ஜைது இப்னு ஹாரிஸா ரழியல்லாஹு அன்ஹு
ஜைது இப்னு ஹாரிஸா ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 581-கி.பி.629) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அடிமையாக கதீஜா (ரழி) அவர்களால் கொடுக்கப்பட்டவருக்கு நபி (ஸல்) அவர்கள் விடுதலை அளித்து, விரும்பியபடி செல்ல கூறியும், செல்லாமல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இருப்பதையே தேர்ந்தார். எனவே, நபி (ஸல்) அவர்கள் இவரை வளர்ப்பு மகனாக பிரகடன படுத்தினர். விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுள் இவரே முதலாவதாக இஸ்லாத்தை தழுவியவர். நபி (ஸல்) அவர்கள் நடத்திய எல்லா போர்களிலும் கலந்து கொண்டதோடு, அவர்களின் ஆணைப்படி சில படையெடுப்புக்குத் தலைமை தாங்கியும் சென்றார்.
ஆரம்ப கால வாழ்வு
இவர் மத்திய அரேபியாவின் நஜ்த் (Najd) என்ற பகுதியில் உள்ள கல்ப் பழங்குடியினரின் உத்ரா கிளையில் கி.பி581ல் ஒரு கிருஸ்துவக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் ஹாரிஸா இப்னு ஷாரஹில் (பாஷாரஹில்), தாயார் பெயர் சுதா பின்த் தலாபா, டேய் பழங்குடியினரின் மான் கிளையைச் சேர்ந்தவர்.
இளம் வயதில் தம் அன்னையுடன் தம் பாட்டனாரைக் காணச் சென்ற வழியில், இவர்கள் மான் பழங்குடியினருடன் தங்கியிருந்தபோது, கெய்ன் கோத்திரத்தைச் சேர்ந்த குதிரை வீரர்கள் கூடாரங்களில் சோதனை நடத்தி ஜைதை கடத்திச் சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட இவரை சிரியாவில் உள்ள சந்தைக்கு அழைத்துச் சென்று 400 தினார்களுக்கு அடிமையாக ஹக்கீம் இப்னு ஹிஷாமிடம் விற்கப் பட்டார்.
நபி (ஸல்) அவர்களின் ஊழியராக ஆனது
இவரை அடிமையாக வாங்கிய ஹக்கீம் மக்கா கொணர்ந்தார். பின்னர் தம்மைக் காணவந்த தம் அத்தை கதீஜா (ரழி) அவர்களுக்கு இவரை அன்பளிப்புச் செய்தார். கதீஜா (ரழி) அவர்கள், இவரைத் தம் கணவரான அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் ஆக்கினர். அப்பொழுது இவருக்கு வயது பத்து. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடுத்த கணமே இவரை விடுதலை செய்து, “நீர் விரும்பின் இங்கே இருக்கலாம், இல்லையெனில், உம் பெற்றோரிடம் செல்லலாம்” என்று கூறினர். ஆனால் இவரோ அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஊழியத்தில் இருப்பதையே தேர்வு செய்தார்.
வளர்ப்பு மகனாக அறிவிப்பு
இவரை பல பகுதிகளிலும் தேடியலைந்த இவரது தந்தை, இவரைப் பற்றி கேள்வியுற்று இவர் தந்தையும், சிறிய தந்தையும் இவரை மீட்பதற்காகப் பெரும் தொகையுடன் வந்தபொழுதும், அவர்களிடம் அண்ணல் நபி (ஸல்) அவர்களுடனே தாம் இருப்பதாகக் கூறி விட்டார் இவர். அது கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரைக் கஃபாவுக்கு அழைத்துச் சென்று, “அவர் என்னைத் தேர்ந்தெடுத்தது போல் நான் அவரை தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அவர் எனக்கு மகனானார்” என்று கூறினார்கள். இதிலிருந்து இவர் ஜைத் இப்னு முஹம்மது என்று அழைக்கப் பெற்றார்.
இஸ்லாத்தை தழுவியது
விடுதலை செய்யப்பட்ட அடிமைகளுள் இவரே முதலாவதாக இஸ்லாத்தைத் தழுவியவர். ஆரம்பத்தில் இஸ்லாத்தைத் தழுவியவர்களுள் இவர் நான்காமவர். இவரையே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தாயிஃப் செல்லும் பொழுது தம்முடன் அழைத்துச் சென்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மீது எறியப்பட்ட கல்லைத் தடுத்த பொழுது இவருடைய முகத்தில் ஒரு கல் பட்டுக் காயம் ஏற்பட்டது. ஊருக்கு வெளியில் இருந்த தோட்டத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடைக்கலம் புகுந்த பொழுது இவர் தாம் அங்கிருந்த பச்சிலைகளைப் பறித்து அவர்களின் காலிலிருந்த காயத்தில் கட்டியவர்.
மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்
622 ஆம் ஆண்டில், மற்ற முஸ்லிம்களுடன் ஜைது (ரழி) அவர்களும் மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றார். புதிய நகரத்தில் குடியேறியதும், ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு சகோதரனை அழைத்துச் செல்ல" நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தி, மேலும் அவர்களுடன் சகோதரராக்கிப் பிணைத்தனர். இவரை மதீனாவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிறிய தந்தை ஹம்ஸா (ரழி) அவர்களுடன் சகோதரராக்கினர்.
சில மாதங்களுக்குப் பிறகு, நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர்(ரழி) ஆகியோர் தங்கள் குடும்பங்களை மதீனாவுக்கு அழைத்து வர ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களை மீண்டும் மக்காவுக்கு அனுப்பினர். மக்காவில் இருந்து மதீனாவுக்கு இவர்கள் அழைத்து சென்ற குழுவில் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஸவ்தா பின்த் ஜம்ஆ (ரழி) மற்றும் மகள்கள் உம்மு குல்தூம் மற்றும் ஃபாத்திமா அவரது ஊழியர் அபு ரஃபி, ஜைதின் மனைவி பரகா ஹபஷியா மற்றும் அவர்களது மகன் உஸாமா, மேலும் அபூபக்ர் (ரழி) அவர்களின் மனைவி உம்மு ரூமான், அவர்களது குழந்தைகள் அஸ்மா, அப்துல்லாஹ், ஆயிஷா இவர்களுடன் வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு யுரேய்கிட் மற்றும் அபூபக்ர் அவர்களின் உறவினர் தல்ஹா ஆகியோர் இருந்தனர்.
திருமணம் மற்றும் குழந்தைகள்
ஜைது இப்னு ஹாரிஸா (ரழி) அவர்கள் நான்கு பெண்களை மணந்து மூன்று குழந்தைகளை ஈன்றெடுத்தார். நபி (ஸல்) அவர்களின் அன்னை ஆமினாவின் நீக்ரோ அடிமை உம்மு அய்மனை இவர் மணமுடித்து உஸாமா என்ற மகனைப் பெற்றார்.
நபி (ஸல்) அவர்கள் இவரைத் தம் அத்தையின் மகள் ஜைனப் பின்த் ஜஹ்ஷுக்கு மணமுடித்து வைத்தனர். பின்னர் அவர் இவரை மணவிடுதலை செய்து விட்டார். (பார்க்க: ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரழி))
போர்களில் கலந்து கொண்டது
இவர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நடத்திய எல்லாப் போர்களிலும் கலந்து கொண்டதோடு அவர்களின் ஆணைப்படி சில படையெடுப்புகளுக்குத் தலைமை தாங்கியும் சென்றார். இவர் இருதியாய்ச் சென்றது கி.பி629இல் மூத்தா படையெடுப்புக்குத் தலைமை தாங்கித்தான். அதில் இவர் வீர மரணம் எய்தினார். இவரது அடக்கவிடம் தற்பொழுது ஜோர்டான், மூத்தா என்ற நகரில் உள்ளது
பின்னர் மற்றொரு படையெடுப்புக்கு இவர் மகன் உஸாமாவைத் தலைவராக அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நியமித்த பொழுது தோழர்களிடையே சிறு சிறு முணுமுணுப்பு ஏற்பட்டதை உணர்ந்த அவர்கள், “முன்னர் உஸாமாவின் தந்தையை ஒரு படையெடுப்புக்குத் தலைவராய் நியமித்த போதும் இவ்வாறே முணுமுணுத்தீர்கள். அல்லாஹ் மீது ஆணையாக அவர் அந்தத் தலைமைக்குத் தகுதியானவராகவும், எல்லோரையும் விட எனக்கு மிகவும் உவப்பானவராயுமிருந்தார். ஆனால் உஸாமா அவருக்குப் பின் எல்லோரையும் விட எனக்கு மிக உவப்பானவராயுள்ளார்” என்று கூறினார்கள்.
ஒரு சமயம் அவர்கள் இவரை நோக்கி, “நீர் எங்கள் சகோதரரும், மெளலாவும் (எசமானர்) ஆவீர்” என்று கூறினார்கள். திருக்குர் ஆனில் இவரது பெயர் இடம் பெற்றிருப்பது இவரது மகத்தான நற்பேறாகும்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...