பண்டைய உலகின் தத்துவஞானி அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டில் (Aristotle ) (கி.மு.384 - கி.மு.322) இவர் பண்டைய உலகின் தத்துவஞானி, விஞ்ஞானி மற்றும் பல்துறை வல்லுநர் ஆவார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் 170 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் அவர் காலத்தில் அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தன. வானவியல், விலங்கியல், கருவியல், புவியியல், இயற்பியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டைய கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் எழுதியிருந்தார். அத்துடன் கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், இறையியல், ஒழுக்கவியல் ஆகியவையும் இவரின் எழுத்துகளில் இடம் பெற்றிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார்.
பிளேட்டோவும், இவரும் மேற்கத்திய சிந்தனையில் மிகப் பெரும் செல்வாக்குச் செலுத்தும் இருவராகக் கருதப்படுகிறார்கள். அரிஸ்டாட்டில் மேற்கத்திய மெய்யியலின் மிக முதன்மையான நிறுவுனர் ஆவார். அரிஸ்டாட்டிலின் படைப்புகள் மேற்கத்திய மெய்யியல், அறவியல், அழகியல், தருக்கம், அறிவியல், அரசியல் ஆகியவற்றின் ஒரு முதல் விரிவான அமைப்பை உருவாக்கின. அரிஸ்டாட்டிலின் இயற்பியல் கருத்துகள், ஆழ்ந்த அறிவைத் தரும் இடைக்கால வடிவ இயற்பியல் கோட்பாடுகளாக அமைந்தன. நியூட்டனின் இயற்பியல் கோட்பாடுகள் அரிஸ்டாட்டில் கோட்பாட்டின் ஒரு நீட்சியே ஆகும். அரிஸ்டாட்டிலின் அவதானிப்புகள் விலங்கியல் அறிவியலைப் பொருத்தவரை துல்லியமாக இருப்பதை, 19 ஆம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். அரிஸ்டாட்டிலின் கோட்பாடுகள் நவீன முறைப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இணைக்கப்பட்டன.
அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள் இடைக்காலத்திய இஸ்லாமிய, யூத மரபுகளில் தத்துவ, இறையியல் சிந்தனையில் ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அதுவும் குறிப்பாகக் கிறித்தவர்களின் இறையியலில் அவரின் தாக்கம் அதிகமாக இருந்தது. அரிஸ்டாட்டிலை இடைக்கால முஸ்லீம் அறிவாளிகள் "முதல் அறிஞர்" ('المعلم الأول') எனப் போற்றினர். அரிஸ்டாட்டிலின் சிந்தனைகள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், சிரியாக், அரபு, இத்தாலியம், பிரான்சியம், ஹீப்ரு, செருமானியம் போன்ற பல உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
ஆரம்ப கால வாழ்வு
அரிஸ்டாட்டில் ஸ்டகிரா, ஷல்சிடிஸில் கி.மு. 384 இல் பிறந்தார் தற்கால தெஸாலோனிகி யிலிருந்து 55 கி.மீ. (34 மைல்) கிழக்கே உள்ள நகர். அவரது தந்தை நிகோமசுஸ், மாசிடோனியாவின் மன்னர் அமயின்டாஸின் தனிப்பட்ட மருத்துவர் ஆவார். அரிஸ்டாட்டிலின் குழந்தை பருவத்தைப் பற்றி அதிக தகவல்கள் இல்லை என்றாலும், ஒருவேளை அவர் மாஸிடோனியன் மாளிகையில் சிறிது காலம் கழித்திருப்பார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பதினெட்டு வயது நிரம்பிய அரிஸ்டாட்டில் பிளேட்டோவின் அகாடமியில் அவரது கல்வியை தொடர ஏதென்ஸ் சென்றார்.
அரிஸ்டாட்டில் கி.மு. 348 ஏதென்ஸ் விட்டுச் செல்வதற்கு முன் ஏறத்தாழ இருபது ஆண்டுகள் அகாடமியில் கல்வி கற்றார். பிளேட்டோ இறந்தவுடன் பள்ளி பிளேட்டோவின் மருமகனிடம் சென்றது. அதைத் தொடர்ந்து அரிஸ்டாட்டில் அப்பள்ளியை விட்டு நீங்கினார். பின் அவர் தன் நண்பனுடன் ஆசியா மைனருக்கு பயணத்தை மேற்கொண்டார். பயணத்தின் போது லெஸ்போஸ் என்னும் தீவில் விலங்கியல் மற்றும் தாவரவியல் பண்புகளைப் பற்றி ஆராய்ந்தார்.
அரிஸ்டாட்டில் ஹெர்மியாஸ் இன் வளர்ப்பு மகள் பிதியாஸைத் திருமணம் செய்துக்கொண்டார். அரிஸ்டாட்டில் கி.மு. 343 அன்று மாசிடோனியா மன்னன் இரண்டாம் பிலிப் அழைக்க அவரது மகன் அலெக்சாண்டர்க்கு பாடம் கற்பிக்கச் சென்றார். அரிஸ்டாட்டில் மாசிடோனியா ராயல் அகாடெமியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அரிஸ்டாட்டிலின் உலாப் பள்ளி
கி.மு. 335 அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் திரும்பினார், அங்கு லைசியம் என தனது சொந்த பள்ளியை நிறுவினார். அரிஸ்டாட்டில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பள்ளியில் படிப்புகளை நடத்.திக்கொண்டிருந்தார். தம் மாணவர்க்கு மெய் விளக்கியல் கொள்கைகளைக் கற்பிப்பதற்காக ஏதென்ஸ் நகரத்திலிருந்த ஒரு தோட்டத்தில் இதை அவர் நிறுவினார். இதற்கு உலாப் பள்ளி என்ற பெயரும் உண்டு. அரிஸ்டாட்டில் இங்கு உலாவிக் கொண்டே பாடம் சொல்வது வழக்கமாக இருந்ததால் இப்பெயர் ஏற்பட்டது என்பர்.
ஏதென்ஸில் அரிஸ்டாடில் இருந்த போது, அவரது மனைவி பிதியாஸ் இறந்தார். அரிஸ்டாட்டிலின் பல படைப்புகள் இயற்றப்பட்டது அவர் ஏதென்ஸில் இருந்த கி.மு. 335 முதல் 323 வரையான காலகட்டத்தில் என்று நம்பப்படுகிறது.
அலெக்சாண்டரும் அரிஸ்டாட்டிலும்
அலெக்சாண்டர் தன் ஆசிரியரின் ஆராய்ச்சிகளுக்குத் தேவைப்பட்ட நிதி உதவிகள் அனைத்தையும் தாராளமாக வழங்கினார். ஒரு விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்காக அரசிடமிருந்து பெருமளவில் நிதியுதவி பெற்றது உலக வரலாற்றில் இதுவே முதல் நிகழ்ச்சி ஆகும். ஆனால், அலெக்சாண்டருடன் அரிஸ்டாட்டிலும் கொண்டிருந்த தொடர்புகள் சில ஆபத்துகளையும் தோற்றுவித்தன. அலெக்சாண்டரின் சர்வாதிகார முறை ஆட்சியை அரிஸ்டாட்டில் கொள்கையளவில் எதிர்த்தார். அரசு துரோகக் குற்றம் செய்ததாக ஐயத்தின் பேரில் அரிஸ்டாட்டிலின் மருமகனை அலெக்சாண்டர் தூக்கிலிட்டார். அரிஸ்டாட்டிலின் மக்களாட்சி ஆதரவுக் கொள்கையை அலெக்சாண்டர் விரும்பவில்லை. அதே சமயத்தில் அவர் அலெக்சாண்டருடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தமையால் ஏதென்ஸ் மக்களும் அவரை நம்பவில்லை.அதன் பின் அவர்கள் பிரிந்தனர்.
மாசிடோனியனை நீங்கிய அரிஸ்டாட்டில்
அலெக்சாண்டர் இறந்த பின்பு மாசிடோனியனில் அரசியல் நிலைமை மாறியது. மாசிடோனியாவை எதிர்க்கும் குழுவினர் ஏதென்சில் ஆட்சிக்க்கட்டிலில் ஏறினர். ஆட்சியாளர்கள், சமயத்தை அவமதித்ததாக ஏதென்சில் 76 ஆண்டுகளுக்கு முன்பு சாக்ரட்டீசுக்கு விஷம் கொடுத்ததை நினைவு கூர்ந்த அரிஸ்டாட்டில், உடனே 'தத்துவத்திற்கு எதிரான இரண்டாவது பாவத்தைச் செய்ய ஏதென்சுக்கு நான் இடமளிக்கப் போவதில்லை' என்று கூறி அந்த நகரிலிருந்து தப்பி ஓடினார்.
இறப்பு
அலெக்ஸாண்டர் இறந்த அதே ஆண்டில் இயற்கை காரணங்களால் உடல்நலகுறைவில் அரிஸ்டாடில் இறந்தார். அரிஸ்டாட்டிலிற்கு அடுத்து அவரது மாணவர் ஆன்டிபாத்தரர் அவரின் இடத்திற்கு வர வேண்டும் என்றும் அவரது மனைவிக்கு அடுத்து புதைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு உயில் விட்டு சென்றாரம் அரிஸ்டாட்டில்.
அரிஸ்டாட்டிலின் தத்துவங்கள்
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.