அம்பேத்கர்
பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் (பிறப்பு 14 ஏப்ரல் 1891 – மறைவு 6 டிசம்பர் 1956) அவர்கள் இந்திய வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இணையற்ற தலைவர். விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பணியாற்றியவர். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்.
இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆரம்ப கால வாழ்வு
அம்பேத்கர் பிரிட்டிஷ் இந்தியாவில் மாவ்(Mhow) என்னும் இடத்தில் (இப்போது மத்தியப் பிரதேசம்) 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி மாலோஜி சக்பால் - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு பீம்ராவ் ராம்ஜி என பெயரிட்டனர். ராம்ஜி மாலோஜி சக்பால் இராணுவப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் 'சுபேதார் மேஜர்' என்ற தகுதி பெற்றவர். இராணுவத்தில் இருந்து ராம்ஜி மாலோஜி சக்பால் ஓய்வு பெற்ற போது அம்பேத்கருக்கு வயது இரண்டு. பின் குடும்பத்துடன், மத்திய இந்தியாவிலிருந்து கொங்கணத்தில் தபோலி என்ற ஊருக்கு குடியேறினர். போதிய வருமானம் மற்றும் வேலையின்றி சொற்ப ஓய்வூதியத்தை கொண்டு குடுபத்தை நடத்தி வந்தார். அம்பேத்கரின் குடும்பம் தற்போதைய மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பேவாதே வட்டத்தைச் சேர்ந்த மகர் என்னும் மராத்தியர் குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
அம்பேத்கருக்கு 5 வயது இருக்கையில், அவரது அண்ணனுடன் ஆரம்ப கல்வியை துவங்கினார். பின் ராம்ஜி சக்பால் பம்பாயில் குடியேறி சத்தராவில் இராணுவக் குடியிருப்பு வளாகத்தில் ஒரு வேலையில் அமர்ந்தார். சத்தாராவில் இவர்கள் குடியேறிய நேரத்தில் அம்பேத்கரின் தாயார் பீமாபாய் மறைவுற்றார்.
1900 ஆண்டில் சாத்தாராவில் உள்ள ஒரு பள்ளியில் தனது தொடக்கக் கல்வியைத் முடித்த அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து பயின்றார். அங்கு தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தனியே அமர்த்தப்பட்டனர். மற்ற மாணவர்களுடன் பேசவோ விளையாடவோ முடியாது. அவர்களின் குறிப்பேடுகளையும் புத்தகங்களையும் தொடமாட்டார்கள். கேள்விகள் கேட்பதும் கிடையாது. தண்ணீர் வேண்டுமென்றாலும் பிறர் ஊற்ற கையால் பருகவேண்டும். அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும். வடமொழி கற்கவும் தடை இருந்தது. இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது. எனவே படிப்பில் பிடிப்பு இல்லாமல் இருந்தார்.
1904 ஆம் ஆண்டு இவரது குடும்பம் மும்பைக்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர்.
தந்தை மறுமணம்
அவரது தாய் மறைவிற்கு பின், தந்தை மறுமணம் செய்து கொண்டார். இது அம்பேத்கருக்கு பிடிக்கவில்லை. எனவே தனது தந்தையை சார்ந்திருக்க கூடாதென்று பாம்பேயில் (இப்போதைய மும்பை) நூற்பாலையில் வேலைக்கு சென்று தனது கவனத்தை படிப்பின் மீது செலுத்த தொடங்கினார். அதன் மூலம் தனது விளையாட்டு தனத்தை முற்றிலும் துறந்தார். தொடர்ந்து படிப்பில் நல்ல முன்னேற்றம் காணத் துவங்கினார்.
கல்வியில் ஆர்வம் - பாராட்டு விழா
அப்பாவின் துணையுடன், ஹோவர்ட் ஆங்கில பாடநூலைக் கற்றார். மேலும், புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு பற்றிய நூல்களையும் படித்தார். இதனால், மொழிபெயர்ப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். தொடர்ந்து அம்பேத்கர் பாடநூல்களை படிப்பதை விட மற்ற நூல்களை படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
1907ஆம் ஆண்டு உயர்நிலை பள்ளி மெட்ரிகுலேசன் தேர்வில் அம்பேத்கர் தேர்ச்சி பெற்றார். அப்போது தீண்ட தகாத மாணவர் ஒருவர் தேர்ச்சி பெற்றது பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. அதற்காக அம்பேத்கருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது.
கல்லூரி கல்வி பெற உதவி
தன் தந்தையின் விருப்பத்தினால் ஊக்கம் பெற்றிருந்த அம்பேத்கர் பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்தார். தொடக்கம் முதலே முனைப்புடன் படிக்கத் தொடங்கினார். இந்நேரத்தில் அம்பேத்கரின் தந்தைக்கு பண கஷ்டம் ஏற்பட்டது. அப்போது பரோடா மன்னர் தீண்டதகாத சிறந்த மாணவர்களுக்கு படிக்க உதவுவதாக அறிவித்திருந்தார். அதை கேள்விபட்டு அந்த உதவியை நாடினார் அம்பேத்கர். சாயஜிராவ் கெய்க்வாடு சிற்றரசர் இந்த வாய்ப்பு அம்பேத்கருக்கு கிடைக்க உதவினார்.
கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து இளங்கலைப் பட்டதாரியானார். கல்லூரியில் படிக்கும் பொழுது அவரது தந்தை காலமானார்.
பரோடா மன்னரின் அரண்மனையில் பணி
படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
உயர்கல்வி பெற அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்
1913ஆம் ஆண்டு சூன் 4 ஆம் நாள் அம்பேத்கர் அமெரிக்கா சென்றார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதாரம், அரசியல், தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களைப் படித்தார். அங்கு அவர் 1915-இல் 'பண்டைய இந்தியாவின் வாணிகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார்.
இந்தியாவின் சாதிகள் என்ற தலைப்பில் கருத்தாழமிக்க ஒரு கட்டுரையை எழுதினார். பின்னர், 'இந்திய தேசியப்பங்கு விகிதம் ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற தலைப்பில் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டார். இந்த ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் இவருக்கு 1916 இல் டாக்டர் பட்டம் வழங்கியது.
இக்கட்டுரை ஆங்கிலத்தில் 'இந்தியாவில் மாகாண நிதி வளர்ச்சி' என்ற தலைப்பில் நூலாக வெளியிடப்பட்டது. இன்று இந்தியாவில் நிதிநிலை அறிக்கை வெளியிடும் பொழுது ஒவ்வொருவரும் புரட்டிப்பார்க்கும் உயர் நூலாக இன்றும் உள்ளது. மேலும் அம்பேத்கர் 'பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். 'ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
ஆசிரிய பணி மற்றும் வழக்கறிஞர் பணியில் அம்பேத்கர்
மும்பைக்கு திரும்பிய அம்பேத்கர், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க துவங்கியதுடன், பங்கு பத்திரங்களில் அறிவுரை வழங்க ஒரு நிறுவனத்தையும் தொடங்கினார். இதில் பல வாடிக்கையாளர்கள் ஒரு தீண்டதகாதவனின் அறிவுரை ஏற்க முடியாது என்று அவரிடம் வர மறுத்துவிட்டனர். அம்பேத்கர் தீண்டப்படாத மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கினார்.
தாழ்த்தப்பட்டவர் என்பதால் எங்கும் வேலை கிடைக்காத சூழல் இருப்பினும் 18 ஆம் ஆண்டு சிக்னல் கல்லூரியில் பொருளாதார ஆசிரியராக பணி கிடைத்தது. ஆசிரியர் பணியை தொடர்ந்த அவரின் உரையை கேட்க பல மாணவர்கள் திரண்டனர். 1921ஆம் ஆண்டு காலத்தில் தொழில்முறை பொருளாதார அறிஞராக பணியாற்றியவாறே மூன்று புத்தகங்கள் வெளியிட்டார்.
1923 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சங்கத்தில் சேர்க்கப்பட்டாலும் வாதிடும் தொழிலுக்கு தீண்டாமை தடையாக இருந்தது.
சமூக பணியில் அம்பேத்கர்
1927ஆம் ஆண்டு ”பகிஸ்கரிக் பாரத்” என்ற இதழை தொடங்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான குரலாக எழுதி வந்தார் அம்பேத்கர். அதே ஆண்டு தீண்டாமைக்கு எதிராக போராட துவங்கினார். பொது கிணற்றில் நீர் எடுப்பது, கோவில்களில் அனுமதி மறுப்பது உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தார்.
1930-ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காகப் புறப்படுகையில், 'என் மக்களுக்கு என்ன நியாயமாகக் கிடைக்க வேண்டுமோ, அதற்காகப் போராடுவேன். அதே சமயத்தில் சுயராஜ்யக் கோரிக்கையை முழு மனதுடன் ஆதரிப்பேன்’ என்று கூறிச் சென்றார்.
அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் கடுமையாக வலியுறுத்தினார்.
1932ஆம் ஆண்டு இரண்டாவது வட்டமேசை மாநாடு லண்டனில் நடத்தப்பட்டது. அதற்கு அம்பேத்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில், தாழ்த்தப்பட்டோருக்கு தனி உரிமை வேண்டும் என்று கோரினார், அதை காந்தி எதிர்த்தார்.
இதன் விளைவாக செப்டம்பர் 24 1932-ல் காந்திஜிக்கும், டாக்டர் அம்பேத்கருக்கும் இடையே 'புனே ஒப்பந்தம்’ ஏற்பட்டது. இதன்படி தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி ஒதுக்கீடுகள் ஒத்துக் கொள்ளப்பட்டன.
1935ஆம் ஆண்டு அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் அவர் இரண்டு ஆண்டுகாலம் இருந்தார்.
பின் சுதந்திர தொழிலாளர் கட்சியை நிறுவினார். இந்த கட்சி 1937 ஆம் ஆண்டு மும்பை தேர்தலில் 14 இடங்களில் வென்றது.
1936ஆம் ஆண்டு “யார் இந்த சூத்திரர்கள்” என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினார். அதில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமை குறித்து கடுமையாக எழுதினார்.
இந்திய அரசியலமைப்பு சட்டம்
1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றுக் கொண்டபின், அரசியலமைப்பு எழுதும் பொறுப்பு அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது. அதில், சட்ட அமைச்சராகவும், அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
1949ஆம் ஆண்டு நவம்பர் 26 நாள், அரசியல் அமைப்பு வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின் 1950 ஜனவரி 26 அமல்படுத்தப்பட்டது.
1951ஆம் ஆண்டு இந்து நெறியியல் சட்டம் கொண்டு வருவது குறித்து நேருவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பதவி விலகினார்.
பின் அடுத்த தேர்தலில், மக்களவை தொகுதியில் போட்டியிட்டார். அதில், தோற்றதை அடுத்து மாநிலங்களைவையில் நியமிக்கப்பட்டார். அவர், இறக்கும் வரை அந்த பொறுப்பை மட்டும் வகித்து வந்தார்.
இரண்டாவது திருமணம் - குடும்பம்
1906ஆம் ஆண்டு அம்பேத்கருக்கு 15வயது இருக்கும் போது 9 வயது ராமாபாய் என்பவருடன் திருமணம் நடந்தது. இன்னொருபுறம் வறுமையும் நெருக்கடிகளும் நிறைந்த வாழ்வில் அம்பேத்கரின் 5 குழந்தைகளில் நான்கு இறந்துவிட்டன தப்பிப் பிழைத்தது எஸ்வந்த் அன்பாய் சாகப் மட்டும்தான், பின்னர் ராமாபாய் 1935ஆம் ஆண்டு இறந்தார்.
பின் 1948ஆம் ஆண்டு சாரதா கபீர் என்னும் சவிதா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது அம்பேத்கருக்கு வயது 57 சவிதாவுக்கு வயது 39.
உடல் நலக் குறைவு - மரணம்
1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும், 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவரது உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவரது வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.
உடல் தகனம்
பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். 1956 டிசம்பர் 16, அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் இவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே இவரது உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர்.
மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.