ஹஜ்ரத் நிஜாமுத்தீன் (ரஹ்)
முஹம்மது நிஜாமுத்தீன் ஒளலியா, (கி.பி. 1238 - கி.பி. 1325) இவர்கள் பிரபலமாக ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்று அழைக்கப்படுகிறார்கள். ‘மஹ்பூபெ இலாஹி’, ‘சுல்தானுல் மஷாயிஃ’ என்னும் பட்டங்களைப் பெற்ற இந்த மாபெரும் இறைநேசச் செல்வரின் இயற்பெயர் முஹம்மது என்பதாகும். இவர்கள் கி.பி.1238 ஹிஜ்ரி 634இல் உத்திரப்பிரதேசம் மாநிலம் பதாயூனில் பிறந்தனர். ஹுஸைன் (ரழி) அவர்களின் வழி வந்த இவர்களின் மூதாதையர் புகாராவிலிருந்து இங்கு வந்து வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் தந்தை சையிது அஹ்மது இவர்கள் ஐந்து வயதுச் சிறுவராக இருக்கும் பொழுதே காலமாகி விட்டனர். இவரது அன்னை சுலைகாவால் வளர்க்கப்பட்ட இவர்கள் இளமையிலேயே ஏழு வகைக் ‘கிராஅத்’துகளையும் பயின்று தேர்ச்சி பெற்றனர். பன்னிரண்டு வயதில் மார்க்க அறிஞர்களுடன் தர்க்கம் செய்வதில் சிறந்து விளங்கி, தர்க்க வல்லுநர் என்று பொருள்படும் ‘பஹ்ஹாஸ்’ என்ற சிறப்புப் பெயரும் பெற்றனர்.
தவ மடத்தில் தங்கி ஆன்மீகப் பயிற்சி
தம் அன்னையுடன் டில்லி வந்த இவர்கள் மெளலானா ஷம்சுத்தீன், மெளலானா கமாலுத்தீன் ஷஹீத் ஆகியவர்களிடம் கல்வி பயின்றனர். இதன் பின் பாக்பத்தன் சென்று, பாபா பரீதுத்தீன் கஞ்செ ஷகர் (ரஹ்) அவர்களிடம் தீட்சை பெற்ற இவர்கள், பக்தியார் காக்கி (ரஹ்) அவர்களின் தவ மடத்தில் தங்கி ஆன்மீகப் பயிற்சி பெற்று வந்தனர். ஒரு தடவை கடனுக்கு உப்பு வாங்கி வந்து இவர்கள் உணவுக்குப் பயன்படுத்தியதைத் தம் ஞான திருஷ்டியால் விளங்கிக் கொண்ட பக்தியார் காக்கி (ரஹ்) அவர்கள், “கடப்பான செயலின் வாசனையை நான் இங்கு நுகர்கிறேனே” என்று கூற, இவர்கள் தாம் கடனுக்கு உப்பு வாங்கி வந்ததைக் கூற, “ஒரு தர்வேஷ் கடன் வாங்கி உயிர் வாழ்வதைவிட பட்டினி கிடந்து சாவது மேல்” என்று கூறினர் அவர்கள். அன்றிலிருந்து இவர்கள் தம் வாணாளில் எவரிடமும் கடன் வாங்கும் வழக்கத்தை விட்டொழித்தனர்.
ஆன்மீகப் பயிற்சிக்கு பின் ஆரம்ப கால டில்லி வாழ்க்கை
ஆன்மீகப் பயிற்சி முடிந்த பின் டில்லியின் அண்மையிலுள்ள கியாஸ்புராவில் வாழ்ந்து வந்த இவர்கள் வறுமையிலும், துன்பத்திலும் உழன்றனர்; பல நாட்கள் பட்டினியாலும் நலிவுற்றனர். அப்பொழுது இவர்களின் அன்னை தங்களை இறைவனின் விருந்தினர்கள் என்று கூறிக் கொள்வார்கள்.
ஒரு தடவை இவர்கள் பல நாட்கள் பட்டினி கிடந்த பொழுது, அண்டை வீட்டுப் பெண் ஒருவர் இவர்களுக்குச் சிறிதளவு மாவு கொண்டு வந்து கொடுக்க, அதைக் கொண்டு ரொட்டி சுட்டு உண்ண வாயிலெடுத்து வைத்த பொழுது ஒரு தர்வேஷ் வந்து பிச்சை கேட்க, இவர்கள் அந்த ரொட்டி வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை அப்படியே எடுத்து அவரிடம் கொடுக்க, அவர் அதில் சிறிதளவு பிய்த்து தின்று விட்டு அந்தப் பாத்திரத்தையும் கீழே போட்டு உடைத்து விட்டு, “இன்று முதல் உம் வறுமையும் தொலைந்தது. நீர் அகம், புறம் ஆகிய வாழ்க்கைகளின் அரசராக்கப் பட்டீர்” என்று கூறி மறைந்தார்.
இதிலிருந்து இவர்களின் வாழ்வில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. காணிக்கைகள் இவர்களின் காலடியில் வந்து குவிந்தன. அவற்றை எல்லாம் அடுத்த நாளுக்கென ஓர் அணுவும் வைக்காது ஏழைகளுக்கு அறம் செய்து வந்தார்கள் இவர்கள்.
இவர்களின் தரிசனைக்காக ஏராளமாக அங்கு வந்த மக்கள்
இவர்களின் மாணவர்களில் ஒரு செல்வர் இவர்களுக்கு மூன்று மாடிகளுள்ள ‘கன்கா’ ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அதன் மேல் மாடியில் வாழ்ந்து வந்த இவர்கள், தம்முடைய முதிய வயதிலும் ஒவ்வொரு வேளைத் தொழுகைக்கும் ‘ஜமாஅத்’துடன் தொழுவதற்குப் படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். மக்கள் இவர்களின் தரிசனைக்காக ஏராளமாக அங்கு வந்து குழும, இவர்கள் அதை விட்டும் வெருண்டோட எண்ணிய பொழுது இனம் தெரியாத எவரோ ஒருவர் இவர்களின் முன் தோன்றி, “அதை விட்டு அகல வேண்டாம்” என்று கூறிச் சென்றார்.
சுல்தான் அலாவுத்தீன் கில்ஜி இவர்கள் மீது அளவற்ற அன்பு செலுத்தினார். இவர்களின் ஆசி பெற்றுச் சென்ற ஒவ்வொரு படையெடுப்பும் அவருக்கு வெற்றிமயமாகவே இருந்தது. இவ்வளவுக்கும் அவருக்கு இவர்கள் ஒரு தடவைகூடப் பேட்டி அளிக்கவில்லை. இவர்களின் தரிசனைக்காகத் தாம் எவ்வாறாவது அங்கு வரப்போவதாக அவர் கூறியபொழுது, “என் இல்லத்தில் இரண்டு வாயில்கள் இருக்கின்றன. நீர் ஒரு வாயில் வழியாக நுழைவீராயின், நான் மறு வாயில் வழியாக வெளியேறி விடுவேன்” என்று இவர்கள் அவருக்கு சொல்லி அனுப்பினர்.
ஆன்மீக மாணவர்களில் அளவுகடந்த பக்தி கொண்ட அமீர் குஸ்ரு
இவர்களின் ஆன்மீக மாணவராக அமீர் குஸ்ரூவும், சுல்தான் அலாவுத்தீன் கில்ஜியின் மக்களான கிஸ்ர்கானும், ஷாதிகானும் இருந்தனர். அமீர் குஸ்ரு இவர்கள் மீது கொண்டிருந்த பக்தியோ அளவிறந்ததாகும். அமீர் குஸ்ரு வுக்கும், இவர்களுக்கும் இடையில் இருந்த ஈடுபாடோ விவரிக்க முடியாத தன்மையதாய் இருந்தது. முதன் முதலாக அமீர் குஸ்ரு இவர்களை சந்தித்த பொழுது, “உம் ஒளி நிரம்பிய நெற்றியை என்னுடைய விலாயத்தின் கேடய ஒளி மேலும் ஒளிரச் செய்யும்” என்று கூறினார். இவர்களிடம் அவர் தீட்சை பெற்றார். இவர்களைப் பற்றி அவர் புகழ்ப்பா பாடி இவர்களின் முன்னிலையில் அவர் படிக்க அது கேட்டு மகிழ்ந்த நிஜாமுத்தீன் அவ்லியா, “உமக்கு என்ன வேண்டும்?” என்று கேட்க, “என் சொல்லில் இனிமையும், உருக்கமும் வேண்டும்” என்று அமீர் குஸ்ரு பதில் கூறினார். தம் நாற்காலியின் கீழிருந்த தட்டிலிருக்கும் சீனியில் சிறிதளவு உண்ணுமாறு கூற அவ்விதமே அமீர் குஸ்ரு செய்ய அன்றிலிருந்து, அவருடைய தொனியில் இனிமையும், பாட்டில் உருக்கமும் ஏற்பட்டன. அமீர் குஸ்ருவின் பாடல்களைக் கேட்டு மக்கள் மெய்ம்மறந்த நிலையிலானார்கள்; சிலர் பிரக்ஞையற்ற நிலைக்குள்ளானார்கள்; சிலர் உயிர் துறந்தும் இருக்கிறார்கள்.
ஒரு முறை ஒருவர் நிஜாமுத்தீன் அவ்லியாவை அணுகித் தம் அவல நிலையை எடுத்துரைத்து உதவி வேண்ட, தமக்கு நான்கு நாட்களாக யாதொரு பணமும் வரவில்லை என்று கூறிய அவ்லியா தம் இரு மிதியடிகளையும் அவரிடம் கொடுத்து அவற்றை விற்றுத் துயர் போக்கிக் கொள்ளுமாறு கூறினர். அவற்றை பெற்று வரும் பொழுது வழியில் அவரைச் சந்தித்து அமீர் குஸ்ரு நடந்த வரலாற்றை அறிந்து தமக்கு இளவரசர் அன்பளிப்பாகத் தந்த ஐந்து லட்சம் ரூபாயையும் அவரிடம் கொடுத்து அந்த மிதியடிகளை வாங்கிக் கொண்டு அவற்றைத் தம் தலை மீது சுமந்த வண்ணம் அவ்லியாவை அடைந்து வழியில் நிகழ்ந்ததைக் கூறினார். அதுகேட்ட அவ்லியா, “துருக்கியே! நீர் அவற்றை மலிவான விலைக்கு வாங்கி விட்டீரே” என்று கூறினர். அது கேட்ட அமீர் குஸ்ரு, “அந்த மனிதர் நான் கொடுத்த பணத்தைக் கொண்டு திருப்தியுற்றுச் சென்றுவிட்டார். அதற்கு மாறாக அவர் இந்த மிதியடிகளுக்குப் பகரமாக என் சொத்து முழுவைதையும் மட்டுமல்ல, என் ஆவியை வேண்டினும் கொடுத்திருப்பேன்” என்று இவர் பதிலுரைத்தார்.
அமீர் குஸ்ரு மீது அளவற்ற அன்பு செலுத்திய இவர்கள், “நியாயத் தீர்ப்பு நாளின் போது, ‘நீ என்ன கொண்டு வந்தாய்?’ என்று இறைவன் என்னிடம் வினவின் நான் அமீர் குஸ்ரூவையே கொண்டு வந்தேன் என்று கூறுவேன்” என்று அடிக்கடி கூறுவர். மற்றொரு முறை இவர்கள் தம் மாணவர்களை நோக்கி, “இரண்டு பேரை ஒரே குழியில் அடக்குவது மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டிருபின் நான் என்னுடைய புதைகுழியில் அமீர் குஸ்ரூவை அடக்குமாறு கூறி இருப்பேன்” என்று சொன்னார்கள்.
நாளை நடப்பதை யார் அறிவார்?
இவர்களின் ஆன்மீக மாணவர்களான கிஸ்ர் கானையும், ஷாதிகானையும் கொன்று விட்டு அரியணை ஏறிய குத்புத்தீன் முபாரக் ஷா கில்ஜி இவர்களின் மீது விரோதம் கொண்டு, மந்திரி, பிரதானிகள் எவரும் இவர்களின் ‘கன்வா’வுக்குச் செல்வதைத் தடுத்ததோடு, இவர்களையும் தம் முன் ஆஜராகுமாறு பணித்தார். அதைக் கேட்டு சிரித்த இவர்கள், “நாளை நடப்பதை யார் அறிவார்?” என்று கூறினர். அன்றிரவு அவர் கொல்லப்பட்டார்.
பல்லாயிரவர் நேர்வழி பெறச்செய்து காலமாயினர் இறைநேசர்
இவர்கள் பற்பல அற்புதங்கள் ஆற்றினர். இவர்களின் அறிவுரையால் பல்லாயிரவர் நேர்வழி பெற்றனர். பல்பனின் காலத்திலும், கில்ஜியின் காலத்திலும் வாழ்ந்த இவர்கள் கியாஸுத்தீன் துக்ளக் டில்லி அரியணையில் வீற்றிருக்கும் பொழுது, ஹிஜ்ரி 725 ரபீயுல் அவ்வல் 18ஆம் நாள் (3 ஏப்ரல் கி.பி. 1325) காலமாயினர். அன்று காலையிலேயே தம் உடமைகளையெல்லாம் ஏழைகளுக்கு அறம் செய்து முடித்த இவர்கள். இறப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன் தம் பெட்டியைத் திறந்து அதிலிருந்து தொழுகை விரிப்பையும், போர்வையையும், ஜபமாலையையும், கைத்தடியையும் எடுத்து தம் ஆன்மீக மாணவர் சிராஹ் தெஹ்லவீயிடம் ஒப்படைத்து விட்டுக் காலமாயினர் என்று கூறுவர்.
ஹஜ்ரத் நிஜாமுத்தீன் (ரஹ்) அவர்களின் அடக்கவிடம்
ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவர்கள் அடங்கியுள்ள அடக்கத்தலம் நிஜாமுத்தீன் தர்கா என்றழைக்கப்படுகிறது. இது தெற்கு தில்லி மாவட்டத்தில் உள்ள மேற்கு நிஜாமுத்தீன் பகுதியில் அமைந்துள்ளது.
ஹஜ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்கள் பெயரால் தெற்கு தில்லி மாவட்டத்தில் ஒரு பகுதிக்கு நிஜாமுதீன் என பெயரிடப்பட்டது. மேலும் நிர்வாக வசதிக்காக நிஜாமுத்தீன் வட்டாரம் மேற்கு நிஜாமுத்தீன், கிழக்கு நிஜாமுத்தீன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு நிஜாமுத்தீன் பகுதியில் புகழ்பெற்ற ஹஜ்ரத் நிஜாமுத்தீன் தர்காவும், ஹஜ்ரத் நிஜாமுத்தீன் (Railway Station) தொடருந்து நிலையமும் உள்ளது.
சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
உவைஸுல் கரனீ (ரஹ்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கமுதி ஷாஹ் அப்துர் ரஹ்மான் முஸாஃபிர் வலியுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...