அறிஞர் அண்ணா
காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை C. N. Annadurai (15 செப்டம்பர், 1909 – 3 பிப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார்.
ஆரம்ப கால வாழ்வு
காஞ்சிபுரத்தில் நடராசன் என்பவருக்கும், அவரது மனைவி பங்காரு அம்மையாருக்கும் கி.பி 1909 ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பெற்றோர்கள் அக்குழந்தையை சீரோடும் சிறப்போடும் வளர்ந்தனர். வறுமைமிக்க நெசவாளர் குடும்பத்திலே பிறந்த அக்குழந்தையே தற்காலத்தில் உலகம் போற்றி புகழும் மாமேதை அறிஞர் “அண்ணா” ஆவார். அவரது பெற்றோர் ‘அண்ணாதுரை’ என்னும் பெயர் சூட்டி வளர்த்தனர்.
அண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். அண்ணா தம் அன்னை பங்காரு அம்மாவை சிறு வயதிலே இறந்துவிட்டதால். அவரது தந்தை நடராசன் - ராசாமணி என்பவரை மறுமணம் செய்து கொண்டதால் அண்ணா அவரது சிற்றன்னை ராசாமணி அம்மாளிடம் வளர்ந்து வந்தார். அவரை அண்ணா "தொத்தா" என்று அன்புடன் அழைத்து தன் விருப்பங்களையும், தேவைகளையும் கூறுவார். அவரது தொத்தா அன்று அளித்த ஊக்கத்தால் அண்ணா கல்வியிலும், அரசியலிலும் புகழேணியின் உச்சியில் ஏற முடிந்தது.
கல்வி
கல்வி மக்களுக்கு கண் போன்றது ஆகும். மேலும் ஒருவன் பெற்ற செல்வங்களுள் காலத்தால் அழியாதது கல்விச் செல்வம். எனவே அத்தகைய கல்வியைக் கற்க அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். தொடக்கபள்ளி கல்வியை நல்ல நிலையில் முடித்து வெளியேறிய அண்ணாதுரை மேற்படிப்பிற்காக பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியில் சேர்த்தனர்.
அண்ணாதுரை இளம் வயதிலேயே மிகுந்த ஞாபக சக்திக் படைத்தவராய் விளங்கினார். பள்ளியில் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை கூர்மையாகக் கவனிப்பார். பள்ளி விட்டதும் புத்தகங்களை வீட்டில் வைத்து விட்டு விளையாடச் சென்று விடுவார். ஆனால் ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்று சிறந்த மாணவனாய் விளங்கினார்.
இவர் உயர் நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது நெசவுத் தொழிலைக் கற்றுக் கொள்ள விரும்பினார். அதனால் ஒய்வு நேரம் கிடைத்த பொழுது தனக்குத் தெரிந்த நெசவாளர் வீட்டுக்கு சென்று நெசவுத் தொழிலைக் கற்று வந்தார். இது பெற்றோருக்குத் தெரியாது. ஒரு நாள் இரவு 9 மணிக்கு வீடு திரும்பிய அண்ணாதுரையிடம், தொத்தா “இவ்வளவு நேரம் எங்கே போய் ஊர் சுற்றி விட்டு வருகிறாய் ? என்று கேட்டார். அண்ணாதுரை நடந்தவற்றைச் சொன்னார். ‘தொத்தா’ “நாங்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைத்தால் நீ நெசவு கற்றுக் கொள்ளவா போகிறாய்? எஙகள் ஆசையும் உழைப்பும் வீண் தானா? “ என்று கவலையோடு கேட்டார்.
அதற்கு அண்ணாதுரை ”நெசவுத் தொழில் இழிவான தொழிலா? மக்கள் மானத்தைக் காக்க ஆடை பயன் படுகிறது. அதை நெய்து கொடுப்பவரின் தொழில் உயர்ந்தது. அதுவும் நாம் நெசவாளர் குடும்பத்தவரல்லவா எதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் கற்கச் சென்றேன். நான் செய்தது தவறா?” என்று கேட்டார்.
உழைத்துப் படிக்காமலே மதிப்பெண்கள் பெற்று விடலாம் என்பது எல்லா மாணவர்களுக்கும் ஏற்றதன்று. அது போலவே அண்ணாதுரையும் பள்ளி இறுதித் தேர்வில் இரண்டு முறை தோல்வியுற்றார். தொத்தாவிற்கு அண்ணாதுரையின் தோல்வி வியப்பைத் தந்தது. அண்ணாதுரைக்கு தன்னுடன் பயின்ற மாணவர்களைப் பார்க்கவே வெட்கமாக இருந்தது. எனவே மூன்றாம் முறை தான் எழுதப் போகும் தேர்வை நல்ல முறையில் எழுதி, அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று உறுதி கொண்டார். அதன் படி அந்த முறை தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேறியிருந்தார்.
நகராட்சி அலுவக எழுத்தர்
அண்ணாதுரையின் பெற்றோருக்கு அவரைக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஆனால் குடும்பத்தின் செல்வ நிலை அதற்கு இடம் தராமல் போகவே, நகராட்சி அலுவலகத்தில் எழுத்தராக பணி புரியலானார்.
எழுத்தராகப் பணியேற்ற நாளிலிருந்தே அவர் தம் கடமையைச் செவ்வனே செய்து வந்தார். இருந்தும் ஒய்வு நேரங்களில் அறிவு நூல்களை விரும்பி கற்று வந்தார். இதற்கிடையில் எழுத்தராகப் பணிபுரிந்து கொண்டிருந்த அண்ணாவின் காதுகளுக்கு இனிய செய்தி ஒன்று எட்டியது. “பிற்பட்ட வகுப்பினர்களுக்கு கல்வி சலுகை உண்டென்றும், அதைப் பயன் படுத்திக் கொண்டு கல்லூரியில் பயிலலாம்” என்பதே அச் செய்தி ஆகும்.
கல்லூரியில் மேற்படிப்பு
எனவே தாம் ஆற்றிவந்த எழுத்தர் பணியை விட்டு விட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இடைநிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற அண்ணாதுரைப் பட்டப்படிப்பு படிக்கவேண்டுமென்ற ஆவல் எழுந்தது. ஆனால் குடும்ப பொருளாதார நிலை இடங்கொடுக்கவில்லை. மேலும் அண்ணா கல்லூரியில் படிக்கும் பொழுது விடுமுறை காலத்தில் தம் சிற்றன்னையான, தொத்தா வீட்டிற்குச் செல்வார். ஒவ்வொரு விடுமுறைக்கும் தம் சிற்றன்னையின் நகைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதைக் கண்டார். தொத்தாவிடம் அதைப் பற்றிக் கூறி வருத்தப்படுவார்.
ஒரு நாள் அவர் சிற்றன்னையிடம் “நான் இனிமேல் படிக்கச் சென்னைக்குப் போகப் போவதில்லை. நான் படித்தது போதும். நீங்கள் உங்கள் நகைகளை இழந்தது போதும்” என்று கூறினார். அதற்கு தொத்தா “நகையா பெரியது. உன் படிப்பு தான் பெரிது. நீ படித்து முடித்து வேலையில் அமர்ந்து விட்டால் நான் விற்ற நகைகளைப் போல் பத்து மடங்கு வாங்கிக் கொள்ளலாம் நீ வருந்தாதே” என்று ஆறுதல் கூறினார்.
”கல்லூரி பாடங்கள் மட்டுமே போதிய அறிவு வளர்ச்சியை அளித்து விட முடியாது” என்பதை அறிந்த அவர் வேறு பல நூல்களையும் படித்தார். சிறந்த நூல் நிலையங்கட்கு சென்று அறிவு வழங்கும் நூல்களை ஆவலுடன் படித்தார். மேலும் கல்லூரியில் படிக்கும் பொழுதே அண்ணாதுரை எல்லாச் சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்வார். தான் எடுத்துக் கொண்ட கருத்தை விளக்கி கூறுவதில் அண்ணாவுக்கு நிகர் அண்ணாதான். அவர் பேசுவதில் மட்டும் தான் வல்லவராக விளங்கினார் என்று எண்ண வேண்டாம். அது போல எழுதுவதிலும் வல்லவராக விளங்கினார்.
திருமணம்
அண்ணாதுரை கல்லூரியில் பயிலும் போதே அவருக்கு திருமணம் செய்து வைக்க சிற்றன்னை ராசாமணி அம்மையார் முயன்றார். அண்ணாதுரை சிற்றன்னையின் விருப்பத்திற்கு மாறாக நடக்க விரும்பாமல் திருமணத்திற்கு சம்மதித்தார். 1930 ஆம் ஆண்டில் அண்ணாதுரைக்கும், ராணி அம்மையாருக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. ராணி அம்மையாரின் நற்பண்புகளும், இனிய பேச்சுக்களும் அவரைப் பெரிதும் மகிழ்வித்தன. அம்மையாரும் தம் கணவருடைய ஆழ்ந்து அகன்ற கல்வி அறிவையும், துய நாட்டுப் பற்றையும், சிறந்த ஒழுக்கத்தையும் கண்டு மனம் மகிழ்ந்தார். தம் கணவரின் குறிப்பறிந்து மனம் மகிழ நடந்து கொண்டார். இத்தகைய மன ஒற்றுமையாலும், செயல் ஒற்றுமையாலும் அவ்விருவரும் மலரும், மணமும் போலவும், உடலும், உயிரும் போலவும் ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தனர்.
சுய மரியாதை இயக்கம்
அண்ணாதுரை திருமணம் செய்து கொண்ட போதும் படிப்பில் உள்ள ஆர்வம் குன்றாமல் படித்து வந்தார். அப்பொழுது சில இளைஞர்கள் “சுய மரியாதை இளைஞர் மன்றம்” என்ற மன்றத்தை ஏற்படுத்தினர். அந்த இளைஞர்களுல் சிலர் அண்ணாவிற்கு நெருங்கிய நண்பர்களாக விளங்கினர். அண்ணா துரைக்கு சுயமரியாதை இயக்கத்தில் நாட்டமிருந்த போதிலும் கல்லூரி மாணவராக இருந்ததால் எந்த நிகழ்ச்சியிலும் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. “படிக்கும் துறையில் இருக்கும் பொழுது மாணவர்கள் அரசியலில் நுழையக் கூடாது” என்பது அண்ணாவின் குறிக்கோள்.
அண்ணாதுரை கல்லூரியில் படிக்கும் பொழுது தொழிலாளர் நலம் காக்கும் தலைவர்களில் ஒருவரான திரு. பாசுதேவ் என்பவரின் நட்பைப் பெற்றார். அவருக்குத் தமிழில் பேச வராது. அவரின் ஆங்கிலச் சொற்பொழிவுகளை, அழகுத் தமிழில் மொழி பெயர்க்கும் தொண்டினை மேற் கொண்டார். பாசுதேவின் நட்பால் நீதிக் கட்சியின் கொள்கைகளை அறிந்து கொண்ட அண்ணா நீதிக் கட்சியில் சேர்ந்து பொது மக்களுக்குத் தொண்டுபுரிய முடிவு செய்தார்.
ஆசிரியப் பணி
பி. ஏ. ஆனர்ஸு தேர்வில் தேர்ச்சி பெற்ற அண்ணா துரை காஞ்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியியொன்றில் ஆசிரியராக அமர்ந்தார். பி. ஏ. ஆனர்ஸ் ஆக இருந்தும் கல்லூரியிலோ, உயர் நிலைப் பள்ளியிலோ வேலை கிடைக்கவில்லை. ஆயினும் ஆசிரியர் பணியைச் சிறந்த பணியாகக் கருதினார். நாட்டின் எதிர்காலச் சிற்பிகளை உருவாக்கும் பேறு தமக்குக் கிடைத்ததாக பெருமை கொண்டார். மாணவர்களுக்குப் பாடம் கற்பிப்பதில் ஈடு இணையற்ற ஆசிரியராக விளங்கினார். இதையடுத்து சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் சில காலம் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
ஈ. வெ. ரா. பெரியாரின் நட்பு
ஈரோடு வெங்கடகிருஷ்ண நாயக்கர் மகன் ராமசாமி என்பவர் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிர தொண்டராக இருந்தார். மது விலக்குக் கொள்கைக்காக போராடும் வீரராக இருந்தார். சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு ஆகிய சீர்திருத்தக் கொள்கைகளை நாடெங்கும் பரப்பத் தொடங்கினார். 1934 ல் நடைபெற்ற செங்குந்த மாநாட்டில் அண்ணா துரை சொற்பொழிவு ஆற்றினார். அம் மாநாட்டிற்கு வந்திருந்த ஈ. வெ. ராமசாமி (பெரியார்) அண்ணாவின் பேச்சைக் கேட்டு “இந்த இளைஞனை அரசியலில் ஈடு படுத்தி விட்டால் தன் பேச்சுத் திறத்தால், உறங்கிக் கிடக்கும் மக்களை விழித்தெழுந்து வீறு கொள்ளச் செய்வான்”, என்று முடிவு கட்டினார்.
திருப்பூரில் 1935ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் மாநாட்டிற்கு வந்திருந்த அண்ணா துரையைப் பெரியார் சந்தித்து பேசினார். அண்ணாவுக்கு அரசியலில் இருந்த துடிப்பைக் கண்ட பெரியார் அவரை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று பல தத்துவ நூல்களை அவரிடம் கொடுத்து அவரை முன்னேறச் செய்தார்.
இந்தி எதிர்ப்பு மாநாடு
அண்ணாதுரை நீதிக் கட்சியில் சேர்ந்து உழைக்கத் தொடங்கினார். அப்பொழுது சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடங்கியது. அண்ணாதுரை அத்தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் அவர் வெற்றி பெறவில்லை.
1936 ஆம் ஆண்டு காங்கிரசு கட்சி அமைச்சரவை அமைத்து சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியார் முதலமைச்சரானார். அவர் பதவிக்கு வந்த உடனே “தமிழ் நாட்டுப் பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாய பாடமாக்குவேன்” என்று அறிக்கையை விட்டார். இந்த அறிக்கையை கண்டித்து, தமிழ் பேரறிஞர்களும் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். காஞ்சிபுரத்தில் பெரியார் தலைமையில் இந்தி எதிர்ப்பு மாநாடு கூட்டப்பட்டது. “இப்போராட்டத்தைத் தூண்டியவர் அண்ணா துரை தான் என்று குற்றம் சாட்டி அரசாங்கம் அவரை சிறையிலடைத்தது.
நான்கு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வெளியேறிய அண்ணா, சென்னை அடையாறு மாளிகையில் தங்கியிருந்த இளவரசர் முத்தையா செட்டியாரைக் கண்டு, தமக்கு கல்லூரியில் ஆசிரியர் பதவி அளிக்கும் படி வேண்டிக் கொண்டார். ஆனால் அவரோ அண்ணாவை, தமக்கு அந்தரங்கக் காரியதரிசியாக நியமிக்க விரும்பினார். அண்ணாதுரை இளவரசர் கருத்தை ஏற்கவில்லை.
பத்திரிகை ஆசிரியர்
திருவாரூரில் நடைபெற இருக்கும் சுயமரியாதை மாநாட்டிற்கு தலைமை தாங்க, அண்ணாவை அழைத்தார் பெரியார். அண்ணாதுரையும் மறுக்காமல் அவரது அழைப்பை ஏற்று தலைமை தாங்கினார். பிறகு பெரியார் அண்ணாதுரையிடம் “விடுதலை” பத்திரிகையின் துணையாசிரியராகப் பணியாற்றும் படி, வேண்டினார். முதலில் அண்ணா மறுத்தார். முடிவில் பெரியார் அவரை இணங்கச் செய்து விட்டார்.
“விடுதலை” இதழில் அவர் எழுதிய கட்டுரைகளைக் கண்டு பெரியார் மிக்க மகிழ்ச்சி கொண்டார். அவர் அண்ணாவை பலவாறாகப் பாராட்டினார். மேலும் அண்ணாதுரை தாமாகவே “திராவிடநாடு” என்ற வார இதழையும் தொடங்கினார்.
திராவிட முன்னேற்றக் கழகம்
1947 ஆகஸ்ட் 15 நாள் இந்தியா விடுதலை பெற்றது. அந்த நாளை எல்லா இந்திய மக்களும் விடுதலை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால் ஈ.வெ.ரா. பெரியார், “வெள்ளையன் நாட்டை விட்டு வெளியேறினால் மட்டும் நமக்கு சுதந்திரம் கிடைத்ததாக எண்ணக் கூடாது. நம்மை சுரண்டுபவரும், தாழ்வு ஏற்படுத்துபவரும் இருக்கும் பொழுது நாம் எப்படி விடுதலை பெற்றவராவோம். எனவே அது நமக்கு இன்பநாள் அல்ல. துக்க நாள் தான்” என்றார்.
பெரியாரின் இந்த பேச்சை அண்ணா ஏற்கவில்லை. அவர், “நாம் சுதந்திரம் பெற்ற இந்தத் திருநாள், உலகத்தின் முன் நம் மதிப்பை உணர்த்தும் நாள் எனவே அது துக்கநாளாகாது” என்று அறிக்கை விடுத்தார். இதனால் பெரியாருக்கும் அண்ணாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் கழகத்தில் பிளவு ஏற்பட்டது.
1949ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ம் நாள் “திராவிட முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில் அண்ணா தலைமையில் ஒரு புதிய இயக்கத்தை தோற்றுவித்தனர். “சமுதாய சீர்திருத்தம்” அக்கழகத்தின் முக்கிய கொள்கையாக இருந்தது. அக்கழகத்திற்கென ஒரு கொடியை ஏற்படுத்தினர். அந்த கொடி மேல் பாதி கருப்பு நிறத்தையும், கீழ்ப்பாதி சிவப்பு நிறத்தையும் கொண்டது.
மும்முனைப் போர்
1953ல் தமிழக முதலமைச்சர் இராஜாஜி ஒரு புதிய கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார், “6 வயது முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகள் பாதி நாள் பள்ளியில் படித்துவிட்டு, பாதி நாள் தங்களின் பெற்றோருக்குரிய குலத் தொழிலைக் கற்க வேண்டும்”.
குலக் கல்வி திட்ட எதிர்ப்பு, கல்லக்குடி போராட்டம், இரயில் நிறுத்தக் கிளர்ச்சி என்று மூன்று முனைகளிலும் எதிர்த்துப் போராட முடிவு செய்தது. கடமை, கண்ணியம், கட்டுபாடு அவசியம் என அண்ணா போராட்ட முறைகளைப் பற்றியும், அதைக் கடைபிடிக்க வேண்டிய முறைகளைப் பற்றியும் விளக்கி ஒர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
சட்டமன்றத்திலும் - நாடாளு மன்றத்திலும்
1957 ல் நடைபெற்ற தேர்தலில் சட்ட மன்றத்திற்கும், நாடாளு மன்றத்திற்கும் கழக வேட்பாளர்களில் 17 பேர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அச் சமயம் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.
1962ல் நடைபெற்ற தேர்தலில் கழகம் மேலும் அதிக வெற்றி பெற்றது. ஆனால் அண்ணாதுரை காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கழகம் பெற்ற வெற்றி இந்திய வரலாற்றிலேயே திருப்பமாக அமைந்தது. கழகம் 138 சட்டமன்ற தொகுதிகளைப் பெற்றது. அண்ணா தென் சென்னை வேட்பாளராய் நின்று மாபெரும் வெற்றி பெற்றார். தமிழகத்தின் கவர்னர் திரு. சர்தார் உஜ்ஜல் சிங் அவர்கள், அண்ணாவை தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்க அழைத்தார்.
1967 ம் ஆண்டு மார்ச்சு மாதம் 6ம் நாள் அண்ணா முதலமைச்சர் பதவியேற்றார். தமிழ்நாடு முழுவதும் அன்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது.
தமிழ்நாடு பெயர் மாற்றம்
இந்தியா மொழிவாரி ராஜ்யங்களாக பிரிக்கப்பட்ட பொழுது பல மாநிலஙகள் மொழியின் பெயரால் அமைக்கப்பட்டன. ஆனால் தமிழ் நாடு மட்டும் “சென்னை மாநிலம்” என்றழைக்கப் பட்டது. அண்ணாதுரை பதவியேற்றதும் சட்டமன்றத்தில் சென்னை மாநிலத்திற்கு “தமிழ் நாடு” என்று பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தார். தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தமிழ் மக்களின் அறிவு வளர்ச்சிக்காக பல பள்ளிகளும், சில கல்லூரிகளும் திறக்கப்பட்டன. பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாக்கினர். மேலும் சீர்திருத்த மணம் புரிந்து கொண்டவர்களுக்கு எல்லாச் சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுக்கும் சொத்தில் உரிமையுண்டு என்று சட்டத்தை திருத்தியமைத்தார்.
அடுக்கு மொழி அண்ணா
அண்ணாவின் புகழ் வெளிநாடுகளிலும் பரவியது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் தம் நாடுகளுக்கு அண்ணாவை வருமாறு அழைத்தனர். அண்ணாவின் அறிவுத் திறன், வாதத்திறன், எழுத்தாற்றல், சொல்வன்மை, கடமை உணர்வு முதலியவற்றை அறிந்து அவர்கள் மகிழ்ந்தனர்.
காலத்தோடு, வாழ்க்கையோடு பொருந்திய உண்மைகளை எளிய நடையில் பேசும் முறையை அறிமுகப்படுத்தியவர் அண்ணா அவர்கள் தான். எனவே “அடுக்கு மொழி அண்ணா” என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
அண்ணாதுரை பேச்சில் எவ்வளவு வல்லவராக இருந்தாரோ அது போலவே எழுத்திலும் வல்லவராய் விளங்கினார். அவர் எழுதிய கதை கட்டுரைகளுள் சிறந்தவை “இரங்கோன் ராதா” “விடுதலைப் போரும் காந்தியும்” என்பனவையாகும். அவர் நடிப்புத் துறையிலும் சிறந்தவராக விளங்கினார்.
அண்ணாவின் திரைப்பட வாழ்க்கை
1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற திரைப்படத்தை முதன் முதலில் அரங்கேற்றினார். இந்த படம் ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இந்த படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் இவருக்கு 12,000 ரூபாயை பெற்றுத்தந்தது இது அந்த நேரத்தில் ஒரு பெரிய தொகையாகும். அதுமட்டுமல்லாமல் இவரின் மிகச்சிறந்த நாவலான வேலைக்காரி (1949) மற்றும் ஒர் இரவு, போன்ற நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டன. இத்தகைய திரைப்பட பணியின் மூலமாக இ.நாராயணசுவாமி, K.R. ராமசாமி, N.S. கிருஷ்ணன், எஸ் ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்ற திரை நட்சத்திரங்களின் ஆதரவு இவருக்கு கிடைக்கபெற்றது.
அறிஞர் அண்ணாவின் குண நலன்கள்
புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் அண்ணாவின் பேச்சாற்றலையும், எழுத்தாற்றலையும் பாராட்டி அண்ணாதுரைக்கு “அறிஞர்” என்ற சிறப்புப் பட்டத்தை அளித்தார். எனவே அன்றிலிருந்து அண்ணாதுரை “அறிஞர் அண்ணாதுரை” என்று அழைக்கப்பட்டார்.
அண்ணாதுரை இளமையிலிருந்தே அதிக தமிழ்ப் பற்றுக் கொண்டவர். கட்டுப்பாட்டை மீறாத பண்புடையவர். எதையும் தாங்கும் இதய்ம் கொண்டவர். நாட்டுப்பற்று மிகுந்தவர். ஏழைகள் பால் இறக்கம் கொண்டவர். அன்புள்ளம் நிறைந்தவர். பகைவரையும் மதிக்கும் பண்பு கொண்டவர். மன்னிக்கும் மனப்பான்மை மிகுதியாகக் கொண்டவர். எம்மதங்களுக்கும் வேறுபாடின்றி மதிப்பு அளிக்கக் கூடியவர்.
உலகத் தமிழ் மாநாடு
அண்ணாவின் ஆட்சி காலத்தில் தான் தமிழன்னை அரியனை ஏறி ஆட்சி புரியத் தொடங்கினாள். மொழிக்கு விழா எடுத்த பெருமை தமிழ் மொழிக்குத் தான் உண்டு. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் 1968-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் நாள் தொடங்கியது. தமிழ் வளர்க்கும் அறிஞர் அண்ணாதுரைக்கு “உருவச்சிலை திறாப்பு விழா” நடந்தது
இந்த இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டிற்கு அமெரிக்கா, இரஷ்யா, பிரான்சு, ஆஸ்திரேலியா, ஜெர்மன், சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, போன்ற நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து430 பிரதிநிதிகள் வந்திருந்தனர். கடற்கரை சாலையில் அமைந்துள்ள பல்கலைக் கழகத் தேர்வு மண்டபத்தில் உலகக் கலைக் கண்காட்சி நடைபெற்ற்து. இத் தமிழ் விழாவிற்கு பாரதத்தின் ஜனாதிபதி திரு.ஜாகிர் உடேன் அவர்கள் நேரில் வருகைதந்து விழாவினை கண்டு மகிழ்ந்து அண்ணாவைப் புகழ்ந்தார்.எ
யேல் பல்கலைக் கழகத்தில் அண்ணா
அண்ணாதுரையின் பெருமையைக் கண்ட அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகம் அவரை அழைத்துச் சிறப்பித்தது. பல்கலைக்கழகம் “ சப்பெல்லோசிப்” என்ற பட்டத்தை வழங்கி அண்ணாதுரை அவர்களைச் சிறப்பித்தது. அவரது தமிழ் பற்றையும், ஆர்வத்தையும் கண்டு வியந்து போற்றியது.
தமிழகம் திரும்பிய சில மாதங்களில் அண்ணாதுரைக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு உணவுக் குழாயில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். எனவே அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதற்காக 1968ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றார். நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமணையில் டாக்டர் தியோடர் மில்லர் என்ற புகழ் பெற்ற அறுவை மருத்துவர் அறுவை சிகிச்சையை நடத்தினார். ஒரு மாத கால ஒய்வுக்குப் பின் அண்ணாதுரை அவர்கள் சென்னைக்குத் திரும்பினார்.
மருத்துவர்கள் அவருக்கு பூரண ஒய்வு தேவை என்று கூறியிருந்த பொழுதிலும், அவர் ஒய்வு எடுத்துக்கொள்ளாமல் அரசாங்க அலுவல்களில் பூரணமாக ஈடுபட்டார். தம் உடல் நல குறைவையும் பாராது தமிழ் நாடு பெயர் சூட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அண்ணாவின் மறைவு
1969 ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதியன்று அவருக்கு அடையாறு புற்று நோய் மருத்துவ மனையில் இரண்டாவது முறை அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர் மில்லர் அவர்களே மறுபடியும் அந்த சிகிச்சையைச் செய்தார். ஜனவரி 29 ஆம் தேதியன்று அண்ணாதுரையின் உடல் நிலை கவலைக்கிடமாகியது. மறுநாள் நுரையீரலில் கோளாறு ஏற்பட்டது. அதன் விளைவாக அவரது உடல் நிலை மிகவும் மோசமாகியது.
1969ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 2 ஆம் நாள், நள்ளிரவு 12 மணிக்கு அண்ணாவின் உயிர் அவர் உடலை விட்டுப் பிரிந்தது. அண்ணாவின் மறைவு தமிழகம் முழுவதும் பரவியது. அவர் பொன்னுடலைக் காண நாட்டின் பல் பகுதிகளிலிருந்து மக்கள் வெள்ளம் திரண்டு வந்தது.
அண்ணாதுரையின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக, ராஜாஜி மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்தது. மக்கள் வெள்ளம் கண்ணீரும் கம்பலையுமாய் மணிக்கணக்காக காத்திருந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அண்ணாதுரையின் உடல் பீரங்கி வண்டியில் இரானுவ மரியாதையுடன் ஊர்வலமாகப் புறப்பட்டது. சென்னை கடற்கரையை அடைந்தது. கடற்கரையில் பல்கலைக் கழகத்திற்கு முன் அண்ணாவின் உடல் அடக்கம் செய்யபபட்டது. நம் அரசினர் அண்ணாதுரையின் உடல் அடக்கம் செய்யப் பட்ட இடத்தில் சமாதி கட்டி , அதன் மீது “எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது.” என்று சலவைக் கல்லில் பொறித்து வைத்துள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.