அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்
ரழியல்லாஹு அன்ஹு
இஸ்லாத்தை முதன்முதலில் தழுவியவர்களில் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களும் ஒருவர். மக்காவில் முதன் முதலில் குர் ஆனை பகிரங்கமாக உரத்தகுரலில் ஓதியதற்காக, குறைஷிக்காபிர்களால் கொடுமையாக தாக்கப்பட்டார்கள். மக்காவை துறந்து அபிஸீனியாவுக்கு சென்றவர்களில் இவர்களும் ஒருவர். இஸ்லாத்திற்காக நிகழ்த்தப்பட்ட பத்ரு போர் முதல் பல புனித யுத்தங்களில் பங்குபற்றியவர். ஹலரத் அபூபக்ர் (ரழி), ஹலரத் உமர் (ரழி) அவர்களின் கலீபா காலங்களில் பொறுப்பான பல பதவிகளை வகித்திருக்கிறார்கள். மேலும் 848 ஹதீஸ்களுக்கு இவர்கள் சாட்சியாக இருக்கிறார்கள். இவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உறவினர் என்று பலர் நெடுங்காலம் வரை எண்ணிக் கொண்டிருக்கும் படி அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு இவர்கள் பல்வேறு ஊழியங்கள் செய்து பெருமானாரின் அன்பை பெற்றவர்கள்.
இளமை பருவத்தில்
அண்ணல் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் தோழர்களில் ஒருவரான இவர்கள் பனீ ஹுஸைல் என்னும் எளிய குடும்பத்தில் தோன்றியவர்கள். இவர்கள் இளமையில் உக்பா இப்னு அபீ உமைத்தின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அக்காலை அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரழி) அவர்களும் அவ்வழியே சென்று கொண்டிருந்த பொழுது பசி மேலீட்டால் இவ்விளைஞரை அழைத்துச் சிறிது பால் விலைக்குத் தருமாறு கூற, “அவ்விதம் செய்ய எனக்கு அனுமதி இல்லையே” என்றனர் இவர்கள். “நல்லது; பால் கறவாத ஆட்டையாவது பிடித்து வாரும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற, அவ்விதமே செய்தார்கள் இவர்கள். அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறைவனிடம் இறைஞ்சி விட்டு அதன் மடுவில் கைவைக்க அதிலிருந்து பால் சுரந்தது. அதனை ஒரு பாத்திரத்தில் பிடித்து வைத்துக் கொண்டு அந்த ஆட்டை விட்டு விட்டார்கள். அது முன்பு போல் வற்றிய ஆடாகி விட்டது.
இதைக் கண்ட அந்த இளவல் பெரிதும் வியப்புடன், “தாங்கள் என்னவோ கூறிவிட்டு பால் கறந்தீர்களே. அதனை என்க்குச் சொல்லித் தரலாமா? என்று விநயமுடன் வேண்டினார். அது கேட்டு மகிழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரின் தலையில் தடவி, “ஏன் சொல்லித் தரக் கூடாது? நீர் இந்த அறிவைப் பரத்தக்கூடிய நற்பேற்றினை வருங்காலத்தில் எய்தப் பெறுவீர்” என்று நன்மாராயம் மொழிந்தனர்.
முதன் முதலில் குர்ஆனை பகிரங்கமாக ஓதியவர்
இதன் பின் இஸ்லாத்தை தழுவிய இவர்கள் ‘இஸ்லாத்தை முதன் முதலில் தழுவிய அறுவரில் ஆறாமவர்’ என்று தம்மைப் பெருமையாகக் கூறுவதுண்டு. ‘அர்-ரஹ்மான்’ அத்தியாயம் அருளப் பட்ட பொழுது, “இதனைக் குறைஷிகளிடம் ஓதிக் காட்டுபவர் யார்?” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வினவிய சமயம் மூன்று முறையும் இவர்களே அதனைச் செய்ய முன் வந்தார்கள். அது கண்டு மகிழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கஅபாவிற்குச் சென்று அதனை ஓதுமாறு கூற இவர்களும் அவ்விதமே செய்தனர். அப்பொழுது அபூஜஹ்ல் இவர்களின் கன்னத்தில் ஓங்கி அடிக்க இவர்களின் காதிலிருந்து இரத்தம் வழிந்தது. இவர்கள் அழுது கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்த பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வருந்தினர். அப்பொழுது ஜிப்ரீல் (அலை) சிரித்தவண்ணம் வருவதைக் கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “அவர் அழ நீர் ஏன் சிரிக்கிறீர்? “ என்று வினவ, “விரைவில் அவர் விளங்கிக் கொள்வார்” என்றனர் ஜிப்ரீல் (அலை) அவர்கள்.
பத்ரு போரில் அபூஜஹ்லின் ஆணவம்
குறைஷிகள் கொடுமை தாங்காது அபிஸீனியாவில் அடைக்கலம் புகுந்தவர்களில் இவர்களும் ஒருவர். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்திய எல்லாப் போர்களிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பத்ரு போரில் அபூஜஹ்லின் உடலைத் தேடிக் கண்டுபிடித்துவரச் சென்ற இவர்கள் அவனுடைய உடல் மீது அமர்ந்த வண்ணம் அவனின் தலையை வெட்ட முனைந்த பொழுது இவர்கள் மீது காரி உமிழ்ந்த அவன் இவர்களின் முந்தைய எளிய நிலையை மனத்திற் கொண்டு, “டேய் இடைப்பயலே! நீ பெரிய இடத்திலல்லவா அமர்ந்து விட்டாய்?” என்று கூறினான். தம் வாள் மழுங்கி விட்டதால் அபூஜஹ்லின் வாளினாலேயே அவனுடைய தலையை வெட்டி அது கனமாக இருந்ததனால் அவனுடைய மூக்குத் துளைகளில் கயிறிட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திரு முன் இழுத்து வந்தனர் இவர்கள். இவர்கள் யர்முக் சண்டையிலும் கலந்து கொண்டுள்ளார்கள்.
பலரும் பெருமானாரின் உறவினர் என எண்ணியது
உலகத்திலேயே சுவனத்தைக் கொண்டு நன்மாராயம் பெற்ற பதின்மரில் ஒருவரான இவர்கள், மதீனாவின் பள்ளியின் பின்புறத்தில் வாழ்ந்து வந்தார்கள். எனவே இவர்களும், இவர்களின் அன்னையும் அடிக்கடி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் இல்லம் சென்று வருவர். எந்நேரத்திலும் தம் முன் வர அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு அனுமதி வழங்கி இருந்தனர். எனவே இவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் உறவினர் என்று பலர் நெடுங்காலம் வரை எண்ணிக் கொண்டிருந்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கும் இவர்கள் பல்வேறு ஊழியங்கள் செய்து வந்ததால் ‘காலணிக்காரர், தலையணைக்காரர், தண்ணீர்க்காரர்’ என்று மக்கள் இவர்களை அழைத்து வந்தனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களைப் பகல் நேரத் தூக்கத்திலிருந்து எழுப்புவதும் அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் வசதி செய்வதும் இவர்களுடைய பொறுப்பாகவே இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்யுங்கால் அவர்களின் கைத்தடி, பற்குச்சி, ‘உளூ’ச் செய்யும் பாத்திரம் ஆகியவற்றைக் கொண்டு செல்லும் பொறுப்பும் இவர்களுடையதேயாகும்.
இவர்களின் நடை உடை பாவனை
இவர்கள் சிறிய உருவினராயிருந்தனர். உயரமானவர்கள் அமர்ந்திருப்பின் ஏறத்தாழ இவர்களின் உயரமிருப்பர். இவர்களின் கால்கள் ஒல்லியாயிருந்தன. இவர்களின் உடல் வலிமை யுடையதாயிருந்தது. நல்ல சிவப்பு நிறமுள்ள இவர்கள் நீண்ட முடி வளர்த்திருந்தனர். இவர்கள் வெண்ணாடை புனைந்து நறுமணம் பூசுவர். “இவர்கள் நடை, உடை, பாவனை, பண்பாடுகளில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒத்திருந்தனர்” என்று ஹுதைபா (ரழி) கூறுகின்றனர். இவர்கள் அதிகமாகத் தொழுது வந்தனர். இறைப் பணியை மேற்கொள்ள உடல் தென்பும் வேண்டற்பாலது என்பதை உணர்ந்த இவர்கள் அதே அளவு நோன்பு நோற்கவில்லை.
திருக்குர்ஆனில் புலமை பெற்றோர் என்று கூறப்பட்டவர்
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் இவர்களும் ஒருவர். திருக்குர் ஆனின் எழுபது அத்தியாயங்களை இவர்கள் தம் கைப்பட எழுதியுள்ளனர். அண்ணல் நபி (ஸல்) அவர்களால் திருக்குர் ஆனில் புலமை பெற்றோர் என்று கூறப்பட்ட நால்வரில் இவர்களும் ஒருவர். இவர்கள் திருக்குர் ஆனை அழகிய முறையில் ஓதுவதில் தேர்ச்சியும் பெற்றிருந்தனர். எனவே தான் அண்ணல் நபி (ஸல்) அவர்களும், “திருக்குர் ஆன் அருளப் பெற்ற முறையில் அதனை ஓத விரும்புவோர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ஓதும் முறையைப் பின்பற்றுக” என்று கூறினர்.
ஒருமுறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களை நோக்கி, தமக்கு நிஸாஉ அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு கூற, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது தங்கள் மூலமாகத்தானே எங்களுக்கு கிடைத்தது! அதனை நான் தங்களுக்கு ஓதிக்காட்டுவதா?” என்று வியப்புடன் வினவ, “நீர் கூறுவது உண்மைதான். ஆனால் அதனை நான் உம்முடைய நாவினால் கேட்க விரும்புகிறேன்” என்று அவர்கள் கூற, அதனை இனிமையுடன் ஓதினார்கள் இவர்கள். அது கேட்டு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொக்கி மகிழ்ந்தனர்.
திருக்குர் ஆனை கற்றுக் கொடுப்பதிலும் இன்பம் கண்டவர்
திருக்குர் ஆனை ஓதுவதில் இவர்கள் இன்பம் கண்டது போன்று அதனைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பதிலும் இன்பம் கண்டனர். இவர்களின் இல்லத்தில் திருக்குர் ஆனை கற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.
“ஒரு முறை இவர்கள், “திருக்குர் ஆனில் எந்த வசனம் எதற்காக அருளப் பெற்றது என்பதை நான் அறியாத வண்ணம் உள்ள திருவசனம் ஒன்றுமில்லை. திருக்குர் ஆனில் நான் எல்லாரையும் விட அதிகமாக அறிந்துள்ளேன்.” என்று நபித் தோழர்களின் கூட்டத்தில் கூறிய பொழுது அங்கிருந்த ஒருவரும் அதனை மறுத்துக் கூறவில்லை. பின்னரும் கூறவில்லை” என்று ஷகீக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றனர்.
ஹதீதிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்
குர் ஆனில் மட்டுமின்றி ஹதீதிலும் இவர்களுக்கு ஆழ்ந்த புலமை இருந்து வந்தது. இவர்களின் வாயிலாக 848 நபி மொழிகள் நமக்குக் கிடைத்துள்ளன. “இப்னு மஸ்வூத் கூறும் ஹதீதுகளை உண்மையானவை எனக் கொள்வீர்களாக!” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். ஹனஃபீ மத்ஹபின் சட்ட திட்டங்கள் இவர்கள் கூறிய நபி மொழிகளுக் கிணங்கவே நிர்மாணிக்கப் பட்டுள்ளன. எடுத்ததற்கெல்லாம் இவர்கள் நபி மொழிகளை ஆதாரம் காட்டுவதில்லை. எப்பொழுதாவது அதனைக் கூறும் பொழுது இவர்களின் நெற்றி வியர்க்கும், உடம்பெல்லாம் நடுங்கும். அப்பொழுதும், “இன்ஷா அல்லாஹ், அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இவ்வாறு, ஏறத்தாழ இது போன்று, அல்லது சற்றுக் கூடுதலாக, குறைவாகக் கூறியிருக்கலாம்” என்று மிகவும் எச்சரிக்கையுடன் சொல்வார்கள்.
இப்னு மஸ்வூத்தின் நட்பைப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள்
இவர்களை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் பாராட்டிக் கூறியிருக்கின்றனர். “என்னுடைய ’உம்மத்’துக்கு எது நல்லதென்று இப்னு உம்மி அப்த் (அதாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்) கூறுகின்றாரோ அதனை நானும் நல்லதென்று கருதுகிறேன். எதனை அவர் வெறுக்கிறாரோ அதனை நானும் வெறுக்கிறேன்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளனர். “அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதின் நட்பைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நியாயத் தீர்ப்பு நாளின் போது அவரின் பாதங்கள் உஹத் மலையை விடக் கனமாக இருக்கும்” என்றும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கூஃபாவின் கருவூலக் காவலர், மதபோதகர்
”நான் எவருடனும் ஆலோசனை கலக்காது ஒருவரைத் தலைவராக நியமிப்பின் இப்னு மஸ்வூதையே நியமிப்பேன்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதற்காக இவர்களைக் கூஃபாவின் கருவூலக் காவலராகவும், மதபோதகராகவும் உமர் (ரழி) அவர்கள் நியமித்தனர். இவர்கள் அப்பொழுது அங்கு ஏற்படுத்திய பள்ளி பிற்காலத்தில் பெரிதும் பிரபல்யம் பெற்று விளங்கியது.
உஸ்மான் (ரழி) அவர்கள் கிலாஃபத்தில்
திருக்குர் ஆனை நூல் உருவில் ஆக்க உஸ்மான் (ரழி) அவர்கள் ஸைத் இப்னு தாபித்தை நியமித்த பொழுது கூஃபாவிலிருந்த இவர்கள் பெரிதும் வருத்தமுற்றனர். “இறைவனின் திருமறையை என்னைவிட நன்கு அறிந்தவர் யார் உளர்? அப்படி எவரேனும் இருப்பின் என்க்கு ஓர் ஒட்டகை மட்டும் கிடைப்பின் நான் அவரைக் சென்று காண்பேன்.” என்று கூறினர். இது உஸ்மான் (ரழி) அவர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் இவர்களை மதீனா வருமாறு அழைத்தனர். சிலர் போக வேண்டாமென்று தடுக்க, “அழைப்பை ஏற்று போகாதிருப்பது பிரிவுக்கு வழிகோலும்” என்று கூறி மதீனா சென்றனர் இவர்கள். “இவர்கள் மதீனாவில் இல்லாததனால் ஸைத் இப்னு தாபித்தை அப்பணியை ஆற்றுமாறு ஏற்பாடு செய்யப் பட்டது.” என்று உஸ்மான் (ரழி) அவர்கள் இவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
இவர்கள் உருவாக்கி வைத்திருந்த குர் ஆனுடன் அதிகாரபூர்வமான குர் ஆனையும் இவர்கள் கூஃபாவில் பயன் படுத்தி வந்தனர் என்றும் அதில் சில அத்தியாயங்கள் காணப்பட வில்லை என்றும் அத்தியாயங்களின் வரிசையும் வேறு விதமாக அமைக்கப் பட்டிருந்தன என்றும் அதனையே ஷீயாக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகின்றது.
எனக்கு மரியாதை செய்ய வேண்டாம்
ஒரு நாள் இவர்கள் தெரு வழியே நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது சிலர் மரியாதையின் பொருட்டு இவர்களின் பின்னே நடந்து வந்தனர். அப்பொழுது இவர்கள் அவர்களை நோக்கி, “என்னைக் கொண்டு தங்களுக்கு ஏதேனும் ஆக வேண்டியுள்ளதா?” என்று வினவ, அவர்கள் “இல்லை” என்றனர். அப்பொழுது இவர்கள், “எனக்கு மரியாதை செய்வதற்காகத் தாங்கள் என் பின்னே வர வேண்டாம். இதனால் உங்களுக்கு ஓர் இழுக்கு ஏற்படவும் எனக்கு ஒரு தருக்கு ஏற்படவும் ஏதுவாகிறது” என்று மென்மையான முறையில் கூறினர்.
கனவில் அண்ணல் நபி கூறியதாக ஒருவர்
மற்றொரு நாள் இவர்களை ஒருவர் அணுகி, தாம் சென்ற இரவு ஒரு கனவு கண்டதாகவும் அதில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இவர்களை நோக்கி, “இப்னு மஸ்வூதே! எனக்கு பின்னர் நீர் பெரிதும் துன்பத்திற்குள்ளாகியுள்ளீர். இப்பொழுது என்னிடம் வந்து விடும்” என்று கூறியதாகவும் சொன்னார்.
அது கேட்ட இவர்கள். “அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீர் இவ்விதம்தான் கண்டீரோ?” என்று வினவ, அதற்கு அவர், “ஆம்” என்றார். அப்பொழுது இவர்கள் அவ்விதமாயின் நீர் என்னுடைய ‘ஜனாஸா’ தொழுகையில் கலந்து கொண்ட பின்னர் தான் மதீனாவை விட்டு எங்கேனும் செல்ல வேண்டும்” என்று கூறினர். இதன் பின் சில நாட்களில் இவர்கள் நோய்வாய்ப் பட்டனர்.
நோய்வாய்ப் பட்டு படுக்கையில் இருக்கும் போது
இவர்கள் இறப்புப் படுக்கையில் கிடக்கும் பொழுது, “தங்களுக்கு என்ன தேவை?” என்று கலீபா உஸ்மான் (ரழி) அவர்கள் வினவிய பொழுது, “இறைவனின் அருள் தான்” என்று இவர்கள் பதிலிறுத்தனர். “மருத்துவரை அழைத்து வரச் செய்யவா?” என்று அவர்கள் மீண்டும் வினவ, “மருத்துவன் தானே எனக்குப் பிணியை நல்கியுள்ளான்” என்று இவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள். “தங்களுடைய பெண் மக்களுக்கு நான் ஏதாவது உதவிப் பணம் அளித்து வரவா?” என்று அவர்கள் வினவ, “உங்களுக்கு உணவு தேவைப்படின் சூரத்துல் வாக்கிஆவை ஓதிக் கொள்ளுங்கள் என்று நான் ஏற்கெனவே அவர்களிடம் கூறி விட்டேன்” என்று இவர்கள் விடையிறுத்தார்கள்.
இறைவனடி சேர்ந்தார்கள்
இவர்கள் ஹிஜ்ரி 32-இல் தங்களின் 60-ஆவது வயதில் மதீனாவில் இறந்தார்கள். அன்று இரவு ஜன்னத்துல் பகீஃ என்ற நல்லடக்க பூமியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர்களின் ‘ஜனாஸா’ தொழுகையை உஸ்மான் (ரழி) அவர்கள் நடத்தினார்கள் என்றும் அம்மார் இப்னு யாஸிர் தொழுகையை நடத்தினார்கள் என்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.