அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நிறைவு பேருரை
நபிகள் கோமான் முஹம்மது (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகள் மானிட சமுதாயத்திற்கு வழங்கிய போதனைகளின் சாரமாக அவர்களின் இறுதி ஹஜ்ஜுப் பேருரை விளங்குகிறது.
காலங்கள் மாறுகின்றன, ஆனால் காருண்ய வள்ளல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்னே மொழிந்த கருத்துக்கள் அழியாவரம் பெற்றவையாகத் திகழ்கின்றன.
பெருமானாரின் இறுதிப்பேருரை என்றும் பேருரையே! அதை விடச் சிறந்ததொரு கருத்துக் கோவையை இன்று வரை உலகம் கண்டிடவில்லை.
இனி - என்றும் காணப்போவதும் இல்லை.
நபிகள் பெருமானார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினா நகரிலிருந்து மக்கா நகருக்கு ஹிஜ்ரீ 10 ஆம் ஆண்டு (கி.பி.632) ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். நபியவர்களுடன் 1,24,000 தோழர்கள் ஒன்றாய்ச் சென்றனர். அதுவே அண்ணலாரின் இறுதி ஹஜ் ஆகும்.
அவ்வமயம் மக்காவுக்கு அருகிலுள்ள ‘அரபாத்’ பெருவெளியில் பெருமானார் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிகு பேருரை, உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்றுத் திகழ்கிறது.
பெருமானார் (ஸல்) அவர்கள் ‘கஸ்வா’ என்னும் தமது ஒட்டகையின் மேலிருந்து உரையாற்றினார்கள். அவர்கள் கூறிய ஒவ்வொரு சொற்றொடரும் ‘ராபி ஆ பின் உமையா பின் கல்ப்’ என்னும் பெயருடைய தோழரால் உரக்கக் கூறி எதிரொலிக்கப்பட்டது.
அச்சொற்பொழிவுச் சுருக்கமே இது.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! நாம் அவனையே வணங்குகின்றோம். அவனிடமே உதவியையும், நமது பாவங்களுக்கான மன்னிப்பையும் கோருகின்றோம்.
அவனிடத்தே நாம் திரும்பக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம்.
நமது இதயத்தின் தீய எண்ணங்களை விட்டும் நாம் செய்யும் காரியங்களிலிருந்து ஏற்படும் தீங்குகளிலிருந்தும் அவனிடமே பாதுகாவல் தேடுகிறோம். அல்லாஹ் நேர்வழிப்படுத்துகின்ற யாரையும் வழி கெடுக்க இயலாது. அல்லாஹ் நேர்வழிப்படுத்தாத யாரையும் நேர்வழிப்படுத்தி விடவும் முடியாது. நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. அவன் ஒருவனே! அவனுக்கு இணையேதுமில்லை! அகில உலகங்களின் ஆட்சி அவனுக்குரியதே! அனைத்துப் புகழும் அவனுக்குரியதே!
உயிர் கொடுப்பவனும் அவனே! உயிர் எடுப்பவனும் அவனே! அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துபவனும் அவனே!
நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லவே இல்லை. அவன் ஒருவனே! அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியவனும் அவனே! பகைக் கூட்டமனைத்தையும் இல்லாமலாக்கியவனும் அவனே!
அவனே, அவனின் அடியாருக்கு வெற்றியை நல்கினான்.
மக்களே! நான் கூறுவதை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். இதற்குப் பின்னால் இந்த இடத்தில் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என நான் எண்ணவில்லை.
இன்றைய தினத்தையும், இந்த மாதத்தையும், இந்த தலத்தையும் எவ்வாறு நீங்கள் புனிதமாகக் கருதுகிறீர்களோ, அதே போல் நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் வரையிலும் உங்கள் ஒவ்வொருவரின் உயிரும், உடைமையும், மானமும் மற்றவர்களுக்குப் புனிதமானவையாகும்.
நீங்கள் வெகு விரைவில் உங்கள் இறைவனைச் சந்திக்கவிருக்கிறீர்கள். அப்போது உங்கள் செயல்களைப் பற்றி அவன் கேள்வி கேட்பான். நீங்கள் ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டியவர்களாக இருப்பீர்கள். எச்சரிக்கையாக இருங்கள். நான் உங்களுக்குத் தூதை எத்தி வைத்து விட்டேன்.
உங்களின் அடிமைகளை நன்கு கவனியுங்கள். நீங்கள் உண்ணும் உணவையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள். நீங்கள் உடுத்துவது போன்ற உடையையே அவர்களுக்கும் உடுத்தக் கொடுங்கள். அவர்களின் குற்றங்களைத் தாராளமாக மன்னியுங்கள். அவர்களைத் தண்டிக்காது விட்டு விடுங்கள். வெகு விரைவில் உங்கள் இறைவனை நீங்கள் சந்திக்கும் போது உங்கள் செயல்களைப் பற்றி நீங்கள் வினவப்படுவீர்கள். ஜாக்கிரதை! எனக்குப் பின்னர் நீங்கள் வழி தவறி விடாதீர்கள்.
மக்களே! நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஆதமும் ஒருவரே! நீங்கள் யாவரும் அவருடைய மக்களே! அவரோ மண்ணால் படைக்கப்பட்டவர். எந்த ஓர் அரபியும், அரபியல்லாத அஜமியை விட எவ்வகையிலும் உயர்ந்தவரல்லர். அதுபோலவே சிவந்த நிறமுடையவர், கருத்த நிறமுடையவரை விடவோ, கருத்த நிறமுடையவர் சிவத்த நிறமுடையவரை விடவோ உயர்ந்தவரல்லர். நிச்சயமாக அல்லாஹ்வின் சந்நிதானத்தில் ‘தக்வா’ என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவர் என்பதை நினைவில் வையுங்கள்.
எவரிடம் ஒர் அமானிதம் ஒப்படைக்கப் பட்டுள்ளதோ அதனை அவர் உரியவரிடம் முறையாகத் திருப்பிக் கொடுத்திட வேண்டியது அவரது கடமையாகும். எச்சரிக்கையாக இருங்கள். ஒரு குற்றம் இழைக்கப்பட்டால், அந்தக் குற்றத்தைச் செய்தவரைத் தவிர வேறு எவரும் அதற்குப் பொறுப்பாக மாட்டார். தந்தை செய்த குற்றத்திற்கு மகனோ, மகன் செய்த குற்றத்திற்கு தந்தையோ பொறுப்பாளியாக மாட்டார்கள்.
மக்களே! புரிந்து கொள்ளுங்கள். ஒரு முஸ்லிம், மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரனாக விளங்குகிறான் என்பதை நீங்கள் அறிய வேண்டும். ஒரு முஸ்லிம் சகோதரன் தானாக விரும்பித் தராத எதுவொன்றும் ஒரு முஸ்லிமுக்கு ஆகுமான (ஹலாலான) தாக ஆகாது. எனவே உங்களில் ஒருவர் மற்றவரை அடக்கு முறைக்கு உள்ளாக்கக் கூடாது. அல்லாஹ்வே! நான் எனது தூதை சமர்பித்து விட்டேன் அல்லவா?
மக்களே! அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பிறருக்கு அநீதி இழைக்க வேண்டாம். உங்களுக்கும் அநீதி இழைக்கப்பட வேண்டாம். அறியாமைக் காலத்தின் பழக்க வழக்கங்கள் என் காலடியில் அழிக்கப்படுகின்றன.
அறியாமைக் காலத்தின் இரத்தப் பழி இன்று முதல் ரத்து செய்யப்பட்டு விட்டது.
முதன் முதலாக - எங்களைச் சார்ந்த ’ராபியா பின் ஹாரிஸ்’ உடைய கொலைக்காக பழி வாங்குவதை நான் மன்னித்து விட்டேன்.
வட்டி தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை அமுல்படுத்துவதின் ஆரம்பமாக எங்களின் குடும்பத்தைச் சார்ந்த அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிஃபுக்குச் சேர வேண்டிய வட்டித் தொகை (முழுவதும்) ரத்து செய்யப்பட்டு விட்டது.
மக்களே! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் பாதுகாப்பின் நிமித்தமே அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அல்லாஹ் தனது வாக்கின் மூலமே பெண்களை உங்களுக்கு ஆகுமானவர்களாக்கியுள்ளான். உங்கள் மனைவியர் மீது உங்களுக்குச் சில உரிமைகள் உண்டு. அவ்வாறே - அவர்களுக்கும் உங்கள் மீது சில உரிமைகள் இருக்கின்றன.
திருமண உறவு முறைகளுக்கு மதிப்பளிப்பதும், தகாத செயல்களைப் புரியாமல் இருப்பதும் அவர்களது கடமையாக உள்ளது. அவர்களுக்குத் தகுந்த விதத்தில் உணவு, உடை, உறையுள் அளித்து அவர்களைப் பாதுகாத்து வாருங்கள்.
கற்பைப் பேணி, பணிவுடன் நடந்து கொள்வது அவர்களின் கடமையாக உள்ளது.
கணவனின் உடைமையிலிருந்து, அவனுடைய அனுமதியின்றி யாருக்கும் எதையும் கொடுப்பதற்கு மனைவிக்கு உரிமை இல்லை.
உங்கள் வாரிசுகள் எவரென்றும், அவர்களுக்குரிய பங்குகள் எவ்வளவு என்றும், அல்லாஹ் கூறியிருப்பதே உங்களுக்குப் போதுமானது. இதற்கு நீங்கள் மாறு செய்யாதீர்கள்.
அன்பளிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளுங்கள்.
எனது காலத்திற்குப் பின் இணை வைக்கும் கொள்கைக்கு மீண்டும் சென்று விடாதீர்கள். உங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்.
மக்களே! உங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வேதம் கூறும் கட்டளைகளைப் பின்பற்றும் கறுப்பு நிறத்து அபிசீனிய அடிமை உங்களின் தலைவராக நியமிக்கப்பட்டாலும், அவரது சொல்லைச் செவிமடுத்து அவருக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள். மக்களே! இந்தப் பூமியில் தன்னுடைய அதிகாரத்தை மீண்டும் நிலைநிறுத்தும் எண்ணத்தை ‘ஷைத்தான்’ இன்று இழந்து விட்டான். என்றாலும் அற்ப விஷயங்களில் கூட நீங்கள் அவனைப் பின்பற்றினால் அது அவனுக்கு மகிழ்ச்சியளிக்கும். எனவே தீன் உடைய விஷயங்களில் ஷைத்தானைப் பற்றி மிக எச்சரிக்கையாக இருங்கள்.
மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தையும் அவனின் தூதரான என்னுடைய நடைமுறைகளான சுன்னத்துகளையும் விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பலமாகப்பற்றிப் பிடித்துக் கொண்டு பின்பற்றும் காலம் எல்லாம் நீங்கள் வழி தவறிவிட மாட்டீர்கள்.
மக்களே! நீங்கள் நன்றாக செவி சாய்த்துக் கேளுங்கள். அல்லாஹ்வை நம்புங்கள். தினமும் ஐந்து வேளைத் தொழுது வாருங்கள். ரமலான் மாதத்தில் நோன்பு வையுங்கள். உங்கள் சொத்தின் மீதான ஜகாத் என்னும் ஏழை வரியை தயங்காமல் வழங்கி வாருங்கள். அல்லாஹ்வுடைய சுவர்க்கத்தில் நீங்கள் நுழைவீர்கள்.
மக்களே! எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் வர மாட்டார். உங்களைத் தவிர புதியதொரு சமுதாயம் உலகில் இனி உருவாகாது.
உங்களுடைய மார்க்கத்தின் வரம்பு முறைகளை மீறி நடக்காதீர்கள். அப்படி மீறியதால் தான் உங்களுக்கு முன்னுள்ள பல சமுதாயங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.!
இங்கு இருப்பவர்கள், இங்கு இல்லாதவர்களுக்கு இச் செய்தியை அறிவியுங்கள். கேட்பவர்கள், இங்குள்ளோரை விட ஒருக்கால் அதிக கவனம் செலுத்துபவர்களாக இருக்கலாம்.
மக்களே! ”உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய செய்திகளை நான் தெரிவித்து விட்டேனா”? என்று கேட்டு நபி பெருமான் (ஸல்) அவர்கள் நிறுத்திய போது,
“அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! தாங்கள் தெரிவித்து விட்டீர்கள்” என்று உரத்து பதில் கூறினார்கள் மக்கள்.
மீண்டும் நபி பெருமான் (ஸல்) அவர்கள் “உங்களுக்குண்டான எனது கடமையை நான் பரிபூரணமாகச் செய்து முடித்து விட்டேனா? என்று கேட்ட போது,
“அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே! நீங்கள் பரிபூரணமாகச் செய்து முடித்தீர்கள்” என்று மக்கள் பதில் கூறினார்கள்.
இந்த பதிலைக் கேட்டுப் பூரிப்படைந்த நபிபெருமான் (ஸல்) அவர்கள் வானத்தை நோக்கியவர்களாக அம்மக்களைச் சுட்டிக்காட்டி “இறைவா! இவர்களுக்கு நீயே சாட்சி!” என்று மும்முறை கூறி நபி பெருமான் (ஸல்) அவர்கள் தங்களின் பேருரையை முடித்தார்கள்.
அச்சமயம் –
“இன்றைய தினம் - நான் உங்கள் மார்க்கத்தைப் பூர்த்தி செய்து என் அருட்கொடையையும் பரிபூரணமாக்கி வைத்தேன். உங்களுடைய மார்க்கமாக இஸ்லாத்தையும் அங்கீகரித்துக் கொண்டேன்” என்ற திருக்குர் ஆன் வசனம் (அத்-5 வசனம்-3) அருளப் பெற்றது.
நன்றி: தாருல்குர்ஆன்
இதயங்கள் அமைதி பெற அல்லாஹ்வின் அழகிய பெயர்கள்...
சூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)...
ஸூரத்துல் பகராவின் கடைசி இரண்டு ஆயத்துக்கள்
113. சூரத்துல் ஃபலக்(அதிகாலை), 114. சூரத்துந் நாஸ்(மனிதர்கள்)
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மக்கா வாழ்க்கை
நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதீனா வாழ்க்கை