அடிமைத்தனத்தை ஒழித்த அதிபர் ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln February 12, 1809 – April 15, 1865) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியாக கி.பி 1861 முதல் கி.பி 1865 வரை பணியாற்றிய ஒரு அமெரிக்க அரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர், குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றார். அமெரிக்காவின் அடிமைத் தனத்தை ஒழிப்பதில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டு போரில் மிகப் பெரிய தார்மீக பொறுப்புடன் நாட்டை வழிநடத்தி அமெரிக்க யூனியனைப் பாதுகாப்பதிலும், அடிமைத்தனத்தை ஒழிப்பதிலும், மத்திய அரசாங்கத்தை மேம்படுத்துவதிலும், அமெரிக்க பொருளாதாரத்தை நவீனமயமாக்குவதிலும் அவர் வெற்றி பெற்றார்.
ஆரம்ப கால வாழ்க்கை
ஆபிரகாம் லிங்கன் பிப்ரவரி 12, 1809 அன்று, தாமஸ் லிங்கன் மற்றும் நான்சி ஹாங்க்ஸ் லிங்கனின் இரண்டாவது குழந்தையாக, கென்டக்கியின் ஹோட்ஜென்வில்லுக்கு அருகிலுள்ள பண்ணையில் ஒரு (log cabin Room) பதிவு அறையில் பிறந்தார். கென்டக்கி மற்றும் இந்தியானாவில், தாமஸ் லிங்கன் ஒரு விவசாயி, மற்றும் தச்சராக பணியாற்றினார். ஆப்ரகாம் லிங்கன் சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் உதவி புரிந்தார், காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார்.
ஆபிரகாம் லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல், கதை சொல்லுதல், வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன. குடும்ப சூழ்நிலை காரணமாக ஆசிரியர்களிடமிருந்து சில பள்ளிப்படிப்பைத் தவிர பெரும்பாலும் லிங்கன் சுயமே படித்துக்கொண்டு இருந்தார்,
லிங்கன் உயரமானவர், வலிமையானவர், தடகள வீரர், கோடரியைப் பயன்படுத்துவதில் திறமையானவர். அவர் மல்யுத்த போட்டியில் அவரை எதிர்த்த "கிளாரிஸ் க்ரோவ் பாய்ஸ்" என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற குற்ற பின்புலமுள்ளவர்களின் தலைவனுடன் மோதி வென்ற பிறகு அவர் வலிமை மற்றும் துணிச்சலுக்கான புகழ் பெற்றார்.
திருமண வாழ்க்கை
லிங்கன் 1835 வாக்கில் நியூ சேலத்(New Salem)திற்கு சென்ற இடத்தில் அவருக்கு முதல் காதல் ஆர்வம் ஆன் ரூட்லெட்ஜ் என்பருடன் ஏற்பட்டு பின்னர் முறையான திருமணம் நடைபெறவில்லை. அதற்குள் அந்த பெண் 1835 ஆகஸ்ட் 25 ஆம் தேதி டைபாய்டு காய்ச்சலில் இறந்து விடுகிறார். பிறகு 1836 இல் ஓவன்ஸ் என்பவரை மல்யுத்த போட்டிக்கு சென்ற இடத்தில் பார்த்து அவளுக்கு ஒரு கடிதத்தை லிங்கன் எழுதினார் கடைசி வரை அவள் பதில் அளிக்கவில்லை.
1839 இல், லிங்கன் இல்லினாய்ஸின் ஸ்பிரிங்ஃபீல்டில் மேரி டோட்டை சந்தித்தார், பின்னர் அவருடன் நவம்பர் 4, 1842 அன்று திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தது. லிங்கன் ஒரு பாசமுள்ள கணவராகவும் மற்றும் நான்கு மகன்களின் தந்தையும் ஆவார், இருப்பினும் அவரது பணி தொடர்ந்து அவரை வீட்டை விட்டு விலக்கி வைத்தது.
முதிர்ச்சியுடன் வாழ்ந்த ஒரே குழந்தை மூத்தவர், ராபர்ட் டோட் லிங்கன், 1843 இல் பிறந்தார், இரண்டாவது எட்வர்ட் பேக்கர் லிங்கன் (எடி), 1846 இல் பிறந்தார், பிறகு காசநோயால் பிப்ரவரி 1, 1850 இல் இறந்தார். மூன்றாவது மகன், "வில்லி" லிங்கன் டிசம்பர் 21, 1850 இல் பிறந்தார், பிப்ரவரி 20, 1862 அன்று வெள்ளை மாளிகையில் காய்ச்சலால் இறந்தார். கடைசியாக தாமஸ் "டாட்" லிங்கன், ஏப்ரல் 4, 1853 இல் பிறந்தார், ஆனால் ஜூலை 16, 1871 இல் 18 வயதில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார். லிங்கன் "குழந்தைகளை மிகவும் விரும்பினார்".
ஆரம்ப கால வேலைகள்
தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார்.பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார், அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப் படுத்தப் படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில் (black hawk war) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது.
அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்குரைஞர் ஆனார். 1847 தொடக்கம் 1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார்.
அரசியல் பணிகள்
அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
அமெரிக்க தேசத்தின் வரலாறு, அமெரிக்க அரசியல், அன்றைய அமெரிக்க நிலைமை, பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம், வெள்ளையர் – கறுப்பர் என்ற பாகுபாடு, தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854 இல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது!", "என நக்கலாக சொல்ல", அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும். "என்றார் அமைதியாக".
அடிமை முறை ஒழிப்பு
பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862 இல் ”அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர், அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது” என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர்.
லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்" (emancipation proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும், விடுதலை பிரகடனத்தை வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது. அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது.
அமெரிக்காவின் தெற்கு மாநிலங்கள் விவசாயத்தை நம்பி இருந்ததால் பொருளியல் வளர்ச்சிக்கு அடிமைகள் தேவை என்று கூறின. மேற்கு மாநிலங்களோ தொழிலியல் பகுதிகளாக இருந்ததனால் தங்களுக்கு அடிமைகள் தேவை இல்லை என்று கருதினர். இவை இரண்டுக்கும் காரணமாக இருந்த கருத்து வேறுபாடு உள்நாட்டு கலகமாக வெடித்தன. அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் கலவரங்கள் ஏற்பட்டன. அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின. அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்களை விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். அடிமைத்தளையை அறுத்தெறியவும் அமெரிக்காவை ஒன்றுபடுத்தவும் போர் அவசியம் என்று துணிந்தார்.உள்நாட்டுப்போர் மூண்டது. இந்த அடிமை வாழ்வை ஒழித்திட ஜனாதிபதி லிங்கன் தென் மாநிலத்து அமெரிக்கரோடு தவிர்க்க முடியாத உள்நாட்டுப்போரில் இறங்கி சுமார் நான்கு ஆண்டுகள் போராட வேண்டியதாயிற்று.
4 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப்போரில் தென்மாநிலங்கள் தோற்கடிக்கப்பட்டன. லிங்கனின் உயரிய சிந்தனைக்கு வெற்றி கிடைத்தது. வடபுறத்து மாநிலங்களும் தென் புறத்து மாநிலங்களும் புரிந்த அந்த உள்நாட்டுப் போரில் ஆபிரகாம் லிங்கனின் வடபுறத்து மக்கள் வெற்றி பெற்றனர். ஜனவரி 1865 இல் அமெரிக்காவில் அடிமைத்தனத்தை ஒட்டுமொத்தமாக ஒழிக்க வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
லிங்கனின் மக்களாட்சி தத்துவம்
1863 இல் லிங்கன் ஆற்றிய கெட்டிச்பெர்க் பேருரையில் (Gettysburg speech) "விடுதலை உணர்ச்சி மிக்க ஐக்கிய அமெரிக்காவை பாதுகாப்பதற்கே இந்த உள்நாட்டுப்போர் நடத்தப்படுகிறது”. “எல்லா மாந்தரும் சமத்துவ நிலையில் படைக்கப்பட்டவர்கள்”, எனும் உன்னத வாசகம் மேற்கொள்ளப்படுகிறது. "மக்களுக்காக அரசாங்கம், மக்களுடைய அரசாங்கம், மக்களால் ஆளப்படும் அரசாங்கம் என்னும் வாக்கு மொழிகள் அழிந்து போகாது". எனக் குறிப்பிட்டார். “மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி” என்பது ஆபிரகாம் லிங்கனின் மிகப் புகழ்பெற்ற மக்களாட்சி குறித்த விளக்கம் ஆகும். லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.
இரண்டாம் தடவையாக ஜனாதிபதி
1864 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 4 வாக்குகள் மிகையாக பெற்று இரண்டாம் தடவை ஜனாதிபதியாக லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் போர் நின்றது. உள்நாட்டில் போரில் வெற்றி பெற்ற தென்பகுதி மாநிலங்களில் போர் தளபதி ராபர்ட் லீ (Robert Lee) வடபகுதி இராணுவ தளபதி கிரான்ட் (general grant) முன்பு சரணடைந்த அதே ஆண்டு இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபதிராக தேர்வுபெற்றார் லிங்கன்.
ஆபிரகாம் லிங்கனின் படுகொலை
1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி பெரிய வெள்ளிக்கிழமை அன்று மாலை ஃபோர்டு தியோட்டரில் ஜனாதிபதிக்கான பூத்தில் தனது மனைவி மற்றும் குடுபத்தாருடன் அமர்ந்து "Our American Cousin" என்ற நாடகத்தை லிங்கன் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் (John Wilkes Booth) என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை பின்னால் இருந்து தலையை குறி வைத்து சுட்டு விட்டு தப்பி ஒடினான். அதிபர் ஆபிரகாம் லிங்கன் மயங்கி கீழே சரிந்தார். பின்னர் கோமா நிலையிலேயே இருந்து மறுநாள் 15ஆம் தேதி காலை 7.22 மணிக்கு மரணமடைந்தார். அப்பொழுது அவருக்கு வயது 56.
ஆபிரகாம் லிங்கனின் உடல் சிறப்பு ரயில் (Lincoln Special funeral train) மூலம் வாஷிங்டன் டி.சி.யில் இருந்து இல்லினாய்ஸின் ஸ்பிரிங்ஃபீல்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. வழி யெங்கும் உள்ள ஊர்களில் நிறுத்தி மக்கள் அஞ்சலி செலுத்திய பின் கொண்டு செல்லப்பட்டு ஸ்பிரிங்ஃபீல்டில் அடக்கம் செய்யப்பட்டது.
வரலாற்றுப் புகழ்
அமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது.
லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் "ஒரு தேசியத் தியாகி" என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக மதிக்கப்படுகிறார்.