ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், மிக முக்கியமான இயற்பியல் அறிஞராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை (Theory of Relativity) முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும்,1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இளமை கால வாழ்வு
கி.பி 1879 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆம் நாள் ‘உல்ம் ஆஃப் வோர்டென்பர்க்’ என்னும் ஜெர்மானிய நகரில் பிறந்தார். இவரது தந்தை ஹெர்மான், ஒரு வியாபாரி. தாய் பொலின் ஒரு இசைக் கலைஞர். சிறு வயதில் ஐன்ஸ்டீனுக்கு தாமதமாகத் தான் பேச்சு வந்தது. மெல்ல மெல்ல யோசித்து யோசித்து தான் பேசுவார். தாய் தந்தையர் அச்சமுற்றனர். காலம் கடந்துதான் பேச்சுத்திறன் பெற்றாலும் ஐன்ஸ்டீனுக்கு கணிதத்தின் மீது அளவிட முடியாத பிரியம். பள்ளிப்படிப்பை மூனிச் நகரிலிருந்த கத்தோலிக்க துவக்கப் பள்ளியில் பயின்றார்.
பள்ளிப்படிப்பில் ஜொலிக்கவில்லை எனினும் இவரது பிள்ளைப் பருவம் சாதாரணமானது அல்ல. ஐன்ஸ்டீனது வீட்டிற்க்கு எப்போதும் சனி-ஞாயிறு தோறும் அவரது மாமா உணவு அருந்த வருவார். அவர் ஒரு பொறியியலாளர். அவருடன் உரையாடுவது இவருக்கு மிகவும் பிடித்த விசயம். அவரது மாமா, அறிவியல் செய்திகளையும் விளக்கங்களையும் எளிமையாக விளக்குவார். ஐன்ஸ்டீனது இளம் பிராயத்தில் தாக்கம் செலுத்திய மற்றொருவர் - மாக்ஸ் தால்மி எனும் மருத்துவ மாணவர், குடும்ப நண்பர். சிறுவன் ஐன்ஸ்டீன் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார் மாக்ஸ் தால்மி. கேள்வியின் ஆழம் அதிகமாக அதிகமாக அறிவியல் நூல்களை அளித்தார்.
பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார்
அன்று ஜெர்மனியில் பள்ளிகள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விளங்கின. ஆசிரியர்கள், பள்ளி அலுவலர் யாரையும் மாணவர்கள் கேள்வி கேட்கக் கூடாது. ஏன், எதற்கு, எப்படி என கேள்வி கேட்காமல் சொல்படி நடக்க வேண்டும். சுய சிந்தனையில் பாடம் படித்து தேர்வு எழுதக்கூடாது. வரிக்கு வரி ஒரு வாக்கு கூட பிசகாமல் மனனம் செய்து ஒப்புவிக்க வேண்டும். மாற்றமேயில்லாமல் எழுத வேண்டும். அவ்வாறு செய்தால் தான் நல்ல மதிப்பெண் கிட்டும். இதுவே அன்று இருந்த நிலை. இன்று இந்தியாவில் இதே நிலை தான்.
பள்ளியிலே ஆசிரியர்களின் விளக்கங்களை நுணுக்கமாகக் கேள்வி கேட்டார் ஐன்ஸ்டீன். ஆசிரியர்களின் தலைவலியாக ஐன்ஸ்டீன் உருவெடுத்தார். ஒரு தடவை ஐன்ஸ்டீன் வகுப்பில் இருப்பதால் கட்டுப்பாடு குலைந்து விடுகிறது எனக் கூறி வகுப்பிலிருந்து வெளியேற்றப் பட்டார்.
இத்தாலி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்
வகுப்பை விட்டு வெளியேறு என்று ஆசிரியர் கூறியதை நடைமுறைப் படுத்தி, முழுமையாக பள்ளியிலிருந்து வெளியேற ஒரு நல்ல சந்தர்ப்பம் 1894ல் வாய்த்தது, தன் வியாபாரத்தில் ஏற்பட்ட தொய்வு காரணமாக ஐன்ஸ்டீனின் தந்தை ஹெர்மான் இத்தாலி செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். அங்கு தொழில் தொடங்கியதும் மனைவி மக்களையும் அழைத்துக் கொண்டார். ஆனால் ஐன்ஸ்டீன் பள்ளியில் படிப்பதால் அவர் மட்டும் மூனிச் நகரில்.
தனிமையில் வாடிய ஐன்ஸ்டீன் ஒரு திட்டம் தீட்டினார். மருத்துவரிடம் சென்று தான் நோய்வாய்ப் பட்டிருப்பதாகவும், ஓய்வு தேவை எனவும் மருத்துவப் பரிந்துரை வாங்கினார். இதனைக் காரணம் காட்டி பள்ளியிலிருந்து விலகி இத்தாலிக்குச் சென்றார்.
உயர் கல்வியில் ஐன்ஸ்டீன்
1895ல் சுவிட்சர்லாந்தின் மத்திய கூட்டமைப்பு பொறியியல் கழகம் என்ற நிறுவனத்தின் நுழைவுத் தேர்வு எழுதினார். அதில் தோல்வி அடைந்தார். பின்னர் குடும்பத்தாரின் ஆலோசனைப்படி, சுவிஸ் நாட்டின் ஆரெள எனும் பகுதியில் உள்ள உயர் கல்விப் பள்ளியில் சேர்ந்தார். ஜெர்மானிய கல்வி நிலையங்களுக்கு முற்றிலும் மாறாக இங்கு சுதந்திரச் சூழல் இருந்தது. ஆசிரியர்கள் மனிதாபிமானத்தோடும் அன்போடும் மாணவர்களை நடத்தினர். இயற்பியல் கோட்பாடு மற்றும் கணிதத்தின் மீதான ஐன்ஸ்டீன் காதல் தீவிரமடைந்தது.
இப்பள்ளியிலிருந்து தேர்வு பெற்ற பின், பட்டப்படிப்பு பெற ஜுரிச் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். 1900ல் தட்டுத் தடுமாறி பட்டப் படிப்பை முடித்தார்.
காதல் வயப்பட்ட ஐன்ஸ்டீன்
பட்டப்படிப்பு வகுப்பில் அவரோடு படித்தவர்களில் ஒரே ஒரு பெண், சக மாணவி, புத்திசாலி, நட்பு குணம், அறிவியல் மீது அளவிளா ஆர்வம். செர்பிய நாட்டவரான மிலீவா மேரி ஐன்ஸ்டீன் வகுப்பில் ஒரே ஒரு மாணவி மட்டும் அல்ல. அழகானவர், அறிவு மிக்கவர், இயற்பியலில் மோகம் கொண்டவர். ஐன்ஸ்டீன் காதல் வயப்பட இதற்கு மேல் என்ன வேண்டும்.
ஐன்ஸ்டீனின் காதலுக்கு உடனடி அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவரது குடும்பத்தாரிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. இதற்கிடையில் திருமணம் செய்வதற்கு முன்பே மீலிவா ஒரு பெண் குழந்தைக்குத் தாயானார். அக்குழந்தையை அவர்கள் தத்துக் கொடுத்து விட்டனர். இக்கட்டில் இருந்தார் ஐன்ஸ்டீன். பட்டப்படிப்பு முடித்தும் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைக்கவில்லை. வேலை யின்மையினால் தனது மனதிற்குப் பிடித்தவளைக் கைபிடிக்க முடியவில்லை. தமது மகவையே தத்துக் கொடுக்க வேண்டிய அவலம்; தந்தையின் உடல் நிலை வேறு மோசமாகி வந்தது; குடும்பத்தாருக்கு சுமையாகக் கூடாது என்ற நிர்பந்தமும் ஐன்ஸ்டீனை வாட்டியது.
காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தர் பணி
ஆசிரியர்களில் ஒருவரான வெப்பர் என்பவர் ஐன்ஸ்டீனது அவலத்தைக் கண்டு மனமிரங்கினார். தனது தந்தை, பெர்ன் நகர காப்புரிமை அலுவலரின் உதவியை நாடி, அங்கு எழுத்தர் பணிக்கு ஐன்ஸ்டீனைப் பரிந்துரைத்தார் அவர். பல மாத காலம் காத்துக் கிடந்த பின் ஐன்ஸ்டீனுக்கு இவ்வேலை கிடைத்தது. மறுக்காமல் மறு சிந்தனையின்றி 1902ல் வேலையில் சேர்ந்தார். வேலை, அதன் வழி நிரந்தர வருமானம் ஆகியவை அவருக்குத் தெம்பூட்டின. 1903ல் தனது காதல் துணைவியின் கரம் பிடித்தார்.
திருமணம் - குடும்ப வாழ்க்கை
காப்புரிமை அலுவலகத்தில் வேலை கிடைத்ததும் தந்தையைச் தேடிச் சென்றார். தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார். கடும் விவாதத்திற்கு பிறகு ஐன்ஸ்டீனின் பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.
1903 ஜனவரி 6 அன்று ஐன்ஸ்டீனும் மிலீவாவும் திருமணம் புரிந்தனர். தமது நாத்திகக் கொள்கையின் அடிப்படையில், அத்திருமணம் பதிவாளர் அலுவலகத்தில் தான் நடந்தது. இருவரும் இணைந்து அறிவியல் ஆய்வில் ஈடுபடுவோம் எனக் கூறிய ஐன்ஸ்டீனால் தனது வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை. மெல்ல மெல்ல மிலீவா வீட்டு வேலைகளில் மட்டும் மூழ்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
1904 மே 14 அன்று முதல் மகன் ஹான்ஸ் ஆல்பர்ட் பிறந்தான். 1910 ஜுலை 28 அன்று இரண்டாம் மகன் எடுஹார்ட் பிறந்தான். பிள்ளைகளை வளர்ப்பதிலேயே மிலீவாவின் காலம் கரைந்தது. மெல்ல மெல்ல மிலீவா - ஐன்ஸ்டீன் மண வாழ்க்கையில் விரிசல் விழுந்து 1919ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று அவர்கள் விவாகரத்துப் பெற்றனர்.
உலகப் பிரபலம்
நவம்பர் 7, 1919 ஐன்ஸ்டீனுக்கு மறக்க முடியாத நாள். அன்று காலை லண்டன், நியூயார்க் முதலிய நகரங்களில் வெளியான காலை நாளிதழ்களில் தலைப்பு பக்கத்தில் ஐன்ஸ்டீனே செய்தி ஆனார். அன்று வரை யாரும் அறியாத விஞ்ஞானியாக இருந்த ஐன்ஸ்டீன் அன்று முதல் யாவரும் அறியும் உலக மேதையாக மாறினார் என்றால் மிகையாகாது.
நவம்பர் 6 அன்று இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி மற்றும் ராயல் அஸ்ரானாமிகல் சொசைட்டி (வானவியல் கழகம்) ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்தில் ஆர்தர் எடிங்டின் என்பார் தன் ஆய்வு முடிவை வெளியிட்டார். சூரியனுக்கு அருகில் பாய்ந்த ஒளி தன் நேர்பாதையிலிருந்து ஈர்ப்பு விசையால் கவரப்பட்டு விலகியது என்பதே அவரது ஆய்வு முடிவு ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் தத்துவத்தை நிறுவியது. 1905 சிறப்பு சார்பியல் தத்துவத்தை நிறுவிய ஐன்ஸ்டீன் அதன் தொடர்ச்சியாக பொது சார்பியல் தத்துவத்தை வடிவமைக்க முனைந்தார்.
சார்பியல் தத்துவங்களை கண்டு பிடிப்பு
சிறப்பு சார்பியல் தத்துவம், சீரான வேகத்தில் நேர்கோட்டில் பாயும் இயற்பியல் நிலைகளை விளக்கியது. ஆனால் முடுக்கு வேகத்தில் பாயும் பொருட்கள், நேர்கோட்டில் அல்லாமல் பாயும் பொருட்கள் முதலியவற்றை விளக்கும் விதமாக பொது சார்பியல் தத்துவத்தை ஏற்படுத்த முனைந்தார் ஐன்ஸ்டீன். 1907ஆம் ஆண்டு துவங்கிய இந்த ஆய்வு மெல்ல மெல்ல காயாகி பழமாகி 1915ல் முதிர்ந்தது.
ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிக்கட்சி ஆட்சி
ஜெர்மன் முதலாளிகளின் உதவியினால் உந்தப்பட்டு நாஜிக்கட்சியினர் 1933ல் ஜெர்மனியின் முன்னணிக் கட்சியாக வளர்ந்தனர். ஜனவரி 1933ல் ஹிட்லர் ஜெர்மானிய அதிபராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற சில மாதங்களிலேயே பல ஜனநாயக உரிமைகள் நசுக்கப்பட்டன. வன்முறை கோர தாண்டவமாடியது. யூதர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.
மார்ச் 1933ல் ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் பஸாடானா நகரில் இருந்தார். ஜெர்மனியில் நிகழும் போக்கினால் தான் தாயகம் திரும்ப இயலாத சூழல் உள்ளது தெளிவாகப் புலப்பட்டது. ஆகவே இனி ஜெர்மனிக்கு திரும்பச் செல்வதில்லை என்று அறிவித்தார்.
ஐன்ஸ்டீன் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்.
ஜெர்மனியில் ஐன்ஸ்டீனது வீடு, வங்கிக் கணக்கு எல்லாம் நாஜிக் கட்சியினரால் பறிமுதல் செய்யப்பட்டன. ஐன்ஸ்டீனது ஜெர்மானிய குடியுரிமையும் பறிக்கப்பட்டது. 1933ல் பிரிஸ்டன் பல்கலைக் கழகத்தில் அளிக்கபட்ட பேராசிரியர் பதவியை ஏற்று ஐன்ஸ்டீன் அமெரிக்காவில் வாழ்த் தீர்மானித்தார். இதற்கிடையில் 1933, டிசம்பர் 20 அன்று அவரது இரண்டாவது மனைவி எல்ஸா மரணமடைந்தார். பிரின்ஸ்டனில் வாழ்ந்த ஐன்ஸ்டீன் 1949ல் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார். பின் அவரது வாழ்நாளில் ஜெர்மனிக்குத் திரும்பவே இல்லை.
ஐன்ஸ்டீனின் மத நம்பிக்கை
யூத மதத்தினராக பிறந்த ஐன்ஸ்டீன் சிறுவயதில் ஆழ்ந்த பக்திப்பிடியில் இருந்தார். பின்னர் மெல்ல மெல்ல நாத்திகரானார். தனது சொந்த வாழ்க்கையிலும் மத ஆசாரங்களைக் கடைபிடிக்கவில்லை. 1920களில் அன்றைய ஜெர்மன் அரசு சட்ட விதிகளின் படி, ஜெர்மனியின் யூத மத நிறுவனத்திற்கு வரி கட்ட நிர்ப்பந்திக்கப்பட்டார். ஆனால் இதனை புறந்தள்ளிய ஐன்ஸ்டீன் “நான் யூத மத நம்பிக்கை கொண்டவன் இல்லை” என்று பறை சாற்றினார்.
இஸ்ரேல் பற்றிய அவர் கொள்கை
அடக்குமுறைக்கு உள்ளான யூத மக்கள் மத அடிப்படையில் இஸ்ரேல் நாட்டை நிறுவ முயற்சித்த போது அதனை எதிர்த்தார். “மத அடிப்படையில் நாடு என்பதா? ஏற்க முடியாது” எனக் கூறிய இவர், “அராபியரும் யூதர்களும் இணக்கமாக வாழும் பாலஸ்தீனமே சரி” என வாதிட்டார். பின்னர் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட போதும் இந்த புதிய நாடு பாலஸ்தீனர்களை அடக்கி ஒடுக்கக் கூடாது எனக் குரல் எழுப்பினார் ஐன்ஸ்டீன்.
அணுகுண்டு செய்தாரா ஐன்ஸ்டீன்?
1905லேயே சிறப்பு சார்பியளின் பக்கவிளைவாக ஆற்றலும் நிறையும் ஒன்று தான் என நிறுவியிருந்தார். இக்கருத்தை மேலும் செலுமைப்படுத்தி 1907ல் E=mc2 என்ற மிகவும் பிரசித்தி பெற்ற சமன்பாட்டை வெளியிட்டார்.
1939ல் தான் அணுச்சிதைவில் நிறைகுறைந்து ஆற்றல் வெளிப்படுவதை லெமிட்னர், ஓட்டோஹான் மற்றும் ஸ்டிராஸ்மன் என்பவர் நிறுவினர். ஐன்ஸ்டீனது E=mc2 என்ற சமன்பாடு தான் அணுகுண்டுக்கும் அணு ஆற்றலுக்கும் அறிவியல் அடிப்படை.
அணுகுண்டு தயாரிப்பதில் ஹிட்லர் காட்டிய ஆர்வம்
ஹிட்லர் ரகசியமாக அணுகுண்டு தயாரிப்பதாக சில செய்திகள் வெளியாகின. ஓட்டோஹான் மற்றும் ஸ்டிராஸ்மன் முதலானோர் ஜெர்மனியில் செய்த அணுவியல் தொடர்பான ஆய்வுகளும், அணுகுண்டு தயாரிப்பில் ஹிட்லர் காட்டிய ஆர்வமும் உலக விஞ்ஞானிகளை கவலையுறச் செய்தன.
உலகின் முதல் அணுகுண்டு சோதனை
இந்த இக்கட்டான சூழலில் தான், விஞ்ஞானிகளின் கருத்தை அமெரிக்க அரசின் உயர் நிலைக்கு எடுத்துச் செல்ல சரியான ஆசாமி ஐன்ஸ்டீன் தான் என முடிவெடுத்தனர். அவரை மிகவும் வற்புறுத்தி அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டிற்கு ஒரு கடிதம் எழுத வைத்தனர். 1939 ஆகஸ்ட் 2ஆம் தேதி அணுகுண்டு தயாரிப்பது குறித்து அமெரிக்க அதிபருக்கு ஒரு விரிவான கடிதம் மூலம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன்.
1939ல் கடிதம் எழுதப்பட்டாலும் 1942ல் தான் மன்ஹாட்டன் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1945 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அல்மொகொர்டோவில் (நியூமெக்சிகோ) முதல் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
உலகின் முதல் அணுகுண்டு ஜப்பான் மீது ஏவியது
அணுகுண்டிலிருந்து வெளிப்பட்ட ஆற்றல் கற்பனையை மிஞ்சியது. உலக அழிவின் விளிம்பு நிலையை அடைந்து விட்டோம் என விஞ்ஞானிகள் உணரத் தவறவில்லை.
உலகின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தனது மேலாண்மையை நிறுவும் விதமாக, போர் முடியும் தருவாயில் இருந்த நிலையில் ஜப்பான் மீது அமெரிக்கா முதல் அணுகுண்டை ஏவியது. 1945 ஆகஸ்ட 6 அன்று ஹிரோஷிமாவிலும் ஆகஸ்ட 9 அன்று நாகசாகியிலும் குண்டுகள் வீசப்பட்டன. அணுகுண்டின் ஆற்றலால் அக்கணத்திலேயே லட்சக்கணக்கானோர் மடிந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினருக்கு இன்று வரை அணுகுண்டின் வடு மாறாமல் பாதிப்பு இருந்து வருகிறது.
ஐன்ஸ்டீன் மனம் வெம்பினார்
அணுகுண்டினால் ஏற்பட்ட பெரும் அழிவையும் அவலத்தையும் கொடூரத்தையும் கண்ட ஐன்ஸ்டீன் மனம் வெம்பினார். “உள்ளபடியே எனது ஆய்வு இதற்க்குத் தான் பயன் படும் என்று தெரிந்திருந்தால் நான் கடிகாரம் பழுது பார்க்கும் ஒரு சாதாரண தொழிலாளியாகவே இருந்திருப்பேன்” என மனம் வருந்திக் கூறினார்.
ஐன்ஸ்டீனின் இறுதி காலம்
அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பு மன்ஹாட்டன் திட்டத்தில் ஐன்ஸ்டீன் சேர்க்கப்படவில்லை. காரணம் இவர் ஒரு இடதுசாரி கொள்கை உடையவர். மேலும் அமெரிக்காவின் உளவுத்துறை “ஐன்ஸ்டீன் நம்பகமானவர் அல்ல” என்று அறிக்கை கொடுத்திருந்தது. இதனால் அவப்பெயர் எதுவும் ஏற்படாமல் இருக்க, கப்பற்படையின் அறிவியல் ஆலோசகர் என்ற அலங்காரப் பதவி கொடுத்து மூலைக்குத் தள்ளியது அமெரிக்க அரசு.
ஐன்ஸ்டீன் இது குறித்து கவலைப்பட்டவராகத் தெரியவில்லை. எப்பொழுதும் போல் தனது சிந்தனைகளான உலக சமாதனம், உலக அரசு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, முற்போக்கு சிந்தனை என தனது பாதையில் பயணித்தார்.
ஏப்ரல் 18, 1955ல் இதயக் கோளாறினால் இயற்கை எய்திய ஐன்ஸ்டீன், தான் இறக்கும் முன்பு கடைசியாக எழுதிய கடிதம் - உலக அமைதிக்காக, உலக நாடுகள் அனைத்தும் அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்ற வேண்டுகோள்தான்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.