லுபாபஹ் பின்த் ஹாரிஸ் (உம்முல் ஃபழ்ல்)
ரழியல்லாஹு அன்ஹா
லுபாபஹ் பின்த் ஹாரிஸ் (ரழி) (இறப்பு கி.பி.650) அவர்கள் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் (ரழி) அவர்களை மணந்து ஃபழ்ல் என்ற மகனை ஈன்றதால் உம்முல் ஃபழ்ல் என்னும் இடுகுறிப் பெயர் பெற்றார். அண்ணல் நபி (ஸல்) அவர்களின் சிற்றன்னையாகவும் மற்றும் சஹாபா தோழியரில் இவரும் ஒருவர். அன்னை கதிஜா (ரழி) அவர்களுக்கு பின் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இரண்டாவது பெண்மணி இவரேயாவார். இவரது சகோதரியான மைமூனா பின்த் ஹாரிஸ் (ரழி) மற்றும் இவரது தாய்யின் மறுமணம் மூலம் பிறந்த சகோதரி ஜைனப் பின்த் குஜைமா (ரழி) ஆகிய இருவரும் நபி (ஸல்) அவர்களின் மணைவிமார்களாவர்.
ஆரம்பகால வாழ்வு
மக்கா பனூ ஹிலால் என்னும் கோத்திரத்தைச் சார்ந்த ஹாரிஸ் இப்னு ஹஸன் என்பவருக்கும், யேமன் ஹிம்யார் என்னும் கோத்திரதைச் சார்ந்த் ஹிந்த் பின்த் அவ்ப் என்பவருக்கும் மகளாக மக்காவில் பிறந்தார். இவரது தாயார் ஹிந்தின் வயிற்றில் உதித்த மைமூனா அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், லுபாபஹ் (இவரே உம்முல் ஃபழ்ல்) அப்பாஸ் (ரழி) அவர்களையும், ஸல்மா ஹம்ஸா(ரழி) அவர்களையும், அஸ்மா, அலீ(ரழி) அவர்களின் சகோதரர் ஜஃபர்(ரழி) அவர்களையும் மணமுடித்து வாழ்ந்தனர். எனவே தான் ஹிந்துவுக்கு, ‘பெண் மக்களை மணமுடித்து கொடுத்த வகையில் பாக்கியம் பெற்றவர்’ என்று புகழ் ஏற்பட்டது.
இஸ்லாத்தை தழுவுதல்
பெண்களில் முதன் முதலில் அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் மீது ஈமான் கொண்டவர் அன்னை கதீஜா நாயகி (ரழி) அவர்கள். அதற்கு அடுத்து அந்தப் பெரும் பேற்றைப் பெரும் பாக்கியம் - நம்பகமான அறிவிப்புகளின் படி- அன்னை உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்களுக்குத் தான் கிடைத்தது. அவ்வளவு ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று ”அஸ்ஸாபிகூனல் அவ்வலூன்” எனும் சத்திய அழைப்பை முதன் முதலில் ஏற்றோரின் குழுவில் உம்முல் ஃபழ்ல் அவர்களும் தனியோர் இடத்தைப்பெற்றார்கள்.
ரோஷமிக்க பெண்மணி
அபூலஹப் பத்ரு போரில் குறைஷிகளின் தோல்விச் செய்தி கேட்டு வேதனைப் பட்டான். நடக்கவே முடியாமல் அவனுடைய கால்கள் தடுமாறின. ஆயினும் சமாளித்துக் கொண்டு போரின் நிலைகளைத் தீர விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காக தன் சகோதரர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் வீடு நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்தான்.
அப்பாஸ் (ரழி) யின் வீடு ஜம்ஜம் கிணற்றுக்கு அருகில் இருந்தது. அங்கே அப்பாஸின் அடிமை அபூராஃபிஃ (ரழி) என்பவர் அம்புகள் செதுக்கி கொண்டிருந்தார். அப்பாஸ் வீட்டில் இல்லை, அவரும் குறைஷிகளுடன் சேர்ந்து முஸ்லிம்களை எதிர்த்துப் பேரிடுவதற்காகச் சென்றிருந்தார். அங்கு வந்த அபூலஹப் வீட்டின் ஓரத்தில் அபூராஃபிஃ அவர்களுக்கு அருகில் அமர்ந்தான்.
இதற்குள்ளாக யாரோ ஒருவர் கூறினார்: ‘அதோ, அபூசுஃப்யான் இப்னு ஹாரிஸ் (அப்துல் முத்தலிபின் பேரர், அபூலஹபின் சகோதரர் மகன்) பத்ரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கின்றார். போரின் நிலைமைகளை அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
உடனே அபூலஹப், ‘சகோதரர் மகனே, இங்கே என்னிடம் கொஞ்சம் வாருங்கள்” என்று அழைத்தான். அவர் வந்ததும் ‘மகனே பத்ரில் என்ன நடந்தது?” என்று வினவினான்.
அதற்கு அபூசுஃப்யான் இப்னு ஹாரிஸ், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, முஸ்லிம்களுக்கு முன்னிலையில் நாம் மிகவும் பலமிழந்து போயுள்ளோம். எந்த அளவுக்கெனில், குளிப்பாட்டுபவரின் கையில் உள்ள பிரேதத்தின் நிலை எப்படியோ அப்படித்தான் முஸ்லிம்களுக்கு முன்னிலையில் நமது நிலை. அவர்கள் நாடியவர்களைக் கொன்றார்கள்: நாடியவர்களைக் கைது செய்தார்கள். நாங்கள் ஓர் ஆச்சர்யமான காட்சியைப் பார்த்தோம். வெள்ளைக் கோடுகளைக் கொண்ட நிறமுடைய குதிரைகள் மீது வெள்ளை வெளேறென்றிருந்த மனிதர்கள் சிலரைக் கண்டோம். அவர்கள் நம் அணிகளினூடே புகுந்து வெட்டி வீழ்த்தினார்க்ள். ஆனால் அவர்கள் யார் என்று தான் தெரியவில்லை” என்றார்.
உடனே அபூராஃபிஃ (ரழி) கூறினார்: ”அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர்கள் தாம் மலக்குகள் (வானவர்கள்)”
அபூராஃபிஃ இவ்வாறு கூறியதைக் கேட்டதும் அபூலஹப் கொதித்தெழுந்தான். அவருடைய முகத்தில் ஓங்கிக் குத்தினான். இதனைச் சற்றும் எதிர்பாராக அபூராஃபிஃ அவனுடைய தாக்குதலைத் தாங்கிக் கொண்டு அவனுடன் சண்டையிடலானார். ஆயினும் அவர் பலவீனமாய் இருந்ததால் அபூலஹப் அவரைக் கீழே வீழ்த்தி மிக இலாவகமாக அவர் மேலே ஏறி உட்கார்ந்து தாக்கினான்.
அங்கே ஒரு பெண்மணி இருந்தார். அபூலஹபின் இந்த அடாவடித்தனத்தைக் கண்டு அவரால் பொறுமையாய் இருக்க முடியவில்லை. உடனே எழுந்து வீட்டிலிருந்த ஒரு முரட்டுப் பிரம்மை எடுத்து அபூலஹபின் தலையில் ஓங்கி அடித்தார். அவனது தலையிலிருந்து இரத்தம் பீரிட்டு வந்தது. அவனை அதட்டியவாறு கூறினார்: “இவருடைய எஜமானர் இங்கு இல்லையே, என்று உனக்குக் கொஞ்சமும் வெட்கம் இல்லையா? இவர் பலவீனமானவர் என்று கருதிக் கொண்டு தானே இப்படி அடிக்கின்றீர்?”
அபூலஹப் அப்பெண்மணியை எதிர்க்கத் திராணியில்லாமல் அவருடைய அதட்டலைக் கேட்க விரும்பாதது போல் காதைப் பொத்திக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான். இவ்வாறு அபூலஹப் போன்ற இஸ்லாத்தின் கொடிய பகைவனை இழிவுக்கும் கேவலத்துக்கும் ஆளாக்கிய ரோஷமிக்க பெண்மணிதான் அன்னை உம்முல் ஃபழ்ல் (ரழி)ஆவார்.
ஹிஜ்ரத்
தம் கணவருக்குப் பல்லாண்டுகளுக்கு முன்பே இஸ்லாத்தைத் தழுவிய இவர் மிகவும் மார்க்க பக்தியுள்ளவராக இருந்தார். வாரத்தில் இரண்டு நாட்கள் வெள்ளி - திங்கள் இவர் தவறாது நோன்பு நோற்று வந்தார். ஆயினும் அவர்களின் கணவர் அப்பாஸ் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்த பிறகு தான் உம்முல் ஃபழ்ல் (ரழி) ஹிஜ்ரத் செய்து மதீனா வந்தார்கள். இது மக்கா வெற்றிக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்பு நடந்தது.
அரஃபாவில் நோன்பு?
ஹஜ்ஜத்துல் விதாவில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்வதற்கான பாக்கியம் அன்னை உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சி புகாரியில் இடம் பெற்றுள்ளது.
ஹஜ்ஜில் அரஃபா மைதானத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போது மக்களில் சிலர் அரஃபா தினத்தில் நபியவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்கள் என்று கருதிக் கொண்டிருந்தார்கள். இவ்வாறு சிலர் எண்ணிக் கொண்டிருப்பது உம்முல்ஃபழ்ல் (ரழி) அவர்களுக்குத் தெரிய வந்த போது ஒரு குவளைப் பாலை நபியவர்களுக்கு அனுப்பினார்கள். அதனை நபி (ஸல்) அருந்தினார்கள். அதன் மூலம் மக்களின் சந்தேகம் அகன்றது. இதிலிருந்து தான் ஹாஜிகள் அரஃபாத் வெளியில் துல்ஹஜ் பிறை ஒன்பதன்று தங்கியிருக்கும் பொழுது நோன்பு நோற்க வேண்டிய தேவையில்லை என்னும் சட்டம் உருவாக்கப் பட்டது.
நபிமொழிகள் அறிவிப்பு
உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் மூலமாக 30 நபிமொழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் அறிவிப்பாளர்களில் - அவர்களின் மகனார் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) போன்றோரும் மற்றும் அனஸ் இப்னு மாலிக் (ரழி) போன்ற கண்ணியத்திற்குரிய நபித் தோழர்களும் உள்ளனர்.
குழந்தைச் செல்வங்கள்
உம்முல் ஃபழ்ல்(ரழி) – அப்பாஸ்(ரழி) ஆகிய இருவருக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன. ஃபழ்ல், அப்துல்லாஹ், மஃபத், உபைதுல்லாஹ், குதும், அப்துர் ரஹ்மான், உம்மு ஹபீபா ஆகியோராவர். அவர்களில் அப்துல்லாஹ்(ரழி) , உபைதுல்லாஹ்(ரழி) ஆகிய இருவரும் மார்க்கக் கலையில் மிகவும் சிறப்புற்று விளங்கினார்கள். இந்தச் சமுதாயத்தின் தூண்களாய்த் திகழ்ந்த மார்க்க வல்லுனர்களின் குழுவில் இவ்விருவரும் இடம் பெற்றுள்ளார்கள். இவரின் மகன் அப்துல்லாஹ்வின் வழித் தோன்றல்கள் தாம் அப்பாஸீயக் கலீபாக்களாவார்.
மரணம்
அன்னை உம்முல் ஃபழ்ல் (ரழி) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் கி.பி.650 ல் மரணம் அடைந்தார்கள். அப்பொழுது அவருடைய கணவர் அப்பாஸ் (ரழி) அவர்களும் அருகில் இருந்தார். அவர்களின் ஜனாஸாவுக்கு கலீஃபா உஸ்மான் (ரழி) அவர்களே முன்னின்று தொழுகை நடத்தினார்கள்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...