ஷாஹ் அப்துர் ரஹ்மான் முஸாஃபிர் வலியுல்லாஹ்
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கமுதியில் ஏரிக்கரை அருகில் அடங்கி இருக்கும் இறை நேசச் செல்வரான இவர்கள் வட இந்தியாவில் பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு இளமையில் மணமுடிக்க விழைந்த பொழுது இவர்கள் அதனை ஏற்க மறுத்தார்கள். எனினும் பெற்றோர்கள் வற்புறுத்தவே, “அவ்விதமாயின் நான் சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவேன். அதன் பின் தாங்கள் என்னை ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள்.
இவர்கள் அவ்வாறு கூறியதையும் பொருட்படுத்தாது பெற்றோர்கள் திருமணத்திற்கான ஆயத்தங்களைச் செய்ய, இவர்கள் தங்களின் ஞான ஆசிரியர் ஷாஹ் மஹ்மூது காதிரியிடம் மட்டும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்கள். அப்பொழுது இவர்களின் ஞான ஆசிரியர் இவரிடம் மூன்று விதைகளைக் கொடுத்து, “இவற்றை ஓரிடத்தில் மண்ணில் புதைத்து மூன்று நாட்கள் தண்ணீர் ஊற்றி வாரும். மூன்றாம் நாள் மூன்றும் முளை விட்டிருந்தால் அவ்விடத்தையே உம்முடைய தங்குமிடமாக ஆக்கி கொள்ளும்” என்று கூறியதற்கேற்ப இவர்கள் கமுதி வந்து தங்கி அங்கேயே வாழ்ந்து இறப்பெய்தினர் என்று கூறுவர்.
இவர்கள் பல அற்புதங்களை ஆற்றியுள்ளனர். அவற்றில் சிலவற்றை அபிராமம் அப்துல் காதிர் ஆலிம் அவர்கள் தாங்கள் இயற்றிய “பூரண சந்திரன் மாலை” யின் ஒரு பகுதியாகிய “ஷாஹிய்யா மாலை” யில் குறிப்பிடுகின்றார்கள். இவர்களின் காலம் சரியாகத் தெரியவில்லை.