கஷ்டமான காலங்களில் பொறுமை தர வேண்டும் துஆ
ரப்பனா அஃப்ரிஃ அலைனா ஸப்ரவ்
வதவஃப்பனா முஸ்லிமீன்.
ஸூரத்துல் அஃராஃப் 7:126
பொருள் :
“எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக; முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” 7:126
விளக்கம் :
நபி மூஸா(அலை) அவர்களுக்கு எதிரா ஃபிர்அவ்ன் கூட்டிய சூனியக்காரர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டதுடன், தாங்கள் ஈமான் கொண்டதாக அறிவித்தவுடன், நாட்டு மக்கள் அனைவரும் முஸ்லிம்களாகி விட்டால் என்ன செய்வது என்று மிகவும் பயந்து பிரச்சனையைத் திசை திருப்ப எண்ணி, “நான் அனுமதி அளிப்பதற்கு முன்பே நீங்கள் எப்படி நம்பிக்கை (ஈமான்) கொள்ளலாம்? இங்கே வருவதற்கு முன்பே நீங்களும் மூஸாவும் சேர்ந்து சதி செய்து விட்டு இங்கே வந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறீர்கள். இதன் மூலம் நாட்டைக் கைப்பற்றி இங்குள்ள மக்களை வெளியேற்றிவிட்டு நீங்கள் ஆட்சி செய்வதற்கு திட்டமிட்டிருக்கிறீர்கள். எனவே இதன் பலனை விரைவில் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறுகை மாறுகால் வாங்குவேன், பின்னர் கழுமரத்தில் ஏற்றுவேன்” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.
அதற்கு அந்த் சூனியக்காரர்கள், “பரவாயில்லை நாங்கள் இறந்த பின் எங்களுடைய இரட்சகனிடம் தான் செல்வோம். அங்கே எங்களுக்கு நிம்மதியும் சுகமும் இருக்கிறது. எங்களுடைய இரட்சகனின் அத்தாட்சி எங்களிடம் வந்த பொழுது அவற்றை நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காக மட்டுமே எங்களை நீ பழி வாங்குகிறாய்” என ஃபிர்அவ்னிடம் கூறிய பின். “எங்கள் இரட்சகனே, இவன் எங்கள் மீது கொடுமை செய்தால் அதைச் சகித்துக் கொண்டு இஸ்லாத்தின் மீது நிலையாக இருப்பதற்கு எங்களுக்கு அபரிமிதமான பொறுமையைத் தந்தருள்வாயாக! நாங்கள் உனக்கு அடிபணிந்த முஸ்லிம்களாகவே இருக்கும் நிலையில் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக!” என அல்லாஹ்விடம் துஆ செய்தார்கள்.