ஸயீது இப்னு ஜைது ரழியல்லாஹ் அன்ஹு
ஸயீது இப்னு ஜைது (கி.பி. 593 - கி.பி. 671) ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒருவரும், இவ் உலகிலேயே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொர்க்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட பத்து பேரில் இவர்களும் ஒருவர் ஆவார். குறைஷி குலத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் இவரும், இவரது மனைவியும் முதன்மையானவர்களாவர்.
பிறப்பு
மக்காவின் குறைஷி குலத்தில் ஆதி கோத்திரத்தில் ஜைது பின் அம்ர் என்பவருக்கும், குஷா இனத்தை சேர்ந்த ஃபாத்திமா பின்த் பாஜா என்பவருக்கும், ஸயீது கி.பி 593 இல் மக்காவில் பிறந்தார். இவரின் பனிரண்டாம் வயதில் கி.பி.605 இல் இவரது தந்தை கொலை செய்யப்பட்டார்.
உமர் (ரழி) அவர்களின் சகோதரி ஃபாத்திமா பின்த் கத்தாப் இவரின் மனைவி ஆவார்.
அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்
சூரா முத்தஸ்ஸிர் இன் ஆரம்ப வசனங்கள் அருளப்பட்டதும் ஏகத்துவ அழைப்புக்கு நபி (ஸல்) அவர்கள் தயாரானார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக் குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர், நல்லவர் என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள். நபி (ஸல்) அவர்களை எந்த வகையிலும் சந்தேகிக்காத ஒரு கூட்டம் அவர்களின் அழைப்பை ஏற்றது. இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள் ‘‘அஸ்ஸாபிக்கூனல் அவ்வலூன்'' (முந்தியவர்கள்! முதலாமவர்கள்!) என்று அறியப்படுகின்றனர்.
இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்றது
இவர்களில் முதன்மையானவர் நபி (ஸல்) அவர்களின் துணைவியரான அன்னை கதீஜா (ரழி)ஆவார். பின்னர் நபி (ஸல்) அவர்களின் அடிமை ஜைது இப்னு ஹாரிஸா (ரழி), நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பிலிருந்த சிறுவர் அலீ (ரழி), உற்ற தோழரான அபூபக்ர் (ரழி) ஆகிய அனைவரும் அழைப்புப் பணியின் முதல் நாளிலேயே இஸ்லாமைத் தழுவினார்கள். பிறகு இறை அழைப்புப் பணிக்காக அபூபக்ர் (ரழி) ஆயத்தமானார்கள். அவர்கள் அனைவரின் நேசத்திற்குரியவராக, மென்மையானவராக, நற்குணமுடையவராக, உபகாரியாக இருந்தார்கள். அவர்களது அறிவு, வணிகத் தொடர்பு, இனிய பேச்சு ஆகியவற்றை மக்கள் மிகவும் நேசித்தனர். அவர்களில் தனக்கு மிக நம்பிக்கைக்கு உரியவர்களை முதலில் அழைக்கத் தொடங்கினார்கள். அவர்களது அழைப்பை ஏற்று உஸ்மான் இப்னு அஃப்பான், ஜுபைர் இப்னு அவ்வாம், அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப், ஸஅது இப்னு அபீ வக்காஸ், தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகிய எட்டு நபர்கள் இஸ்லாமை முதன்முதலாக ஏற்றுக்கொண்டனர்.
இவர்களையடுத்து இச்சமுதாயத்தின் நம்பிக்கையாளர் (அமீன்) என்று பெயர் சூட்டப்பட்ட அபூ உபைதா ஆமிர் இப்னு ஜர்ராஹ், அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத், அவரது மனைவி உம்மு ஸலமா, அர்கம் இப்னு அபுல் அர்கம், உஸ்மான் இப்னுமள்வூன், அவரது இரு சகோதரர்கள் குதாமா, அப்துல்லாஹ், உபைதா இப்னு ஹாரிஸ், ஸயீது இப்னு ஜைது, அவரது மனைவி ஃபாத்திமா பின்த் கத்தாப் (உமர் அவர்களின் சகோதரி) கப்பாப் இப்னு அரத், ஜஃபர் இப்னு அபூதாலிப். அவரது மனைவி அஸ்மாபின்த் உமைஸ், காலித் இப்னு ஸயீது இப்னு ஆஸ், அவரது மனைவி உமைனா பின்த்கலஃப், அம்ரு இப்னு ஸயீது இப்னு ஆஸ், ஹாதிப் இப்னு ஹாரிஸ், அவரது மனைவிஃபாத்திமா பின்த் முஜல்லில், கத்தாப் இப்னு அல் ஹாரிஸ், அவரது மனைவிஃபுகைஹா பின்த் யஸார், மஃமர் இப்னு அல்ஹாரிஸ், முத்தலிப் இப்னு அஜ்ஹர், ரமலா பின்த் அபூ அவ்ஃப், நுஅய்ம் இப்னு அப்துல்லாஹ் (ரழி அன்ஹும்) ஆகிய இவர்கள் அனைவரும் குறைஷி கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில்முதன்மையானவர்களாவர்.
நம்பிக்கையை இரகசியமாக பாதுகாத்தனர்
இவர்கள் இரகசிய அழைப்பு பணி நடந்த மூன்று வருடத்தின் காலங்களில் இஸ்லாத்தினை ஏற்று நபி (ஸல்) அவர்களுக்கு வரும் வஹியின் திருமறை வசனங்களை மனனம் செய்து ஒருவருக்கொருவர் கற்று கொண்டும், கற்று கொடுத்தும் வந்தனர். பின்னர் நபி (ஸல்) அவர்கள் பகிரங்க அழைப்பு பணி செய்தார்கள்.
ஸயீது (ரழி) அவர்களின் மனைவி ஃபாத்திமாவின் சகோதரர் உமர் அந்த சமயத்தில் முஸ்லிம்களை மிகவும் துன்புருத்த கூடிய நிலையில் இணைவைக்கும் குறைஷிகளுடன் இருந்ததால், ஸயீது அவர்களும் அவரது மனைவி ஃபாத்திமாவும் தங்களது இஸ்லாமிய நம்பிக்கையை வெளியில் காட்டி கொள்ளாமல் இரகசியமாக பாதுகாத்தனர்.
உமரின் தாக்குதலும் மனமாற்றமும்
ஒருநாள் (கி.பி.616) கடுமையான கோடையின் உச்சி வெயில். அந்தப் பாலை வெயிலில் உக்கிரத்தை விட உமர் - ன் உள்ளத்தில் ஒரு எரிமலை வெடித்துக் கிளம்பிக் கொண்டிருந்தது. தனது உடை வாளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய உமர் அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களைக் கொலை செய்து விட வேண்டும் என்ற கொலை வெறி அவரது உள்ளத்தில் நெருப்பாய் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தது.
அவர் சென்று கொண்டிருந்த தெரு வழியாக, அவரது நண்பர் நுஐம் பின் அப்துல்லா (ரழி) அவர்கள் வருகின்றார்கள். இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமர் அறிந்திருக்கவில்லை.
உமரைச் சந்தித்த நுஐம் (ரழி) அவர்கள், உமரின் முகத்தில் தெறித்துக் கொண்டிருந்த கோபக் கனலைப் பார்த்து விட்டு,
என்ன உமரே..! எங்கே இவ்வளவு வேகம்..!
முஹம்மதைக் கொன்று விட்டு, கஃபாவில் உள்ள நமது கடவுள்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்கப் போகின்றேன், என்றார் உமர் பதிலுக்கு..!
உமரே..! எச்சரிக்கை..! முஹம்மதை நீர் கொலை செய்தால், பனூ ஹாஸிம் கோத்திரத்தாரின் கொடிய கோபப் பார்வைக்கு நீர் ஆளாக நேரிடும், ஜாக்கிரதை..! உம்முடைய நன்மைக்காகத் தான் நான் சொல்கின்றேன், கேட்டுக் கொள்வீராக..! என்றார், நுஐம் (ரழி) அவர்கள்.
நீர் சொல்வதைப் பார்த்தால் நீரும் முஸ்லிமாகி விட்டது போலல்லவா தெரிகின்றது என்றார் உமர் அவர்கள்,
நான் முஸ்லிமாவது, ஆகாதது...! இருக்கட்டும். என்னைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். நீர் உமது சகோதரியையும், உமது மைத்துனரையும் போய் பார்..! அவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களாகி விட்டார்கள். இப்பொழுது அவர்கள் திருமறைக் குர்ஆனை வாசித்துக் கொண்டு கூட இருக்கலாம், அவர்களைப் போய் கவனியும் என்றார் நுஐம் (ரழி) அவர்கள்.
என்ன..? எனது சகோதரியும், மைத்துனரும் முஸ்லிம்களாகி விட்டார்களா? என்று உறைந்து போய் நின்ற உமர் அவர்கள், முஹம்மது (ஸல்) அவர்களை நோக்கிச் சென்ற தனது பயணத்தை மாற்றி, தனது தங்கை ஃபாத்திமாவையும், அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரழி) அவர்களின் வீடு நோக்கிச் சென்றார்கள். உமர் தனது தங்கையான ஃபாத்திமாவின் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள். தனது தங்கையும், தங்கையின் கணவரும் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டதை, கனவிலும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. இந்தச் செய்தியில் உண்மையிருக்காது. இதனை நான் நம்ப மாட்டேன், எனினும் இந்தச்செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவரது மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது.
உமர் அவர்கள் தனது தங்கையின் வீட்டு வாசலை அடைந்த பொழுது, அங்கே அவரது தங்கை ஃபாத்திமா (ரழி) அவர்களும், அவரது கணவர் ஸயீத் பின் ஜைத் (ரழி) அவர்களும் குர்ஆனில் இருந்து சில வசனங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள். சகோதரனைப் பார்த்து விட்ட ஃபாத்திமா (ரழி) அவர்கள், தனது கையிலிருந்து குர்ஆன் எழுதப்பட்டிருந்த ஓலையை மறைத்து விட்டு, அண்ணனை வரவேற்பதற்காக எழுந்தார், புன்னகையுடன் உமரை வரவேற்றார். ஆனால் உமருடைய முகத்திலோ இருள் மண்டிக் கிடந்தது.
எதனை வாசித்துக் கொண்டிருந்தீர்கள்..! உமர் கேட்டார்.
ஒன்றுமில்லை..! ஃபாத்திமா (ரழி) அவர்களிடமிருந்து பதிலாக வந்தது.
தனது மைத்துனரின் சட்டையின் கழுத்துப் பகுதியை இறுக்கிப்பிடித்த உமர், உமது மூதாதையர்களது மார்க்கத்தை வெறுத்து விட்டீர்களோ..! என்றார்.
நாங்கள் சத்தியத்திற்காக அசத்தியத்தைத் தூர எறிந்தோம் என்றார் அஞ்சாத குரலில் ஸயீத் (ரழி) அவர்கள்.
இந்த வார்த்தையைக் கேட்ட உமரின் கண்களில் கோபக் கனல் தெறித்தது, மைத்துனரை நையப் புடைக்க ஆரம்பித்தார். தனது கணவரை விடுவிப்பதற்காக இடையில் புகுந்த ஃபாத்திமா (ரழி) அவர்கள்,
உமரே..! எனது கணவரை விட்டு விடும்..!
நீர் என்ன கூற வந்தீரோ அதனை என்னிடமே கூறுங்கள், அதனை விட்டு விட்டு எனது கணவர் மீது கை வைப்பது சரியில்லை..! என்று தனது சகோதரரை எச்சரித்தார் ஃபாத்திமா (ரழி) அவர்கள்.
நீங்கள் முஸ்லிம்களாகி விட்டீர்களாமே..! உண்மையா?
ஆம்..! நாங்கள் முஸ்லிம்களாகி விட்டோம்.
இதற்காக நீர் எங்களைக் கொலை செய்ய வந்திருப்பீரென்றால், எங்களைக் கொன்று விடுங்கள். உங்களது மிரட்டலுக்கெல்லாம் பயந்து இஸ்லாத்தை நாங்கள் விட்டு விட மாட்டோம் என்று உறுதியாகக் கூறினார்.
இப்பொழுது உமர் சற்று நிதானத்திற்கு வந்தவராய்..! சரி..! நீங்கள் வாசித்த அந்த ஓலையை என்னிடம் காண்பிக்கக் கூடாதா? நான் பார்க்க வேண்டும் என்றார்.
நீங்கள் தூய்மையானவராக ஆகும் வரைக்கும், இந்த புனித குர்ஆனை நீங்கள் தொட முடியாது. முதலில் சென்று உங்களது கரங்களைக் கழுவிக் கொண்டு வாருங்கள் என்றார் ஃபாத்திமா (ரழி) அவர்கள்.
கையைக் கழுவி விட்டு திரும்பிய உமரிடம், அந்தத் திருமறையின் பாகங்கள் கொடுக்கப்பட்டன. அதன் பக்கங்கள் இவ்வாறு ஆரம்பமாகின. உமர் வாசிக்க ஆரம்பித்தார் :
தாஹா.
(நபியே!) நீர் துன்பப்படுவதற்காக நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கவில்லை.
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி (வேறில்லை).
பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.
அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவையும், மண்ணுக்கு அடியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
(நபியே!) நீர் உரக்கச் சொன்னாலும் நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதை விட) மறைவானதையும் அறிகிறான். அல்லாஹ் - அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை.
அவனுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. (ஸூரத்து தாஹா 20 : 1-8)
திரும்பி.. திரும்பி..! ஓதிக் கொண்டே இருந்தார். இந்த வசனங்கள் என்னை நோக்கி உரையாடுவது போலல்லவா இருக்கின்றது. உமர் என்ற இந்த தனிப்பட்ட மனிதனை நோக்கி அல்லவா இதன் வசனங்கள் உரையாடுகின்றன. என்ன அற்புதம். தாஹா என்ற பெயர் கூட என்னை நோக்கி விளிப்பதாகவே உணர்கின்றேனே..!
சத்தியத்தின் தாக்குதலால் அசத்தியத்தின் கதவுகள் இதயதத்தில் திறக்க, புயலாய் வந்த கோபம் தென்றலாகக் கறையைக் கடந்தது. தனது தங்கையின் பக்கமும், மைத்துனரின் பக்கமும் திரும்பிய உமர், இஸ்லாத்தின் பரம விரோதியாக இங்கே நுழைந்தவன்...! இப்பொழுது, இஸ்லாத்தின் உற்ற நண்பனாக உங்கள் முன் நிற்கிறேன்.
அந்த முஹம்மதின் கரங்களால் நான், சத்தியத்திற்குச் சான்று பகரச் சென்று கொண்டிருக்கின்றேன், என்றார் உமர். உணர்ச்சியின் விழிம்பில், உரத்து முழங்கினார்...! அல்லாஹு அக்பர்..! என்று ஃபாத்திமா அவர்கள்.
ஹிஜ்ரத்
‘ஹிஜ்ரா' என்றால் தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடைமைகளை அப்படியே விட்டுவிட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த நாட்டை, சொந்த ஊரை துறந்து அந்நிய நாட்டுக்கு, அந்நிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துகளை சந்திக்க வேண்டி வரும். உயிர் பறிபோகலாம் உடைமைகள் அபகரிக்கப்படலாம் செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ? அங்கு என்னென்ன கவலைகளும், துக்கங்களும், துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ராவாகும்.
கி.பி622 இல் மதீனாவாசிகளுடன் அல்லாஹ்வின் அருளால் இரண்டாவது உடன்படிக்கை முடிந்தது. அறியாமையும், இறைநிராகரிப்பும் சூழ்ந்த பாலைவனங்களுக்கு நடுவில் இஸ்லாம் தனக்கொரு தனிநாட்டை மதீனாவில் நிறுவுவதில் வெற்றி பெற்றது. நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அந்த நாட்டை நோக்கி ஹிஜ்ரா செய்ய அனுமதி அளித்தார்கள். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடங்கினர்கள் அவர்களுடன் ஸயீது இப்னு ஜைது (ரழி) அவரது மனைவி ஃபாத்திமாவும் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்தார்கள். அங்கு இவர்கள் ரிஃபா இப்னு அப்துல்-முந்திர் அன்சாரி வீட்டில் தங்கினார்.
பத்ரு போர்
மக்காவிலிருந்து ஷாமிற்கு சென்று கொண்டிருந்த வியாபாரக் கூட்டம் ஒன்று நபி (ஸல்) அவர்களிடமிருந்து தப்பித்து விட்டது. பின்னர் இந்த வியாபாரக் கூட்டம் ஷாமிலிருந்து மக்காவிற்கு திரும்பும் நாள் நெருங்கிய போது இதன் செய்தியை அறிந்து வருவதற்காக தல்ஹா இப்னு உபைதுல்லாஹ், ஸயீது இப்னு ஜைது (ரழி) ஆகிய இருவரை நபி (ஸல்) மதீனாவின் வடக்குத் திசையின் பக்கம் அனுப்பினார்கள்.
எனவே இவர்கள் இருவரும் பத்ரு போரில் கலந்து கொள்ளவில்லை. பத்ரு போர் முடிந்து வெற்றியுடன் நபி (ஸல்) அவர்கள் மதீனா திரும்பிய பொழுது இவர்களும் அந்த வியாபாரக் கூட்டம் பாதை மாறி சென்று விட்ட செய்தியை மதீனாவிற்கு இருவரும் கொண்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்ரு போரில் கைபற்றி கிடைத்த பொருள்(கனீமத்)களில் இவர்களுக்கும் பங்கு கொடுத்தார்கள்.
ஸயீது (ரழி) அவர்களின் பணிகள்
நபி (ஸல்) அவர்கள் போராடிய மற்றய அனைத்து போர்களிலும் ஸயீது இப்னு ஜைது (ரழி) அவர்களும் பங்கேற்றார். மேலும் நபி (ஸல்) அவர்களுக்கு உதவியாகவும், குர்ஆன் வசனங்களை எழுதி பதிவு செய்யும் பணிகளை செய்தார்கள்.
கலீபாக்களின் காலத்தில்
ஒருமுறை இவரின் அனுமதியின்றி டமாஸ்கஸின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். உடனே அதை ஏற்று கொள்ளாமல் கடிதம் எழுதி வேறு நபரை நியமிக்க வேண்டும் என வலியுருத்தினார். பின்னர் அவர் இஸ்லாமிய இராணுவத்தின் அனைத்து போர்களிலும் ஒரு சாதாரண சிப்பாயாக போராடினார்.
முஆவியா(ரழி) அவர்களின் காலத்தில் அவர் கூஃபாவின் ஆளுநராக இருந்தார்,
அவர்களது மரணம்
ஸயீது இப்னு ஜைது (ரழி) அவர்கள் முஆவியாவின் ஆட்சி காலத்தில் கி.பி 671 இல் அல்-அகிஃக் (al-Aqiq) என்ற இடத்தில் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது உடல் மதீனாவிற்கு கொண்டு வரப்பட்டு ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) ஆகியோர் முன்னின்று நல்லடக்கத்தை செய்தார்கள். ஸயீது இப்னு ஜைது (ரழி) அவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஸயீது இப்னு ஜைது (ரழி) அவர்கள் கூறினார்கள்
ஒரு தடவை ஸயீது (ரழி) அவர்கள் சில ஸஹாபாக்களிடம் நான் பத்து பேர்கள் பிசகற சுவர்க்கம் செல்வார்கள் என்பதில் நான் சாட்சி சொல்கிறேன் எனக் கூறினார்கள். உடனே ஸஹாபாக்கள் யாவரும் எப்படி தாங்கள் கூறுகிறீர்கள்? எனக் கேட்ட போது, நாங்கள் ஒரு சமயம் நபி (ஸல்) அவர்களுடன் ஹிரா குகைக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அப்போது ஹிரா மலை ஆட ஆரம்பித்தது. உடனே நபி (ஸல்) அவர்கள் அம் மலையை தட்டி, ஆடாதே நில், என்றார்கள்! பின் உன் மீது இருப்பவர்கள் ஒரு நபியை போன்றில்லை, ஒரு ஸீத்தீக்கை போன்றில்லை, ஷஹீதுகளை போன்றில்லை எனக் கூறினார்கள். அம் மலை ஆடாமல் நின்றது எனக் கூறினார்கள்.
உடனே அச்சஹாபிகள் சிலர், யாரெல்லாம் அதில் இருந்தார்கள் என வினவ, நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலி (ரழி), அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி), ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி), ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி), தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரழி) என கூறினார்கள். என்ன ஸயீதே ஒன்பது பேர்கள் மட்டுமே கூறினீர்; பத்தாவது நபர் யார்? எனக் கேட்டார்கள். பின் ஸயீத் (ரழி) அவர்கள் நான் பத்தாவது நபரை கூறுவதில் எந்த தயக்கமும் காட்ட மாட்டேன் எனக் கூறிவிட்டு நுபைலின் மகனான அம்ரின் மகனான ஜைதின் மகனான ஸயீத் ஆகிய நான் தான் என்று கூறினார்கள்.
(திர்மிதீ)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.