Home


ஹூத் அலைஹிஸ்ஸலாம்

ஆது சமூகம்

ஆது சமூகத்தில் பிறந்த நபியாகிய ஹூத் (அலை) அவர்கள்  நூஹ் (அலை) அவர்களின் மகன் ஷாம் என்பாரின் மகன் குலூத் என்பவரின் மகனாவார்கள். ஆது சமூகத்தினர்கள் மாட மாளிகைகள் உயரமான கட்டிடங்கள் கட்டி வாழ்ந்து வந்தனர். அந்த சமூகத்தார்கள் மிக நேர்தியான மாளிகைகள், அமைப்பதில் வல்லமை பெற்று விளங்கினர்,தங்களின் வலிமையை நினைத்து பெருமை கொன்டவர்களாக இறைவனின் கட்டளைகளுக்கு மாறு செய்யலானார்கள். ஆகவே இறைவன் அவர்களது சமூகத்தில் இருந்து ஹூத் (அலை) அவர்களை நபியாக அனுப்பினான். ஆதுக் கூட்டத்தினருக்கு எழுபது ஆண்டுகள் ஒர் இறை கொள்கை வழிபாட்டுப் பிரச்சாரம் செய்தும் அவர்கள் திருந்தினார்கள் இல்லை.

 ஆது கூட்டத்தினர்  பற்றி திரு மறை குர் ஆனில்

ஆது கூட்டத்தினர்  பற்றி திரு மறை குர் ஆனில் இறைவன் கீழ்கண்டவாறு விளக்குகிறான்.

ஆது (கூட்டத்தினரும், இறை) தூதர்களைப் பொய்ப்பித்தனர். (26:123)

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஹூத் : “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறியபோது: (26:124)  

“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன். (26:125) 

ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள். (26:126) 

“மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது (26:127) 

“நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா? (26:128) 

இன்னும், நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று, (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா? (26:129) 

“இன்னும், நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள். (26:130) 

“எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கு கீழ்படிந்து நடங்கள்.(26:131) 

“மேலும், நீங்கள் அறிந்திருக்கும் (பாக்கியமான பொருள்களையெல்லாம் கொண்டு) உங்களுக்கு உதவியளித்தவனை அஞ்சுங்கள். (26:132)  

“அவன் உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும், பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான். (26:133)  

“இன்னும் தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்). (26:134) 

“நிச்சயமாக நான் உங்கள் மீது மகத்தான நாளின் வேதனைப் பற்றி அஞ்சுகிறேன்” (எனக் கூறினார்).(26:135) (இதற்கு) அவர்கள்: “நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்” எனக் கூறினார்கள்.(26:136)

“இது முன்னவர்களின் வழக்கமேயன்றி (வேறு) இல்லை.(26:137) 

“மேலும், நாங்கள் வேதனை செய்யப் படவும் மாட்டோம்.”(26:138) 

(இவ்வாறு கூறி) அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆதலின் நாம் அவர்களை அழித்தோம்; நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.(26:139) 

நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவரையும்) மிகைப்பவனாகவும், கிருபையுள்ளவனாகவும் இருக்கின்றான்.(26:140)

பஞ்சம் ஏற்பட்டது

                ஹூத் (அலை) அவர்கள் ஆது கூட்டத்தினர் மீது வேதனையை இறக்கி வைக்குமாறு இறைஞ்சினார்கள். பஞ்சம் ஏற்பட்டது. ஆது கூட்டத்தினரில் ஒரு குழு பஞ்சத்தை நீக்கியருளுமாறு இறைவனிடம் இறைஞ்ச மக்கா சென்றது. அங்கு சென்ற அவர்கள் வந்த வேலையை மறந்து குடியிலும், கும்மாளத்திலும் ஈடுபட்டார்கள். பின்னர் நடன மங்கையர்களின் பாடலால் உந்தப்பட்டுக்  கஃபாவிற்குக் காணிக்கையுடன் சென்று இறையருள் வேண்டி இறைஞ்சினார்கள். அப்பொழுது விண்ணிலே மூன்று நிற மேகங்கள் தோன்றின. அவற்றில் கருமேகத்தை மழை மேகம் எனக் கருதி அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அம் மேகம் அவர்கள் நாடு நோக்கி மிதந்து சென்றது. இறைவன் ஆணைப்படி ஹூத் (அலை) அவர்களும் அவர்கள் தோழர்களும் என்போ என்ற நகருக்கு விரைந்தார்கள்.

                ஒரு புதன் கிழமை கருமேகம் காற்றாய் மாறி ஏழு இரவும் எட்டு பகலும்  அடித்தது. ஆது கூட்டத்தார் அனைவரும் அழிந்தார்கள். அதனைக் கேள்வியுற்ற மக்கா வந்திருந்த ஆதுக் குழுவினருள் பலர் அவர்களுக்கு பின் தாங்கள் வாழ விரும்பவில்லை என்றும் எனவே, தங்களுக்கும் அதே விதியை அளிக்குமாறு இறைஞ்ச அவர்களும் அழிந்தார்கள். நன்மையை இறைஞ்சிய சிலர் நன்மையை எய்த பெற்றனர்.

திரு மறை குர் ஆனில் மேலும் இறைவன் கீழ்கண்டவாறு விளக்குகிறான்.

மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக. (46:21)

அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள் (46:22)

அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார். (46:23)

ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது: (46:24)

“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.(46:25)

உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.(46:26)

ஆது சமூகத்தின் வாழ்விடங்கள் 

நூஹ் (அலை) அவர்களின் நான்காவது தலைமுறை ஹூத் (அலை) அவர்களுடையது. இவர்கள் தெற்கு அரேபியாவில் ஒரு பெரிய நாட்டை ஆக்கிரமித்து, பாரசீக வளைகுடாவின் முகப்பில் உம்மனில் இருந்து செங்கடலின் தெற்கு முனையில் ஹழ்ரமவ்த் மற்றும் யேமன் வரை பரவி வாழ்ந்தனர். ஹழ்ரமவ்த்(Hadhramaut)தில் உள்ள ஒரு சிவப்பு மணல் மேட்டில் இவர்களது அடக்கவிடம் இருப்பதாகவும் அங்கு ரஜப் மாதத்தில் மக்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர் என்றும் அல்லாமா யூசுப் அலீ கூறுகிறார்.

மண்ணில் புதையுண்ட உபர் நகரம்

        ஆது சமுதாயத்தினர் வாழ்ந்த புதையுண்ட நகரம் இரம் நகரம் ஆகும். அது தற்போது உபர் என்றழைக்கப் படுகிறது உலகில் அழிந்து போன நகரங்களில் உபர் நகரமும் ஒன்றாகும்.

உபர் நகர அகழ்வாராய்ச்சி

        நிக்கோலஸ் க்லாப் என்ற தொல்பொருள் ஆரய்ச்சியாளர் ஆது சமூகத்தார் வாழ்ந்த உபர் நகரை கண்டுபிடித்தார். அகழ்வாராய்ச்சிக்காக நாசா( NASA) மூலம் குறுப்பிட்ட அந்த பகுதியை செயற்கைகோள் உதவியுடன் படம் பிடிக்கப்பட்டது. பின் கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிக்டன் நூலகத்தில் பழமையான வரைபடங்கள்(map) மற்றும் அதற்கான விளக்கங்கள்(manuscripts) பற்றி ஆராயப்பட்டதில் கி.பி 200ம் ஆண்டு கிரீசு-எகிப்து புவியியல் வல்லுனர்களால் வரையபட்ட வரைபடம் கிடைத்தது. இதை வைத்து அந்த நகரம் தோண்டும் பணி நிறைவடைந்த நிலையில் ஆது சமுகத்தினர் வாழ்ந்த 'இரம்' என்ற உபர் நகரம் கண்டறியபட்டது. தோண்டி எடுக்கபட்ட நகரம் 12 மீட்டர் அழமான மணல் அடுக்குகளால் மூடபட்டு இருந்ததை ஆய்வாளர்கள் கணகிட்டுள்ளனர். தோண்டி எடுக்கபட்ட 'இரம்' நகரில் உயரமான தூண்கள் மற்றும் கோபுரங்கள் இருந்தன.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Nabi Idris

நபி இத்ரீஸ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Nabi Nuh

நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...