முதுகுளத்தூரில் பேரறிஞர் அண்ணா
ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம்
முதுகுளத்தூர்
மீலாத் விழா பொதுக்கூட்ட வரவேற்புரை
30-08-1961
அலகிலா அருளும் அளவிலா அன்பும்
இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி!
அவைத் தலைவர் அவர்களே !
அன்பிற்குரிய பெரியோர்களே !!
அருமை மிகு தாய்மார்களே !!!
முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்க அங்கத்தினர்கள், அகில உலகிற்கும் அருட்கொடையாக அவதரிக்கப்பட்ட அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்களின் அவதார தினத்தைச் சீரோடும், சிறப்போடும் கொண்டாட வேண்டும் என்ற சிறந்த எண்ணத்தோடு இத்தகைய உயர்ந்த கூட்டத்தைக் கூட்டி இருக்கின்றார்கள்.
இந்த கூட்டமானது எந்தவித அரசியல் நோக்கத்தோடும், அனாச்சார எண்ணத்தோடும் கூட்டப்பட்டது அல்ல. சிந்தனைச் சிற்பிகளின் - சீர்திருத்த செம்மல்களின் - செயற்கரிய செய்த பெரியோர்களின் - உயர்வுமிக்க கருத்துக்களை, உலகத்து மக்களுக்கு எடுத்தோத வேண்டும் என்ற உன்னத எண்ணத்தோடு, “ஒன்றே இறைவன், அவன் உருவமற்றவன், உலக மக்களெல்லாம் ஒற்றுமையாயும், சகோதரர்களாயும், சமத்துவமாயும் வாழ வேண்டும்” என்ற வழி முறைகள் வகுத்துச் சென்ற வள்ளல் நன்னபியின் அவதார தினக் கொண்டாட்டக் கூட்டமாகும்.
இத்தகைய இக் கூட்டத்தைப் பொதுப்பணியே தம் பெரும் பணி என்ற அறப்பணிகள் பல ஆற்றிவரும் முதுகுளத்தூர் வட்டப் பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஜனாப். N.ஹஸன் முகம்மது M.A., B.L. அவர்கள் தலைமை வகிப்பது தனிப்பெருஞ் சிறப்பினை அளிப்பதாகும் என்று கூறிக்கொள்வதில் மகிழ்வுறுகின்றேன்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர், அறிவுலக மேதை அறிஞர் அண்ணா M.A., M.L.A. அவர்கள் இவ் விழாவில் கலந்து சிறப்புரை நிகழ்த்த இசைவு அளித்தது குறித்து நமது இதயங்களெல்லாம் களிப்பில் திழைக்கின்றன. இஸ்லாமிய கலாச்சாரத்தில் மிகவும் விருப்பங்கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் அண்ணல் நன்நபியின் அருங் குணங்களையும், அழகிய போதனைகளையும் தெள்ளத் தெளிய கற்றறிந்தவர்கள். அவர்கள் ஆற்றும் இனிய உரை இப் பகுதி மக்களுக்கு நல்லதோர் எழுச்சியையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்கும் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் ஜனாப். S.S. அப்துல்லா அவர்கள் மதுரை தந்த மாணிக்கமாவார்கள். இஸ்லாமிய சேவையிலும், இனிய தமிழ் ஆர்வத்திலும் இணையற்று விளங்கக்கூடியவர்கள். கருணை நபியின் கருத்துக்களை கன்னல் தமிழில் வடித்துரைக்கும் வன்மை பெற்றவர்கள். அவரது பேருரை நமக்கெல்லாம் பெரும் பயனையளிக்கும் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகின்றேன்.
பெண்ணின் பெரும் பொருளாய் - பேரறிவின் இருப்பிடமாய்த் திகழுகின்ற ஜனாபா. மேரி நபிசா அவர்கள் பல மொழி கற்று - பண்புள்ளம் ஏற்று பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதே தம் பணியாகக் கொண்டுள்ளார்கள். திருமறையின் கருத்துரைகளையும், திருநபியின் நன் மொழிகளையும் தீனவர்கள் மட்டுமின்றி ஏனையோர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சொற்பெருக்காற்றும் ஆற்றல் மிக்கவர்கள், அவர்களது அறிய உரை நமக்கும் குறிப்பாகத் தாய்மார்களுக்கும் அரும் பயனையளிக்கும் என்று கூறிக்கொள்கிறேன்.
இவ்வூரின் கண் பஞ்சாயத்து விஸ்தரிப்பு அதிகாரியாய் பணியாற்றி, தற்போது வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ளவிருக்கும் திரு. T.R. இராசன் B.A., B.L. அவர்கள் நாவன்மையும் நல்லதோர் கருத்தாழமும் கொண்டவர்கள். அவர்களது சீரிய உரை நம் சிந்தையெல்லாம் கொள்ளை கொள்ளும் என்று கூறிக்கொள்வது மிகையாகாது.
உலகத்தின் ஒளி விளக்காய் அவதரித்த அண்ணல் நன்னபியின் அறிவுரைகளையும், அருமை இஸ்லாத்தின் நெறிமுறைகளையும் எடுத்துரைக்க வந்துள்ள அறிஞர் பெருமக்களுக்கும், அதனைச் செவிமடுத்துச் சிறந்த பல கருத்துக்களைத் தம் சிந்தைகளில் ஏற்றுக்கொள்ள இவண் வருகையளித்துள்ள அருமை மிகு பொது மக்களுக்கும் எனது இதயமென்னும் கலசத்தில் பொங்கி வழியும் இனிய வாழ்த்துக்களை வாரி வழங்கி மீலாத் விழாக் குழுவினர் சார்பில் வருக, வருக என்று வரவேற்கிறேன்.
இங்ஙனம்,
R.M. அப்துல் கரீம்
மீலாத் விழாக் குழுச் செயலாளர்.
இதை விழாவில் வாசித்தது
S. அப்துல் காதர் (தலைமை ஆசிரியர்)
செயலாளர்
ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கம்,
முதுகுளத்தூர்
30-08-1961.