Home


அபூதர் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு

        மக்காவிலிருந்து சிரியா செல்லும் பாட்டையில் வாழ்ந்து வந்த குறைஷிகளில் ஒரு பிரிவினரான கிஃபாரிக் கூட்டத்தைச் சேர்ந்தவர் இவர். அக்கூட்டத்தினர் சிரியா செல்லும் வழியில் வாழ்ந்து வந்தார்கள். வாணிபம் செய்து வந்த இவர்கள் பின்னர் வணிகக் கூட்டத்தினரைக் கொள்ளையடித்து வாழ்ந்து வந்தனர். அவர்களின் தலைவராக ஜுன்தப் என்ற இயற்பெயர் பெற்றிருந்த அபூதர் கிஃபாரி இருந்து வந்தார்கள். தம் கூட்டத்தினர் புனித மாதங்களில் கொள்ளையடிப்பதை விரும்பாத இவர்கள் அவர்களை விட்டும் பிரிந்து தம் அன்னை ரம்லாவுடனும், தம்பி அனீஸுடனும், நஜ்திலிருந்த தம் தாய் மாமன் வீடு சென்று வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் தம்பி அனீஸ் ஒரு கவிஞர் பல கவிதைப் போட்டிகளில் அவர் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்.

இஸ்லாத்தை தழுவியது

        அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இஸ்லாமியப் பிரச்சாரத்தைப் பற்றிக் கேள்வியுற்ற இவர்கள் தம் தம்பி அனீஸை அது பற்றி விசாரித்து வருமாறு மக்காவுக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் கொணர்ந்த செய்திகள் போதுமானவையாக இல்லாத்தனால் அதனை நேரில் அறிந்து வர தாமே மக்கா சென்றார்கள். பல நாட்களாக இவர்கள் கஃபாவின் அருகில் இருந்த போதினும் எவரும் இவர்களை ஏறிட்டும் பார்க்கவில்லை. இவர்களும் எவரிடமும் அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பற்றி விசாரிக்க மனமின்றி, தாம் கொணர்ந்த உணவையும், ஜம்ஜம் தண்ணீரையும் அருந்தி வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள் இவர்களைக் கண்ட அலீ (ரழி) அவர்கள் இவர்கள் அயலூர் மனிதர் என்பதை இவர்களின் வாயிலாக அறிந்து கொண்டு இல்லம் அழைத்துச் சென்று இவர்களுக்கு உணவளித்தனர்.

அடுத்த நாளும் இவர்கள் முன்பிருந்த இடத்திலேயே இருப்பதைக் கண்டு. “வந்த அலுவல் முடியவில்லையோ?” என்று வினவ இவர்கள் இரகசியமாகத் தாம் வந்த அலுவலைக் கூற அவர்கள் இவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்வதாகக் கூறி வழியில் எவரேனும் தீயோர் எதிர்ப்படின் தாம் தம் செருப்பை ஒழுங்கு படுத்துவது போன்றோ, சிறுநீர் கழிக்க அமர்வது போன்றோ, அங்கு அமர்ந்து விடுவதாயும் தம்மைப் பொருட்படுத்தாது அவர்கள் முன்னால் சென்று விடுமாறு பின்னர்த் தாம் அவர்களை வந்து அடைந்து ஒர் ஏற்பாட்டைச் செய்து விடுவதாகவும் கூறி இவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். (இதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே தாம் உருவத் தொழும்பை விட்டொழித்து உருவமற்ற ஓரிறைவனை வணங்கி வந்ததாக இவர்கள் பிற்காலத்தில் கூறினர்.) அடுத்த நாள் தாம் இஸ்லாத்தைத் தழுவியதைக் கஅபாவில் வைத்து உரத்துச் சப்தமிட்டுக் கூற இவர்களுக்கு அடியும், உதையும் கிடைத்தன. அப்பாஸ் (ரழி) அவர்கள் குறுக்கிட்டு இவர்களின் உயிர் காத்தார்கள்.

இவர்களை பற்றி அண்ணல் நபி (ஸல்)

        பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஆணைப்படி இவர்கள் தம் கூட்டத்தினரை அணுகி இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து அவர்களை நேர்வழிப் படுத்தினர். பத்ர், அகழ்ப்போர்களுக்கு பின் தம் கூட்டத்தினருடன் மதீனா வந்து வாழ்ந்தார்கள் இவர்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெளியே செல்லும் பொழுது இவர்களையும் தம் ஒட்டகத்தில் அமர்த்திக் கொண்டு செல்வர். “அல்லாஹ் என்னை நால்வரை நேசிக்குமாறு கூறியுள்ளான். காரணம், அவர்களை அல்லாஹ்வும் நேசிக்கிறான். அவர்கள் அலீ, மிக்தாத், அபூதர், ஸல்மான் ஆகியோராவர்” என்று ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினர். மற்றொரு முறை, “அபூதர்ரை விட மிகவும் உண்மையாளரைப் பூமி தன் முதுகின் மீது சுமந்ததுமில்லை; வானம் பார்த்ததுமில்லை” என்று அவர்கள் கூறினர். “அஸ்ஹாபுஸ் ஸுஃபாக்களில் ஒருவராக இருந்த இவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதீனாவை விட்டுத் தாம் வெளியே சென்ற பொழுது இரண்டு முறை மதீனாவில் தம் பிரதிநிதியாக அமர்த்தி விட்டுச் சென்றனர். இவர்களுடைய துறவு வாழ்க்கையைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “என்னைப் பின்பற்றியவர்களில் இவர் ஈஸா (அலை) அவர்களைப் போன்ற துறவி” என்று இயம்பினர்.

        ஒரு நாள் இவர்கள் தாம் முன்னாளில் செய்த பாவச் செயல்களை எண்ணி அழுது கொண்டிருப்பதைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள். “நீர் இஸ்லாத்தைத் தழுவுமுன் செய்த பாவங்கள் இறைவனால் மன்னிக்கப்படும். நீர் எவரை அதிகமாக நேசிக்கின்றீரோ அவருடன் நீர் மறுமையில் இருப்பீர்” என்று ஆறுதல் கூறினர்.

தபூக் போருக்குப் சென்ற போது

        தபூக் போருக்குப் பயணம் புறப்பட்ட பொழுது இவர்களின் ஒட்டகை அலுத்துப் போய் விட்டதால் இவர்கள் சற்றுத் தாமதித்துத் தம் சுமைகளைச் சுமந்து கொண்டு பின்னால் வந்தனர். இவர்களை இன்னார் என்று இலக்குக் கண்டு கொண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் அபூதர் மீது அருள் பாலிப்பானாக! அவர் தனியாக வாழ்கிறார். அதே போன்று அவர் தனியாக மரித்து, தனியாக அடக்கப்படுவார். தனியாகவே மறுமையில் எழுப்பப்படுவார்” என்று கூறினர்.

        இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களை அடைந்ததும், “தம் ஒட்டகை படுத்துக் கொண்டு எழுந்திருக்க மறுத்து விட்ட தென்றும் எனவே நடந்து வருகிறேன்” என்று கூறியதும், “நீர் வராதது எனக்குப் பெரிதும் இழப்பாகவே இருந்தது. நீர் எடுத்து வைத்த ஒவ்வோர் அடிக்கும் இறைவன் உம்முடைய பாவங்களில் ஒன்று வீதம் பொறுந்தருள்வான்” என்று அருண் மொழி பகர்ந்தனர் அண்ணல்.

        இறப்புப் படுக்கையில் கிடந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களை அழைத்து வரச் செய்து, “அபூதர் தம் வாணாள் முழுவதும் இப்பொழுது போன்று இருப்பார். நான் இறந்ததன் பின்னர் வேறு மாதிரியாக ஆகமாட்டார்” என்று வாழ்த்தினர்.

அபூபக்ர் (ரழி), உமர்(ரழி) அவர்களின் கிலாஃபத்தில்

அபூபக்ர் (ரழி) அவர்களும், உமர் (ரழி) அவர்களும் தங்களின் கிலாஃபத்தின் போது இவர்களுக்குப் பெரிதும் மரியாதை செலுத்தினர். இவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாத போதினும் அப்போரில் கலந்து கொண்ட நபி தோழர்களுக்கு அளித்த உதவித் தொகையை உமர் (ரழி) அவர்கள் இவர்களுக்கும் அளித்துக் கெளரவித்தார்கள்.

உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தில்

        உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது அவர்கள் தம் சகோதரருக்கு மூன்று லட்சம் திர்ஹங்களும், தம் உறவினர் மர்வானுக்குப் பெரும் தொகையும், ஸைத் இப்னு தாபித்துக்கு ஒரு லட்சம் திர்ஹங்களும் அளித்த பொழுது, அவர்களின் உறவினர்கள் பெரும் பெரும் பதவிகளில் அமர்ந்து உல்லாச சுக போகங்களில் ஈடுபடுவதைக் கண்டு கொதித்தெழுந்த இவர்கள், “அவர்களின் பொன்னும், வெள்ளியும் மறுமையில் நரக நெருப்பில் காய்ச்சப் பட்டு அவற்றைக் கொண்டு அவர்களின் முதுகில் சூடிடப்படும். நீங்கள் சேமித்தவை இவை தாம், இவற்றின் பலனை நுகருங்கள் என்று கூறப்படும்” என்னும் கருத்தமைந்த திருக்குர் ஆனில் சூரத் தெளபாவிலுள்ள வசனத்தை ஓதிக்காட்டினர்.

        இச் செய்தி உஸ்மான் (ரழி) அவர்களின் செவிப் புகுந்ததும் தம்முடைய பிரச்சாரத்தை விடுமாறு இவர்களிடம் சொல்லி அனுப்ப, “நான் திருக்குர் ஆன் ஒதுவதை உஸ்மான் தடுக்கிறாரா, என்ன? உஸ்மானைத் திருப்திப்படுத்துவதற்காக, அல்லாஹ்வை அதிருப்திப் படுத்துவதைவிட, அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துவதற்காக உஸ்மானை அதிருப்திப் படுத்துவதற்கு நான் அஞ்சவில்லை” என்று கூறினர்.

        தம்முடைய பிரச்சாரத்தை இவர்கள் விட்டொழியாததைக் கண்ட உஸ்மான் (ரழி) அவர்கள் இவர்களைச் சிரியாவிற்குப் போகுமாறு ஆணையிட அவ்வாறே செய்தனர்.

சிரியாவில் ஏழைமக்களின் படையொன்று திரண்டது

        அபூதர் (ரழி) அவர்கள் சிரியா சென்று அங்கு முஆவியா (ரழி) தம்முடைய கருவூலத்தைப் பொன்னாலும், வெள்ளியாலும் நிரப்பி அதனை அல்லாஹ்வுடைய பொருள் என்று கூரி அனுபவித்து வருவதைக் கண்டு, “அது அல்லாஹ்வுடைய பொருள் என்றால் மக்களுடைய பொருளல்லவோ? அது மக்களையல்லவா சேர வேண்டும்?” என்று கூக்குரலிட்டனர். மேலும் இவர்கள் முஆவியா (ரழி) அல்கிஸ்ரா என்னும் பெயருடன் பச்சை மாளிகை ஒன்றை நிர்மாணித்திருப்பதைக் கண்டதும், “இதனை அவர் அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிர்மாணித்திருப்பின், இது பொது நிதியிலிருந்து தவறாகக் கபளீகரம் செய்யப்பட்ட பணத்திலிருந்து கட்டப்பட்டதாக ஆகும். அல்லது அவருடைய சொந்தப் பணத்திலிருந்து கட்டப்பட்டதாக இருப்பின் இது ஒரு கடப்பான (இஸ்ராஃபான) செயலாகும்” என்று கூறினர். இவர்களின் பின்  ஏழை மக்களின் படையொன்றே திரண்டு விட்டது. செல்வந்தர்களுக்கு எதிரான் ஓர் இயக்கம் முளையிடலாயிற்று. இதனை முஆவியா (ரழி), உஸ்மான் (ரழி) அவர்களுக்கு எழுத அவர்கள் இவர்களை மதீனாவுக்கு வருமாறு அழைத்தனர்.

மதீனாவில் உருவான சதிக் குற்றத்திற்கு எதிராக 

        மதீனாவுக்கு வந்த இவர்கள் மீண்டும் தம்முடைய சமதர்மப் பிரச்சாரத்தைச் செய்தார்கள். இதனை உஸ்மான் (ரழி) அவர்களின் விரோதி அப்துல்லாஹ் இப்னு ஸபா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி முஸ்லிம்களிடையே பிளவேற் படுத்த முற்பட்ட பொழுது இவர்கள் கலீபாவுக்கு எதிராகச் சதி செய்வதாகக் குறைகூறப் பட்டது. இதனை அறிந்த இவர்கள் கலீபா அவர்களின் முன் சாட்டையுடன் சென்று, “என் மீது சதிக் குற்றம் சாட்டியவனை இந்தச் சாட்டையால் அடிக்காமல் விட மாட்டேன். முஸ்லிம்களிடையே பிளவேற்படுத்தவோ, தங்களுக்கெதிராகச் சதி செய்யவோ, ஒரு போதும் உடன்படேன். தாங்கள் என் மீது குறைகாணின் தாங்கள் விதிக்கும் எந்தத் தண்டனைக்கும் தலை சாய்க்கத் தயாராயுள்ளேன்” என்று நவின்றார்கள். உஸ்மான் (ரழி) அவர்கள் இவர்களை மார்போடணைத்து இவர்கள் மீது அன்பைச் சொரிந்தனர்.

        இதன் பின் இவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஸபா முதலானோரை நோக்கி, “உஸ்மான் என் மீது குற்றம் சாட்டி என்னை உயரமான மலையில் தூக்கிலிட்டாலும் நான் அவருக்கு எதிராக என்னுடைய சிறு விரலைக் கூட அசைக்க மாட்டேன்” என்று கூரினார்கள்.

சமதர்மக் கொள்கை பற்றி வாதம் நிகழ்த்த ஏற்பாடு

        உஸ்மான் (ரழி) அவர்கள் எவ்வாறேனும் இவர்களைத் தம் வழிக்குக் கொண்டு வர வேண்டுமென்று எண்ணி இவர்களுக்கும் கஃபுல் அஃபாருக்கும் இடையே அவர்களுடைய சமதர்மக் கொள்கை பற்றி வாதம் நிகழ்த்த ஏற்பாடு செய்தனர். அந்த வாதத்தின் போது கஃபுல் அஃபார் இவர்களை நோக்கி, “செல்வத்தை மக்கள் சேர்த்துக் குவிக்கக்கூடாது என்று தாங்கள் கூறுவது சரி என்றால் வாரிசுரிமைச் சட்டம் இஸ்லாத்தில் ஏன் ஏற்பட்டது?” என்று வினவினார். இதற்கு இவர்கள் நேரடியாகப் பதிலுரைக்காது, “நானும் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் உஹத் மலைச்சாரலில் ஒரு நாள் நடந்து சென்ற பொழுது அம்மலையை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சுட்டிக்காட்டி, “இம்மலையளவு என்னிடம் தங்கம் அளிக்கப் பட்ட போதினும் அதனை மூன்று நாட்களில் நான் அல்லாஹ்வுடைய நல்லடியார்களுக்குப் பகிர்ந்தளித்து விடுவேன்.” என்று கூறினார்.” என எடுத்துரைத்தார்கள்.

அபூஹுரைரா (ரழி) அவர்களை சந்திக்க மறுத்தது

        இச்சமயம் பஹ்ரைனின் ஆளுநராக இருந்த அபூஹுரைரா (ரழி) இவர்களைக் காண வந்த பொழுது முதலில் அவர்களைச் சந்திக்க மறுத்து விட்டனர் இவர்கள். பின்னர் எவ்வாறோ இவர்களைச் சந்தித்த அபூஹுரைரா (ரழி) “தாங்கள் ஏன் என்னைச் சந்திக்க மறுத்தீர்கள்?” என்று வினவிய பொழுது, “தாங்கள் பஹ்ரைனின் ஆளுநரவல்லவா?” என்று வினவினார்கள் இவர்கள். “ஆம்” என்றார்கள் அவர்கள். “அவ்விதமாயின் தாங்கள் மாட மாளிகை கட்டி, நிலபுலன்கள் வாங்கி வாழ்ந்திருப்பீர்களே” என்றார்கள் இவர்கள். “அப்படி ஒன்றும் நான் செய்ய வில்லையே” என்று அபூஹுரைரா (ரழி) பதிலுரைத்த பொழுது, “அவ்விதமானால் தாங்கள் என்னுடைய சகோதரர் தாம்” என்று கூறி அவர்களைக் கட்டி அணைத்தார்கள் இவர்கள்.

மதீனாவில் இருக்க விரும்பாது அருகில் உள்ள சிற்றூர் சென்றது

        இதன் பின் இவர்கள் மதீனாவில் இருக்க விரும்பாது தம் குடும்பத்துடன் மதீனாவுக்கு மூன்று மைல் தொலைவிலுள்ள ரப்ஸா என்னும் சிற்றூருக்குச் சென்றார்கள். இவர்களை அலீ (ரழி) சற்றுத் தொலை வரை சென்று வழி அனுப்பி வந்தனர். தமக்கு ஆண்டொன்றிற்குப் பைத்துல்மாலிலிருந்து கிடைத்த தொள்ளாயிரம் வெள்ளிக்காசுகளைக் கொண்டு இவர்கள் அங்கு ஆடுகளையும், ஒட்டகங்களையும் வாங்கி ஆடுகளில் பால் கறந்து விற்றும், ஒட்டகங்களை சவாரிக்கு வாடகைக்கு விட்டும் எளிய முறையில் வாழ்ந்து எஞ்சியதைத் தர்மம் செய்து வந்தார்கள்.

இவர்களின் மரணம் நபி (ஸல்) அவர்களின் தீர்க்கதரிசனம் பலித்தது

        ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டில் இவர்கள் நோய்வாய்ப் பட்டனர். அவ்வாண்டு ஹஜ்ஜுக்கு அவ்வூரிலிருந்த அனைவரும் மக்கா சென்று விட்டதால் இவர்களும், இவர்களுடைய மனைவியும், மகனுமே அவ்வூரில் இருந்தனர். அச்சமயம் தமக்கு இறப்பு அண்மிவிட்டதை அறிந்த இவர்கள் ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் என்றும் தாம் இறந்ததும் தம்மைக் குளிப்பாட்டிக் கஃபனிட்டுச் சாலையின் ஓரத்தில் வைத்து அவ்வழியே வருபவர்களிடம், “நபி தோழர் அபூதர் இவர்! இவரை நல்லடக்கம் செய்ய உதவுங்கள்!” என்று கூறுங்கள். அவர்கள் ஆவன செய்வார்கள் என்றும் கூறிவிட்டு இறந்தார்கள். அவ்வாறே அவ்வழியே வந்த அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதும், அவரின் நண்பர்களும் இவர்களை நல்லடக்கம் செய்து இவர்களின் மனைவியையும், மகனையும் மதீனா அழைத்துச் சென்றார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களைப் பற்றிக் கூறிய தீர்க்க தரிசனம் பலித்து விட்டது.

இவர்கள் வாயிலாக 281 நபி மொழிகள் கிடைத்துள்ளன. எனினும் புகாரீயிலும், முஸ்லிமிலும் அவற்றில் 31 மட்டுமே இடம் பெற்றுள்ளன.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

Talhah AH

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Bilal

பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Fathima RA

ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.