அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்
ரழியல்லாஹு அன்ஹு
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் மறு பெயர் அபுல் அப்பாஸ் என்பதாகும். பனூ ஹாஷிம்கள் ஷீபே அப்துல் முத்தலிப் என்ற இடத்தில் பகிஷ்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட காலத்தில் அங்கு வைத்துப் பிறந்தவர்களில் இவர்களும் ஒருவர். இவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்பையும், துஆ பரக்கத்தையும் சிறு வயதிலேயே பெற்று பிற்காலத்தில் “பஹ்ருல் இல்ம்” - கல்வி கடல் என்றும், “ஹிப்ருல் உம்மா”- சமுதாயத்தின் அறிஞர் என்றும் “தர்ஜுமானுல் குர்ஆன்” - திருக்குர்ஆன் விரிவுரையாளர் என்றும் “சுல்தானுல் முஃபஸ்ஸிரீன்” வேத வியாக்கியானிகளின் அரசர் என்றும் புகழெய்தி வாழ்ந்தனர். ”குலாபாயே ராஷிதீன்” கலீபாக்கள் அபூபக்ர்(ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி) மற்றும் அலீ (ரழி) ஆகியோருடன் சிறப்பாக பணியாற்றி முஆவியாவின் மகன் யஸீதுடைய காலம் வரை வாழ்ந்தார்கள்.
குழந்தைப் பருவத்திலேயே தலைசிறந்த விரிவுரையாளர்
இவர்கள் ஹிஜ்ரத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் அதாவது கி.பி. 619 இல் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது தந்தை அப்பாஸ் இப்னு அப்துல்முத்தலிப் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பே, தம் தாயாருடன் இஸ்லாத்தில் சேர்ந்து விட்டவர் அப்துல்லாஹ். இவர்களின் அன்னையின் பெயர் லுபாபா.
தந்தைக்கு முன் அன்னையுடன் சேர்ந்து இஸ்லாத்தைத் தழுவி இவர்கள், தனது பத்து வயதிற்குள்ளேயே திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்டனர். மேலும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் தலைசிறந்து விளங்கினர். திருக்குர்ஆனின் விரிவுரை பற்றி இவர்களுக்குத் தெரிந்திருந்த நபிமொழிகள் (ஹதீதுகள்) வேறு எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. திருக்குர்ஆன் வசனங்கள் இறங்குவதற்கான காரணங்களையும் இவர்கள் நன்கு அறிந்திருந்தனர். எனவே இவர்களுக்கு “ஹிப்ருல் உம்மத்” (சமுதாயத்தின் அறிஞர்) என்னும் சிறப்புப் பெயரும் வழங்கப் பட்டு வந்தது.
அண்ண்ல் நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்தும் பொழுது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு பதின்மூன்று வயதே ஆகி இருந்தது. எனினும் அக்காலத்திலேயே இவர்கள் திருக்குர் ஆன் விரிவுரையில் சிறப்புற்று விளங்கினர். இதற்குக் காரணம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்த்தும், இறைஞ்சுதலும் என்று கூறப்படுகிறது.
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வாழ்த்தும், இறைஞ்சுதலும்
ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கச் சென்றதைக் கண்ட சிறுவர் அப்துல்லாஹ் ஒரு பாத்திரத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீர் வைத்திருப்பதைக் கண்டு மகிழ்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் அவர்களுக்கு மார்க்க ஞானத்தையும், திருமறை விளக்கத்தையும் தருமாறு இறைஞ்சினர். மற்றொரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்ற பொழுது அவர்களின் பின்னே நின்று அத்தொழுகையில் கலந்து கொண்டனர் அப்துல்லாஹ். அது கண்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இமாமைத் தொடருபவர் ஒருவர் மட்டுமே இருப்பின் அவர் இமாமுடன் சமமாக நிற்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக அவர்களை இழுத்துத் தம்முடன் சமமாக நிறுத்திக் கொண்டனர். எனினும் அப்துல்லாஹ் சற்றுப் பின்னால் நகர்ந்து நின்று கொண்டார்கள். தொழுது முடிந்ததும் அதற்கான காரணத்தை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வினவ, “தாங்களோ இறைதூதர். அவ்வாறிருக்க நான் தங்களுடன் நிற்கத்தகுமா?” என்று அடக்கத்துடன் பதிலளித்தனர். அது கேட்டு அக மகிழ்ந்து அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இப்பொழுதும் அப்துல்லாஹ்வுக்கு மார்க்க ஞானத்தையும் திருக்குர் ஆன் விளக்கத்தையும் நல்குமாறு இறைவனிடம் இறைஞ்சினார்கள்.
ஹதீதுகளை தெரிந்து கொள்வதில் ஆர்வம்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காலமான பின் அவர்களின் தோழர்களிடம் சென்று தமக்குத் தெரியாத ஹதீதுகளைக் காத்திருந்து தெரிந்து கொள்வது இவர்களின் நீங்காத வழக்கமாக இருந்து வந்தது.
ஒரு முறை இவர்கள் ஓர் அறிஞரிடம் ஹதீதுகளைக் கேட்டறியச் சென்றனர். அப்பொழுது அவரின் இல்லத்தில் கதவு மூடப்பட்டிருந்தது. எனவே கதவைத் தட்டி அந்த அறிஞருக்குச் சிரமம் கொடுக்க விரும்பாது கதவு திறக்கப்படும் வரை அங்கேயே காத்துக் கொண்டு நின்றனர். அப்பொழுது காற்று பலமாக அடித்து இவர்களின் உடையை யெல்லாம் புழுதி மயமாக்கியது. இதன் பின்னர் அந்த அறிஞர் ஏதோ ஓர் அலுவலின் பொருட்டு வெளியே வரக் கதவைத் திறக்க, இவர்கள் புழுதி படிந்த உடையுடன் அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டதும், “தாங்களோ அண்ணல் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினர். தாங்கள் இவ்வாறு நின்று துன்புறலாமா? கதவைத் தட்டுவதற்கென்ன?” என்று கூறிய பொழுது, “தங்களிடம் நான் கற்றுக் கொள்ள வந்துள்ளேன். தாங்கள் என் குரு. நான் துன்புறலாம். தங்களுக்குத் துன்பம் தரலாமா?” என்று சமாதானம் கூறினர் இவர்கள்.
மக்கள் திரள் திரளாக இவரிடம் பாடம் கேட்க வருகை
நீண்டு உயர்ந்து அழகிய கம்பீரத் தோற்றத்துடன் இருந்த இவர்கள் பிற்காலத்தில் “பஹ்ருல் இல்ம்” - கல்வி கடல் என்றும், “ஹிப்ருல் உம்மா”- சமுதாயத்தின் அறிஞர் என்றும் “தர்ஜுமானுல் குர்ஆன்” - திருக்குர்ஆன் விரிவுரையாளர் என்றும் “சுல்தானுல் முஃபஸ்ஸிரீன்” வேத வியாக்கியானிகளின் அரசர் என்றும் புகழெய்தி வாழ்ந்தனர். எனவே இவர்களிடம் பாடம் கேட்க இவர்களின் இல்லத்திற்கு மக்கள் திரள் திரளாக வந்தனர்.
ஒரு நாள் திருக்குர்ஆன் விளக்கமும், மற்றொரு நாள் சட்டம் பற்றியும், வேறொரு நாள் இலக்கணம் பற்றியும், நான்காவது நாள் அரபிகளின் வரலாறு பற்றியும், ஐந்தாவது நாள் கவிதை பற்றியும் இவர்கள் சொற்பொழிவாற்றுவர். திருக்குர்ஆனின் சில வசனங்களுக்கு விளக்கம் கூறும் பொழுது முற்கால அரபிக் கவிதைகளை ஆதாரம் காட்டி இவர்கள் தெளிவுபடுத்தியதால் மக்களும் அவற்றை விரும்பிப் படிக்கலாயினர். “திருக்குர் ஆனில் சிக்கலான இடங்கள் வரும் பொழுது முற்காலக் கவிதைகளைக் கொண்டு அவற்றிற்குத் தெளிவு காணுங்கள். ஏனெனில் அவை தாம் அரபிகளின் குறிப்பேடு ஆகும்” என்று இவர்கள் கூறியுள்ளனர்.
அதிகமான அறிவை பெற்ற வழி என்ன?
“இத்துணை அதிகமான அறிவைத் தாங்கள் எவ்வாறு எய்தப் பெற்றீர்கள்?” என்று இவர்களிடம் ஒரு முறை வினவப் பட்ட பொழுது, “விசாரிக்கும் நாவாலும், அறிவார்ந்த இதயத்தாலும் எய்தப் பெற்றேன்” என்று இவர்கள் பதிலுரைத்தார்கள். பிற்காலத்தில் இவர்கள் தங்களைப் பற்றிக் கூறும் பொழுது, “நான் கல்வியைத் தேடும் பொழுது இலேசாகக் கருதப்பட்டேன். ஆனால் மற்றவர்கள் என்னிடம் வந்து கற்ற போது கண்ணியப்படுத்தப் பட்டேன்” என்று இயம்பினார்கள்.
அப்துல்லாஹ் (ரழி)யின் பணிவு
இவர்களை ஹஸன் (ரழி) அவர்களும், ஹுஸைன் (ரழி) அவர்களும் வந்து பார்த்து விட்டு இல்லம் திரும்பும் சமயம், அவர்கள் குதிரையில் ஏறுங்கால் அதன் அங்கவடிகளை இவர்கள் பிடித்துக் கொண்டு நின்ற பொழுது, “என்ன! தாங்களோ வயதால் மூத்தவர்கள். இந்த இளைஞர்கள் ஏறுவதற்காக அங்கவடிகளைப் பிடித்துக் கொண்டுள்ளீர்களே?” என்று ஒருவர் வியப்புடன் வினவினார். அதற்கு இவர்கள், “அறிவிலியே! மாண்பார்ந்த ஒருவரின் மாண்பை மாண்பார்ந்த ஒருவரைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்” என்று பதிலுரைத்தனர்.
இவர்கள் தம் அடிமை இக்ரிமாவுக்கு திருக்குர் ஆனையும், நபிமொழிகளையும் போதிப்பதற்காக அவர் வெளியே போகா வண்ணம் அவரின் கால்களில் விலங்கிட்டு வைத்து அவற்றைப் போதித்தனர் என்று புகாரி ஷரீபில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உமர் (ரழி), உதுமான் (ரழி), அலீ (ரழி) அவர்களிடம் பணி
உமர் (ரழி) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்கு மார்க்க அறிஞர்களின் முதல் அணியில் இடம் அளித்து கெளரவித்தனர். மக்காவிற்கு ‘ஹஜ்’ யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஹிஜ்ரி 35-இல் உஸ்மான் (ரழி) அவர்கள், இவர்களிடம் ஒப்படைத்தனர். இவர்கள் மக்காவில் இருக்கும் பொழுதே உஸ்மான் (ரழி) அவர்கள் கொலையுண்டனர். அலீ (ரழி) அவர்கள் கலீபாவானது, அவர்கள் இவர்களைப் பஸராவின் ஆளுநராக நியமித்தனர்.
ஸிப்பின் போரில் மக்களை சமாதானப்படுத்தியது
அலீ (ரழி) அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்கும் இடையே பிணக்கேற்பட்டுப் பின்னர் இருவருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் எழுதப்பட்ட பொழுது அதில் அலீ (ரழி) அவர்களின் பெயருக்கு முன் “அமீருல் முஃமினீன்” என்ற அடைமொழி எழுதப்பட, “நாங்கள் தாம் அவர்களை அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லையே, எனவே அவ்வடை மொழியை அடித்து விட வேண்டும்” என்று அம்ரு பின் ஆஸ் அடம் பிடிக்க, அவ்விதமே செய்யுமாறு கூறினர் அலீ (ரழி) அவர்கள், ஆனால் இதனை அலீ (ரழி) அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானம் எனக்கூறி எதிர்ப்புக் கிளப்பினர் சிலர், எனவே அவர்களை அமைதிப்படுத்த அலீ (ரழி) அவர்கள் இவர்களை அவர்களிடம் அனுப்பி வைக்க இவர்கள், “ஹுதைபிய்யா உடன்பாட்டின் போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெயருக்குப் பின் உள்ள அடைமொழியாகிய ரஸூலுல்லாஹ் (இறைதூதர்) என்பதையே அழிக்க இணங்க வில்லையா?” என்று சம்யோசிதமாக அவர்களிடம் எடுத்துரைத்து அவர்களை ஆறுதல் படுத்தினர்.
முதுமை வாழ்வு மற்றும் மரணம்
முஆவியாவின் மகன் யஸீதுடைய காலம் வரை வாழ்ந்த இவர்கள், ஹரம் எல்லைக்குள் தவறாக நடந்தாலும், தவறாக நினைத்தாலும் இறை தண்டனைக்கு ஆளாக வேண்டும்; தவறாக நினைப்பதைத் தவிர்ப்பது இயலாத செயலெனக் கருதிப் பேணுதலுக்காக தாயிஃபில் குடியேறி வாழ்ந்தனர். முதுமையில் கண்ணொளி மங்கப் பெற்றிருந்த இவர்கள் ஹிஜ்ரி 68-இல் தம் 70-ஆவது வயதில் அங்குக் காலமாயினர். அலீ (ரழி) அவர்களின் மகன் முஹம்மது என்பார் இவர்களுக்கு ஜனாஸா (பிரேத அடக்கத்) தொழுகை தொழுவித்து, “இஸ்லாமிய சமுதாயத்தின் ரப்பானி (பேரறிஞர்) இன்று இவ்வுலகிலிருந்து விடை பெற்றுக் கொண்டனர்” என்று புகழ்ந்துரைத்தார்.
தாயிஃபில் நல்லடக்கம்
இவர்களின் ஈமச்சடங்கில் தாம் கலந்து கொண்டதாகவும் அப்பொழுது தாம் என்றுமே கண்டிராத ஒரு வகைப் பறவை இவர்களின் உடலுக்குள் புகுந்ததைத் தாம் பார்த்ததாகவும் பின்னர் அது இவர்களின் உடலிலிருந்து வெளிவரவில்லை என்றும் இவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பொழுது இவர்களின் அடக்கவிடத்திலிருந்து, “ஃபத்ஹுலீ ஃபீஇபாதி வத்ஹுலீ ஜன்னத்தீ” (என் நல்லடியார்களுடன் நீரும் நுழைந்து கொள்வீராக! இன்னும் என் சுவனத்தில் நுழைவீராக!!) என்று அசரீரியாக ஒலித்ததைத் தாம் செவியுற்றதாகவும் ஸயீத் இப்னு ஸுபைர் (ரழி) கூறுகின்றனர்.
தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
பிலால் இப்னு ரபாஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஃபாத்திமா(ரழி) பின்த் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.