இப்னு ஸீனா
இஸ்லாமிய பொற்காலம் என சரித்திரத்தில் இடம் பெற்று உள்ள உலகின் மத்திய காலத்தில் வாழ்ந்த மாபெரும் அறிவுலக மேதையும், மருத்துவ பேரறிஞரும், தத்துவஞானியுமாகிய இவரின் இயற்பெயர் ஹுசைன் என்பதாகும். தந்தையின் பெயர் அப்துல்லாஹ் எனினும் இவர் ஸீனாவின் மகன் என்று பொருள்படும் இப்னு ஸீனா என்று அழைக்கப்பட்டார். இவருடைய பெயராகிய இப்னு ஸீனா என்பது ஹீப்ருமொழியில் அவென்ஸினா என ஆகி லத்தீனில் அவிஸென்னா என்று மருவி உள்ளது. இவர் மேனாட்டினரால் அவிஸென்னா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய முழு பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும்.
இப்னு ஸீனா (கி.பி980 - கி.பி.1037) அவர்கள் அஃப்ஷனா என்னும் சிற்றூரில் அப்துல்லாஹ் மற்றும் ஸிதாரா பல்கின் ஆகியோரின் மகனாக கி.பி 980இல் பிறந்தார். இவரின் குடும்பத்தார்கள் ஃபார்ஸி இனத்தில் இஸ்மாயிலிய ஷீயா முஸ்லீம் களாவார்கள். இவரின் தந்தை சாமனிய மன்னரால் புகாராவின் அருகிலுள்ள கரமைத்தான் மாவட்டத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டதால் இவர் தம் தந்தையுடன் புகாராவில் தம் இளமையைக் கழித்தார். பத்து வயதிற்குள்ளேயே இவர் திருக்குர்ஆனை முழுவதும் மனனம் செய்துவிட்டார். பதினாறு வயதிற்குள் அரபி இலக்கியம், மார்க்க சட்ட திட்டங்கள், கணிதம், வானநூல், தத்துவம், இசை, மருத்துவம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றார். பதினேழாவது வயதிலேயே நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவம் செய்து குணப்படுத்தலானார். அப்பொழுதே இவரின் முன் பிரபல மருத்துவர்களெல்லாம் கால் மடித்து அமர்ந்து பாடம் கேட்டார்கள்.
இவருக்கு இளமையில் கணிதம், வானநூல் ஆகியவற்றைப் போதிப்பதற்காக் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டார் என்றும் சிறிது காலத்தில் இவரே தம் ஆசிரியரைத் திருத்தத் துவங்கியதும் அவர், “எனக்கு மேல் என் மாணவனுக்கு அதிகமாகத் தெரிகிறது.” என்று கூறி சொல்லாமல் கொள்ளாமல் நழுவி விட்டார் என்றும் கூறுவர்.
இவர் ஆசிரியரின் துணையின்றித் தாமாகவே யூக்ளிட், அரிஸ்டாட்டில், பிளேட்டோ ஆகிய கிரேக்க அறிஞர்கள் எழுதிய நூல்களைப் பதினெட்டு மாதங்களில் படித்து முடித்தார். இச் சமயம் தாம் ஓரிரவுகூடச் சரியாக தூங்கியதில்லை என்றும் பகலிலும் ஓய்வின்றிப் படித்து வந்ததாகவும் அந்நூல்களில் தமக்கு எப் பகுதி யேனும் விளங்காமல் போய் விட்டால் பள்ளிவாசல் சென்று இறைவனைத் தொழுது விளக்கம் வேண்டி இறைஞ்சி வந்ததாகவும் அதன் காரணமாக தமக்கு விளக்கம் கிடைத்து வந்ததாகவும் இவர் தம் சுய வரலாற்றில் குறிப்பிடுகிறார்.
ஒரு முறை இவர் அரிஸ்டாட்டில் எழுதிய தத்துவக் கலையை நாற்பது தடவை திருப்பித் திருப்பிப் படித்தபோதினும் பொருள் விளங்காத நிலையில், ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற பொழுது அங்கு ஒருவன் வற்புறுத்தி வாங்கச் சொன்ன பழைய புத்தகத்தை விருப்பம் இன்றி அவன் வேண்டிய சில திர்ஹங்களை (வெள்ளிக் காசுகளை) இவரும் வேண்டா வெறுப்பாக கொடுத்து அதனை விலைக்கு வாங்கி வீடு கொண்டு வந்து படித்த பொழுது அது ஃபாராபி எழுதிய தத்துவ நூலாகவும் அரிஸ்டாட்டில் எழுதிய தத்துவ நூலுக்கு விளக்கமாகவும் இருப்பதைக் கண்டு இவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. பள்ளி சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தித் தொழுததோடு எழைகளுக்குத் தர்மமும் கொடுத்தார் இவர்.
இவர் உறங்கும் பொழுது இவருக்குக் கனவின் மூலம் சிக்கலான பிரச்சனைகளுக்கு நல்ல விளக்கம் கிடைத்து வந்தது. சில பொழுது இரவு முழுவதும் தீராத சிக்கலான பிரச்சனைகள் உறங்கி எழுந்த பின்னர் உள்ளம் ஓய்வு பெற்ற நிலையில் தெளிவு பெற்றன.
இந்த சமயத்தில் புகாராவின் மன்னர் இரண்டாவது நூஹ் பின் மன்சூர் திடீரென நோய் வாய்ப்பட, எந்த மருத்துவராலும் அவரைக் குணப்படுத்த முடியாது போக இவர் அழைக்கப்பட்டார். இவர் சிகிச்சை செய்த சில நாட்களில் மன்னர் உடல் நலன் பெற்றார். அப்பொழுது இவர் அரசரின் அனுமதி பெற்று அவரின் நூலகத்தில் இருந்த கிடைத்ததற்கரிய கிரேக்க அறிவியல் நூல்களையும், ஏனைய நூல்களையும் கண்டு அவற்றையெல்லாம் படித்து மனனம் செய்து விட்டார். புகாராவின் அமைச்சராக ஆன இவர் அதன் பின் பல்வேறு அரசியல் சூழ்நிலையின் காரணமாக குவாரிஸ்ம் நாட்டை அடைந்த பொழுது அந் நாட்டு மன்னர் மாமூனால் நன்கு ஆதரிக்கப்பட்டார். அம்மன்னரின் அரசவையிலேயே அல்பெரூனியும் இருந்தார்.
மாமூனின் அரசவையில் இருந்த அறிஞர்களைத் தம் அரசவையில் அமரச் செய்ய வேண்டுமென்று ஆசை கொண்ட மஹ்மூது கஸ்னவி அவர்களைக் கஸ்னாவுக்கு அனுப்பி வைக்குமாறு மாமூனுக்கு வேண்டுகோள் விடுக்க அல்பெரூனியும், அபூ நஸர் அர்ரக்கும், அபுல் கைர் கம்மாரும் அங்கு சென்றார்கள். சுதந்திர உணர்வுள்ள இப்னு ஸீனாவும், அபூ ஸஹ்ல் மஸீஹியும் அங்கு செல்லாது மாமூனின் உதவியுடன் குர்கான் நகருக்குத் தப்பி ஓட, இவருடைய உருவப் படத்தை வரையச் செய்து இத்தகைய உருவினரை எங்கு கண்டாலும் பிடித்துத் தம் அரசவைக்கு அனுப்பி வைக்குமாறு பல்வேறு நாட்டு அரசர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார் மஹ்மூத் கஸ்னவி. இத்தகைய வேண்டுகோள் ஒன்று குர்கான் மன்னர் காபூஸுக்கும் வந்து சேர்ந்தது.
குர்கானில் தலைமறைவாக வாழ்ந்து வந்த இவர், காபூஸின் உறவினர் ஒருவர் கொடிய நோயால் துன்புற்று மருத்துவர்களால் கைவிடப் பட்டபொழுது அவர் மீது இரக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளித்து நலப்படுத்தினார். அவர் இவரை அரசவைக்கு அழைத்துச் செல்ல, மஹ்மூது கஸ்னவியின் ஆணையை எண்ணி ஒரு கணம் திடுக்குற்ற அவர், பின்னர் இவரை அரவணைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தம் அரசவையில் அமரச் செய்து ஆதரித்தார். பின்னர் காபூஸ் கொல்லப்படவே நாடு நாடாகச் சுற்றித் திரிந்த இவர், ரை நாடு வந்து அங்குச் சிறிது காலம் அமைச்சராக இருந்து விட்டுப் பின்னர் ஹமதான் வந்து அந்நாட்டு மன்னர் ஷம்சுத் தெளலாவின் நோயைக் குணப் படுத்தி அமைச்சரானார். இவர் மீது பொறாமையுற்ற இராணுவம் இவரைச் சிறைசெய்து கொல்ல முற்பட ஷம்சுத்தெளலா இவரை நாடு கடத்தினார். இவர் நாற்பது நாட்களாக அபூஸஃது தஃதூக் என்பவரின் வீட்டில் ஒளிந்திருந்தார். இச் சமயம் மீண்டும் ஷம்சுத்தெளலா நோய்வாய்ப்பட மீண்டும் இவர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டார். தமக்குச் சிகிச்சை அளித்து நலன் வழங்கிய இவரை மீண்டும் ஷம்சுத்தெளலா தம் அமைச்சராக ஆக்கிக் கொண்டார். இந்த சமயத்தில் தான் இவர் தம்முடைய புகழ் பெற்ற நூலாகிய “அல் கானூன் ஃபீ திப்” ( The canon of Medicine ) என்பதை எழுதினார்.
ஷம்சுத்தெளலா இறந்த பின் இவர் அமைச்சர் பதவியைத் துறந்து அபூ காலிப் என்னும் மருந்துக் கடைக்காரரின் இல்லத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் பொழுதுதான் இவர் தம் மாணவர் ஜுஸ்ஜானீ என்பவர் வேண்டிக் கொண்டதன் பேரில் நாள்தோறும் ஐம்பது பக்கம் வீதம் தம்முடைய “ஷிஃபா” என்ற நூலை எழுதி முடித்தார்.
இதன் பின் ஒரு சூஃபி போன்ற கம்பளி உடையணிந்து இவர் இஸஃபஹான் அடைந்த பொழுது அதன் மன்னர் அலாவுத் தெளலா இவரைப் பெரிதும் உபசரித்து அரவணைத்தார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவும் இவர் அரசவையில் நிகழ்த்தும் அரிய சொற்பொழிவை அனைவரும் கேட்டு மகிழ்ந்தனர். இது சமயம் இவர் அரசர் அலாவுத்தெளலாவுக்காக “விஞ்ஞானங்களின் கலைக்களஞ்சியம்” ஒன்றை ஃபார்ஸி மொழியில் தயாரித்துக் கொடுத்தார்.
தம் வாழ்வின் இறுதியில் பதினான்கு ஆண்டுகளை அமைதியாக அலாவுத் தெளலாவின் அரசவையில் கழித்தார். ஒரு தடவை இவர் அலாவுத் தெளலாவுடன் ஹமதானுக்குச் சென்ற பொழுது திடீரென இவருக்கு வயிற்று வலி ஏற்பட இவர் எட்டு ஊசிகளில் மருந்தைத் தம் உடலில் ஏற்றினார். அதன் காரணமாக இவருக்குக் கடுமையான சீதபேதி ஏற்பட்டது. இவருக்கு மருத்துவம் செய்த மருத்துவரிடம் ஒரு மருத்துவப் பொருளைச் சிறிதளவு மருந்தில் கலக்குமாறு கூற அவர் அதிகமாகக் கலக்கி விட்டதன் காரணமாகவும், தான் செய்த குற்றத்திற்காகத் தன்னைக் கடுமையாக தண்டிப்பார் என அஞ்சிய இவரின் ஊழியர் அபினை மருந்தில் அதிகமாகக் கலந்து கொடுத்ததன் காரணமாகவும் இவரின் உடல் நலம் பெரிதும் சீர்கெட்டது. ஒரு நாள் இவர் நலமாகவும், மற்றொரு நாள் நலமின்றியும் இருந்தார் என்று கூறப்படுகிறது. தமக்கு இனிமேல் மருந்தால் யாதொரு நன்மையும் ஏற்படாது என்பதை உணர்ந்த இவர், தம் பொருட்களையெல்லாம் ஏழைகளுக்கு அறம் செய்தார். தம் அடிமைகளையெல்லாம் விடுதலை செய்தார். மூன்று நாட்களில் குர் ஆன் முழுவதையும் ஓதி முடித்தார். இவ்வாறு பல முறை செய்தார். பின்னர் குளித்து ‘உலூ’ச் செய்து இறைவனைத் தொழுது, “இறைவனே! என் ஆற்றலுக்கு இயன்ற வரையில் நான் உன்னை அறிய மெய்யாகவே முயன்றுள்ளேன். எனவே என்னை மன்னித்து ஆட்கொள்வாயாக! ஏனெனில் உன்னைப் பற்றி நான் அறிந்த என்னுடைய அறிவின் உதவியால் தான், நான் உன்னை எய்தப்பெற இயலும்” என்று இரு கரம் ஏந்தி இறைஞ்சினார். இத்துடன் இவருடைய உயிர் பிரிந்தது. இது நிகழ்ந்தது ஹிஜ்ரி 428 ரமலான் மாதம் ஒரு வெள்ளிக்கிழமை (கி.பி. 1037). இப்பொழுது ரஷ்யா நாட்டிலுள்ள ஹமதான் என்னும் ஊரில் இருக்கும், இவரின் அடக்கவிடக்கத்திற்கு மக்கள் சென்று வருகின்றனர்.
இப்னு ஸீனாவின் அறிவியல் ஆய்வுகள்
இவர் பல அறிவியல் ஆய்வுகளில் உலகில் முதல்வராக விளங்குகிறார். அவையாவன
இவரை உலகில் தோன்றிய முதல் மனோதத்துவ மருத்துவர் என்று கூறினாலும் பொருந்தும். ஒருமுறை புவைஹ் மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குக் கீல்வாயுவால் கையை அசைக்க முடியாத நிலை ஏற்பட்ட பொழுது இவர் அவளை அரசவையில் கொண்டு வந்து நிறுத்துமாறு செய்து திடீரென அவள் மீது பாய்ந்து அவளுடைய முகத்திரையை நீக்கியதுடன் பாவாடையையும் உயர்த்தினார். அவ்வளவு தான் . அவள் தன் மானத்தை மறைக்க கையை இயக்கினாள். கை வேலை செய்ய துவங்கிவிட்டது.
அதே அரச குடும்பத்தைச் சேர்ந்த மற்றோரு பெண் மன நோயால் பீடிக்கப்பட்டு தனனைப் பசு என எண்ணிக்கொண்டு தன்னை அறுத்து நல்ல கறிசமைத்துச் சாப்பிடுமாறு கூறிக் கதறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு மனோதத்துவ முறையில் சிகிச்சை அளிக்க முன் வந்த இவர், ஒருவனை முன்னால் அனுப்பி, “கசாப்புக் கடைக்காரன் வருகிறான்; கசாப்புக் கடைக்காரன் வருகிறான்” என்று அவளின் காதில் விழும் வண்ணம் கத்திக் கொண்டு செல்லுமாறு செய்தார். அவன், “இதோ கசாப்புக் கடைக்காரன் வந்துவிட்டான்” என்று கூறிய அடுத்த கணமே, “எங்கே அந்த பசு! நான் கொல்லப் போகும் பசு” என்று கூறிக் கொண்டு கூரிய கத்தியுடன் அங்கு வந்து சேர்ந்த இவர், “ நல்லது இந்தப் பசுவைக் கீழே கிடத்துங்கள்!” என்று கூறினார். அவ்விதமே ஆங்கு நின்று கொண்டிருந்தோர் செய்ய, இவர் கசாப்புக் கடைக்காரன் போன்று அவளின் உடலில் பல பகுதிகளையும் தொட்டுப் பார்த்து விட்டு “இந்தப் பசு அறுப்பதற்குத் தகுதியற்றது. மிகவும் மெலிந்திருக்கிறது. கொழுக்க வையுங்கள்” என்று கூறி சென்று விட்டார். இதன் பின் அப்பெண் நன்கு உணவருந்தலானாள். அதன் காரணமாக அவளின் உடல் உரம் பெற்றது. அவள் மனவலிமையையும் பெற்றாள். அவளைப் பீடித்திருந்த மன நோயும் அகன்றது.
இவர் தம் வாழ்நாளில் சராசரி நாளொன்றுக்கு ஐம்பது பக்கங்கள் வீதம் எழுதினார். இவருடைய எழுதுகோலிலிருந்து தர்க்கம், மருத்துவம், தத்துவம், மார்க்கம், அரசியல், ஆத்மீகம், திருமறை விளக்கம், இலக்கியம், இசை ஆகியவற்றைப் பற்றி 276 நூல்கள் வரை வெளி வந்திருக்கின்றன. அவற்றில் தலை சிறந்து விளங்குவது “அல் கானூன் ஃபி திப்” என்னும் மருத்துவ நூலாகும். பத்து லட்சம் வார்த்தைகளாலான ஐந்து தொகுதிகளாக இருக்கும் இந் நூலில் 760 விதமான மருந்துகள் குறிப்பிடப் பட்டுள்ளன. கி.பி. 12 ஆவது நூற்றாண்டில் கிரி மோனாவைச் சேர்ந்த ஜெரார்ட் என்பவரால் கேனன் என்னும் பெயரில் இது லத்தீனில் மொழி பெயர்க்கபட்ட பொழுது காலன், ராஸி, மஜுஸி, ஆகியோர்களின் நூல்களை எல்லாம் மங்கச் செய்து விட்டது. ஐரோப்பியப் பள்ளிகூடங்களில் இதுவே மருத்துவ பாடப் புத்தகமாகப் போதிக்கப் பட்டது. கி.பி. 1470 முதல் 1500 வரை இதன் பதினாறு பதிப்புகள் லத்தீன், அரபி ஆகிய மொழிகளில் வெளிவந்தன. 16வது நூற்றாண்டில் ஐரோப்பிய மொழிகளில் இது இருபது தடவை அச்சடித்து வெளியிடப் பட்டது. 17ஆவது நூற்றாண்டின் இறுதி வரை இதுவே மருத்துவ உலகில் பின் பற்றப்பட்டு வந்தது. இதைப் பற்றி டாக்டர் ஆஸ்லர் குறிப்பிடும் பொழுது “ எந்த நூலும் இராத அளவு நீண்ட காலத்திற்கு இது ஒரு மருத்துவ பைபிளாக விளங்கியது.” என்று கூறுகிறார். இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர்.O . C Gruner என்பவரால் 1930 ல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அவிசென்னாவின் ’மருத்துவ நெறிமுறைகள்’ நூல் 1973இல் நியூ யார்க்கில் மறுஅச்சடிக்கப்பட்டது என்றால் இந்த 21 ம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கை புரிந்துக் கொள்ளலாம்.
அடுத்து முக்கிய நூல் “கிதாபுஷ்- ஷிஃபா” வாகும். இவரின் நூல்களையெல்லாம் தம் வாழ்வின் துணை நூலாகக் கொண்டிருந்த உமர் கையாம் தம் இறப்பிற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு கூட இவருடைய “கிதாபுஷ்- ஷிஃபா” விலுள்ள ‘ஒன்றும் பலவும்’ என்ற அத்தியாயத்தைப் படித்துக் கண்ணீர் சிந்தினார். இந் நூலின் ஒரு பிரதியைப் பெறுவதற்காக முஹம்மது பின் துக்ளக் இரண்டு லட்சம் பொற்காசுகளைச் செலவழித்தார்.
இத்தகு மாண்பார்ந்த அறிஞரின் உருவப் படம் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் வைத்துக் கெளரவிக்கப் படுகிறது. இவருடைய 1000 ஆவது ஆண்டு விழா உலகமெங்கணும் கொண்டாடப் பட்டது. ஏட்டளவிலேயே இருந்த இவருடைய நூல்கள் பல ஐக்கிய நாட்டு சபை பொருளியல் சமூக கலாச்சாரப் பிரிவின் ஆதரவில் அச்சிட்டு வெளியிடப் பட்டன. ஜுன் 2009 இல் ஈரான் நாட்டு பரிசாக வியன்னாவில் உள்ள ஐ. நா. வளாகத்தில் உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.