மனிதநேயமிக்க “அருளாளர்” அன்னை தெரேசா
அன்னை தெரேசா (Mother Teresa, பிறப்பு ஆகஸ்ட் 26, 1910 - இறப்பு செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இந்தியக் குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் “பிறர் அன்பின் பணியாளர்” என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அதன் வாயிலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் சேவையாற்றினார். 1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார்.
இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். அன்னை தெரேசாவின் “பிறர் அன்பின் பணியாளர்” சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது. இதில் எய்ட்ஸ், தொழு நோய் மற்றும் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.
ஆரம்ப கால வாழ்வு
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. தந்தை நிகோலே போஜாஜியூ, தாய் டிரானாபில் போஜாஜியூ (பெர்னாய்) ஆகியோரின் மூன்றாவது மகளாக பிறந்தார். இவரது சகோதரி பெயர் அகா, சகோதரர் பெயர் லாகஸ். ஆக்னஸின் எட்டு வயதில், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தார். இதன் பிறகு இவரது தாயார் அவரை நல்லதொரு ரோமன் கத்தோலிக்கராக வளர்த்தார். குழந்தைப் பருவத்தில் ஆக்னஸ் மறைப் பணியாளர்களாலும் அவர்களது சேவைகளாலும் ஈர்க்கப்பட்டு பன்னிரண்டு வயதுக்குள் துறவறம் புக முடிவு செய்து கொண்டார். தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரேட்டோ சகோதரிகளின் சபையில் மறைப்பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டார். அதற்குப் பிறகு தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கவில்லை.
பெயர் ஆக்னஸில் இருந்து தெரேசாவாக மாறியது
இந்தியாவின் பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க லொரேட்டோ சகோதரிகள் பயன்படுத்தும் மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்காக, அயர்லாந்தின் ரத்பர்ன்காமில் உள்ள லொரேட்டோ கன்னியர் மடத்திற்கு முதலில் சென்றார் ஆக்னஸ். பின்னர் 1929 ஆம் ஆண்டு அவர் இந்தியா வந்தடைந்து, மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஏற்பாட்டில் இமயமலை அருகே உள்ள டார்ஜீலிங்கில் தனது துறவற புகுநிலையினருக்கான பயிற்சியினை பெற ஆரம்பித்தார். சட்ட விதிகளின்படி புதிதாக வந்து இங்கு சேருபவர், பெயரை மாற்றம் செய்து கொள்ள வேண்டும். அவ்வமயம் மறைப்பணியாளரின் பாதுகாவலரான பிரான்ஸ் நாட்டின் சகோதரி 'தெரேசா மார்டின்' ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவையாற்றவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கு அவரது உடல்நிலை இடம்தராததால், 'காசநோயால்' தனது 24 வயதில் மரணித்தார். அவரது நினைவாக ஆக்னஸ் என்ற தனது பெயரை 'தெரேசா' என மாற்றிக் கொண்டார்.
கல்வி பணியில் அன்னை தெரேசா
தெரேசா டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார். குழந்தைகளிடம் அன்பு காட்டி பாடம் கற்பித்தார். சில காலங்களிலேயே 'இந்தியா தான் இனி என் தாய்நாடு' என முடிவெடுத்தார். இந்தி மொழியும் கற்றுக் கொண்டார். மீண்டும் கொல்கத்தாவிற்கே பணிமாறுதல் செய்யப்பட்டார். அங்கு கல்வியுடன், சமூக சேவையும் செய்ய வேண்டியதாயிற்று. அப்படி குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதைத் தவிர, குழந்தைகளைக் குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டினார். ஏழை மக்களையும் தேடிச் சென்று சேவைகள் செய்தார். ஆசிரியையாக இருந்த தெரேசா, பின்நாளில் பள்ளி முதல்வரானார். பதினேழு ஆண்டுகள் கல்வி பணியில் இருந்து, ஏராளமான நல்ல அனுபவங்களைக் கற்றுக்கொண்டார்.
கொல்கத்தாவில் முழு நேர சமூக சேவை
கொல்கத்தாவில் தங்கியிருந்த தெரேசா, அங்கு வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த ஏழை மக்கள், தொழிலாளர்களின் நிலை, வேலையில்லா திண்டாட்டம், பசியுடன் திரிந்த குழந்தைகள், சுகாதரமற்ற குடியிருப்புகள், வியாதியுடன் கூடிய மக்களைக் கண்டு வருத்தம் கொண்டார். 1942-43 -ம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரும், விடுதலைப் போராட்டங்களும் உச்சத்தில் இருந்தது. பின்னர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பஞ்சத்தில் தவிப்பதைக் கண்டு வருந்தினார். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது ஏற்பட்ட இந்து முஸ்லிம் கலவரம் அதனால் அதிகமானோர் கொல்லப்பட, ஆதரவற்றோர், அனாதைகள் அதிகமாக அவர்களுக்கு அதிக நேரம் உதவி செய்ய நினைத்தார் தெரேசா. ஆனால் லொரேட்டாவின் விதிமுறைகள் அதற்கு ஒத்துழைக்காத காரணத்தால், கல்வி பணியில் இருந்து விலக முடிவெடுத்தார். 1948-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி தன் விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், அன்று முதல் முழு நேரமாக தன் சேவை பணியைத் தொடங்கினார்.
மருத்துவ சேவை செய்ய செவிலியர் ஆனது
1948 ஆம் ஆண்டில் ஏழைகளுடனான தனது சேவையை ஆரம்பித்தார். லொரேட்டோ துறவற சபையின் உடைகளைக் களைந்து, நீல கரையிடப்பட்ட சாதாரண வெண்ணிற பருத்தி புடவையை அணிந்தவராய், இந்திய குடியுரிமையினைப் பெற்றுக்கொண்டு குடிசை பகுதிகளுக்குள் சேவை செய்தார். குடிசையில் வசித்த மக்களைச் சந்தித்து, ஆறுதலாக பேசினார். தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதாக உறுதி கூறினார்.
பாட்னாவில் உள்ள செயின்ட் ஃபேமிலி மருத்துவமனைக்குச் சென்று தன் செவிலியர் பணியை மேம்படுத்திக் கொள்ள போதிய பயிற்சிகளை எடுத்துக்கொண்டார். பல விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவ பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். அப்போது மருத்துவத் துறைக்குத் தேவையான 'உற்சாகம்', 'ஆர்வம்', 'பொறுப்பு' ஆகிய மூன்று நற்குணங்களையும் தெளிவுற கற்றுக்கொண்டார்.
பள்ளிகூடம் மற்றும் மருத்துவமனை தொடங்கியது
தெரேசாவுடன் லொரேட்டாவின் முன்னாள் மாணவியர்கள் பத்து பேர் கொண்ட முதல்கட்ட சேவைக்குழு உருவாகி, மக்களுக்காக பணிசெய்ய தொடங்கியது. 1949-ல் கொல்கத்தாவில் உள்ள மோத்திஜில் என்ற பிரபலமான குடிசைப் பகுதிக்குச் சென்றனர். அங்கிருந்த மக்களின் முக்கியத் தேவை 'பள்ளிக்கூடம்' என்பதைத் தெரிந்துகொண்டார். சில காலங்களிலேயே ஐந்து மாணவர்களுடன் பள்ளியைத் தொடங்கினார். மாணவர்களின் எண்ணிக்கையும் சீக்கிரமே அதிகரித்தது. சில காலங்களிலேயே நோயுற்று மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழந்த பெண்மணியை கண்டு மனம் உருகினார். உடனே, சிறிய அளவிலான மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்து, ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்குச் சென்று உபரி மருத்துவ பொருட்களைத் தாருங்கள். பல ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுங்கள் எனக் கேட்டார். பல தரப்பிலும் இருந்து உதவிகள் கிடைத்தன.
“பிறர் அன்பின் பணியாளர்” சபை, கருணை இல்லம் ஆரம்பித்து சேவை
1950-ம் ஆண்டு 'பிறர் அன்பின் பணியாளர்' என்ற சபையைத் துவங்கி, பசியால் வாடும், வீடின்றி தவிக்கும், மாற்றுத்திறனாளிகள், சமுதாயத்தால் புறக்கணிப்பட்டவர்களுக்கு உதவிகளைச் செய்தார். இருந்தும் ஆதரவற்றும் அடைகலம் இன்றியும் கஷ்டப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், கருணை இல்லம் ஒன்றை உருவாக்க ஆசைபட்டார். அரசின் உதவியுடன் 'காளிகட்' என்ற இடத்தில் 'நிர்மல் ஹ்ருதய்' என்ற முதியோர் கருணை இல்லத்தை ஆரம்பித்தார். பின்னாளில் அது, 'காளிகட் இல்லமானது'. அதே ஆண்டு ‘‘மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ்’’ என்ற சேவை அறக்கட்டளையைத் தொடங்கி, நோய்வாய்பட்ட மக்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.
“சிசு பவன்” மற்றும் “காந்தி பிரேம் நிவாஸ்” துவக்கம்
1955-ம் ஆண்டு செப்டம்பர் 23-ல் சிசுபவன் என்ற இல்லத்தைத் தொடங்கி, ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய, ஆதரவற்ற, குப்பையில் வீசப்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கத் தொடங்கினார்.
தொழுநோயாளிகளுக்கு நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கி, அதே ஆண்டு 'காந்தி பிரேம் நிவாஸ்' பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையைத் தொடங்கினார். பல நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து, தொழுநோய், காசநோய், எச்.ஐ.வி பாதித்தவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், அவர்களை மற்றவர்கள் புறக்கணிக்கக்கூடாது என்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தினார். உடலில் பல காயங்களுடன் இருக்கும் நோயாளிகளுக்கு தானே கைப்பட மருந்து வைத்து விடுவதும், உறவினர்களே பார்த்துக்கொள்ளாத நிலையில் சீல் வடிந்த நிலையில் இருக்கும் பல நோயாளிகளின் சீழைத் தானே சுத்தம் செய்தும், மருத்துவம் செய்தும் பராமரித்தார்.
துன்பங்களும் சோதனைகளும்
தெரேசா தனது நாட்குறிப்பில், தனது முதல் வருடம் துன்பங்கள் நிறைந்ததென்றும், வருமானமில்லாத காரணத்தால் உணவுக்காகவும், ஏனைய பொருட்களுக்காகவும் யாசிக்க நேர்ந்ததென்றும், ஆரம்ப நாட்களில் சந்தேகமும், தனிமையும், கன்னிமடத்தின் வசதிகளுக்குத் திரும்பும் சலனமும் ஏற்பட்டதென்றும் தனது நாட்குறிப்பில் எழுதியுள்ளார்..
தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, தனது குழுவினருடன் வீதி,வீதியாக யாசகம் கேட்டுச் செல்வார். அப்படி ஒருமுறை சென்றபோது, ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டார். அவர் தெரேசாவை கண்டும் காணாமலும் இருந்தார். தெரேசா மீண்டும் கை நீட்டி உதவி கேட்டார். கோபமுற்ற கடைக்காரர் மென்றுகொண்டிருந்த வெற்றிலை பாக்கினை, தெரேசாவின் கையில் துப்பினார். சற்றும் பொறுமையை இலக்காத தெரேசா, இது நீங்கள், எனக்கு கொடுத்தது. பசியில் வாடும் குழந்தைகளுக்கு எதாவது உதவி செய்யுங்கள் எனக் கூறியதும், அந்தக் கடைக்காரர் குறுகிப்போய் தன்னால் இயன்ற பண உதவிகள் செய்தார். இப்படி ஒவ்வொரு நாளும், பல வழிகளில் அவமானங்களையும், சங்கடங்களையும் சந்தித்துக் கொண்டு தான் சேவையாற்றி வந்தார். ஆனால் அவரது ஒரே நோக்கம், இவ்வுலகில் ஏழைகளாகவும், நோயாளிகளாகவும் துன்பங்களைச் சந்திப்போர் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அவர்களில் என்னால் இயன்றவர்களுக்கு உதவி செய்யவே கடவுள் என்னைப் படைத்திருக்கிறார் எனக் கூறிக்கொண்டு, தொடர்ந்து சேவையாற்றி வந்தார்.
அகிம்சை முறையில் தன் சேவைப் பணி தொடர்ந்தார்
தெரேசா உலகம் முழுக்க பலராலும் 'சிறந்த சேவகர்' எனப் பாராட்டப்பட்டாலும், விமர்சனக் கணைகளையும் சுமக்காமல் இல்லை. கருக்கலைப்பிற்கான எதிர்ப்பு, கொல்கத்தா நகரின் புகழையும் குலைத்து விட்டார் என ஏராளாமான விமர்சனங்களையும், பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். இது போதாத குறையாக இவரின் மருத்துவ சேவையின் தரம் மற்றும் நன்கொடையாக வரும் பணத்தை செலவு செய்யும் விதம் பற்றி ஊடகங்களுக்கும் பல விமர்சனங்களை தெரேசாவின் மீது சுமத்தினார்கள். இவற்றை எல்லாம் தகுந்த முறையில் எதிர்கொண்டு, நேர்மையான முறையிலும், அகிம்சை முறையிலும் தன் சேவைப் பணியைச் செய்துகொண்டிருந்தார். குறிப்பாக, 1969-ல் இவரது வாழ்க்கை வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஆவணப்படம் வெளிவந்த பிறகு, உலகம் முழுக்க பிரபலமானார்.
இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் சேவை விரிவாக்கம்
இவ்வமைப்பு விரைவிலேயே புது பணியாளர்களையும், நன்கொடைகளையும், ஈர்க்கத் தொடங்கி 1960 ஆம் ஆண்டுகளில் நல்வாழ்வு மையங்களையும், அநாதை இல்லங்களையும், தொழுநோயாளிகள் தங்குமிடங்களையும் இந்தியா முழுவதும் துவங்கியது. அன்னை தெரேசா பின்னர் இதனை உலகம் முழுவதும் நிறுவினார்.
இந்தியாவுக்கு வெளியே இவ்வமைப்புகளின் முதல் இல்லம் 1995 ஆம் ஆண்டில் வெனிசுவேலா நாட்டில் ஐந்து அருட்சகோதரிகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 1968 ஆம் ஆண்டில் ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் இவ்வமைப்பு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எண்ணற்ற நாடுகளில் இல்லங்களையும், கருணை இல்லங்களையும் நிறுவியது. சுதந்திரப் போராட்டங்கள், போர், உள்நாட்டு கலவரங்கள் என எந்த நாட்டில் மக்கள் பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டு அங்கெல்லாம் சென்று உதவிகள் செய்துவந்தார்.
ஆரோக்கியக் குறைபாடும் மரணமும்
1983-ல் திருத் தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை ரோம் இல் சந்தித்த பொழுது அன்னை தெரெசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989-ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதயமுடுக்கி பொருத்தப்பட்டது. 1991-ல் மெக்சிகோவில், நிமோனியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளாறுகளால் அவதிப்பட்டார். பிறர் அன்பின் பணியாளர் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலக முன்வந்தார். ஆனால் இவ்வமைப்பின் அருட்சகோதரிகள் இரகசிய தேர்தலின் மூலம் அவர் அப்பணியிலேயே தொடர்ந்திருக்க செய்தனர்.
ஏப்ரல் 1996-ல் அன்னை தெரேசா கீழே விழுந்து அவரது காறை எலும்பு முறிந்தது. ஆகஸ்டில் மலேரியாவினாலும், இதய கீழறைக் கோளாறினாலும் அவதிப்பட்டார். இதய அறுவை சிகிச்சை க்குட்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. அவரைப் பற்றிய இன்னொரு விமர்சனம், நோயில் விழுந்த பொழுது தனது மருத்துவ மனையில் சிகிச்சை பெறாமல், கலிபோர்னியாவின் அனைத்து வசதிகளுமுடைய மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தது. மார்ச் 13, 1997 ல் அவர் மிஷினரீஸ் ஆப் சேரிட்டியின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகினார். செப்டம்பர் 5, 1997 இல் மரணமடைந்தார்.
அவரது மரணத்தின் போது, அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை 123 நாடுகளின் 610 சேவை மையங்களை இயக்கி வரும் 4,000 க்கும் மேலான அருட்சகோதரிகளையும், 300 உறுப்பினர்களைக் கொண்ட சக அருட் சகோதர அமைப்பையும், 10,000கும் மேலான பொது நிலையினரையும் கொண்டிருந்தது. இவை எச் ஐ வி/எய்ட்ஸ், தொழுநோய், காசநோய் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான நலவாழ்வு மையங்களையும், இல்லங்களையும், அன்ன சத்திரங்களையும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆலோசனை மையங்களையும், தனி உதவியாளர்களையும், அநாதை மடங்களையும், பள்ளிகளையும் உள்ளடக்கியது.
விருதுகளும் அங்கீகாரங்களும் இந்தியாவில்
1962 ல் பத்மஸ்ரீ விருது,
1972-ல், பன்னாட்டு புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது,
1980-ல் இந்தியாவின் உயரிய குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது.
1992 இல் அவரது அதிகாரபூர்வ வாழ்க்கைச்சரித்திரம், இந்திய ஆட்சிப் பணியாளரான நவீன் சாவ்லாவால் எழுதப்பட்டு வெளியிடப்பட்டது.
விருதுகளும் அங்கீகாரங்களும் வெளிநாடுகளில்
1985இல் வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் அமெரிக்க ஜனாதிபதி ரானல்ட் ரேகன் அன்னை தெரெசாவுக்கு விடுதலைக்கான அதிபரின் பதக்கத்தை வழங்கினார்.
1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருதைப் பெற்றார்.
1971-ல் திருத்தந்தை ஆறாம் பவுல், அமைதிக்கான முதல் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் பரிசை, அவரின் ஏழை எளியோருக்கான சேவையையும் கிறிஸ்துவ நெறியின் பறைசாற்றலையும், அமைதிக்கான முயற்சியையும் பாராட்டி அவருக்கு அளித்தார்.
1982-ல் அவர் ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதைப் பெற்றார்.
1983-ல், இங்கிலாந்தின் ஆர்டர் அப் மெரிட் என்ற விருதும்
நவம்பர் 16 1996 ல், அமெரிக்காவின் கௌரவக் குடியுரிமையும் கிடைத்தன.
1979 ல், அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். அமைதியின் அச்சுறுத்தல்களாக விளங்கும், ஏழ்மையையும், துயரத்தையும் வீழ்த்தும் போராட்டத்தில் பங்கேற்றமைக்காக அவ்விருது வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேற்கத்திய நாடுகளின் பல்கலைக்கழகங்களும் இந்திய பல்கலைக்கழகங்களும் அவருக்குக் கௌரவப் பட்டங்களை அளித்தன. மனிதநேயம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காகப் பல்சான் பரிசினையும் (1978), ஆல்பர்ட் ஷ்வேத்ஸரின் (1975) அனைத்துலக விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது.