Home


பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ

Plato

பிளேட்டோ (Plato) (கிமு 427 - கிமு 347) பண்டைய கிரேக்கத்தில் கிளாசிக்கல் காலத்தில் பிளேட்டோ பெரும் செல்வாக்குள்ள தத்துவஞானியாக இருந்தார், இவர் சாக்ரடீஸின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. தலைசிறந்த கணிதவியல் வல்லுனர் ஆவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் பிளாட்டோனிஸ்ட் சிந்தனைப் பள்ளி என்ற  அகாடமியை நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டில் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார்.

ஆரம்ப கால வாழ்க்கை

        பிளேட்டோவின் இளமைக் காலம் குறித்து விரிவான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அவரின் இளமைக் காலம் குறித்த தகவல்கள் சிறிய அளவில் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்படி, பிளேட்டோ மிகவும் செல்வ செழிப்புமிக்க அரசியல் பாரம்பரியமுள்ள குடும்பத்தில் பிறந்திருக்கிறார். பிளேட்டோவின் தந்தை அரிஸ்டன் ஏதென்ஸ் மன்னர், கோட்ரஸ் மற்றும் மெசீனியாவின் மன்னர் மெலந்தஸ் ஆகியோரிடமிருந்து தனது வம்சாவளியைச் சேர்ந்தவர். பிளேட்டோவின் தாயார் பெரிக்னே, இவர் சார்மிடிஸின் சகோதரி மற்றும் கிரிட்டியாஸின் மருமகள், மேலும் அவரது குடும்பம் பிரபல ஏதெனிய சட்டமன்ற உறுப்பினரும், பாடல் கவிஞருமான சோலனுடன் தொடர்புடையவர். பிளேட்டோவின் பிறந்த சரியான நேரத்தையும் இடத்தையும் பற்றிய சரியான தகவல்கள் இல்லை. ஆனால்  பண்டையக் கால ஆதாரங்களின் அடிப்படையில், பெரும்பாலான நவீன அறிஞர்கள் அவர் ஏதென்ஸில் அல்லது ஏஜினாவில் கி மு 427 மற்றும் 423 க்கு இடையில் பிறந்ததாக நம்பப்படுகிறது.

        பிளேட்டோ தனது இளமை பருவத்தின் ஆரம்பம் முதல் அடக்கமானவராகவும், அன்பு மற்றும் கடின உழைப்புடன், அவர் தனது படிப்பில் சிறந்து விளங்கினார். அவரது தந்தை தனது மகனுக்கு மிகச் சிறந்த ஆசிரியர்களால் இலக்கணம், இசை மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவற்றில் நல்ல கல்வியைக் கொடுக்கத் தேவையான அனைத்தையும் செய்தார். பணக்கார குடும்பத்தில் பிளேட்டோ பிறந்திருந்தாலும் அவர் செல்வத்தின் மீது ஈடுபாடு காட்டாமல், படிப்பில் ஈடுபாடு காட்டினார். பிளேட்டோ தத்துவ படிப்புகளிலும் கலந்து கொண்டார். சாக்ரடீஸைச் சந்திப்பதற்கு முன்பு, அவர் முதலில் கிராட்டிலஸ் மற்றும் ஹெராக்ளிடியன் கோட்பாடுகளை கற்று தேர்ந்தார்.

பிளேட்டோவின் இளமை பருவம்

        பண்டைய கிரேக்கத்தில் கட்டாய இராணுவச் சட்டம் இருந்ததால் பிளேட்டோ சிறிது காலம் இராணுவச் சேவையாற்றினார். போரில் கலந்து கொண்ட அனுபவமும் உண்டு. தனது இருபதாவது வயதில் சாக்ரடீஸிடம் மாணவராக சேர்ந்து எட்டு ஆண்டுகள் அவரின் சீடராக இருந்தார். பிளேட்டோவிற்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அன்றைய கால கட்டத்தில் அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாகவும், சர்வாதிகாரிகளாகவும் இருந்து அநீதிகள் பெருகியிருந்ததால் அரசியலில் பிளேட்டோ வெறுப்படைந்தார். அந்த சமயத்தில் தான் அவரது குரு சாக்ரடீஸுக்கு விஷம் அருந்தி சாகும் தண்டனை விதிக்கப்பட்டது. அந்த மரணத்தை தடுத்து நிறுத்த முயன்றவர்களில் பிளேட்டோவும் ஒருவர்.

ஏதென்ஸை விட்டு வெளிச்சென்றது

        சாக்ரடீஸின் மேல் பிளேட்டோவுக்கு இருந்த ஈடுபாட்டைக் கண்ட ஏதென்ஸ் நகர ஆட்சியாளர்கள் பிளேட்டோவின் மீது ராஜ துரோக குற்றம் சாட்டினர். அதனால் ஏதும் அசம்பாவிதம் நிகழும் முன் நண்பர்களின் அறிவுரைப் படி ஏதென்ஸை விட்டு வெளியேறினர். அப்போது அவரது வயது 30. இத்தாலி, எகிப்து, சிசிலி, ஆப்ரிக்கா, சைரின் போன்ற நாடுகளுக்கு சென்று அங்கிருந்த அரசியல் முறைகளையும், சமூக அமைப்புகளையும் கற்றறிந்தார். இந்தியாவிற்கும் வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் பிளேட்டோ தனது  நாற்பது வயதில் ஏதென்ஸுக்குத் திரும்பினர்.

பிளாட்டோனிஸ்ட்  அகாடமி

        நாற்பது வயதில் ஏதென்ஸுக்குத் திரும்பியதாகக் கூறப்படும் பிளேட்டோ,  கி.மு 387 ஆம் ஆண்டு தம் தாய் நாட்டிற்கு திரும்பினார். பிளேட்டோ, வருங்கால சந்ததியினரான இளைஞர்களை தயார் படுத்த விரும்பினார். தனி மனித அறிவும், பண்பும், வளர கல்வியும், தத்துவ சிந்தனையும் அவசியம் என்பதை உணர்ந்து “பிளேட்டோ அகாடமி” யை நிறுவினார். மேற்கத்திய நாகரிகத்தின் ஆரம்பகால ஒழுங்கமைக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றை ஹெகடேமஸ் அல்லது அகாடமஸ் என்ற இடத்தில் நிறுவினார். இது மேற்கத்திய நாடுகளில் தோற்றுவிக்ககப்பட்ட முதல் பள்ளியாகக் கருதப்படுகிறது. இங்கு கணிதம், அறிவியல், தத்துவம், கலை, இலக்கியம், நீதி, நல்லொழுக்கம், அரசியல் முதலியன கற்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த அகாடமி ஏதென்ஸுக்கு வெளியே ஆறு ஸ்டேடியாக்கள் என்னும் அளவில் பெரிதாக அமைந்திருந்தது. கிமு 84 இல் லூசியஸ் கொர்னேலியஸ் சுல்லாவால் அழிக்கப்படும் வரை இந்த அகாடமி இயங்கியது. இதில் பல அறிவாளிகள் பயின்றனர், அதில் முக்கியமானவர் அரிஸ்டாட்டில்.

அரசியல் கருத்துக்கள் 

        பிளேட்டோ மேற்கத்திய அரசியல் தத்துவத்தின் நிறுவனர் என்றும் கருதப்படுகிறார். பிளேட்டோ சாக்கிரட்டீசின் மாணவர். இவருடைய அரசியல் கருத்துக்கள் மக்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது. இவர் பல்வேறு துறைகளில் வல்லுநராக இருந்தார். ஏதென்ஸில் அகாடமி ஒன்றைத் தொடங்கினார். இதன் மூலம் சிறந்த தத்துவவாதிகளை உருவாக்க வேண்டும் என விரும்பினார். இவருடைய அரசியல் கருத்துக்கள் செரக்யூஸை ஆண்டு வந்த டைனீஸஸ் போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவருடைய அரசியல் கருத்துக்களைக் குடியரசு (Republic என்ற நூல்) மற்றும் சட்டங்கள் (Laws) என்ற நூலிலும் எழுதியுள்ளார். அவரது மிகவும் பிரபலமான பங்களிப்பு சரியான காரணங்களால் அறியப்பட்ட Theory of Forms என்ற படிவங்களின் கோட்பாடுகள் ஆகும், இதில் பிளேட்டோனிசம் எனப்படும் உலகளாவிய பிரச்சினைக்கு பிளேட்டோ ஒரு தீர்வை முன்வைக்கிறார்.

பிளேட்டோவின் படைப்புகள்

        பிளேட்டோ ஒரு சிறந்த எழுத்தாளர் என்பது அவர் எழுதியுள்ள சாக்ரடீஸின் கேள்வி பதிலில் இருந்து தெரிகிறது. இதில் முப்பத்தாறு உரையாடல், பதிமூன்று கடிதங்களை இவர் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. பிளேட்டோவின் எழுத்துக்கள் பல வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பிளேட்டோ எழுதியவற்றுக்குப் பெயரிடுதல் மற்றும் குறிப்பிடுதலை பற்றி விவாதிக்கும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற வழிவகுத்தது. பிளேட்டோவின் உரையாடல்கள் தத்துவம், தர்க்கம், நெறிமுறைகள், சொல்வளம் மற்றும் கணிதம் உள்ளிட்ட பல துறைகளைக் கற்பிக்கப் பயன்பட்டது.

        மிகவும் தீர்க்கமான தத்துவ தாக்கங்கள் இவ் உலகில் பொதுவாக சாக்ரடீஸ், சாக்ரடிக்ஸ்-க்கு முந்தைய பித்தகோரஸ், ஹெராக்ளிடஸ் மற்றும் பார்மனைடுகளுடன் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது, இருப்பினும் அவரது முன்னோடிகளின் பல படைப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களை இன்று நமக்குத் தெரிந்தவற்றில் பெரும்பாலானவை பிளேட்டோவிலிருந்து பெறப்படுகின்றன. அவரது சமகாலத்தவர்கள் அனைவரின் படைப்புகள் போலல்லாமல், பிளேட்டோவின் முழு படைப்புகளும் 2,400 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படியே தப்பிப்பிழைத்ததாக நம்பப்படுகிறது. பல ஆண்டுகளாக அவற்றின் புகழ் ஏற்ற இறக்கமாக இருந்தபோதிலும், பிளேட்டோவின் படைப்புகள் எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை வாசகர்கள் தொடர்ந்து இருந்து கொண்டே உள்ளனர்.

பிளேட்டோவின் மரணம்

        பிளேட்டோ ஏறக்குறைய என்பது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவருடைய இறுதி காலம் அமைதியாகவே கழிந்தது. அவரது 81வது வயதில் பிறந்த தினத்திலேயே படுக்கையில் உறக்கத்தில் உயிர் பிரிந்தது. அவரது மரணத்தைக் கேட்டு மாணவர்கள் கண்ணீர் சிந்தினர். ஏதென்ஸ் நகரமே சோகமயமாகியது. அவரது உடலை சகல மரியாதைகளுடன் ஏதென்ஸ் நகரமே திரண்டு சென்று அடக்கம் செய்ததாக கூறுகின்றனர்.

பிளேட்டோவின் சில தத்துவ கருத்துக்கள் 

  • நேர்மை பெரும்பாலான நேரங்களில் நேர்மையின்மையை விட குறைவான லாபம் உள்ளதாகவே இருக்கின்றது.
  • துவக்கமே ஒரு வேலையின் மிக முக்கியமான பகுதியாக இருக்கின்றது.
  • நாம் உறுதியான நம்பிக்கையுடன் போராடினால், நம்மிடம் இருமடங்கு ஆயுதம் இருப்பதைப் போன்றது.
  • ஆசை, உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்று முக்கிய ஆதாரங்களிலிருந்தே மனிதனின் நடத்தை வழிந்தோடுகிறது.
  • இன்றைய கற்பவர் நாளைய தலைவர்.
  • பரிசோதனை இல்லாத வாழ்க்கை, மதிப்புடைய வாழ்க்கை அல்ல.
  • தேவையே கண்டுபிடிப்பின் தாய்.
  • ஒரு மனிதன் தன்னை வெற்றிகொள்வதே அனைத்து வெற்றிகளுக்கும் முதலாவதும், உன்னதமானதும் ஆகும்.
  • நல்ல விஷயத்தைத் திரும்பச் செய்வதில் எந்த தீங்கும் இருக்கப் போவதில்லை.
  • எந்த வழியில் ஒரு மனிதனுக்கு கல்வி தொடங்குகின்றது என்பதே வாழ்க்கையில் அவனது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.
  • எதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்பதை அறிந்திருக்கும் செயலே தைரியம்.
  • நல்ல வேலைக்காரனாக இல்லாத ஒருவன், நல்ல எஜமானனாக இருக்க மாட்டான்.

புதிய வெளியீடுகள்

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Khan

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha

ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.