Home


இசை முரசு நாகூர்  E.M. ஹனீஃபா (Part -1)

Nagoor Hanifa

நாகூர் இஸ்மாயீல் முஹம்மத் ஹனீஃபா (25 டிசம்பர் 1925 - 8 ஏப்ரல் 2015) அவர்கள் நாகூர் E.M ஹனீஃபா என தமிழகத்தில் பிரபலமாக அறியப்படும், பிரபல இஸ்லாமியப் பாடகர் மற்றும் திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்டவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் இறுதி வரை முக்கிய பங்கு வகித்தார். இவர் ஏறத்தாழ மேடைகளில் இரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். கலைஞர் கருணாநிதியும், இசை முரசு நாகூர் E.M ஹனீஃபாவும் சிறு வயது முதலே இயக்கத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள்.

ஆரம்ப கால வாழ்வு

        இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் 1925 டிசம்பர் 25ல் பிறந்தார். முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவராவார். இவரது தாயார் வெளிப்பட்டிணத்தைச் சேர்ந்தவர். ஹனீஃபாவின் தந்தை திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் அங்கு வசித்தார், தந்தையின் பூர்விகம் நாகூர்.

பின்னர் சின்ன வயதில் தாயுடன் நாகூருக்கு வந்து விட்டார். இவரது உடன் பிறந்தவர்கள், ஒர் அக்கா, ஒர் அண்ணன், அக்கா பாத்திமா மணமாகி இராமநாதபுரத்தில் வாழ்ந்தார், அண்ணன் அப்துல்காதர் நாகூரில் ‘கார்மெக்கானிக்’ ஆக இருந்தார். வெளிநாட்டு கார்களை பழுது பார்ப்பதில் வல்லவர். ஹனீஃபா சிறுவராக இருந்த பொழுதே, தந்தை மலாயாவுக்குச் சென்று விட்டார். அங்கு ரெயில்வேயில் ‘போர்மேன்’ ஆகப் பணியாற்றினார்.

பள்ளிக்கூடத்தில்

        நாகூரில் அரசு மேனிலைப் பள்ளிகூடம் ஒன்று இருக்கிறது. இது முதுபெரும் பள்ளிகூடம். அந் நாளில் “செட்டியார் பள்ளிகூடம்” என்று பெயர். இங்கு காலையில் இறைவணக்கப் பாடலாக “பொன்னார் மேனியனே…” என்ற பாடல் பாடப்படும். அந்த பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்த இஸ்லாமிய மாணவன் மனதில் ஒரு எண்ணம் எழுந்தது. “நான் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் வணக்கம் சொல்லுவதில்லை. “பொன்னார் மேனியனே” என்ற இந்தப் பாடலோ சிவபெருமானை வணங்கக் கூடியது. இப்பாடலை நான் பாடுவது எனது இஸ்லாமியக் கொள்கைக்கு முரணாயிற்றே? என்று அந்தச் சிறுவன் சிந்தித்தான்.

        பள்ளியில் நிறைய முஸ்லிம் சிறுவர்கள் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை அழைத்தான். தனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்து கொண்டான். “நாம் அல்லாஹ்வை பற்றி பாடினால் என்ன?” என்று கேட்டான். மற்ற மாணவர்களும் ஆதரவு அளிக்க, இதே கருத்தை ஒரு தாளில் எழுதி மாணவர்கள் கையெழுத்திட்டார்கள். அதைத் தலைமை ஆசிரியர் கையில் கொடுக்கும் படி இரு மாணவர்களை அனுப்பினார்கள்.

தலைமை ஆசிரியர் படித்துப் பார்த்தார். “இது யார் எழுதிய கடிதம்?” என்று கேட்டார். கடிதம் எழுதிய மாணவர் பெயரை மாணவர்கள் தெரிவித்தார்கள். “கூப்பிடு அவனை” என்றார். தலைமை ஆசிரியர். உடனே அச்சிறுவன் அழைத்துச் செல்லப்பட்டு, தலைமை ஆசிரியர் முன் நிறுத்தப் பட்டான். பையன் பயத்துடன் படபடப்போடு நின்றிருந்தான். “உனது உணர்ச்சியைப் பாராட்டுகிறேன்” என்று ஆசிரியர் அவனை தட்டி கொடுத்தார். “முஸ்லிம் மாணவர்கள் தனியே பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்” என்று அப்போதே அனுமதியும் அளித்தார். ஆனால் யார் பாடுவது?” என்று வினவினார்.

“நான் பாடுகிறேன்” என்று சிறுவன் தைரியமாக சொன்னான். ஒரு பாட்டை பாடியும் காட்டினான்.

வேளை உதவி தாளை தருவீர்

வேந்தர் யா முகம்மதே

நாளை மஹ்ஷர் மூலை உருகும்

நாளில் உதவும் நாயகா

என்பது அந்தப் பாட்டு (நாகூர் வண்ணக் களஞ்சியப் புலவர் என்று சொல்லப்படும்) புலவர் அப்துல் ரசீது எழுதிய பாடல்.

        வெண்கல மணி போல ‘கணீர்’ என்று ஒலித்த அந்தப் பாடல் தலைமை ஆசிரியரை மிகவும் கவர்ந்து விட்டது. அடுத்த நாள் முதல் பள்ளியில் நாள்தோறும் காலையில் முஸ்லிம் மாணவர்கள் தனியாக கூடினார்கள். அந்த மாணவன் இந்த பாடலைப் பாட, பிரார்த்தனை நடத்தினார்கள். அந்த மாணவன் தான் - நாகூர் ஹனீஃபா. அப்போது அவர் 11 வயது சிறுவன்.

கெளதியா பைத்து சபை

        நாகூரில் அப்போது “கெளதியா பைத்து சபை” என்ற இஸ்லாமிய சமுதாய சபை இருந்தது. (இப்போதும் இருக்கிறது) இஸ்லாமியர் வீட்டுத் திருமணங்களுக்குப் போய் உடனிருந்து உதவியாக வேலை செய்வது. இந்த சபை உறுப்பினர்களின் பணி, அதோடு மாப்பிள்ளை அழைப்பு நடக்கும் போது தப்சு (வட்டப்பறை) தட்டிப் பாடவும் செய்வார்கள்.

இச்சபையில் சிறுவர்கள், இளைஞர்கள் மிகுதியாக இருந்தார்கள். ஹனீஃபா இனிமையாகப் பாடுவது தெரிந்து, சபையில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். நாகூரில் மட்டுமல்லாமல், சுற்றுப்புறமுள்ள நாகை, காரைக்கால், திருவாரூர், சீர்காழி, தேரழுந்தூர் முதலிய ஊர்களுக்கும் சபையினருடன் போய், அழைப்பு ஊர்வலங்களில் ஹனீஃபா பாடினார். அவரது குரல் எடுப்பாக, இனிமையாகத் தனித்து ஒலிக்கவே, விரைவில் சபையின் முதன்மைப் பாடகர் ஆகிவிட்டார்.

இந்த சபையில் ஹனீஃபாவின் முன்னேற்றத்துக்குப் புலவர் ஆபிதீன் உறுதுணையாக இருந்தார். சிவத்த மரைக்காயர், அப்துல் ரசீது ஆகியோரும் உதவியாக இருந்தார்கள்.

முதல் கச்சேரி

        1941 இல் தேரழுந்தூரில் ஒரு முஸ்லிம் வீட்டில் திருமணம். அங்கு மேடைக் கச்சேரி செய்ய ஹனீஃபாவுக்கு அழைப்பு வந்தது. பக்க வாத்தியங்களுடன் சென்று கச்சேரி செய்தார். ஹனீஃபாவின் முதல் கச்சேரி, இது தான். வெளியூர் சென்று செய்த முதல் கச்சேரியும் இதுவே. பணம் வாங்கிக் கொண்டு செய்த முதல் கச்சேரியும், இது தான்.

        ஹனீஃபா தொடர்ந்து கச்சேரிகள் செய்தார். காரை தாவூது பாடிய மேடைகளில் கூட பாடினார். அபிராமத்தில் 1945இல் சங்கு முகமது அபுபக்கர் அவர்களின் மகன் சங்கு சையது இபுராகீமின் திருமணம் நடந்தது. காரை தாவூது கச்சேரி செய்தார். இராமநாதபுர மாவட்ட முஸ்லிம் லீக் செயலர் அயிரை அப்துல் ரகுமான் இந்தத் திருமணத்துக்கு வந்திருந்தார். அவர் சங்கு வாப்பாவை நெருங்கி, “நாகூர் ஹனீஃபா வந்திருக்கிறார். அருமையாகப் பாடுவார். அவரை மேடையில் ஏறி பாடச் சொல்லுங்கள்” என்று சொன்னார். “நீங்களே சொல்லுங்களேன்” என்று வாப்பா கூறினார்.

        அப்துல் ரகுமான் அவரை அழைத்து, மேடையில் ஏறி ஒரு பாட்டு பாடச் சொன்னார். ஹனீஃபாவும் மேடை ஏறிப் பாடினார். கூட்டத்தினர் கேட்டுக் கொண்டதால் மேலும் இரண்டு பாட்டுப் பாடினார். சங்கு வாப்பா மேடை அருகே வந்து அன்று ஹனீஃபாவை அங்கே தங்கச் செய்து, மறுநாள் விருந்து கொடுத்து, பரிசு வழங்கி நாகூருக்கு அனுப்பிவைத்தார்.

        1941 இல் 15 வயதில் மேடைக்கச்சேரி செய்யத் தொடங்கிய ஹனீஃபா, தொடர்ந்து 70 ஆண்டுகள் ”நாள் தோறும் ஊர் ஊராகப் போய் ஹனீஃபா கச்சேரி செய்தார். இதுவரை 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட கச்சேரிகள் செய்திருப்பார்” என்கிறார், கலைமாமணி ஹாஜி. உமர். இவர் ஹனீஃபாவின் இளமை நண்பர்.

இயற்கை தந்த பரிசு

        ஹனீஃபாவின் குரல் வளம் இயற்கையாக அமைந்தது. அவருக்கு இறைவனின் அன்பளிப்பு, அது கச்சேரி செய்வதற்காக அவர் யாரிடமும் போய் சங்கீதப் பயிற்சி பெறவில்லை. இதற்கு கலைமாமணி உமர் ஒரு காரணம் சொன்னார்.

        ”இசைமணி யூசுப் என்று ஒரு பாகவதர் இருக்கிறார். சீர்காழி கோவிந்தராசனும், யூசுப்பும் சங்கீதம் கற்று, ஒரே நேரத்தில் ‘இசைமணி’ பட்டம் பெற்றார்கள். சீர்காழி இசை உலகின் இமயத்திற்கே போய் விட்டார். ஆனால், யூசுப்புக்கு வரவேற்பு இல்லை. காரணம், ஒரு முஸ்லிம் தியாகராசர் கீர்த்தனைகளைப் பாடுவதை பிராமணர்கள் விரும்பிக் கேட்க மாட்டார்கள். அதுபோல முஸ்லிம்களும் தியாகராசர் கீர்த்தனைகளைக் கேட்கமாட்டார்கள்” என்றார், உமர்.

கலைஞருடன் தோழமை

        ஹனீஃபா பள்ளியில் படிக்கும் வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். கெளதியா சபையினருடன் சேர்ந்து, அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் போய்ப்பாடினார். இதனால் படிப்பில் ஆர்வம் குறைந்தது. உள்ளூரில் இருந்தால் பிள்ளை கெட்டுப் போவான் என்று, அவரது தாயார் அவரை திருவாரூருக்கு அனுப்பி வைத்தார். அங்கே ஹனீஃபாவின் சிறிய தந்தை அபுபக்கர் இராவுத்தர் பலசரக்கு கடை வைத்திருந்தார். அவரது கடையில் ஹனீஃபா வேலையில் சேர்ந்தார்.

        திருவாரூரில் ஒடம் போக்கி ஆறு உள்ளது. இந்த ஆற்று மணலில் தான் நீதிக் கட்சியின் பொதுக்கூட்டங்கள் நடப்பது வழக்கம். தந்தை பெரியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் போன்றவர்கள் வந்து பேசுவார்கள். இந்த கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்பவர்கள் நாலு பேர், சிங்கராயர், ரெங்கராஜ், இராமன், கருணாநிதி என்பவர்கள் அந்த நாளில் அரைக்கால் சட்டை போட்ட பள்ளிக்கூட மாணவனாகக் கலைஞர் இருந்தார். ஹனீபாவின் இசை இருவரையும் இணைத்தது.

        ஓடியாடி மேடை அமைப்பது, தலைவர்களுக்கு தேநீர் வாங்கி வருவது, தலைமை தாங்கிக் கூட்டத்தை நடத்துவது என்று எறும்பு போல சுறுசுறுப்பாக இயங்கியவர் கலைஞர், கூட்டம் தொடங்குவதற்கு முன் பாட்டுப் பாடி கூட்டம் சேர்ப்பவர், ஹனீஃபா.

        ஹனீஃபா கடையை விட்டு விட்டு அடிக்கடி கட்சி வேலைக்கு ஓடியதால் ஓராண்டுக்குள் நாகூருக்கு திருப்பி அனுப்பப் பட்டார்.

பட்டுக்கோட்டை அழகிரி

        ஹனீஃபா நாகூருக்குத் திரும்பினார், அரசியல் மேடைகளில் அவரது பாட்டுத் தொடர்ந்தது. பலரும் விரும்பி அழைத்துச் சென்றார்கள். பட்டுக்கோட்டை அழகிரியின் தொடர்பு குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் நீதிக்கட்சி - சுயமரியாதை இயக்கம் - திராவிடர் கழகக் கூட்டம் எங்கே நடந்தாலும், ஹனீஃபாவை பாட வரச்சொல்லி விடுவார். அழகிரி, அறிஞர் அண்ணாவுடன் ஹனீஃபாவுக்கு அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்தவரும், அழகிரி தான்.

        ஹனீஃபாவுக்குச் சிறு வயதிலேயே தமிழ் பற்றும், தன்மானப் பற்றும் இருந்தது இந்த அரசியல் தொடர்புக்கு ஒரு காரணம். 13 வயது சிறுவனாக இருந்த போதே, இந்தியை திணித்த ராஜாஜிக்கு நாகூரில் கறுப்புக் கொடி காட்டி, கைது செய்யப்பட்டார். அதன் பின் இதுவரை அரசியல் போராட்டங்களில் 11 முறை சிறை சென்றிருக்கிறார்.

தி.மு. கழகம்

        நாகூரில் ஹனீஃபாவே கூட்டங்கள் ஏற்பாடு செய்தார். தந்தை பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்தியிருக்கிறார். நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக மாறிய போது, நாகூரில் திராவிடக் கழகத்தை தொடங்கினார். அண்ணா திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய போது, ஹனீஃபா நாகூரில் தி.மு. கழகக் கிளை தொடங்கினார். அது முதல் ஹனீஃபா தி.மு. கழகத்துடன் இரண்டறக் கலந்து விட்டார். தி.மு.க. மாநில மாநாடுகள், மாவட்ட மாநாடுகள், சிறப்புக் கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கே இசை முரசு ஒலிக்கும்.

இசை முரசு பற்றி கலைஞர்

         கலைஞர் கூறுகிறார், “திராவிட இயக்கத்திலே தன்னை ஒப்புவித்துக் கொண்டு, தனது இசை நாதத்தை எழுச்சி நாதமாக ஆக்கி, அந்த எழுச்சியினூடே இலட்சியத்தை நுழைத்து, பெரியாருடைய எண்ணங்களை, பேரறிஞர் அண்ணாவின் கருத்துகளை மக்களின் உள்ளத்திலே பதிய வைக்கிற பெருந்திறன் பெற்றிருப்பவர், இசை முரசு நாகூர் ஹனீஃபா.”

        தி.மு. கழகத்திலிருந்து பிரிந்து போன எம்.ஜி.ஆரும், ஹனீஃபாவும் நெருங்கிய நண்பர்கள். ஹனீஃபாவை தனது பக்கம் இழுக்க எம்.ஜி.ஆர் எவ்வளவோ முயற்சி செய்தார். “எனக்கு ஒரே இறைவன். ஒரே கட்சி” என்று ஹனீஃபா உறுதியாக நின்று விட்டார். இதனை கலைஞர், “ஹனீஃபா கற்பு தவறாதவர்” என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். கலைஞர் மேலும் சொல்கிறார், “ஆடாமல் அசையாமல் அலைபாயாமல் சபலத்திற்கு ஆட்படாமல், ‘எதிரிகள் கோடியிட்டு அழைத்தாலும் தொடேன் தொடேன்!’ என்கிற உறுதிமிக்க இசைவாணர், நாகூர் ஹனீஃபா.

மேல்சபை உறுப்பினர்

        இளம் வயது முதல் தன்னுடன் இருந்து இசையால் இயக்கப் பணி ஆற்றிய ஹனீஃபாவுக்குத் தகுந்தபடி சிறப்புச் செய்யக் கலைஞர் தவறவில்லை. ஹனீபாவை தமிழ்நாடு  மேல் சட்டசபை உறுப்பினர் (எம்.எல்.சி) ஆக்கினார். கலைஞர் (1971 -1976). வக்ப் வாரிய உறுப்பினராகவும், தலைவராகவும் நியமித்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் வாணியம்பாடியில் தி.மு.க. வேட்பளாராக ஹனீஃபாவை நிறுத்தினார். அப்போது பா.ஜ.க.வுடன் கூட்டனி இருந்ததால், முஸ்லிம்கள் எதிர்த்து வாக்களிக்க, ஹனீஃபா வெற்றி வாய்ப்பை இழந்தார்.

        தி.மு. கழகப் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினராக ஹனீஃபா இருந்திருக்கிறார். 12 ஆண்டுகளாக நாகூர் தர்காவின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.

முஸ்லிம் லீக் - காயிதே மில்லத் அவர்களின் உறவு

        அன்று (இன்றும்) திராவிட இயக்கமும், முஸ்லிம் லீக்கும் இணைந்து செயலாற்றின. முஸ்லிம் லீக் மேடைகளில் பெரியார், அண்ணா, கலைஞரைக் காணமுடியும். முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிபுடன் அவர்கள் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். காயிதே மில்லத்துடன் ஹனீஃபாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. ஹனீஃபாவின் பரமரசிகர், காயிதே மில்லத் ஹனீஃபாவை தனியே பாடச் சொல்லிக் கேட்பார். நாகூரில் ஹனீஃபாவின் வீட்டுக்கு காயிதே மில்லத் இருமுறை வந்திருக்கிறார்.

குடும்பம் மற்றும் குழந்தைகள்

        ஹனீஃபா தனது 30ஆவது வயதில் சென்னை வர்த்தகர் பி. அப்துல் ரஹீம் என்பவர் மகள் ரோஷன் பேகம் என்பவரை 26-11-1953ஆம் நாள் சென்னையில் மணந்தார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தை முத்த பையன் பெயர் நெளசத் அலி அடுத்த பையன் பெயர் நாசர் அலி,  மற்றும் 4 பெண் குழந்தைகள் பிறந்தனர், நசீமா பேகம், நூர்ஜகான் பேகம், மும்தாஜ் பேகம், சரீனா பேகம். இவர்கள் சென்னையில் கோட்டூர்புரத்தில் வாழ்ந்து வந்தார். நாகூர் ஹனீஃபா தனது வீடுகளுக்கு “அண்ணா இல்லம்” “கலைஞர் இல்லம்” “காயிதே மில்லத் இல்லம்” என்று பெயர் சூட்டியிருந்தார்.

தடம் புரளாத உறுதி

        “எத்தனையோ இஸ்லாமிய பாடகர்கள் நிலைத்து சாதனை படைக்க முடியாத நிலையில் நாகூர் ஹனீஃபா மட்டும் முடிசூடா மன்னனாகத் திகழ்வதற்குக் காரணம், தாய்மொழியான தமிழ் மீது அவருக்கு இருக்கிற பாசம், தான் சார்ந்த இஸ்லாமிய சமயத்தின் மீது அவருக்கு இருக்கும் சலனமில்லாத நம்பிக்கை, ஒழுக்க நெறியில் வழுக்கி விழாத உயர்ந்த பண்பு, அரசியல் தடம் புரளாத உறுதி, மிடுக்கான தோற்றமும், நாயகம் (ஸல்) அவர்கள் வழி நடை உடையும், நகைச்சுவையும், விருந்தோம்பலும், நல்ல பண்பு பழக்க வழக்கங்களும் அவரது வெற்றிக்கு வழிவகுத்தன. பொது வாழ்வில் தூய்மை மிக முக்கியம். அதில் ஹனீஃபா உறுதியாக இருந்தார். நேர்மை, நாணயம், காலந்தவறாமை, தொழிலில் முழு ஈடுபாடு முதலியன அவரை உயரத்துக்கு அழைத்துச் சென்றன.

15ஆயிரம் கச்சேரிகள், 2ஆயிரம் பாடல்கள்

        1941 ஆம் ஆண்டில் தேரழுந்தூரில் ஒரு திருமண வீட்டில் ஹனீஃபா கச்சேரி செய்தார். அவர் உச்ச கட்டத்தில் இருந்த பொழுது கிட்டத்தட்ட நாள் தோறும் கச்சேரி இருக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், கேரளாவிலும் கச்சேரி நடக்கும். ஆந்திரா, கர்நாடகாவிலும் கச்சேரிகளுக்குப் போவார். “இதுவரை குறைந்தது 15 ஆயிரம் கச்சேரிகள் செய்திருப்பார்” என்கிறார், கலைமாமணி ஹாஜி. எஸ்.எம். உமர் அவர்கள்.

        பொதுவாகக் கச்சேரிகளில் பாடிய பாட்டயே திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருப்பார்கள் பாகவதர்கள். ஆனால், ஹனீஃபா அப்படி அல்ல, அன்றைய தேவை, அந்த இடத்தின் தேவை, அறிந்து பாடக் கூடியவர்.

வெளிநாடுகளிலும் இசை முரசு

        இலங்கைக்குப் பலமுறை போயிருக்கிறார். அங்கு நடக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா, ஹிஜ்ரி புத்தாண்டு விழாக்களில் பாடியிருக்கிறார். நாகூர் ஹனீஃபா பல தடவைகள் இலங்கை வந்து இசைக்கச்சேரிகளை நடத்தியிருந்தார். இலங்கை வானொலி தனது கலையகத்தில் நேரடியாக ஒலிப்பதிவு செய்து இவரது பாடல்களை ஒலிபரப்பி வந்தது.

        சிங்கப்பூரில் பலமுறை கச்சேரி செய்திருக்கிறார். மலேஷியாவுக்கும் பலமுறை போய் நிகழ்ச்சி நடத்தினார். ஆங்காங்கிலிருந்தும் அழைப்புகள் வந்தன. போய்ப் பாடினார். ஹனீஃபா தமிழில் பாடினாலும் போகின்ற இடங்களில் அவர்கள் விரும்பிக் கேட்கும் மொழிகளிலும் பாடக்கூடியவர்.

        துபாய், அபுதாபி, உம் அல் குவெய்ன், கத்தார், பகரைன் என்று அரபு நாடுகளுக்கும் போய் கச்சேரி செய்தார், ஹனீஃபா போகாத நாடுகளிலும் அவரது குரல் இசைத் தட்டாக, ஒலிநாடாவாக, குறுந்தகடாக மேலும் சமூக வலை தளங்களாக, இணைய தளங்களாக, மொபைல் ஆப்களாக,  ஒலித்தது! ஒலித்துக் கொண்டிருக்கிறது.

இறப்பு

இவர் 2015 ஏப்ரல் 8 அன்று காலமானார். நாகூர் தர்கா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்ஷா அல்லாஹ் இவருடைய பிரபலமான பாடல்கள் கொண்ட விபர பகுதி - 2 பாடல்களுடன்  இசை முரசு நாகூர்  E.M. ஹனீஃபா (Part -2) விரைவில் வெளிவரும்.

        

கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...