Home


சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்)

        சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் இயற்பெயர் சதக்கா என்பதாகும். இவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களின் வழி வந்த சுலைமான் வலி அவர்களுக்கும், இஸ்லாத்தை தழுவி எமனேஸ்வரத்தில் வந்து தங்கி வாழ்ந்து வந்த ஒரு வட நாட்டு பிராமணக் குடும்பத்தில் தோன்றிய பாத்திமா என்ற மங்கைக்கும் மூன்றாவது மகனாகக் காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1042ஆம் ஆண்டில் பிறந்தனர். இவர்களும், இவர்களுடன் பிறந்த நால்வரும் இறைநேசச் செல்வராகவே விளங்கினர். இவர்களின் பாட்டனார் சதக் நெய்னார். ஷாஹுல் ஹமீது ஆண்டகையிடம் தீட்சை பெற்று, அவர்களின் ஊழியத்தில் சில காலம் இருந்த பொழுது அவருக்கும் ஏனையோருக்கும் சிறு சச்சரவு ஏற்பட்டு அவர்கள் இவரை ஏசியதாகவும், அதனை ஷாகுல் ஹமீது ஆண்டகை தடுத்து அவரின் பேரராக ஒரு குத்பு தோன்றப் போவதாக முன்னறிவிப்புச் செய்ததாகவும் அதற்கேற்ப இவர்கள் பிறந்தனரென்றும் கூறுவர்.

கல்வி கற்று அதன் வழி நடந்தது

துவக்கத்தில் தம் தந்தையிடம் கல்வி கற்ற இவர்கள், பின்னர்த் தம் தந்தையின் உற்ற நண்பரான அதிராம்பட்டினம் சின்ன நெய்னா லெப்பை ஆலிமிடம் கல்வி கற்றுத் தலைப் பாகையும் மேலங்கியும் நல்கப் பெற்றனர். பின்னர் இவர்கள் தங்களின் ஊர் திரும்பி அறிவு தேடுவதிலும், வணக்கத்திலும், மக்களுக்கு அறிவுரை வழங்குவதிலும் ஈடுபட்டனர்.

முகலாய மன்னர்  பாதுஷா ஒளரங்கஜீபின் நட்பு

        இக்காலை இவர்களின் புகழ் டில்லியில் அரசாண்டு வந்த ஒளரங்கஜீபின் செவியிலும் பட, அவர் இவர்களைக் காண விரும்பி டில்லி வருமாறு கூற அதனை இவர்கள் மறுக்க, தென்னாட்டின் முப்தி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் கூற, அதனையும் இவர்கள், “துறவிகள் அரசு உத்தியோகம் ஏற்க முடியாது” என்று கூறி மறுத்து விட்டார்கள். பின்னர் ஒளரங்கஜீப் இவர்களின் மகன் முஹம்மது லெப்பை ஆலிமைத் தென்னாட்டிற்கு முப்தியாக நியமித்து, ஜாகீர்களும் வழங்கி அதற்கான செம்புப்பட்டயமும் எழுதி அனுப்பினார். இறுதி வரை இவர்களுக்கும் ஒளரங்கஜீபுக்கும் இடையே நெருங்கிய நட்புறவு இருந்து வந்தது. இவர்கள் அரபியில் ஒரு புகழ்ப்பா மாலை பாடியுள்ளனர். அதிலுள்ள ஒவ்வொரு  ‘பைத்’தும் ஒளரங்குஷா என்று முடிவுறும்.

குத்புஸ்ஸமான் என்ற பட்டம்

        கிள்ரு (அலை) அவர்களால் ‘குத்புஸ்ஸமான்’ என்று பட்டம் சூட்டப் பெற்ற இவர்களுக்கு அவற்றைத் தவிர்த்துப் பதினேழு பட்டங்கள் வரை உள்ளன. அவற்றில் முக்கியமானவை ‘ஷாஹுஷ் ஷரீஅத்’ (ஷரீஅதின் மன்னர்), ‘மாதிஹுர் ரசூல்’ (அண்ணல் நபியைப் புகழ்பவர்),  ‘ஸுல்தானுல் உலமாயில் அரபி வல் அஜம்’ (அரபி, அரபி அல்லாத மார்க்க மேதைகளின் மன்னர்) என்பதாகும்.

ஹஜ்ஜுக்கு சென்ற இடத்தில் அல்லாஹ்வின் அருட்கொடை

        இவர்கள் ஹஜ்ஜுச் செய்ய மக்கா சென்றிருந்த பொழுது அங்கு ஹரம் ஷரீஃபில் வைத்து ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு  ஒரு நூலை ஓதிக் கொடுத்துக் கொண்டிருந்தக்கால், ஒரெழுத்து அதில் தவறாக எழுதப்பட்டிருந்ததனால் அதற்குப் பொருள் விரிக்க இயலாது அவ்வாசிரியர் திணறினார். அப்பொழுது தொழுகைக்கு பாங்கு சொல்லப் படவே எல்லோரும் எழுந்து தொழச் சென்று விட்டனர். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த இவர்கள், அந்நூலை எடுத்து, அதில் தவறாக எழுதப்பட்டிருந்த எழுத்தைத் திருத்தி வைத்து விட்டுத் தாமும் தொழுது விட்டு, அங்கு வந்து வீற்றிருந்தனர். நூலைத் திறந்த ஆசிரியர் அதில் அவ்வெழுத்து திருத்தப் பெற்றிருப்பதையும், பொருள் தெளிவாக விளங்க வருவதையும் கண்டு மகிழ்ந்து அதனைத் திருத்தியவர்கள் இவர்கள் தாம் என்பதையும் விசாரித்தறிந்து, “தங்கள் பெயர் என்ன? என்று வினவ, “சதக்கா” என்று இவர்கள் பதிலிறுக்க, “இத்தருணத்தில் தங்களை அல்லாஹ்வே எங்களுக்குத் தன் அருட்கொடையாக அனுப்பி வைத்தான்” என்று கூறி அல்லாஹ்வின் அருட்கொடை என்று பொருள் படும் ‘சதக்கத்துல்லாஹ்’ என்று இவர்களை விளித்தார். இதிலிருந்து இப்பெயரே பிரபலமாகி விட்டது.

அரபியில் தவற்றைச் சுட்டிகாட்டிய இவர்களது புலமை

        அரபியில் சிறந்த புலமை பெற்றிருந்த இவர்கள் ‘ஸஞ்சானீ’ என்ற பிரபல அரபி இலக்கண நூலின் ஆசிரியர், ‘மஹ்பூஸ்’ என்ற பாடத்தில் செய்திருக்கும் தவற்றைச் சுட்டிக்காட்டி ஒரு நூலே எழுதியுள்ளனர். முந்திய எழுத்து ஸவருடையதாக இருந்தால் மட்டும் வஸ்லுடைய ஹம்ஸ் வரும் என்று மஹ்பூஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு நிபந்தனையிடுவது அவசியமில்லை என்றும் முந்திய எழுத்து ‘ஸேர்’ அல்லது ‘பேஷ்’ உடையதாக இருந்தாலும் கூட இந்த ‘ஹம்ஸ்’ வரவே செய்யும் என்றும் இதற்குக் குர் ஆனிலும் ஆதாரங்கள் உள்ளன என்றும் கூறி அந்த ஆதாரங்களையும் தாம் எழுதிய நூலில் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

        தாம் எழுதிய இந்நூலுக்குப் பெயர் வைப்பது பற்றித் தம் மாணவர் மஹ்மூது தீபியிடம் இவர்கள் வினவிய பொழுது அவர்கள் அடக்கமான முறையில் ‘அன ஆஜிஸுன் ஜானீ’ (நான் சக்தியற்றவன்; பாவி) என்று கூற அதனையே இவர்கள் தாம் எழுதிய நூலுக்குப் பெயராக ‘ஷரஹு ஆஜிஸுன் ஜானீ ஃபீ ஷரஹு ஸஞ்சானீ’ என்று வைத்தனர்.

இவர்களின் ஆன்மீக மாணவர்கள் பற்றி…

        இவர்களுக்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆன்மீக மாணவர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் இவர்களின் இளவல் ஸாம் ஷிஹாபுத்தீன் வலியும், கண்ணாட்டி அப்பா என்ற மஹ்மூதுதீபியும் ஆவர். பின்னவர் இவர்கள் மீது பாடிய இரங்கற்பாவில், இவர்கள் மனிதர்களுக்கு மட்டுமின்றி ஜின்களுக்கும் கல்வி போதித்ததாகக் குறிப்பிடுகின்றனர். படிக்காசுத் தம்பிரான், நவச்சிவாயப் புலவர் முதலிய புலவர்களும் இன்னும் பல் யோகிகளும் - மொத்தம் 4000 பேர் வரை இவர்களிடம் வந்து கலிமாச் சொல்லி அந்தரங்க ஈமான் கொண்டிருந்தனர் என்று கல்வத்து நாயகம் அவர்கள் தாம் எழுதிய சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர்.

மதீனாவில் மார்க்க கல்வி போதித்தது

        இவர்கள் மக்காவில் தெருவொன்றில் சென்று கொண்டிருந்த பொழுது மழை பெய்யவே, இவர்கள் ஓடி ஒரு கூரையின் கீழ்ப் போய் நின்றனர். அது கண்ட சில அரபிகள் சிரித்து, “இறைவனின் ரஹ்மத் (அருள்) உம்மீது விழுவதை நீர் விரும்பவில்லையா?” என்று நையாண்டியாக வினவிய பொழுது, “அந்த ரஹ்மத் என் காலில் மிதிபடுவதை நான் விரும்பவில்லை. எனவே தான் ஓடினேன்” என்று இவர்கள் பதிலிறுத்தனர்.

        இவர்கள் மதீனாவில் இரண்டாண்டுகள் தங்கி, அவர்களுக்கு மார்க்கக் கல்வி போதித்தனர் என்று கூறப்படுகிறது.

மார்க்க நெறி முறை படி வாழ்ந்த மகான்

        மக்களுக்கு ‘ஷரஉ’ என்னும் மார்க்க நெறிமுறையை உணர்த்தி வாழ்ந்த இவர்கள் நாகூர் சென்ற பொழுது அங்கு ‘ஷரஉ’ (மார்க்க நெறிமுறை)க்கு மாற்றமான செயல்கள் தர்காவில் நிகழ்வதன் காரணமாக தர்காவுக்குச் செல்லாது கால்மாட்டுத் தெருவின் இறுதியில் பீரோடும் தெரு சந்திப்பிலேயே நின்று பாத்திஹா ஓதி விட்டுத் திரும்பி விட்டனர். அவ்விடத்தில் இன்றும் ஒரு விளக்குத் தண்டு உள்ளது. அதற்கு “ஸதக்” நின்ற இடம் என்று பெயர் கூறப்படுகிறது.

வள்ளல் சீதக்காதி அழைத்து வந்த உமறுப்புலவர்

        எட்டயபுர மன்னரின் அரசவைக் கவிஞரான உமறை, அக்காலை ஆங்கு வந்த சீதக்காதி இவரின் திறமையைக் கண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைக் காப்பியமாக இயற்றித் தருமாறு கேட்க “இறைவன் அருள்பாலிப்பின் செய்வோம்” என்றார் உமறுப்புலவர். இவரைக் கீழக்கரை அழைத்துச் சென்று சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடம் அறிமுகப் படுத்தி காப்பியம் இயற்ற உரை நல்கி உதவுமாறு வேண்டினார் சீதக்காதி. ஆனால் உமறு இருந்த கோலம் கண்டு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் உரை தர மறுத்த போது உமறுப்புலவர் மனம் வருந்தி அன்றிரவு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது 83 கவிதைகள் பாடி வரும் பொழுதே உறங்கிவிட்டார். (அதுவே முதுமொழி மாலை என்னும் பெயருடன் விளங்குகிறது)

கனவில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருத்தோற்றம் வழங்கியது

        அன்றிரவு உமறுப்புலவர் அவர்கள் கனவிலும் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் கனவிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருத்தோற்ற்ம் வழங்கி அருண்மொழி பகர்ந்து மறைந்தனர். வைகறையில் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களை காண வந்த உமறுப்புலவரை இவர்கள் அன்போடு வரவேற்று உரை தர இசைந்தனர். பின்னர் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் பெருமானாரின் வரலாற்றினைத் தீர்க்கமாகக் குறித்து தந்து விவரமாகப் புலவர் அவர்களுக்கு விளக்குமாறு தமது பிரதம சீடரான மஹ்மூது தீபி அவர்களைப் பணித்தார்கள். அவ்விதமே செய்தனர் மஹ்மூது திபி அவர்கள்.

இவர்கள் இயற்றிய நூல்கள்

        அரபியில் கவிஞராகத் திகழந்த இவர்கள் இரண்டடிகளான வித்ரிய்யாவில் ஒவ்வொரு பைத்துக்கும் மூன்றடி சேர்த்து ஐந்தடியாகச் செய்தது போன்ற “பானத் ஸுஆத்”, “புர்தா” ஆகியவற்றிற்கும் செய்துள்ளார்கள். முஹ்யித்தீன் ஆண்டகை மீது “யாகுத்பா” என்ற கஸீதாவும், நாகூர் ஷாஹுல் ஹமீது ஆண்டகை மீது “யாஸையிதீ ஷைகீ” என்ற கஸீதாவும் இன்னும் பல நூல்களும் இவர்கள் இயற்றியுள்ளனர். “ஸுப்ஹான மெளலி”தை அரபு நாட்டிலிருந்து நம் நாட்டிற்குக் கொண்டு வந்து பரப்பியவர்களும் இவர்களேயாவர். அதில் இவர்கள் சில பைத்துகளையும் யாத்துச் சேர்த்துள்ளனர்.

கீழக்கரையில் இறையடி சேர்ந்த மகான்

        இவர்கள் பல அற்புதங்களைச் செய்துள்ளதாகவும், ஒரு பஞ்ச காலத்தில் காயல்பட்டணம் இரட்டைக் குளப் பள்ளிவாசலில் வைத்து மீக்காயீல் (அலை) அவர்களிடம் கூறி மழை பெய்யச் செய்தனர் என்றும் கூறுவர்.

        இவர்கள் கீழக்கரையில் தம் 73-ஆவது வயதில் ஹிஜ்ரி 1115 ஸபர் திங்கள் 5 ஆம் நாள் வியாழன் இரவு காலமாகி, அங்குள்ள ஜாமிஆ மஸ்ஜிதில் அடங்கப் பெற்றுள்ளனர். ஒளரங்கஜீபால் இவர்களின் அடக்கவிடத்தின் மீது கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது.

சதக்கத்துல்லாஹ் அப்பா அடக்கவிடம்

 

        

புதிய வெளியீடுகள்

Segu Uthman Vali

ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


SyedIbrahimVali

சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


ArrangaraiNachiyar

ஆற்றங்கரை நாச்சியார் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Sikkandar

மதுரை சிக்கந்தா மலை வாழ் சிக்கந்தர் பாவா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Kamuthi Musafar Vali

கமுதி ஷாஹ் அப்துர் ரஹ்மான் முஸாஃபிர் வலியுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nagoor Shagul Hameed

நாகூர் ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...