Home


உம்மு அய்மன் ரழியல்லாஹு அன்ஹா

பரகா பின்த் தஃலபா அவர்கள் பொதுவாக உம்மு அய்மன் என்று அறியப் படுகிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெற்றோர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்துல் முத்தலிப் மற்றும் ஆமினா பின்த் வஹப் ஆகியோரின் நீக்ரோ அடிமை தஃலபாவின் மகளாவார்.  அன்னை ஆமினா அவர்கள் மரணமடைந்த பின்னர் நபி(ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்கள் நபி (ஸல்) அவர்களை வளர்த்ததில் இவருக்கும் பங்கு உண்டு.  நபி (ஸல்) அவர்கள் இவரைத் தம் தாயைப் போன்றே கருதினார். இஸ்லாத்தின் தொடக்க காலத்திலேயே இஸ்லாத்தை தழுவியவர்களில் இவர்களும் ஒருவர். இவர் உஹுத் மற்றும் கைபர் போர்களில் கலந்து மிக சிறப்பாக போர் புரிந்து சேவையாற்றி யுள்ளார்கள்.

ஆரம்பகால வாழ்வு

        இவரின் தந்தை தஃலபா இப்னு அம்ர் என்பவர் அபிஸீனிய நாட்டுக்காரர். இவர் மக்கா நகருக்கு எப்போது, எப்படி வந்தார்? என்பது பற்றி வரலாற்றில் தெளிவு இல்லை. ஆனால் நம்பகமான தகவல் இது தான். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பிறக்கும் முன்பு இவர் விவரம் அறியும் பருவம் உடைய சிறுமியாக இருந்தார். நபியவர்களின் தந்தை அப்துல்லாஹ் இவரைத் தத்தெடுத்து வளர்த்து வந்தார். அப்துல்லாஹ் மரணம் அடைந்த பிறகு தஃலபா அன்னை ஆமினாவிடம் பணியாளாய் இருந்து வரலானார். அண்ணல் முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த போது அன்னை ஆமினாவுக்குத் தேவையான பணிகளைச் செய்து வர இவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

யத்ரிப் பயணம்

        ஹலீமா ஸஃதியா எனும் செவிலித்தாயிடம் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் வரை வளர்ந்து வந்த நபியவர்கள் பின்னர் தம் தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். கொஞ்ச நாட்களுக்குப் பின் அன்னை ஆமினா அவர்கள் குழந்தை முஹம்மதையும் தஃலபாவின் மகள் உம்மு அய்மனையும் அழைத்துக் கொண்டு யத்ரிப்பு(மதீனாவு)க்குச் சென்றார். இது தான் யத்ரிப்பு(மதீனாவு)க்கு அண்ணல் நபி (ஸல்) அவர்களின் முதல் வருகையாகும்! அப்போது அவர்களின் வயது ஆறு அல்லது ஏழு! மதீனாவில் ஆமினா அம்மா அவர்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தில் தங்கியிருந்தார்கள். அது நபியவர்களின் பாட்டனார் அப்துல்முத்தலிப்புக்கு தாய் வழிப் பாட்டனாரின் குடும்பமாகும். அன்னை ஆமினா தம் மகனை அவரின் மாமன்மார்களிடம் காட்டி வருவதற்காக யத்ரிப் பயணம் மேற்கொண்டார். மூவரும் ஏறக்குறைய ஒருமாத காலம் தங்கியிருந்து விட்டு மக்காவுக்குத் திரும்பினார்கள்.

        திரும்பும் வழியில் ‘அப்வா’ என்னும் இடத்தில்  அன்னை ஆமினா அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்தார்கள். அன்னை ஆமினாவின் திடீர் மரணம் குழந்தை முஹம்மது (ஸல்), உம்மு அய்மன் (ரழி)ஆகியோருக்கு கடும் துயரத்தை அளித்தது. அப்போது உம்மு அய்மன் (ரழி) விவேகத்துடன் செயல்பட்டார்கள். சிறிதும் ஊக்கம் இழந்திடாமல் அன்னை ஆமினாவின் உடலை அங்கேயே அடக்கம் செய்தார்கள். பிறகு நபியவர்களை அன்போடு -பேணிக்கையாக அழைத்துக் கொண்டு சோகமே உருவாய் மக்கா நகர் வந்தடைந்தார்கள். அங்கு சிறுவர் முஹம்மதை அப்துல் முத்தலிப் தன் நெஞ்சோடு அணைத்து ஆறுதல் கூறி தன் பொறுப்பில் வளர்க்கலானார். தன் பேரக்குழந்தையைக் கண்காணித்துப் பேணி வரும்படி உம்மு அய்மனைப் பணித்தார்.

விடுதலை

        அண்ணல் நபி (ஸல்) அவர்களை இளமையில் வளர்த்ததில் இவருக்கும் பங்கு உண்டு. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரைத் தம் தாயைப் போன்றே கருதினர். பிற்காலத்தில் அவர்கள் இவரை நோக்கி “என் தாய்க்குப் பின்னர் நீரே என் தாய்” என்று நன்றியுணர்வுடன் கூறினர். மேலும் இவரே தம் குடும்பத்தில் எஞ்சிய உறுப்பினர் என்றும் கூறினர்.

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வளர்ந்து வாலிபம் அடைந்த போது சொத்துப் பங்கீட்டில் உம்மு அய்மன் (ரழி) அவர்கள் நபியவர்களின் பங்கில் வந்தார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் உம்மு அய்மனுக்கு உரிமை வழங்கினார்கள்.

திருமணம் மற்றும் குடும்பம்

        உம்மு அய்மன் (ரழி) அவர்கள் முதலில் உபைத் இப்னு ஜைத் என்பாருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார்கள். இவர் மதீனா நகரின் கஜ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு முன்பு உபைத் மதீனாவிலிருந்து மக்காவுக்கு வந்து குடியேறினார். அங்கு உம்மு அய்மனுக்கும் அவருக்கும் திருமணம் நடைபெற்றது. வரலாற்றுச் சான்றுகளிலிருந்து தெறியவருகிறது. அதாவது நபித்துவம் வழங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் உம்மு அய்மனுடன் உபைதும் இஸ்லாத்தைத் தழுவினார்.

        திருமணத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்களில் உபைத் (ரழி) அவர்கள் உம்மு அய்மனைஅழைத்துக் கொண்டு மதீனாவுக்குச் சென்று விட்டார். அங்கு தான் அவ்விருவருக்கும் அய்மன் (ரழி) எனும் குழந்தை பிறக்கிறது. அய்மன் (ரழி) பிரபலமான நபித்தோழராய்த் திகழ்ந்தார். அய்மன் (ரழி) பிறந்த பிறகு உபைத் (ரழி) அதிக காலம்  உயிர் வாழவில்லை. ஹிஜ்ரத்துக்கு பல ஆண்டுகள் முன்னரே மதீனாவிலேயே உபைத் (ரழி) மரணம் அடைந்து விடுகின்றார்கள்.

உபைத் (ரழி) அவர்கள் மரணம் அடைந்த பிறகு உம்மு அய்மன் (ரழி) அவர்கள், பால்குடியை மறந்து விட்டிருந்த தம் மகன் அய்மனைத் தூக்கிக்கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அண்ணலார், உம்மு அய்மனை அன்புடன் வரவேற்றார்கள்.

        இவரின் கணவர் உபைத்(ரழி) இறந்தபின், “எவரேனும் சுவர்க்கத்துப் பெண்ணை மணந்து கொள்ள விரும்பின் அவர் உம்மு அய்மனை மணந்து கொள்வாராக!” என்றனர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள்.

        அப்பொழுது உம்மு அய்மனின் வயது ஐம்பதுக்கும் மேல். பொலிவான புற அழகும் அவரிடம் அமைந்திருக்கவில்லை. நபியவர்களின் முன்னறிவிப்பையும் உம்மு அய்மனின் அகத்தையும் கருத்தில் கொண்டு முன்வந்தார் ஸைது இப்னு ஹாரிஸா. உம்மு அய்மன்(ரழி) அவர்கள் ஜைது இப்னு ஹாரிஸாவை மணமுடித்து உஸாமா என்ற மகனை ஈன்றெடுத்தார்.

இரு ஹிஜ்ரத்களின் சிறப்பு

        நிலமை கட்டுக்கடங்காமல் போனபோது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கினார்கள். நபித்துவ 5 ஆம்ஆண்டில் இது நடந்தது. இந்த ஆண்டு 11 ஆண்களும் 4 பெண்களும் ஹிஜ்ரத்மேற்கொண்டனர். பிறகு நபித்துவத்தின் 6 ஆம் ஆண்டு 83 ஆண்கள், 13 பெண்கள்கொண்ட பெருங்கூட்டம் ஒன்று தாய்நாடு துறந்திட இசைந்து அபிசீனியா சென்றது. அவர்களைத் தவிர இன்னும் அதிகமான முஸ்லிம்கள் தனிப்பட்ட முறையில் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்தார்கள். உம்மு அய்மன் (ரழி) அவர்கள் இத்தகைய முஹாஜிர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார்கள்.

உம்மு அய்மன் ஹிஜ்ரத் செய்த காலம் எது என்பதை வரலாற்றாசிரியர்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆயினும் பெரும்பாலோரின் கருத்து இது தான். நபித்துவத்தின் 6 ஆம் ஆண்டுக்குப் பிறகு அபிசீனியாவுக்குச் சென்று அங்கே பல ஆண்டுகள் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்துவிட்டார்கள் எனும் செய்தி கிடைத்த போது உம்மு அய்மன் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். இவ்வாறு அவர்களுக்கு இரு ஹிஜ்ரத்களின் சிறப்பும் கிட்டியது.

போரில் பங்கேற்றல்

        உம்மு அய்மன் (ரழி) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது பத்ருப் போர் நடந்து முடிந்திருந்தது. பிறகு ஹிஜ்ரி 3ஆம் ஆண்டில் உஹதுப் போர் நடந்த போது உம்முஅய்மன் (ரழி) ஓரளவு முதிய வயதை அடைந்து விட்டிருந்தார்கள். ஆயினும் இறைவழியில் புனிதப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வீட்டில் உட்கார்ந்திருக்க அவர்களின் உள்ளம் விரும்பவில்லை. எனவே போர் வீரர்களுக்கு தண்ணீர் புகட்டுவதிலும் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் பிற பெண்களோடு சேர்ந்து ஈடுபட்டார்கள்.

        உஹுத் போரில் முஸ்லிம்களில் சிலர் தோற்று மதீனாவுக்கு ஓடுவதைப் பார்த்த அவர், அவர்களின் முகத்தில் மண்ணை வாரி இறைத்தார். மேலும், அவர்களில் சிலரைப் பார்த்து “இந்தா! ஆடை நெய்யும் ராட்டையை வாங்கிக் கொள். வாளை என்னிடம் கொடு!” என்று ரோஷமூட்டினார். பின்பு, போர்க்களம் வந்து காயமடைந்தவர்களுக்குத் தண்ணீர் புகட்டினார். அது சமயம் ‘ஹிப்பான் இப்னு அரக்கா’ எனும் அரக்கன் ஒருவன் அப்பெண்மணியை நோக்கி அம்பெறிந்தான். அவர்கள் கீழே விழுவே ஆடை விலகியது. அந்த மூடன் இதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான். இக்காட்சி நபி (ஸல்) அவர்களை சிரமத்திற்குள்ளாக்கியது. எனவே, கூர்மையற்ற ஓர் அம்பை ஸஅது இப்னு அபீவக்காஸிடம் கொடுத்து “ஸஅதே! இந்த அம்பை அவனை நோக்கி எறி!” என்றார்கள். ஸஅது (ரழி) அவர்கள் அந்த அம்பை அவனை நோக்கி எறிய, அது அவனது கழுத்தைத் தாக்கியது. அவன் மல்லாந்து விழ, அவனது ஆடையும் அகன்றது. அதைப் பார்த்து நபியவர்கள் கடைவாய் பல் தெரியுமளவுக்கு சிரித்துவிட்டு, “அப்பெண்மணிக்காக ஸஅது பழி தீர்த்து விட்டார். அல்லாஹ் ஸஅதின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்” என்று கூறினார்கள். (அஸ்ஸீரத்துல் ஹல்பிய்யா)

        உஹுதுக்குப் பிறகு ஹிஜ்ரி 7ஆம் ஆண்டு முஹர்ரம் மாதத்தில் நடந்த கைபர் யுத்தத்திலும் உம்மு அய்மன் (ரழி) கலந்து கொண்டு இதே பணிகளை ஆற்றினார்கள்.

அண்ணலார் மரணம் அடைந்தபோது.

        உம்மு அய்மன் (ரழி) அவர்கள் அண்ணல் நபியின் மரணத்தால் கடும் துயரத்திற்குஆளானார்கள். மனம் நொந்து அழுது அழுது கடுமையான பலவீனம் ஏற்பட்ட பிறகும்அவர்களின் அழுகை நிற்கவே இல்லை! இதனைக் கேள்விப்பட்டதும் அபூபக்ர் (ரழி)அவர்களும் உமர் (ரழி) அவர்களும் வந்து உம்மு அய்மனைத் தேற்றினார்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் இவ்வாறு கூறினார்கள். ‘ஏன் இவ்வளவுதூரம் கவலைப்படுகின்றீர்கள்! நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடத்தில் மிகச்சிறந்த சன்மானங்கள் உள்ளன.” அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள் ‘இது தான் எனக்குத் தெரியுமே! நான் அழுது கொண்டிருப்பது இறைச் செய்தியின் வருகை (வஹீ) நின்று விட்டதே என்பதற்காகத்தான்!” என்று பதில் அளித்தார்கள். இதனைக்கேட்டதும் அவர்கள் இருவரின் நெஞ்சமும் இளகியது. அவர்களும் அழலாயினர். –(ஸஹீஹ் முஸ்லிம்.)

        உமர் (ரழி) அவர்கள் இறப்பெய்தியதை அறிந்ததும் இவர், “இஸ்லாம் பலவீனமடைந்து விட்டதே” என்று கூறி அழுதார்.

இறப்பு

        இவரிடமிருந்து அனஸ் இப்னு மாலிக் (ரழி), ஹனஸ் இப்னு அப்துல்லாஹ் (ரஹ்) மற்றும் அபூயஜீத் மதனி (ரஹ்) ஆகியோர், பல ஹதீதுகளைக் கேட்டறிந்துள்ளனர். இவர் உஸ்மான் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது இறப்பெய்தினார்.

சிறப்பு

        ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களின் திருச் சமூகம் வந்தார். அவருடைய முகம் மலர்ந்தும் வியக்கத்தக்க முறையில் ஒளி வீசிக் கொண்டும் இருந்தது! வயது முதிர்ந்த அப்பெண்ணைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் ‘தாயே, என் அன்புத் தாயே!” என்று அழைத்து, கண்ணியத்தோடு எழுந்து வரவேற்று -மிக்க மரியாதையோடு அவரை அமரச் செய்தார்கள்.

தாயே, இன்று இவ்வளவு சிரமம் எடுத்து இங்கு வரவேண்டிய காரணம் என்ன? என்று வினவினார்கள்.

இறைத்தூதரே, எனக்கு ஒரு ஒட்டகம் தேவைப்படுகின்றது. அதனைத் தங்களிடம் பெற்றுச் செல்லலாம் என்றுதான் வந்தேன்.” என்று அப்பெண்மணி பதிலளித்தார்.

நபி (ஸல்):- ஒட்டகத்தை தாங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?

பெண்மணி:- இறைத்தூதரே, பயணம் செய்வதற்கேற்ற கோவேறு கழுதையோ, ஒட்டகமோ எதுவும் இப்போது என்னிடம் இல்லை. என்றைக்கேனும் தொலைதூரப் பயணம் செய்யவேண்டியதாயின் பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.

நபி (ஸல்) அவர்கள் புன்னகை புரிந்தவாறு கூறினார்கள். ‘அப்படியானால் ஓர் ஒட்டகக் குட்டியை வரவழைத்துத் தருகிறேன்”

ஐய்யய்யோ! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம் ஆகட்டும்! ஒட்டகக்குட்டி எனக்கு எதற்கு? எனக்கு ஒரு ஒட்டகம்தான் தேவைப்படுகிறது.”

நான் ஒட்டகக் குட்டியைத்தான் தருவேன்.

ஒட்டகக் குட்டி என்னுடைய தேவையை நிறைவு செய்யாதே! என்னுடைய சுமைகளை சுமந்து செல்ல அதனால் இயலாதே! எனக்கு ஒட்டகத்தைத் தாருங்கள்.”

தங்களுக்கு ஒட்டகக் குட்டிதான் கிடைக்கும். அதில்தான் உங்களை நான் பயணம் செய்ய வைப்பேன்.

இவ்வாறு கூறியபடி நபி (ஸல்) அவர்கள் ஒரு பணியாளிடம் சாடை செய்தார்கள். அவர்கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய ஒட்டகத்தை கொண்டு வந்து அதன் கடிவாளத்தை அந்தப்பெண்ணிடம் கொடுத்தார்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘தாயே. பாருங்கள்! அது ஒட்டகத்தின் குட்டிதானா? அல்லது வேறெதுவுமா?

இப்போது அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களின் இந்த அருமையான நகைச்சுவையைப்புரிந்து கொண்டு தம்மை அறியாமலேயே சிரிக்கலானார்கள். நபியவர்களுக்காக துஆசெய்தார்கள். அங்கு இதனைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மகிழ்ச்சிஅடைந்தார்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இந்த அளவுக்கு கண்ணியம் அளித்து வந்த – இடையிடையே இவ்வாறு நகைச்சுவை செய்யும் அளவு உறவுமுறை கொண்டிருந்த பெண்மணியின் பெயர் தான் உம்மு அய்மன் (ரழி)


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...