Home


வள்ளல் சீதக்காதி

        சீதக்காதி (கி.பி. 1640 - கிபி.1715) தமிழ்நாட்டின் தலைசிறந்த வள்ளல்களில் ஒருவர் ஆவார். “செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி” என்ற புகழ்ப் பெயர் இவருக்கு உண்டு. இதற்கு ஒரு கதை கூறப்பட்ட போதினும், இவர் இறக்கும் முன் தம் விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்துத் தாம் இறந்த பின் தம்மைக் காணவரும் முதல் புலவருக்கு அதைக் கொடுக்குமாறு கூறினார் என்பதும், அவ்விதம் வந்த முதல் புலவருக்கு அது வழங்கப்பட்டது என்பதுமே ஏற்றுக் கொள்ளத் தகுந்ததாய் உள்ளது. இவரின் இயற் பெயர் ஷைகு அப்துல் காதிர் என்பதாகும். அதுவே சீதக்காதி என்று மருவலாயிற்று.

ஆரம்ப கால வாழ்வு

        இவரின் தந்தை மெளலா சாகிபு என்பவர். அவர் பெரிய தம்பி மரைக்காயர் என்றும் அழைக்கப்பட்டார். அன்னையோ வாவாலி மரைக்காயர் என்பவரின் புதல்வி முஹம்மது பாத்திமா ஆவார். பாட்டனார் வாவாலி மரைக்காயரின் அடக்கவிடம் கீழக்கரையில் பழைய குத்பாப் பள்ளி கீழ்பக்கத்து முகப்பில் உள்ளது. இவர் பிறந்த ஊர் தென்காயல் என்று கூறப்படுகிறது.

        இவருடன் பிறந்தோர் இருவர். அவர்களில் மூத்தவர் மாமு நெய்னா மரைக்காயர் என்ற முஹம்மது அப்துல் காதிர் மரைக்காயர். அவர் கீழக்கரையில் அடங்கப் பெற்றுள்ளார். அவரே கிழவன் சேதுபதியால் ரவி குல ரகு நாத முத்து விஜய பெரியதம்பி என்ற பட்டம் வழங்கப் பட்டவர். இன்றும் அவரின் வழித் தோன்றல்களின் பதிவேடுகளில் இப்பட்டம் பொறிக்கப்படுகிறது.

        இவரின் இளவல், சுல்தான் இப்ராஹீம் வேதாளையில் அடங்கப் பெற்றுள்ளார். இம்மூவரின் வழித்தோன்றல்கள் இன்னும் கீழக்கரையில் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

சதக்கத்துல்லாஹ் அப்பாவின் மாணவர்

        இவருடைய காலத்தில் கீழக்கரைக்கு சதக்கத்துல்லாஹ் அப்பா (ரஹ்) என்ற மகான் அவர்கள் வந்தனர். அவர்களின் ஆன்மீக மாணவரானார் இவர். சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் உயர்வைப் பற்றிக் கேள்வியுற்ற ஒளரங்கசீப், அவர்களை டில்லிக்கு வருமாறு அழைத்தார். அவர்களை தென்னிந்தியாவிற்கு முப்தியாக நியமிப்பதாகவும் கூறினார். ஆனால் அவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.

வங்காளக் கவர்னரான சீதக்காதி

சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் ஒளரங்கசீப்புக்கு எழுதிய மடலில் சீதக்காதியைப் பற்றிக் குறிப்பிட, இவரை  வங்காளத்தில் தம்முடைய பிரதிநிதியாக நியமித்தார் ஒளரங்கசீப். அவ்வாறே அங்குச் சென்ற சீதக்காதி சிறிது காலத்திற்குள் அப்பதவியைத் துறந்தார். அம்மாநில மக்கள் நற்பண்புகள் இல்லாதவர்களாய் இருந்தமையாலும், எனவே நேரிய முறையில் நெறி நீதியுடன் ஆள இயலாதிருந்ததாலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி அவர்கள் அப் பதவியைத் துறந்தனர் என கல்வத்து நாயகம் தாம் எழுதிய சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு மாத காலம் இவர் வங்காளத்தில் ஆளுநராக இருந்ததாகவும், அங்குள்ள தட்ப வெப்ப நிலை இவருடைய உடலுக்கு ஒத்துக் கொள்ளாததால் இவர் அப்பதவியைத் துறந்தாரென்றும் கூறப்படுகிறது. ராஜாஜி வங்காளத்தின் ஆளுநராகப் பதவி ஏற்ற பொழுது, “நான் தமிழ்நாட்டிலிருந்து வங்காளத்தின் இரண்டாவது ஆளுநராக வந்துள்ளேன்” என்று கூறியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

சுப்ஹா என்னும் தஸ்பீஹ் மணிமாலை

        இறைவனைத் ‘தஸ்பீஹ்’ செய்யப் பயன்படுத்தப்படும் ஜபமாலைக்கு ‘சுப்ஹா’ என்று பெயர். ஃபார்ஸி, உர்தூ, துருக்கி மொழிகளில் இது ‘தஸ்பீஹ்’ என்றும், தமிழ் நாட்டில் ‘தஸ்பீஹ் மணி’ என்றும் கூறப்படுகிறது. வங்காளத்திலிருந்து திரும்பிய சீதக்காதி சுண்டைக்காய் அளவுள்ள பெரிய முத்துக்களான ‘தஸ்பீஹ் மணி’ ஒன்றை ஒளரங்கசீப்புக்கு சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் மூலம் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார் என்றும், அதனைப் பெற்று ஒளரங்கசீப் உள்ளங்கை அகலமுள்ள ஒரு சந்தனக் கட்டையும், மூன்று மை உருண்டையும், ஒரு பிடி தேயிலையும் பதில் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார் என்றும், அந்தச் சந்தனக் கட்டையை மூன்று  தடவை உரைகல்லில் தேய்த்து அதை ஒரு படி தண்ணீரில் கலக்கினால் மிகுந்த வாசனை கமழும் என்றும், அந்த மை உருண்டையில் வெந்தயம் அளவு உரைத்து ஒரு சாடித் தண்ணீரில் கலக்கினால் இருபது பேர்கள் இருந்து ஒவ்வொரு நாளும் எழுதினாலும் அதன் நிறம் குறையாதென்றும், அந்தத் தேயிலையில் மூன்று இலைகளை எடுத்து ஒரு குடம் தண்ணீரில் போட்டால் மிகச் சிறப்பாயும் வாசனையாகவும் இருக்குமென்றும், மை உருண்டைகளை சதக்கத்துல்லாஹ் அப்பா எடுத்துக் கொண்டு மற்ற இரண்டு பொருள்களையும் சீதக்காதிக்கு அவர்கள் வழங்கி விட்டார்கள் என்றும் கல்வத்து நாயகம் தாம் எழுதிய சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் வரலாற்றில் கூறுகிறார்கள்.

இராமேஸ்வரம் கோயில் கட்டியது

        இதன் பின் விஜயரகுநாதத் தேவர் என்ற கிழவன் சேதுபதி (1674 - 1710) கேட்டுக் கொண்டதற்கிணங்கிச் சில காலம் அவரின் அமைச்சராக இருந்து பணியாற்றினார் இவர். அப்பொழுது  இவர் செய்த சீர்திருத்தங்கள் பலவாகும். இக்காலை இராமேஸ்வரம் கோயிலைப் புதுபித்துக் கட்டும் அலுவலை இவரிடம் ஒப்படைத்திருந்தார் சேதுபதி. கோயிலைக் கட்டுவதற்கு பாறை கற்களில் வேலைபாடுகளுடன் உள்ளவற்றை பயன் படுத்தியது போக மீதம் உள்ளவற்றை கிழவன் சேதுபதியிடம் கூற, அவர் அதைக் கொண்டு கீழக்கரையில் குத்பா பள்ளியை நிர்மாணிக்க சீதக்காதி அவர்களிடம் கூறினார்கள். எனவே இவர் கீழக்கரையில் அதே வேலைப்பாடுகளுடன் பெரிய குத்பாப் பள்ளியை நிர்மாணித்தார். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு இதில் உருவங்கள் இல்லாதது தான்.

சீறாப்புராணத்தை இயற்ற முழு காரணமானவர்

        எட்டயபுர மன்னரின் அரசவைக் கவிஞரான உமறை, அக்காலை ஆங்கு வந்த சீதக்காதி இவரின் திறமையைக் கண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைக் காப்பியமாக இயற்றித் தருமாறு கேட்க “இறைவன் அருள்பாலிப்பின் செய்வோம்” என்றார் உமறுப்புலவர். இவரைக் கீழக்கரை அழைத்துச் சென்று சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களிடம் அறிமுகப் படுத்தி காப்பியம் இயற்ற உரை நல்கி உதவுமாறு வேண்டினார் சீதக்காதி. அன்று இரவு உமறுப்புலவர் கனவிலும், சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் கனவிலும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருத்தோற்றம் வழங்கி அருண்மொழி பகர்ந்து மறைந்தனர். பின்னர் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள் உரை தர இசைந்து, பெருமானாரின் வரலாற்றைனைத் தீர்க்கமாகக் குறித்து தந்தனர்.

        உமறுப்புலவர் ஆறு திங்கள் கீழக்கரையில் தங்கியிருந்த போது சீதக்காதி அவருக்கு அங்கு மணம் செய்வித்து ‘புலவர் பணம்’ என்னும் மகமையும் வசூல் பண்ண ஏற்பாடு செய்தார்.

சீதக்காதியின் வணிகத் தொடர்பு

        இவர் மரகத வாணிபம் செய்து அதன் மூலம் பெரும் பொருள் ஈட்டினார் என்றும், இவருடைய கப்பல் வங்கம் சென்று திரும்பிய பொழுது காற்று பலமாக அடிக்க பாரத்திற்காகக் கடலிற்குள் மூழ்கிக் கற்களை எடுத்துக் கோணிப்பைகளில் நிரப்பி கப்பலுக்குள் போடப்பட்ட தென்றும், பின்னர் ஊர் வந்த பொழுது அக்கோணிப் பைகளைக் காலி செய்யும் பொழுது அக்கற்கள் மரகதக் கற்களாக இருப்பது தெரிய வந்ததென்றும், அதன் மூலம் இவர் பெரும் செல்வராக ஆனார் என்றும் கூறப்படுகிறது. இன்றும் ஒருவிதக் கல்லுக்கு ‘மரைக்காயர் பச்சை’ என்ற பெயர் வழங்கப் பெற்று வருகிறது.

        இவருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்கும் வணிகத் தொடர்பு இருந்து வந்தது. கண்டி அரசர் விமல தர்ம சூர்ய தம் நாட்டில் வரம்பு மீறி நடந்து கொண்ட ஐந்து ஆங்கிலேயரைக் கைது செய்து வைத்து விட்டார். சென்னையிலிருந்த கிழக்கிந்தியக் கம்பெனியார் எவ்வளவோ முயன்றும் அவர்களை விடுதலை செய்ய இயலவில்லை. எனவே அவர்கள் கண்டி அரசரின் நண்பரான இவரை அணுக, இவர் கண்டி அரசரிடம் வேண்டிக் கொண்டதின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதற்குக் கிழக்கிந்தியக் கம்பெனியார் தங்களின் நன்றியைத் தெரிவித்து இவருக்குக் கடிதம் எழுதியதோடு, இவர் இங்கிலாந்துக்கு அனுப்பும் மிளகுக்கு வரிச் சலுகையைத் தாம் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரிடம் இவருக்காகப் பரிந்து பேசிப் பெற்றுத் தந்திருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். அதில் கவர்னர் யேல் என்பவர் கையெழுத்திட்டிருந்தார். இது ‘செயிண்ட ஜார்ஜ் கெஸட்டிற்கு’ முன்னோடியான ‘சிட்டி கூரியர்’ என்ற வெளியீட்டின் 1690 ஜனவரி 30 ஆம் நாள் இதழில் வெளியாகி உள்ளது.

சிறந்த வள்ளலாய் விளங்கிய சீதக்காதி

        “போய் யாசகம் என்றுரைப்போர்க்குச் செம்பொன் பிடி பிடியாய் ஓயாமல் ஈயும் ஒருவராய்” சிறந்த வள்ளலாய் விளங்கிய இவர்  ஒவ்வொரு நாளும் காலைக் கடன்களையாற்ற ஊருக்கு வெளியே செல்லும் வழக்கமுடையவராய் இருந்தார். அப்பொழுது ஆங்கு முளைத்திருந்த ஆமணக்குச் செடியின் இலைகள் ஐந்து விரல்களையும் விரித்துக் கொண்டு இவரிடம் கேட்பது போல் தோன்றவே, அவற்றின் மீது பொற்காசுகளை வைத்து விட்டு இவர் வருவார் என்றும் ஏழை மக்கள் அவற்றைச் சென்று எடுத்து வருவர் என்றும் கூறப்படுகிறது.

        இவர் மீது புலவர்கள் பாடிய பாடல்கள் இவர் எத்துணை வண்மையுடன் இருந்தார் என்பதை விளக்குகின்றன. “தமிழ் நாவலரை ஓட்டாண்டியாக்கி அவர்கள் தம் வாயில் ஒரு பிடி மண் போட்டான்.  அவனும் ஒளித்தான் சமாதிக்குழி புகுந்தே” என்றும், “கோமான் அழகமர் மால் சீதக்காதி கொடை மிகுந்த சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே” என்றும், “காயற்றுரை சீதக்காதி திரும்பி வந்து பிறந்தலொழியப் புலவோர் தமக்குப் பிழைப்பில்லையே” என்றும், புலவர் பலர் இவரின் இறப்புச் செய்தி கேட்டு நைந்துருகிப் பாடியுள்ளது நம் உள்ளத்தை உருக்குவனவாய் உள்ளது. இவை அவரிடம் பரிசில் பெறுவதற்காகப் பாடப் பெறாது அவர் இறந்ததன் பின் கவிஞர்களின் உள்ளத்திலிருந்து பொங்கும் உணர்ச்சியால் பீரிட்டு வெளிவந்திருப்பது, இவரின் கொடையின் மாண்பினை நன்கு எடுத்துரைக்கின்றது. இக் கவிதைகளைப் பாடிய படிக்காசுப் புலவர், நவச்சிவாயப் புலவர் ஆகியோர் சீதக்காதியைச் சீரஞ்சீவியாக்கிய தோடல்லாது தங்களையும் சிரஞ்சீவியாக்கிக் கொண்டார்கள்.

பஞ்சம் வர ஏற்றுமதியை நிறுத்தி அரிசியை இலவசமாக கொடுத்தது

        கி.பி. 1709 முதல் 1713 வரை இராமநாதபுர மாவட்டத்தின் கடற்கரையோரத்தில் தொடர்ந்து கடுமையான மழை பெய்து பயிர்கள் அழிந்து பஞ்சம் தலைவிரித்தாடிய பொழுது முன்பு ஒரு மரக்கால் (8படி) அரிசி ஒரு பணத்திற்கு விற்றதற்குப் பதிலாக ஒரு மரக்கால் அரிசி 32 பணத்திற்கு விறற காலை இவர் கும்பனியாருக்கு அரிசி, மிளகு முதலியவற்றை மரக்கலங்களில் ஏற்றி அனுப்புவதாகச் செய்திருந்த ஒப்பந்தத்தை உதறித் தள்ளிப் பல ஊர்களிலும் இருந்தும் அரிசி, நவதானியங்கள் ஆகியவற்றைத் தருவித்து மக்களுக்கு விநியோகித்தார் என்பதாலும், இதைக் கண்டு பெரிதும் வியப்புற்று படிக்காசுப் புலவர்,

ஓர் தட்டிலே பொன்னும் ஒர் தட்டிலே நெல்லும் ஒக்கவிற்கும்

கார்தட்டிய பஞ்சகாலத்திலே தங்கள் காரியப்பேர் ஆர்தட்டினும் தட்டு வராமலே

அன்னதானத்துக்கு மார்தட்டிய துரை மால் சீதக்காதி வரோதயனே!

என்று வாயார்ந்து பாடி உள்ளார்.

இவரின் மறைவும், இவரது வழித்தோன்றல்களும்

        இவரது அடக்கவிடம் கீழக்கரையில் இருக்கிறது. தம் அடக்கவிடத்தின் மீது மழை பெய்து அதில் புற்பூண்டுகள் முளைத்து அவை ஆடு, மாடுகளுக்கு உணவாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட இவர், அதன் மீது யாதொரு கட்டிடமும் எழுப்ப வேண்டாமென்று தம் இறப்புத் தருவாயில் கூறிச் சென்றார் என்று கூறுவர்.

        இவர் இராமேஸ்வரம் கோயிலுக்குப் பதினாயிரம் ரூபாய் மான்யம் வழங்கியதாகவும், அதன் காரணமாக இவரின் வழித்தோன்றல்கள் இராமேஸ்வரம் கோயிலின் அறங்காவலர் குழுவில் ஓர் உறுப்பினராக கி.பி.1885 ஆம் ஆண்டு வரை இருந்து வந்ததாகவும், இன்றும் இராமேஸ்வரத்தில் வாழக்கூடிய இவரின் வழித்தோன்றல்கள் கோயில் மரியாதைகளைப் பெற்று வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

        


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Sathakathullah Abba

இறைநேசர் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.