கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத்
முஹம்மது இஸ்மாயீல் சாஹிப்
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் (கி.பி1896 - கி.பி.1972) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான இவர், ஆங்கில ஏகாத்தியத்தின் ஆதிக்கப் பிடியிலிருந்து தங்க நிகர்த் தாய்த் திரு நாட்டை மீட்டெடுத்திடும் விடுதலைப் போராட்டத்தின் சிங்கநிகர் வீரராகத் தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். சுதந்திரச் சுடர் பரப்பிய சரித்திரச் சாதனையாளராக வரலாற்று நாயகராக ஏற்றம் பெற்று அனைத்து மக்களாலும் போற்றப்படும் தன்னிகரில்லா தனிப் பெரும் தலைவர் என்பதை நாடு அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. அனைவராலும் அன்புடன் காயிதே மில்லத் என அழைக்கபடும் இந்த உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.
ஆரம்ப கால வாழ்வு
திருநெல்வேலி பேட்டையில் கி.பி 1896 ஆம் ஆண்டு ஜுன் திங்கள் ஐந்தாம் நாள் பிறந்தார். அன்று ஹஜ்ஜுப் பெருநாளாய் இருந்ததால் இவர் தந்தை மியாகான் ராவுத்தர், இஸ்மாயீல் (அலை) அவர்கள் நினைவாக முஹம்மது இஸ்மாயீல் என இவருக்குப் பெயரிட்டார். இவரின் தந்தை ஒரு மெளலவி; அரபி, ஃபார்ஸி, உர்தூ, தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றில் புலமை பெற்றவர். அவர் திருவாங்கூர் மன்னர் களுக்குத் துணி விற்பனை செய்து வந்தார். இவரின் பூட்டனார் கொடி கட்டிப் பறந்த காட்டுவா ராவுத்தர் ஆவார்.
இவரையும், இவரின் தமயனார் ஒருவரையும், தம்பிகள் இருவரையும், சகோதரி ஒருவரையும் விட்டு விட்டு இவரின் தந்தை இறக்க, இவரின் அன்னை முஹ்யித்தீன் ஃபாத்திமாவே இவரை மார்க்கக் கல்வி பயில வைத்ததோடு பின்னர், திருநெல்வேலியிலுள்ள எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், அதன் பின்னர்ச் சென்னையிலுள்ள கிறிஸ்துவக் கல்லூரியிலும் பயில வைத்தார். கல்லூரியில் பயிலும் பொழுது இவரே முதல் மாணவராய் விளங்கினார்.
காந்திஜியின் அழைப்பு
1920 இல் இவர் பி.ஏ. பட்டம் பெற வேண்டிய வேளையில், காந்திஜி, பள்ளிகளை விட்டு வெளியேறுமாறு மாணவர்களுக்கு விடுத்த அழைப்பை ஏற்று இவர் கல்லூரியை விட்டு வெளியேறினார். காந்திஜி தொடங்கிய சுதந்திரப் போராட்டத்தில் நாடு தழுவிய அளவில் 1921-ம் ஆண்டுல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று தியாகச் சீலராகத் திகழ்ந்தார்.
வெள்ளையர் ஆட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட சைமன் கமிஷனை நாடு புறக்கணித்து எதிர்த்தது. அந்த கமிஷன் சென்னை வந்த போது மக்கள் சக்தியைத் திரட்டி கரத்திலே கருப்புக் கொடி ஏந்தி “சைமன் கமிஷனே திரும்பிப் போ” என முழங்கி தென்னகத்தின் குறிப்பாக சென்னை மாகாணத்தின் எதிர்ப்பு உணர்ச்சியை எண்பித்துக் காட்டியதன் மூலம் காயிதெ மில்லத் அவர்கள் சுதந்திரப் போர்க்களத்தின் எழுச்சிமிகு தளபதியானார்.
நாட்டுக்குப் பூரண சுதந்திரமே வேண்டும்
இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கிடைத்தால் போதுமானது என்று ஒரு கூட்டத்தார் அவசரப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்த போது, நாட்டுக்குப் பூரண சுதந்திரமே வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்ட தென்னகத்தின் ஆதரவைத் திரட்டிக் காட்டிட - திருநெல்வேலி பேட்டையில் பிரபல தேசிய தலைவர்களில் ஒருவரான திருவாளர் சீனிவாச அய்யங்காரோடு இணைந்து காங்கிரஸ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி, பூரண சுதந்திரத் தீர்மானம் நிறைவேறச் செய்த பெருமை காயிதெ மில்லத் அவர்களையே சாரும்.
திருமண வாழ்வு
இவர் தம் இளவல் அஹ்மது இப்ராஹீமுடன் சேர்ந்து பேட்டையில் “பால்ய முஸ்லிம் சங்கம்” என்பதனை நிருவினார். பெரிய தோல் வணிக நிலையமான ஜமால் முஹ்யித்தீன் நிறுவனத்தில் சேர்ந்து தம் வாழ்வைத் தொடங்கிய இவர், விரைவில் அந்த நிறுவனத்தின் நிருவாகியாயும், பங்காளராயும் ஆனார். அந்த நிறுவனத்தின் பங்காளர்களுள் ஒருவரான ஜமால் முஹம்மது அப்துல்லாஹ்வின் மகளையும் இவர் திருமணம் செய்து கொண்டார்.
முஸ்லிம் லீக் தலைவர்
தொடக்கத்தில் காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் முஸ்லிம் லீகில் சேர்ந்து தம் திறமையினால் 1945-ல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் இணைந்த சென்னை மாநில முஸ்லிம் லீகின் தலைவரானார். 1946 முதல் 1952 ஆம் ஆண்டு வரை மதராஸ் சென்னை மாகாண சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியினர் செயல்பாட்டிற்குச் சிறந்த முன்னுதாரணமாக விளங்கிப் பாராட்டுக்குரியவரானார்.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிடும் அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினராக அங்கம் பெற்றிருந்த காயிதெ மில்லத் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் அவர்களால் அவையில் வைக்கப்பட்ட சட்ட வடிவுக்குப் பலனும், பயனும் தரவல்ல திருத்தங்கள் பல வழங்கி, இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலிவும், பொலிவும் பெற்றிட துணை புரிந்தார்.
தமிழ் தேசிய மொழியாக இருக்கத் தகுதியானது
இந்தியத் திருநாட்டின் பொது மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் இருக்கத்தக்க மொழி எது? என அரசியல் நிர்ணய சபையில் விவாதம் எழுந்த போது, இலக்கணச் செறிவும், இலக்கிய வளமும், தேனமுதச் சொல் இனிமையும், தொன்மையும் வாய்ந்த தமிழ் மொழி தேசிய மொழியாக இருக்கத் தகுதி வாய்ந்தது என ஆணித்தர மாகவும், அழுத்தம் திருத்தமாகவும் வலியுறுத்தியும் பேசியது காயிதெ மில்லத் அவர்கள் மட்டுமே என்பது பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1947 டிசம்பரில் கராச்சியில் கூடிய அகில இந்திய முஸ்லிம் லீக், ‘பாக்கிஸ்தான் முஸ்லிம் லீக்,’ ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக்’ எனப் பிரிந்தது. பெரும் தலைவர்களெல்லாம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பதவியை வகிக்கத் தயங்கிய வேளையில் அதனைத் துணிவோடு ஏற்றார் இவர்.
இச்சமயத்தில் இந்தியக் கவர்னர்-ஜெனரலாய் இருந்த மெளண்ட்பேட்டன் பிரபு இவரை அழைத்து இந்தியாவின் அப்போதய சூழ் நிலையில் முஸ்லிம் லீகைத் தொடர்ந்து நடத்துவது பற்றிக் காங்கிரஸ் தலைவர்கள் கொண்டிருந்த கவலையைத் தெரிவித்து அம்முயற்சியைக் கைவிட்டு விடுமாறு கூறிய பொழுது, “தங்களுக்கு ஒரு சபை இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு சமுதாயத்துடையதேயன்றி, என்னுடையதல்ல” என்று வினயமாய்ப் பதிலிறுத்துவிட்டு வந்தார் இவர்.
1948 மார்ச்சில் கூடிய முஸ்லிம் லீக் கெளன்ஸில் முஸ்லிம் லீகைத் தொடர்ந்து நடத்துவதென முடிவு செய்தது. இக்காலை இந்தியப் பிரதமர் நேரு இவரை அழைத்து முஸ்லிம் லீகைக் கலைத்து விடுமாறு கூறிய பொழுது, “பண்டிட்ஜீ! முஸ்லிம் லீகைப் புணருத்தாரணம் செய்து தொடர்ந்து நடத்தவே நான் அதிகாரம் வழங்கப் பட்டுள்ளேனேயன்றி அதைக் கலைத்துவிட அதிகாரம் வழங்கப் பெறவில்லையே” என்று மரியாதையுடன் பதிலுரைத்தார் இவர்.
முஸ்லிம் லீகைக் கலைத்துவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் 1948இல் சுஹ்ரவர்தீ கல்கத்தாவில் முஸ்லிம் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டிய பொழுது அதற்கு அவரின் அழைப்பின் மீது தென்னாட்டிலிருந்து இவரும், சீத்தி சாஹிபும் சென்று முஸ்லிம் லீக் தொடர்ந்து செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து வெற்றி கண்டனர்.
நமக்கு இறையருள் நிச்சயமாக உண்டு
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையிலும் இவர் முஸ்லிம் லீகின் தலைமைப் பதவியைத் தாங்கி அதனை வளர்த்தாரென்ரால் அதற்கு மூல காரணம், “நாம் சரியான வழியில் இருக்கிறோம். நமக்கு இறையருள் நிச்சயமாக உண்டு. நம்மை எந்தச் சக்தியாலும் எதுவும் செய்ய இயலாது’ என்று இவருக்கு இருந்த நம்பிக்கைதான்.
பண்டித நேரு சென்னை வரும் பொழுதெல்லாம் முஸ்லிம் லீகைச் சாடாது விடுவதில்லை. அதனைச் ‘செத்த குதிரை’ என்றும், ‘பொருட்காட்சி சாலையில் வைக்க வேண்டிய பொருள்’ என்றும் வருணித்து அதனை எல்லா வகையிலும் எதிர்க்கப் போவதாக முழங்குவார் அவர். ஆனால், அவருடைய இந்த பயமுறுத்தல் களெல்லாம் இவரது இறை நம்பிக்கையின் முன் சக்தி இழந்தன.
அமைதியான முறையில் பதில்
ஒரு கூட்டத்தில் வைத்து இவர் இதற்குப் பதில் கூறும் பொழுது, “தானே இறைவன் எனக் கூறிய நம்ரூதின் முன் இப்ராஹீம் (அலை) என்ற முஸ்லிம் அஞ்சி நடுங்கவில்லை; தானே இறைவன் என்று கூறிய ஃபிர்அவ்னையே மூஸா (அலை) என்ற முஸ்லிம் எதிர்த்து நின்றார். அந்த பேரரசர்கள் இருவரும் சாடை செய்தாலே போதும். அடுத்த கணம் ஒருவனின் தலை அவனது தோள் மீது இருக்காது. இத்தகு அதிகாரம் இந்த நேருவுக்குக் கிடையாது. அப்படியிருக்க ஒரு முஸ்லிம் ஆகிய நான் நேருவின் பூச்சாண்டி களுக்குப் பயந்து ஏன் நடுங்க வேண்டும்?” என்று தமக்கே உரிய அமைதியான முறையில் பதில் கூறினார்.
வெற்றி வாழ்வின் இரகசியம்
இவரது வெற்றி வாழ்வின் இரகசியம், இறையருளில் இவருக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, எந்தச் சூழலிலும் அமைதி குலையாத நிலை, எப்பொழுதும் நிதானமான தொனியுடன் பேசக்கூடிய அறிவார்ந்த பேச்சு ஆகியவையாகும். ஒருவர் இவருடன் ஒரு நாள் முழுவதும் பேசிக் கொண்டிருந்த போதினும் இவரது தொனியில் சிறிதளவும் உணர்ச்சியையோ, உத்வேகத்தையோ காண இயலாது. இவருக்கு இயற்கையாய் அமைந்திருந்த இந்த தொனியே எல்லாரையும் இவர் கூறுவதற்கு இறுதியாக ‘ஆம்’ என்று கூறுமாறு செய்தது.
ஆற்றிய பணிகளும் அலங்கரித்த பதவிகளும்
சென்னை மாநில சட்டசபையிலும், அரசியல் நிருணயச் சபையிலும், இந்தியப் பாராளு மன்றத்திலும் இவர் உறுப்பினராய் இருந்து ஆற்றிய பணிகள் பல. விடுதலை பெற்ற இந்தியாவில் 1952-ம் ஆண்டில் முதன் முதலாக மாநிலங்களவை அமைக்கப்பட்ட போது, துவக்க ஆண்டிலேயே அதன் உறுப்பினராய் பொறுப்புமிக்கோரின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஆறாண்டு காலம் ராஜ்ய சபை எம்.பி.யாக சேவையாற்றினார்.
1962 ஆம் ஆண்டில் கேரளத்தின் மஞ்சேரி தொகுதியில் முஸ்லிம் லீக் வேட்பாளராய் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காயிதெ மில்லத் அவர்கள் தொகுதியை நாடிச் செல்லாமல், வாக்காளப் பெருமக்களைத் தேடியும் செல்லாமல், தொலை தூரத்தில் இருந்தவாறே தொகுதி மக்களின் பேராதரவோடு பெருவாரியான வாக்குகளால் வெற்றி வாகை சூடினார்.
அதுபோல 1967 - 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தொகுதிக்குச் செல்லாமலும் வாக்காளர்களைச் சந்திக்காமலும் காயிதெ மில்லத் அவர்கள் வாகை சூடி இந்தியாவிலேயே ஒரு சாதனை படைத்தார்.
நெய்வேலியில் ஆய்வு நிகழ்த்தி அங்கு நிலக்கரிச் சுரங்கம் இருப்பதைக் கண்டுபிடிக்கத் தூண்டினார்.
சீனா அபாயம் வரும் முன்பே அது பற்றி நேருவுக்கு நேரிடையாய் எழுதி எச்சரித்தார். சீனா 1962-ம் ஆண்டு இந்தியா மீது போர் தொடுத்த போது, சீன ஆக்கிரமிப்பை கண்டித்து நாடாளு மன்றத்தில் பேசிய கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்கள் எதிரிகளிடமிருந்து தாயகத்தை காத்திட களம் செல்லவும் தயார் என வீரத்தோடு முழங்கியதோடு, தனது வயது அதற்க்குத் தடையாகக் கருதப்படுமானால், எனது ஒரே மகன் மியாகானைப் போர்க்களத்திற்கு அனுப்பத் தயார் என ஆற்றிய உரையும், அர்ப்பணிப்பு உணர்வும் நாட்டுப்பற்றுக்கோர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு வழங்கப்படும் ஊதியத்தில் ஒரு தொகையை பாதுகாப்பு நிதியாக மாதந்தோறும் பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என, மக்களவையில் முதன் முதலில் அறிவித்த பெருமைக்குரியவரும் காயிதெமில்லத் அவர்களே.
இந்தியாவில் பொது மொழியாக எது இருக்க வேண்டும் என்னும் பிரச்சனை அரசியல் நிருணயச் சபையில் வந்த பொழுது, தமிழ் நாட்டுப் பிரதிநிதிகளெல்லாம் இந்தியை ஆதரித்த சமயம், பழைமையான மொழியாகிய தமிழ் தான் அதற்க்குத் தகுந்தது என்று கூறித் தமக்கும் தம் தாய் மொழியாம் தமிழுக்கும் புகழ் சேர்த்தார்.
மரண மடைந்தார்
முஸ்லிம்களால் மட்டுமல்லாது மற்றவர்களாலும் ‘காயிதெ மில்லத்’ என்று அன்புடனும், மரியாதையுடனும் அழைக்கப் பட்ட இவர். 1972 ஏப்ரல் 5 ஆம் நாள், சென்னையில் காலமாகித் திருவல்லிக்கேணியிலுள்ள வாலாஜா பள்ளிவாசல் வளைவிற்குள் நல்லடக்கம் செய்யப்பட்டார். இவரது இறுதி ஊர்வலத்தில் அமைச்சர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டு நடந்து சென்றார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...