உபைதா இப்னு ஹாரிஸ் ரழியல்லாஹ் அன்ஹு
உபைதா இப்னு ஹாரிஸ் ரழியல்லாஹ் அன்ஹு (கி.பி.562 - கி.பி.624) அவர்களின் தந்தை ஹாரிஸ் அப்துல் முத்தலிபின் மூத்த மகன். இவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூத்த சகோதரர் (பெரியதந்தையின் மகன்) மற்றும் குறைஷி குல ஸஹாபியுமாவார். இவர் பத்ரு ஸஹாபாவாகவும், இஸ்லாத்தை பாதுகாப்பதற்காக போர்க்களத்தில் அதாவது பத்ரு போரில் ஷஹீதான முதல் ஸஹாபியுமாவார்.
பிறப்பு மற்றும் ஆரம்பகால வாழ்வு
ஹாரிஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மகன் உபைதா (ரழி) அவர்கள். இவரது தாயார் பெயர் சுகைலா பின்த் குஸாய் இப்னு ஹுவேரித், தாகிஃப் இனத்தைச் சேர்ந்தவர். கி.பி.562இல் உபைதா (ரழி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். உபைதா (ரழி) அவர்களுக்கு அவரது வயதை காட்டிலும் இருபது வயது இளைய சகோதரர்கள் இருவர் இருந்தனர் அவர்கள் அல்-துஃபைல் மற்றும் அல்-ஹுசைன் ஆவார். உபைதா (ரழி) அவர்களின் தோற்றம் "நடுத்தர, சுறுசுறுப்பான, அழகான முகத்துடன்" விவரிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் ஆரம்ப காலங்களிலேயே இவர் இஸ்லாத்தை தழுவியவர் ஆவார். கி.பி.614 இல் நபி (ஸல்) அவர்கள் அல்-அர்கமின் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பே உபைதா (ரழி) அவர்கள் முஸ்லிமாக மாறியிருந்தார்கள். அபூபக்ர் (ரழி) அவர்களின் அழைப்பின் பேரில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபர்களின் இப்னு இஷாக்கின் பட்டியல் படி இவரது பெயர் பன்னிரண்டாவது இடத்தில் உள்ளது.
மதீனா ஹிஜ்ரத் பயணம்
கி.பி.622 இல் மக்காவிலிருந்து மதீனாவுக்கான பொது ஹிஜ்ரத்தில் உபைதா இப்னு ஹாரிஸ் (ரழி) அவர்களும், அவர்களது இரு சகோதரர்களும், மற்றும் இளம் உறவினர் மிஸ்தா இப்னு உத்ததா அவர்களுடனும் சேர்ந்து ஒரு குழுவாக ஹிஜ்ரத் செய்தனர். மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் உபைதா (ரழி) அவர்களுக்கு சில இடங்களை ஒதுக்கி கொடுக்கும் வரை இவர்கள் குபாவில் அப்துல்லா இப்னு சலாமா அவர்களுடன் தங்கியிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் உபைதா(ரழி) அவர்களுக்கு இஸ்லாத்தில் இரண்டு சகோதரர்களைக் கொடுத்தார்: அபூபக்ர்(ரழி) அவர்களால் விடுதலையான பிலால் இப்னு ரபாஹ் மற்றும் உமைர் இப்னு ஹுமாம் என்ற அன்சார் ஆவார்.
குடும்பம் மற்றும் குழந்தைகள்
ஜைனப் பின்த் குஜைமா (ரழி) அவர்கள் முதன் முதலில் துஃபைல் இப்னு ஹாரிஸ் என்பவரை மணந்து, அவர் சிறிது காலத்திலேயே மரணமடைந்ததால் அவரது சகோதர்ரான உபைதா இப்னு ஹாரிஸ் (ரழி) அவர்களை திருமணம் செய்து அவர்களுக்கு பத்து குழந்தைகளுடன் இறைவிசுவாசிகளாக மதீனாவில் வாழ்ந்து வந்தார்கள். குழந்தைகள் முஆவியா, ஆவ்ன், முன்ஃகித், அல்-ஹாரிஸ், இப்ராஹீம், ரப்தா, கதீஜா, சுஹைக்லா, ஆமினா மற்றும் சஃபியா ஆவார்கள்.
இராணுவ படைப் பிரிவுகளின் பயணம்
ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் ‘ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் அப்துல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் ‘பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.
காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத் தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.
இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல்முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.
பத்ரு போர்
குறைஷிகளின் மிக தேர்ச்சி பெற்ற குதிரை வீரர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படைக்கு முன்னால் வந்தனர். அவர்கள் உத்பா இப்னு ரபிஆ, ஷைபா இப்னு ரபிஆ, வலீது இப்னு உத்பாவாகும். இவர்களை எதிர்க்க மூன்று அன்சாரி வாலிபர்களான அவ்ஃப் இப்னு ஹாரிஸ், முஅவ்வித் இப்னு ஹாரிஸ், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரழி) ஆகியோர் களத்தில் குதித்தனர். இம் மூவடரிமும் அந்த எதிரிகள் ‘‘நீங்கள் யார்?'' என்றனர். அதற்கு அவர்கள் ‘‘நாங்கள் மதீனாவாசிகள்'' என்றனர். அதற்கு அந்த எதிரிகள், ‘‘சங்கைக்குரிய நீங்கள் எங்களுக்கு நிகரானவர்கள் தான். ஆனால் உங்களிடம் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் நாடி வந்திருப்பதெல்லாம் எங்கள் தந்தையுடைய சகோதரர்களின் மக்களைத்தான் என்றனர். பின்பு அவர்களில் ஒருவன் ‘‘முஹம்மதே! எங்களது இனத்தில் எங்களுக்கு நிகரானவரை எங்களிடம் அனுப்பும்!'' என்று கத்தினான். நபி (ஸல்) அவர்கள். ‘‘உபைதா இப்னு ஹாரிஸே! எழுந்து செல்லுங்கள்! ஹம்ஜாவே! எழுந்து செல்லுங்கள்! அலீயே! எழுந்து செல்லுங்கள்!'' என்றார்கள்.
இம்மூவரும் அந்த எதிரிகளுக்கருகில் செல்ல, அவர்கள் ‘‘நீங்கள் யார்?'' என்றனர். இவர்கள் தங்களைப் பற்றி சொன்னதும் ‘‘சங்கைமிக்க நீங்கள் எங்களுக்குப் பொருத்தமானவர்களே'' என்றனர். இம்மூவரில் வயதில் மூத்தவரான உபைதா (ரழி) எதிரி உத்பாவுடனும், ஹம்ஜா (ரழி) எதிரி ஷைபாவுடனும், அலீ (ரழி)எதிரி வலீதுடனும் மோதினர். (இப்னு ஹிஷாம்)
ஆனால், ஹம்ஜாவும் அலீயும் தங்களது எதிரிகளுக்கு அவகாசம் கொடுக்காமல் அடுத்த வினாடியே அவ்விருவரையும் கொன்றுவிட்டனர். ஆனால், உபைதாவும் உத்பாவும் சண்டை செய்து கொண்டதில் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டது. உபைதா (ரழி) அவர்களின் கால் வெட்டுண்டு விழுந்தது. இதைக் கண்ட ஹம்ஜா (ரழி) அவர்களும் அலீ (ரழி) அவர்களும் உத்பா மீது பாய்ந்து அவனை வெட்டிக் கொன்றார்கள். அதற்குப் பிறகு உபைதாவை சுமந்து கொண்டு படைக்குத் திரும்பினர்.
பத்ரு போரின் முதல் ஷஹீத்
உபைதா (ரழி) அவர்கள் இதனால் நோய்வாய்ப்பட்டு இப்போருக்குப் பின் 4 அல்லது 5 நாட்கள் கழித்து மதீனாவிற்கு செல்லும் வழியில் கி.பி. 624 இல் ‘ஸஃப்ரா' என்ற இடத்தில் இறந்தார்கள். அவர்களது உடல் ஸஃப்ரா என்ற இடத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இவரது மரணத்தைத் தொடர்ந்து, இவரது விதவை மணைவி ஜைனப் பின்த் குஜைமா (ரழி) அவர்களின் ஏழ்மையால் அப்துல்லா இப்னு ஜஹ்ஸ் (ரழி) என்ற நபித்தோழருக்கு மணமுடித்துக் கொடுக்கப் பட்டிருந்தார்கள். உஹதுப் போர்க்களத்தில் இந்த அருமை நபித்தோழர் தனது இன்னுயிரை இஸ்லாத்திற்காக தியாகம் செய்த பின்பு, ஜைனப் பின்த் குஜைமா (ரழி) அவர்கள் விதவையாக தனி மரமானார்கள். பின்னர் கி.பி.625இல் நபி (ஸல்) அவர்கள் அன்னை ஜைனப் பின்த் குஜைமா (ரழி) அவர்களை திருமணம் செய்து கொண்டார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...