மிகச் சுருக்கமான எளிய நாற்பது ஹதீஸ்கள்

ஹஜ்ரத் ஸல்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
”எம்முடைய உம்மத்திலிருந்து நாற்பது ஹதீஸ்களை மனனம் செய்பவர் சொர்க்கம் சேர்ந்திடுவார்” என்று ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ள நாற்பது ஹதீஸ்களைப் பற்றி “யாரஸுலல்லாஹ்! அவை எந்த ஹதீஸ்கள்?” என்பதாக நான் கேட்ட போது நபியவர்கள் கூறியதாவது :
- அல்லாஹ்வைக் கொண்டு நீ ஈமான் கொள்ள வேண்டும்.
- மறுமை நாளைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
- வானவர்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
- வேதங்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
- நபிமார்களைக் கொண்டு ஈமான் கொள்ள வேண்டும்.
- இறந்த பின் உயிர் கொடுத்து எழுப்புதல் உண்மை என்று ஈமான் கொள்ள வேண்டும்.
- நன்மையும் தீமையும் அல்லாஹ்வினால் ஏற்படுகின்றன என்ற “தக்தீரை” ஈமான் கொள்ள வேண்டும்.
- வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும், மெய்யாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய திருத்தூதர் என்றும் நீ சாட்சி கூறவேண்டும்.
- பரிபூரணமாக உளூச் செய்து தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிலைநிறுத்த வேண்டும்.
- ஜக்காத்தை நிறைவேற்ற வேண்டும்.
- ரமலான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும்.
- உனக்குப் பொருளிருந்தால் ஹஜ்ஜுச்செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் சுன்னத்து முஅக்கதா பன்னிரண்டு ரக் அத்துகள் தொழுது வர வேண்டும். (”சுபுஹுக்கு முன் 2 ரக்அத், லுஹருக்கு முன் 4 ரக்அத், லுஹருக்கு பின் 2 ரக்அத், மஃரிபுக்குப் பின் 2 ரக் அத், இஷாவுக்கு பின் 2 ரக் அத் என்று விளக்கமாக மற்றோர் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.)
- ஒவ்வோர் இரவிலும் வித்ரு தொழுகையை நீ விட்டு விட வேண்டாம்.
- அல்லாஹ்விற்கு எப்பொருளையும் இணை வைக்க வேண்டாம்.
- உன் பெற்றோருக்கு மாறு செய்ய வேண்டாம்.
- அனாதைகளின் பொருளை அநியாயமாகச் சாப்பிட வேண்டாம்.
- மது அருந்த வேண்டாம்.
- விபச்சாரம் செய்ய வேண்டாம்.
- பொய்ச்சத்தியம் செய்ய வேண்டாம்.
- பொய்ச்சாட்சி சொல்ல வேண்டாம்.
- மனோ இச்சைப்படிச் செயல் பட வேண்டாம்.
- உன் முஸ்லிமான சகோதரனைப் பற்றிப் புறம் பேச வேண்டாம்.
- பத்தினிப் பெண்ணைப் பற்றி (அவ்வாறு ஆணைப் பற்றி) அவதூறு சொல்ல வேண்டாம்.
- உன் முஸ்லிமான சகோதரனுக்கு வஞ்சகம் செய்ய வேண்டாம்.
- வீண் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டாம்.
- வீண் விளையாட்டாளர்களுடன் சேர வேண்டாம்.
- குள்ளமான (ஊணமுற்ற) ஒருவரை (குறைகூறும் எண்ணத்துடன்) குள்ளனே என்று கூற வேண்டாம்.
- மனிதார்கள் யாரையும் பரிகாசம் செய்ய வேண்டாம்.
- கோள் சொல்ல வேண்டாம்.
- எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் நிஃமத்து (அருட் கொடை) களுக்கு நன்றி செலுத்திடுவாயாக!
- சோதனைகள், துன்பங்கள் ஏற்படும் பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பாயாக!
- அல்லாஹ்வின் தண்டனையைப் பற்றி நீ அச்சமற்றிருக்க வேண்டாம்.
- உன்னுடைய உறவினர்களைத் துண்டித்து வாழ வேண்டாம்.
- அவர்களுடன் சேர்ந்து வாழ்வீராக!
- அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாரையும் சபிக்க வேண்டாம்.
- ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹ் என்பவற்றை அதிகமாக ஒதி வருவீராக!
- ஜும் ஆவையும், இரு ஈதுப் பெருநாட்களையும் தவற விட்டு விடாதே.
- உனக்கு ஏற்பட்ட நன்மையோ தீமையோ அது விதிப்படி நிகழ்ந்ததாகும். அது உன்னை விட்டு நீங்கக் கூடியதாக இல்லை. உனக்குத் தவறிவிட்ட ஒன்று உன்னை வந்தடையக் கூடியதாகவும் இல்லை.
- எந்த நிலையிலும் குர் ஆன் ஒதுவதை விட்டு விடாதே!
ஹஜ்ரத் ஸல்மான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸைக் கூறிய பின் நான் அன்னாரிடம், “இந்த ஹதீஸைப் மனப்பாடமிட்ட மனிதருக்கு என்ன நன்மை கிடைக்கும்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், “அல்லாஹுத்தஆலா அவரை நபிமார்கள், உலமாக்கள் ஆகியோருடன் எழுப்புவான்” என பதிலளித்தார்கள்.
(கன்ஜுல் உம்மால்)
புதிய வெளியீடுகள்
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஈஸா நபி (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
அமீருல் முஃமினீன் உமர் இப்னு அல்-கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஷைகு உதுமான் வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
சையிது இப்ராஹீம் ஷஹீது வலி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.