ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (நாகூர்)
மிகப் பெரும் இறைநேசச் செல்வர்களாகிய இவர்கள் வட இந்தியாவில் உள்ள மாணிக்கப்பூரில் ஹிஜ்ரி 910 ரபீஉல் அவ்வல் பிறை 10 (கி.பி. 1490) இல் பிறந்தார்கள். தந்தை சையிது ஹஸன் குத்தூஸ், இமாம் ஹஸன் (ரலி) அவர்களின் வழி வந்தவர். அன்னை சையிதா பாத்திமா இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் வழி வந்தவர். இவர்கள் முஹம்மது கெளது குவாலியரி (ரஹ்) அவர்களிடம் ஆன்மீகப் பயிற்சி பெற்றார்கள். பின்னர் அவர்களின் ஆசி பெற்று அவர்கள் தங்களுக்கு அளித்த “ஜவாஹிருல் ஹம்ஸா” என்ற நூலையும் பெற்றுக் கொண்டு அவர்களின் ஆன்மீக மாணவர் 404 பேர்களுடன் ஹிஜ்ரி 947 ஷவ்வால் பிறை 6 திங்கட்கிழமை புறப்பட்டு உலகின் நாலா பக்கங்களுக்கும் சென்று தீன் சுடர் கொளுத்தினார்கள்.
மக்கா சென்று ‘ஹஜ்’ செய்து விட்டு மதீனா சென்று அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தை தரிசித்து விட்டு ஒன்பது ஆண்டுகள் அரபு நாட்டில் சுற்றுப் பயணம் செய்தார்கள். இஸ்தம்பூல் சென்ற இவர்களைச் சுல்தான் முஹம்மது உதுமான் கான் வரவேற்று உபசரித்தார். பின்னர் பக்தாது சென்று தம் பாட்டனார் முஹ்யித்தீன் ஆண்டகையின் அடக்கவிடத்தின் முன் நின்று அவர்களுக்கு ‘ஸலாம்’ உரைக்க ‘வ அலைக்கு முஸ்ஸலாம்’ எனப் பதில் வந்தது. பின்னர் மக்கா வந்து ஜித்தா துறைமுகத்தில் கப்பலேறிப் பொன்னானி வந்திறங்கிய இவர்கள் மஹல்ல தீவு, இலங்கை ஆகிய இடங்களுக்குச் சென்றார்கள். இலங்கையில் ஆதம் மலையைத் தரிசித்து விட்டுப் பாம்பன் வழியாய் வந்து கீழக்கரை, காயல்பட்டணம் ஆகிய ஊர்களுக்குச் சென்று விட்டு மேலப்பாளையம் வந்து அங்கு நாற்பது நாள்கள் தங்கியிருந்தார்கள்.
பின்னர் மதுரைக்கு அண்மையிலுள்ள நத்தம், ஆயக்குடி, பொதிகை மலை ஆகிய இடங்களுக்குச் சென்றார்கள். பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருந்த ரிஷிகள் இவர்கள் மாண்பினை உணர்ந்து இவர்கள் கரம் பிடித்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். அதன் பின் திருச்சி வந்த இவர்கள் நத்ஹர் வலி அவர்களின் அடக்கவறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு மூன்று நாள்கள் இருந்தார்கள். அங்கிருந்து தஞ்சை வந்த இவர்கள் தஞ்சை மன்னன் அச்சுதப்ப நாயக்கனுக்குச் செய்யப்பட்ட சூனியத்தை எடுத்தார்கள். கை, கால் நீட்ட முடியாது முடமாக்கப்பட்டிருந்த அவன் உடனே நலன் பெற்று எழுந்து இவர்களுடைய பாதங்களில் பொன்னையும் மணியையும் குவிக்க, “இவை எனக்கு வேண்டா, நான் இருந்து வணக்கம் செய்ய நான் கேட்கும் பொழுது ஒரு துண்டு நிலம் கொடு!” என்று கூறி விட்டுத் தேராம்பேட்டை, கூத்தாநல்லூர் வழியாக நாகூர் வந்து தங்கினார்கள்.
அதனை அறிந்த தஞ்சை மன்னன் அங்கு வந்து இவர்கள் தங்கியிருக்க நிலம் நல்கி அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டி நின்றான். அவ்விதமே இவர்களும் செய்தார்கள். அங்கேயே இவர்கள் தங்கி வணக்கம் நிகழ்த்தி வந்தார்கள். இடையில் இவர்கள் மரக்கலம் ஏறிப் பார்மாவில் உள்ள தர்னாச்சேரிக்கும் சென்று வந்தார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்கள் நாகூரில் ஹிஜ்ரி 978 ஜமாதில் ஆகிர் பிறை 10 வெள்ளிக்கிழமை அதிகாலையில் காலமானார்கள். இவர்களது அடக்கவிடத்தின் மீது தர்கா எழுப்பப் பட்டு அங்கு ஆண்டு தோறும் இவர்களது நினைவு விழா கொண்டாடப்படுகிறது.
ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் லாகூரில் இருந்தபொழுது அபூபக்ர் (ரலி) அவர்களின் வழி வந்த ஷைகு நூருத்தீன் முப்தி தமக்கு மகப்பேறு இல்லாக் குறையை இவர்களிடம் முறையிட்டார். இவர்கள் தாம்பூலத்தை மென்று அவர் கையில் கொடுத்து அதனை அவர் மனைவியிடம் கொடுத்து அருந்தக் கூறுமாறு பணித்து, “உங்களுக்குப் பல குழந்தைகள் பிறக்கும். முதன் முதலாகப் பிறக்கும் குழந்தை எனக்குரியது. அதற்கு யூசுஃப் எனப் பெயரிட்டு வளர்த்து என்னிடம் அனுப்பி வைத்து விடுங்கள்!” என்று கூறினார்கள். அந்த யூசுஃப் சாஹிபு அவர்களின் வழித்தோன்றல்களே இன்று நாகூரில் வாழும் சாஹிபுமார்களாவார்கள்.
ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் மக்காவில் ஹரம் ஷரீஃபில், வைத்து ஒரே இரவில் எழுதி முடித்துத் தங்கள் மகன் யூசுஃப் சாஹிபிடம் கொடுத்த குர் ஆன் பிரதி நாகூரில் உள்ள ‘அஜ்மீர் ஹெளஸில்’ உள்ளது. இவர்களின் திருஓடு, அஸா, தஸ்பீஹ், பச்சைத்துணித் தொப்பி, இவர்களின் ஆசான் முஹம்மது கெளது குவாலியரி தம் கையால் எழுதி இவர்களிடம் கொடுத்த ‘ஜவாஹிருல் ஹம்ஸா’ வின் பிரதி ஆகியவையும் அங்கு இருக்கின்றன. முளைக்கம்பு இல்லாத இவர்களின் மிதியடிக் கட்டை இவர்களது அடக்கவிடத்தில் இருக்கிறது.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கமுதி ஷாஹ் அப்துர் ரஹ்மான் முஸாஃபிர் வலியுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...