ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம்
“ஸமூது” கூட்டத்தினர்
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வழியில் தோன்றிய ஸமூது கூட்டத்தினர் ‘ஹிஜ்ர்’ என்ற பகுதியில் வாழ்ந்தனர். ‘ஹிஜ்ர்’ இதன் பொருள் மலைப்பாறை என்பதாகும். இது திரு குர் ஆனிலுள்ள பதினைந்தாவது அத்தியாயத்தின் பெயராகும். அதில் மலைகளைக் குடைந்து வாழ்ந்த ஸமூது கூட்டத்தினரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அவர்களை இறைவன் ‘அஸ்ஹாபுல் ஹிஜ்ர்’ என்று குறிப்பிடுகின்றான் (15:80). அக் கூட்டத்தினரை நேர்வழிப் படுத்தவே ஸாலிஹ் (அலை) அனுப்பப்பட்டார்கள். அவர்கள் அந் நபிக்கு மாறு செய்ததன் காரணமாய் அழிந்தனர். ஸமூதுகள் மலைகளைக் குடைந்து கட்டி வாழ்ந்த வீடுகளும் ஸாலிஹ் (அலை) அவர்களது ஒட்டகம் தண்ணீர் குடித்த இடமும் இப்பொழுதும் இங்கு (சவுதி அரேபியாவின் வட மேற்கில் மதீனாவிலிருந்து 400 கி.மீ தொலைவில்) இருக்கின்றன.
பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்வு
ஸமூதுக் கூட்டத்தின் தலைமைப் பூசாரியாகிய காபூர் பின் உமைதின் மகனாகவே ஸாலிஹ் (அலை) அவர்கள் பிறந்தார்கள். இவர்களின் அன்னை பெயர் ஜகூமு. இவர்கள் தங்கள் நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் பெற்றார்கள். கல்லுருவங்களைக் கடவுளென வணங்கி வந்த ஸமூதுகளிடம் சென்று இவர்கள் ஒரே இறைவணக்கப் பிரச்சாரம் செய்தார்கள். அவர்களோ இவர்களுக்கு எவரோ சூனியம் செய்து விட்டதாயும் எனவே தான் இவர்கள் இவ்வாறு பிதற்றித் திரிவதாயும் கூறினர். அவர்களுள் ஒன்பது பேர்கள் சேர்ந்து இவர்களைக் கொல்லவும் சதி செய்தார்கள். அதற்கு அந்த ஒன்பதின்மரே பலியாயினர்.
திருமறை குர் ஆனில்
தவிர, நாம் நிச்சயமாக ஸமூது சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை: “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” (என்று போதிக்குமாறு) அனுப்பினோம்; ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். 27:45.
(அப்போது அவர்:) “என்னுடைய சமூகத்தாரே! நன்மைக்கு முன்னால், தீமைக்காக நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள், நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு அல்லாஹ்விடம் தவ்பா (செய்து மன்னிப்புக்) கேட்கமாட்டீர்களா?” எனக் கூறினார். 27:46.
அதற்கவர்கள்: “உம்மையும், உம்முடன் இருப்பவர்களையும் நாங்கள் துர்ச்சகுணமாகக் காண்கிறோம்” என்று சொன்னார்கள்; அவர் கூறினார்: “உங்கள் துர்ச்சகுணம் அல்லாஹ்விடம் இருக்கிறது; எனினும், நீஙகள் சோதனைக்குள்ளாக்கப்படும் சமூகத்தாராக இருக்கிறீர்கள்.” 27:47.
இன்னும், அந்நகரில் ஒன்பது மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் நன்மை எதுவும் செய்யாது பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிகிறார்கள். 27:48.
அவர்கள்: “நாம் அவரையும் (ஸாலிஹையும்), அவருடைய குடும்பத்தாரையும் இரவோடிரவாக திட்டமாக அழித்து விடுவோம்; (இதனை யாரிடமும் சொல்வதில்லை) என்று நாம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கொள்வோமாக!” பிறகு அவருடைய வாரிஸ்தாரிடம் (அவர்கள் பழிக்குப்பழி வாங்க வந்தால்) “உங்கள் குடும்பத்தார் அழிக்கப்பட்டதை நாங்கள் காணவேயில்லை; நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்கள்” என்று திட்டமாகக் கூறிவிடலாம் (எனச் சதி செய்தார்கள்). 27:49.
(இவ்வாறு) அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள்; ஆனால் அவர்கள் அறியாதவாறு நாமும் சூழ்ச்சி செய்தோம். 27:50.
ஆகவே, அவர்களுடைய சூழ்ச்சியின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக! (முடிவு) அவர்களையும், அவர்களுடைய சமூகத்தார் எல்லோரையும் நாம் அழித்தோம். 27:51.
ஆகவே, அவர்கள் அநியாயம் செய்து வந்த காரணத்தால் (அதோ அழிந்து போன) அவர்களுடைய வீடுகள் அதோ பாழடைந்து கிடக்கின்றன; நிச்சயமாக இதிலே, அறியக் கூடிய சமூகத்தாருக்கு அத்தாட்சி இருக்கிறது. 27:52.
மேலும், ஈமான் கொண்டு, (அல்லாஹ்விடம்) பயபக்தியுடையவர்களாக இருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். 27:53.
துயில் கொண்ட ஸாலிஹ் (அலை)
ஒரு நூற்றாண்டுகள் ஒரே இறைவணக்கப் பிரச்சாரம் நிகழ்த்தியும் உறு பயன் ஏற்படாததைக் கண்டு பெரிதும் வருந்திய இவர்கள் தனித்து ஒரு மலை மீது சென்று இறைவனை வணங்கிக் கொண்டிருக்கும் பொழுது துயில் கொண்டார்கள். நாற்பது ஆண்டுகள் தூங்கிய பின் திரும்பி வந்த பொழுது எல்லாம் மாறுதலடைந்திருந்தது. இவர்களைப் பின் பற்றிய பலர் இறந்துவிடனர். ஏனையோர் தங்கள் முந்தைய மதத்திற்குச் சென்று விட்டனர்.
ஒட்டகம் வெளிப்பட வேண்டுதல்
பின்னர் இறை ஆணைப்படி இவர்கள் தங்கள் பிரச்சாரத்தைத் தொடங்கினார்கள். அப்பொழுது ஸமூதுகளின் அரசன் ஒரு மலையைச் சுட்டிக் காட்டி அதிலிருந்து ஒர் ஒட்டகம் வெளிப்பட வேண்டும் என்றும் அது வெளிப்பட்ட அடுத்த கணம் ஒரு குட்டியை ஈன வேண்டும் என்றும் அவ்விதம் செய்யின் இவர்களின் நபித்துவத்தை ஏற்றுக் கொள்வதாயும் கூறினான்.
அதற்கு இவர்கள் இணங்கி இறைவனை இறைஞ்சினார்கள். அடுத்த கணம் 120 முழ நீளமும் 100 முழ அகலமும் 50 முழ உயரமும் உள்ள பிரம்மாண்டமான ஒட்டகம் அம்மலையைப் பிளந்து வெளி வந்து ஒரு குட்டியை ஈன்றது. அது கண்டு மன்னனும் மற்றும் பலரும் உருவத் தொழும்பை விட்டொழித்து அல்லாஹ்வின் அருள் மார்க்கத்தை மேற் கொண்டனர்.
ஊரில் உள்ள அனைவருக்கும் பால்
அவ்வொட்டகம் முப்பதாண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தது. அது பகலில் காடுகளுக்குச் சென்று மேய்ந்து விட்டு இரவில் ஒவ்வொருவர் வீட்டு வாயிலிலும் போய் நிற்கும். அதன் மடுவின் கீழ் கலசத்தை வைப்பின் பால் தானகவே அதிலிருந்து சொட்டும். இவ்வாறு ஊரிலுள்ளோர் அனைவருக்கும் பால் வழங்கி விட்டு, அது ஸாலிஹ் (அலை) அவர்களின் பள்ளியில் போய்ப் படுத்துக்கொள்ளும். ஒட்டகையைக் கொன்றனர்
ஒரு புதன் கிழமை குதார் என்பவனும் மஸ்தகு என்பவனும் தம் வயதொத்த எழுவரைச் சேர்த்துக் கொண்டு அவ்வொட்டகையைக் கொன்றனர். அது கண்ட அதன் குட்டி அபயக் குரல் எழுப்பி மலை மீது ஓடி விட்டது. அச் செய்தி அறிந்ததும் இவர்கள் துடிதுடித்தார்கள்; அழுது கண்ணீர் வடித்தார்கள். அவ்வொட்டகத்தைக் கொன்றொழித்ததற்கான தண்டனை அவர்களை அன்றிலிருந்து நான்காவது நாள் வந்தெய்தும் என்று இறைவனிடமிருந்து எச்சரிக்கை வந்தது. இனி மேல் ஆங்கு இருத்தல் தகாதென எண்ணி இவர்களும் இவர்களைப் பின் பற்றிய நாலாயிரவரும் பலஸ்தீன் நோக்கிப் புறப்பட்டனர். நான்காம் நாள் நண்பகலில் திடீரென நில அசைவும் பேரிரைச்சலும் ஏற்பட்டுத் ஸமூதுகள் அனைவரும் அழித்தொழிக்கப்பட்டனர்.
அது பற்றி திரு குர் ஆனில்
இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.” 11:61.
அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள். 11:62.
“என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார். 11:63.
“அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்). 11:64.
ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார். 11:65.
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன். 11:66.
அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர், 11:67.
(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! “ஸமூது” (கூட்டத்தினர்)க்கு நாசம்தான். 11:68.
ஸாலிஹ் (அலை) அவர்களின் இறுதி காலம்
பலஸ்தீன் சென்ற இவர்கள் மீண்டும் ஹிஜ்ர் வந்து அதைப் பார்வையிட்டுக் கண்ணீர் உகுத்தார்கள். பின்னர் மக்கா சென்று அங்கேயே தங்கள் எஞ்சிய நாள்களைக் கழித்துக் காலமானார்கள். இவர்கள் ‘ஹளர மெளத்’ என்ற இடத்தில் காலமானதால் அதற்கு ‘இறப்பு வந்து விட்டது’ எனப் பொருள்படும் ஹளரமெளத் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் 258 ஆண்டுகள் வாழ்ந்தார்களென்றும் 280 ஆண்டுகள் வாழ்ந்தார்களென்றும் 200 ஆண்டுகள் வாழ்ந்தனரென்றும் பல்வேறு விதமாகக் கூறப்படுகிறது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...