தாமஸ் ஆல்வா எடிசன்
உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவை சேர்ந்தவர். இவர் ஸ்கார்லெட் காய்ச்சல் காரணமாக தாமதமாக தனது 8 வயதில் பள்ளியில் பயில அனுப்பப்பட்டார். அங்கு மூன்று மாதங்களில் பள்ளி ஆசிரியரால் இனி பள்ளிகூடம் வர வேண்டாம் என நிராகரிக்கப்பட்டவர். தனது அன்னையின் வழிகாட்டலின் படி சுயமே படித்து மக்கள் மனம் மகிழ 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் செய்த அறிவியல் கண்டுபிடிப்பாளர். எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது, இவரது பல தரப்பட்ட உற்பத்தி தொழில் முயற்சிகளால் படித்தவர்கள் அதிகமானோர் அவரிடம் வேலை வாய்ப்பு பெற்றனர். நாமும் அவர் போல் வெற்றி பெற அவர் நமக்கு விட்டு சென்ற வெற்றிச் சூத்திரம் இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி.
ஆரம்ப கால வாழ்க்கை
தாமஸ் ஆல்வா எடிசன் (கி.பி.1847 - கி.பி.1931) அவர்கள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி 1847 ஆம் ஆண்டில் ஓஹியோவின் மிலன் நகரில் அவரது தந்தை சாமுவேல் ஓக்டன் எடிசன் ஜூனியர் மற்றும் தாய் நான்சி மேத்யூஸ் எலியட் அவர்களின் ஏழாவது மற்றும் கடைசி குழந்தையாக பிறந்தார். ஆனால் 1854 ஆம் ஆண்டில் குடும்பம் மிச்சிகனில் உள்ள போர்ட் ஹூரோன் நகர் சென்ற பிறகு அங்கு வளர்ந்தார்.
சிறு வயதில் ஸ்கார்லெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆசிரியர் பள்ளிகூடம் வர வேண்டாம் என நிராகரித்து கடிதம் அனுப்பியதால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அம்மா, அவருக்கு எழுத, படிக்க மற்றும் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களை வீட்டிலேயே சொல்லித்தந்தார். பாடங்களோடு, நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை வீட்டில் ஏற்படுத்தினர். அவர் குழந்தையாக இருந்த போது, தொழில்நுட்பத்தில் ஈர்க்கப்பட்டார், மேலும் வீட்டில் சோதனைகளில் பல மணிநேரம் செலவிட்டார்.
ஆரம்ப கால வேலைகள்
போர்ட் ஹூரான் முதல் டெட்ராய்ட் வரை செல்லும் ரயில்களில் சாக்லேட், செய்தித்தாள்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து தாமஸ் ஆல்வா எடிசன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது 13 ஆவது வயதில் வாரத்திற்கு 50 டாலர் ரயில்களில் விற்பனை செய்வது மூலம் லாபம் ஈட்டினார், அவற்றில் பெரும்பாலான பணம் மின்சார மற்றும் ரசாயன பரிசோதனைகளுக்கான உபகரணங்களை வாங்கச் செலவிட்டார்.
மூன்று வயது ஜிம்மி மெக்கென்சியை வேகமாக வந்த ரயில் மோதி விடாமல் எடிசன் காப்பாற்றினர். ஜிம்மியின் தந்தை அந்த ரயில் நிலைய முகவர் ஜே. யு. மெக்கென்சி மிகவும் நன்றியுள்ளவராக இருந்தார், அவர் எடிசனை ஒரு தந்தி ஆபரேட்டராகப் பயிற்றுவித்தார்.
கிராண்ட் டிரங்க் ரயில்வேயில் ஸ்ட்ராட்போர்டு சந்திப்பில் எடிசனுக்கு தந்தி ஆப்ரேட்டராக வேலை கிடைத்தது. ஒரு சரக்கு ரயில் பெட்டியில் எடிசன் ஆய்வுகூடம் ஏற்படுத்தி தந்தி ஆப்ரேட்டர் வேலை போக மீதி நேரத்தில் ரசாயன பரிசோதனைகள் செய்து வந்தார். அங்கு ஒரு மோதலுக்கு அவர் பொறுப்பேற்றார், வேலையை விட்டு வெளியேறினார்.
எடிசன் சாலைகளில் செய்தித்தாள்களை விற்பனை செய்வதற்கான பிரத்யேக உரிமையை பெற்றார். உதவிக்கு நான்கு உதவியாளர்களுடன் அச்சு மற்றும் பிரிண்ட் அமைப்பை கொண்டு கிராண்ட் ட்ரங்க் ஹெரால்டு என்ற பத்திரிக்கையை தொடங்கி, மற்ற செய்திதாள் களுடன் இவரது ஹெரால்டு பத்திரிக்கையையும் சேர்த்து விற்பனை செய்தார். இந்த அனுபவமே அவரை பின்னாட்களில் பலரையும் இணைத்து 14 கம்பெனிகள் நடத்தும் அளவிற்க்கு அவரை உயர்த்தியது.
தனது 19 ஆவது வயதில் (1866) லூயிஸ்வில்லுக்கு குடிபெயர்ந்தார், அங்கு வெஸ்டர்ன் யூனியனின் பணியாளராக பணியில் சேர்ந்தார். அங்கு இரவு பணி ஒதுக்கீடு கேட்டு பெற்று பகலில் ரசாயன பரிசோதனைகள் செய்து வந்தார். 1867 இல் ஒரு நாள் லெட் ஆஸிட் பேட்டரியில் வேலை செய்யும் பொழுது, சல்பூரிக் அமிலத்தை தரையில் கொட்டிய போது அது தரை பலகைகளுக்கு இடையில் இறங்கி அவரது முதலாளியின் மேசை மீது ஓடியது. மறுநாள் காலையில் எடிசன் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் பல்வேறு ஆராய்சிக்கு பின் முதலில் எலெக்ட்ரிக் வாக்கு பதிவு (electric vote recorder) இயந்திரம் கண்டுபிடித்து. அதற்கு யு.எஸ். காப்புரிமை ஜூன் 1, 1869 அன்று பெற்றார். இயந்திரத்திற்கான தேவை அதிகம் இல்லை என கண்டறிந்த எடிசன், உடனே நியூயார்க் நகரத்திற்குச் சென்றார்.
அங்கு "பிராங்க் போப்" என்பவருடன் கூட்டாகச் சேர்ந்து, 'எடிசன் உலக ஸ்டாக் பதிப்பி ' (Edison Universal Stock Printer), மற்றும் வேறு பதிக்கும் கருவிகளையும் உருவாக்கினார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் தானியங்கித் தந்தி (Automatic Telegraph) ஏற்பாட்டைச் செப்பனிட்டார். இரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக்கருவி மின்குறி அனுப்புதலை மிகவும் சிக்கலாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், இரசாயன அறிவை உயர்த்த வேண்டியதாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா (Electric Pen), பிரதி எடுப்பி (Mimeograph) போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த பட்டறிவே, எடிசன் இசைத்தட்டு (கிராமஃபோன்) (Phonograph) கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று. எடிசன் புதிய கருவிகளைக் கண்டு பிடிக்க முனையும் போது, வேறு பல அரிய கருவிகளும் இடையில் தோன்றின. ஒரு நிரந்தரமான ஆய்வகம் அமைக்க எண்ணி மென்லோ பார்கில் ஆராய்ச்சி ஆய்வகம் ஏற்படுத்த திட்டமிட்டார்.
மென்லோ பார்க் ஆய்வகம் (1876-1886)
1876 இல் எடிசன் ஒரு தொழில்துறை ஆராய்ச்சி ஆய்வகத்தை ராரிட்டன் டவுன்ஷிப் (தற்பொழுது பெயர் எடிசன் டவுன்ஷிப்)பின் ஒரு பகுதியான மென்லோ பார்கில் கட்டினார். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய (Phonograph) ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கபட்டது.
கார்பன் மைக்ரோஃபோன்
1876 ஆம் ஆண்டில், எடிசன் ஒரு கார்பன் மைக்ரோஃபோனை உருவாக்கி அதன் மூலம் தொலைபேசிகளுக்கான மைக்ரோஃபோனை கண்டுபிடித்தார். இது கார்பனின் துகள்களால் பிரிக்கப்பட்ட இரண்டு உலோக தகடுகளைக் கொண்டுள்ளது, அவை ஒலி அலைகளின் அழுத்தத்துடன் எதிர்ப்பை மாற்றும். துகள்களின் வழியாக தட்டுகளுக்கு இடையில் ஒரு நிலையான நேரடி மின்னோட்டம் அனுப்பப்படுகிறது.
மின்விளக்கு (Electric light)
எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் வீதிக் கம்பங்களில் பயன்படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக 'மின்சார விளக்கு ' பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளிப் பொறியாளர் களுக்குத் தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் 'மின்வீச்சு விளக்கு ' தொடர்பாக பல ஆய்வுகள் செய்து வந்தனர். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது 'சூரிய வெளிக்கனல்' எழுப்பிய வெப்ப வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவைப்பட்டது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன்படுத்தி 'நுண்ணுனர் மானி ' என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம். அம்முறையைப் பயன்படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வமேற்பட்டது.
எடிசனின் மின்விளக்கு குறித்த ஆய்வுகளுக்கு, 'எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ' துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக 30,000 டாலர் தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக அறிவியல் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் (Francis Upton) எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் எடிசனுக்குக் கிடைத்தது. மின்தடை மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் செல்லும் மின்னோட்டம் மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்குகளும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்கவில்லை. எடிசன் குழுவினர், பிளாட்டினம் கம்பியைச் சுருளை வெற்றிடக் குமிழி ஒன்றில் உபயோகித்துக், கட்டுப்படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உருவாக்கினார்கள்.
மின் விளக்கொளி அமைப்பு Electric power distribution
உலகின் முதல் வர்த்தக ”மத்திய மின்சார நிறுவனம்”, எடிசனின் நேரடிப் பார்வையில் நிறுவப்பட்டது. அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்பித்தது. பின்னர் மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய உணவு விடுதிகள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் மின்குமிழி ஒளி வீச, மின்சார மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.
மின்சார மோட்டார்
இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார சேமிப்புக்கலனை உண்டாக்க போதிய ஆய்வுகள் செய்து முடித்தார்கள். இயந்திர ஆற்றலால் ஓட்டினால் மின்சார சேமிப்புக்கலனில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்பி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக மின்சார சேமிப்புக்கலனின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே கருவி இயந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனை ஆகும்.
கிராம போன் ஒலித்தட்டு ஆய்வில் வெற்றி பெற்ற எடிசன் அடுத்து, 1880 களில் திரைப்பட படப்பிடிப்புக் கருவி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எடிசன் நகரும் திரைப்பட படப்பிடிப்புக் கருவியை உருவாக்க, அதுவரை வெளிவந்த ஆய்வு முயற்சிகளையும், தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார். இந்த எண்ணம் எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது:
”கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ”நகரும் படம்” மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை திரைப்பட படப்பிடிப்புக் கருவியுடன் இணைத்துப் 'பேசும் படம் ' என்னால் தயாரிக்க முடியும்”
முதல் நகரும் படம் வெளிவரப் உதவியாக இருந்தவர், எடிசனிடம் உதவியாளராக பணிபுரிந்த W.K.L. டிக்ஸன் என்பவராவார். 1888 இல் எடிசன் முதலில் படைத்த திரைப்பட படப்பிடிப்புக் கருவி கினெட்டாஸ்கோப் [Kinetoscope]. ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் என்பவர் ஒருவிதப் பதிவு நாடாவைப் பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் படப்பிடிப்புக் கருவியை விரிவாக்கி, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த திரைப்பட படப்பிடிப்புக் கருவியை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.
எடிசனின் குடும்ப வாழ்வு
எடிசன் தனது 24 வயதில், 1871 டிசம்பர் 25 இல், தனது ஒரு கடையில் ஊழியராக இருந்த 16 வயதான மேரி ஸ்டில்வெல்லை(1855–1884) திருமணம் செய்து கொண்டார், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர்.
1) மரியன் எஸ்டெல் எடிசன் (1873-1965), "டாட்" என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டார்.
2) தாமஸ் ஆல்வா எடிசன் ஜூனியர் (1876-1935), "டாஷ்" என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டார்.
3) வில்லியம் லெஸ்லி எடிசன் (1878-1937) கண்டுபிடிப்பாளர், 1900ஆம் ஆண்டு யேலில் ஷெஃபீல்ட் அறிவியல் பள்ளியின் பட்டதாரி,
எடிசனின் மனைவி மேரி எடிசன் தனது 29வது வயதில் திடிரென ஏற்பட்ட உடல் நலக் குறைவால் ஆகஸ்ட் 9 அன்று 1884ல் காலமானார். பொதுவாக எடிசன் தனது குடும்பத்தினருடன் இருப்பதை விட ஆய்வகத்தில் நேரத்தை செலவழிக்க விரும்பினார்.
பின்னர் எடிசன் தனது 39 வது வயதில் 1886 பிப்ரவரி 24 அன்று கண்டுபிடிப்பாளர் லூயிஸ் மில்லரின் மகள், 20 வயதான மினா மில்லரை (1865-1947) ஓஹியோவின் அக்ரோனில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் முன்று குழந்தைகள் பிறந்தனர்.
எடிசனின் மறைவு
நீரிழிவு நோயால் எடிசன் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 18, அன்று, தன் 84 வது வயதில் வெஸ்ட் ஆரஞ்சில் உள்ள லெவெலின் பூங்காவில் "க்ளென்மாண்ட்" என்ற தனது வீட்டில் இறந்தார்.
அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசனின் உடல் அடக்கத்தின் போது அமெரிக்காவெங்கும் மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிச் சடங்குகள் ஃபாதர் ரெவ். ஸ்டீபன் ஜே. ஹெர்பன் அவர்களால் நடத்தப்பட்டது. வீட்டின் பின்னால் உள்ள இடத்தில் எடிசன் அடக்கம் செய்யப்பட்டார்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.