிக்கிறான் என்ற செய்தியை அவருக்குச் சொல்லிவிடுங்கள்'' என்று கூறினார்கள். (புகாரி)
சுவர்க்கத்தில் மாளிகை:
நபி(ஸல்) அவர்கள் கூறியதாக சயீது இப்னு முசய்யப்(ரழி) கூறுகிறார்கள். எவரொருவர் 'குல்ஹுவல்லாஹு' அத்தியாயத்தை பத்து தடவை ஓதுகிறாரோ, அவருக்கு சுவர்க்கத்தில் அல்லாஹ் ஒர் மாளிகை கட்டுகிறான். எவர் இருபது தடவை ஓதுகிறாரோ, அவருக்கு சுவர்க்கத்தில் அல்லாஹ் இரண்டு மாளிகை கட்டுகிறான். எவர் முப்பது தடவை ஓதுகிறாரோ, அவருக்கு சுவர்க்கத்தில் அல்லாஹ் மூன்று மாளிகை கட்டுகிறான். அப்போது உமர்(ரழி) அவர்கள், எங்கள் மாளிகையை அதிகரித்தால்? எனக் கேட்டார்கள். அதற்கு, இது(சுவர்க்கம்) அதை(மாளிகையை) விட விசாலமானது என்று ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரமீ)
எனவே, இந்த அத்தியாயத்தை நாமும் நேசித்து வாசிப்போம். இறைவனின் நல்லருளை ஈருலகிலும் பெற்று மகிழ்வோம்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஈஸா நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.