Home


ஜஃபர் இப்னு அபூதாலிப்  ரழியல்லாஹு அன்ஹு

ஜஃபர் இப்னு அபூதாலிப்  ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.590 - கி.பி.629) அவர்கள் அபூதாலிப் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களின் மூன்றாவது மகனாவார். அலீ (ரழி) அவர்களின் மூத்த சகோதரரும், நபி (ஸல்) அவர்களின் பெரிய தந்தையின் மகனும் ஆவார்.. மக்காவிலிருந்த முஸ்லிம்களுள் சிலர் அபிசீனியாவில் அடைக்கலம் புகுந்த பொழுது அந்நாட்டு மன்னர் நஜ்ஜாஷிக்கு இவர்கள் மூலமாகவே நபி (ஸல்) அவர்கள் அறிமுகக் கடிதம் அனுப்பி வைத்தார்கள். அவர் முன் சற்றேனும் அஞ்சாது ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் திருத்தூதருமாவர் என்று இவர்கள் கூறியது நஜ்ஜாஷியின் கருத்துக்கு இணக்கமாய் இருந்தது. எனவே, இவர்களை அடிக்கடி தம் அரண்மனைக்கு அழைத்து இவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார் அவர்.

இஸ்லாமிய வரலாற்றில் இவர்கள், ‘இரு இறக்கைகளுள்ளவர்’ எனப் பொருள்படும் ‘துல் ஜனாஹைன்’  மற்றும் “ஜஃபர் அத் தையார்” என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டன. இவர்கள் ஏழை பங்காளராயிருந்தமையின் இவர்களுக்கு, ‘அபுல் மஸாகீன்’ (ஏழைகளின் தந்தை) என்ற பெயரும் இருந்தது. அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்து தம் உயிரை அர்ப்பணம் செய்த உத்தம சஹாபாக்களில் ஒருவர் ஆவார்.

ஆரம்ப கால வாழ்வு

        அபூதாலிப் இப்னு அப்துல் முத்தலிபு மற்றும் ஃபாத்திமா பின்த் அஸத் ஆகியோரின் மூன்றாவது மகனாக கி.பி. 590ல் மக்காவில் பிறந்தார். இவர்களுக்கு மூத்தவர் தாலிபும், அகீலும் ஆவர். இளையவர் அலீ (ரழி) ஆவர். அபூதாலிப் அவர்கள் ஒரு பஞ்ச காலத்தில் பெரிதும் துன்புற்ற பொழுது இவர்களை அப்பாஸ் இப்னு அப்துல்முத்தலிப் (ரழி) அவர்களும், அலீ (ரழி) அவர்களை நபி (ஸல்) அவர்களும் தங்கள் இல்லம் அழைத்துச் சென்று வளர்த்தார்கள்.

        இஸ்லாமிய ஆரம்ப காலத்திலேயே இவரும், இவரது மனைவி அஸ்மா பின்த் உமைஸ் அவர்களும் இஸ்லாத்தினை தழுவி குறைஷிகளின் இன்னல்களுக்கு, தொல்லைகளுக்கு ஆளாயினர்.

அபிஸீனியாவில் அடைக்கலம்

        ”யா ரசூலல்லாஹ்! குறைஷிகளின் கொடுமைகளின்றும் தற்காத்துக் கொள்ள எங்களை அனுமதிக்க மாட்டீர்களா? என நபித்துவம் ஐந்தாம் ஆண்டு ஒர் நாள் முஸ்லிம்கள் பெருமானாரிடம் முறையிட்டனர். நபி (ஸல்) அவர்கள் மனங்கசிந்தவர்களாக இறைவனின் உத்தரவை எதிர்பார்த்து நின்றார்கள். அப்போது, “முன்னைய நபிமார்கள் இன்னல்களைச் சகித்துக் கொண்டதே போல் நீங்களும் இருந்து வரக் கடவீர்” என்ற செய்தி தான் கிடைத்தது. “இல்லாவிடில் மக்காவை துறந்து வேறு எங்காவது செல்ல எங்களைப் பணியுங்கள்” என அடுத்தச் சிலர் கண்ணீர் சிந்தி வேண்டினர்.

        நபி (ஸல்) அவர்கள் தங்கள் கண்களில் நீர் மல்கியவர்களாக அபிஸீனியா நாட்டின் பக்கம் தங்கள் திருக்கரம் நீட்டிக் காண்பித்தவாறு, “இங்கு நிலைமை சரிப்பட்டு வரும் வரை அபிஸீனியா சென்று சிறிது காலம் தங்கியிருங்கள். அந்நாட்டு மன்னர் கிறிஸ்தவர், நற்குணமுடையவர் எனக் கேள்வியுற்றிருக்கிறேன் அவர் உங்களைக் கருணையுள்ளத்துடன் ஏற்றுக் கொள்வார்” என ஆறுதல்மொழி பகர்ந்தனர்.

        அவ்வாறே, பனிரெண்டு ஆண்களும் நான்கு பெண்களும் கொண்ட முஸ்லிம் குழு ஒன்று ஹிஜ்ரி ஐந்தாம் ஆண்டு ரஜப் மாதம் கி.பி.615ல் அபிஸீனியாவுக்கு இரகசியமாகப் பயணமானது. அப்போது அபிஸீனியாவை நஜ்ஜாஷி அஸ்மஹம் இப்னு அப்ஹர் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அபிஸீனியாவுக்கு முஸ்லிம்கள் குழு ஒன்று புறப்பட்ட விஷயம் எவ்வாறோ குறைஷிகளுக்கு தெரிய வந்தது. உடனே குதிரை வீரர்கள் சிலரை அனுப்பித் தேடச் சொன்னதில், அக்கோஷ்டி, ஷுஐபாவிலிருந்து கப்பலேறிச் சென்று விட்டதாகத் தகவல் கொண்டு வந்தார்கள். எனவே அபிஸீனிய மன்னருக்குத் தூதனுப்பி முஸ்லிம்களைத் தங்களிடம் ஒப்படைக்க கோருவதென முடிவு செய்தனர்.

குறைஷிகளின் சூழ்ச்சி

விலை மதிப்புள்ள சாமான்களைக் காணிக்கையாகவும், வெகுமதி பொருட்களையும் சேகரித்துக் கொண்டு அம்ரிப்னுல் ஆஸ், அப்துல்லாஹ் பின் அபீ ரபீ ஆ ஆகிய இருவர்  தலைமையில் அபிஸீனியா போய் சேர்ந்து அங்குள்ள அரசவையின் முக்கிய மந்திரிகளையும், பாதிரிகளையும் கண்டு நளினமாகவும், நயவஞ்சகமாகவும் பொய்களைப் புனைந்து கூறி, தாங்கள் கொண்டு சென்ற மனங்கவர் வெகுமதிகளை இலஞ்சமாக அளித்து, “எங்கள் நாட்டிலிருந்து சிலர் ஓடி வந்து தஞ்சம் புகுந்துள்ளனர்; நாளையத் தினம் அரசவையில் மன்னரிடம் இவ்விபரங்களை எடுத்துக்கூறி அத்துரோகிகளை எங்களிடம் ஒப்படைக்குமாறு கோரவிருக்கிறோம். அதற்கு ஆதரவு நல்கிப் பரிந்துரை கூற வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டனர்.

அதுபோலவே மறுநாள்  அவ்விருவரும் அரசவை சென்று தாங்கள் கொண்டு வந்த காணிக்கைகளை மன்னரின் முன் வைத்து விபரங்களை கூறினர். அரசவையில் இருந்த மந்திரி, பிரதானி, பாதிரிகளும் அதற்கு ஆம் பாடினர். மன்னர் நீதிவான் ஆனதால் “எதிர் தரப்பாரது வாய்மொழி கேளாது எதுவும் செய்ய இயலாது” எனக் கூறி முஸ்லிம்களை அரசவைக்கு அழைத்து வருமாறு உத்தரவிட்டார்.

முஸ்லிம்களிடம் விசாரனை

முஸ்லிம்கள் சிறு அச்சத்துடன் அரசவைக்கு வந்தனர். மன்னர் அவர்களிடம் “உங்கள் நாட்டை விட்டு நீங்கள் இங்கு வந்த காரணம் யாது? நீங்கள் பின் பற்றும் மார்க்கம் என்ன போதிக்கின்றது? விபரமாக கூறுவீர்” என கேட்டார்.

முஸ்லிம்களில் பேச்சுத்திறன் மிக்கவரும், அபூதாலிபின் மகனும், அலீ (ரழி) அவர்களின் மூத்த சகோதரருமான ஜஃபர்(ரழி) அவர்கள் எழுந்து “பெருமதிப்பிற்குரிய அரசே! நாங்கள் நாகரிகமற்றவர்களாக வாழ்ந்தோம்! விக்கிரகங்களைத் தெய்வமென வணங்கி வந்தோம்; பெண்களைத் தட்டு முட்டுச் சாமான்களாக பாவித்துக் கொடுமைப் படுத்தினோம். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து வந்தோம்; சூதாட்டத்திலும், குடியிலும் விபச்சாரத்திலும் மூழ்கிக் கிடந்தோம்; அற்ப விஷயத்திற்கெல்லாம் நாங்கள் போரிலும், பூசலிலும், கொலையிலும், பழிவாங்குவதிலும் ஈடுபட்டோம். இவ்வித சுபாவங்களே எங்களிடம் மிகைத்து நின்றன. இந்நிலையில், எங்களிடையே முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னும் திருநாமம்பூண்டு ஒருவர் தோன்றினார். அவர் ஒழுக்க சீலராகவும், காருண்யம் மிக்கவராகவும் நற்குணங்கள் அனைத்தும் ஒருவராய்த் திரண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார். அவர் தம் நாற்பதாம் வயதில் இறைவன் அவரைத் தம் திருத்தூதராக நியமித்து அவர் மூலம் ’புர்கான்’ என்ற திருவேதத்தை அருளிச் செய்து வருகிறான். அவ்வேதத்தின் அறப்போதத்தின் படி அவர், நாங்கள் அனுஷ்டித்து வந்த அனாச்சாரங்களைக் கைவிடச் செய்து நல்வழிப்படுத்தி வருகிறார். விக்கிரகங்களை வணங்காது ஏக நாயனை வணங்குமாறு கற்பித்துத் தந்தார்; இறைவனுக்கன்றி மற்றெவருக்கும் சிரம் தாழ்த்தக் கூடாதெனப் பணித்துள்ளார். ஒழுக்கப் பண்பாடுடையவர்களாக எங்களை மாற்றியமைத்து வருகிறார். ஆனால் அத்திருநபியவர்களையும் அவர்களைப் பின்பற்றும் முஸ்லிம்களாகிய எங்களையும் மக்காவாசிகளான இந்த விக்கிரகத் தொழுபவர்கள் சென்ற ஐந்தாண்டு காலமாகப் படுத்தி வரும் இன்னல்களும் கொடுமையும் இயம்பவொண்ணாதன  எனவே தான், அம்மாநபி அவர்கள் எங்களைத் தங்களின் பாதுகாப்பில் அடைக்கலம் தேடிக் கொள்ளுமாறு இங்கு அனுப்பினார்கள். மன்னர் மகிபராகிய தங்களின் காருண்யத்தின் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். இந்த அரபிக் குறைஷியருக்கு நாங்கள் அடிமைப் பட்டவர்களல்ல! பணத்தாலோ அல்லது இரத்தத்தாலோ அவர்களுக்குக் கடன் பட்டவர்களுமல்ல” என மிக உருக்கமுடன் எடுத்துச் சொன்னார்.

திருவசனங்களின் தெய்வீக நாதம்

ஜஃபரின் சொல்லாற்றலும் விஷய விளக்கமும் மன்னர் நஜ்ஜாஷியின் உள்ளத்தை மிகவும் கவர்ந்து விட்டன. அப்போது அவர், “ உங்களின் நபிக்கு இறங்கிய வேத வசனங்களில் சிலவற்றை ஓதிக் காண்பியும்” எனப் பணித்தார். உடனே ஜஃபர் (ரழி) அவர்கள் தமது குயிலினுமினிய குரலில் “சூரா மர்யம்” என்ற திருக்குர் ஆன் 19 ஆம் அத்தியாயத்திலிருந்து சில திருவசனங்களை ஓதிக் காண்பித்தார். மன்னரும் அவையில் இருந்தோரும் திருவசனங்களின் தெய்வீக நாதத்தால் ஆட்கொள்ளப் பட்டவர்களாய் மனம் உருகிப் புளகாங்கிதம் அடைந்து கண்ணீர் உகுத்து நின்றனர்.

ஜஃபர் (ரழி) ஓதி முடித்ததும் அரசர் குறைஷி தூதுவர்களை விளித்து, “அடைக்கலம் புகுந்தோரைத் திருப்பியனுப்ப முடியாது! நீங்கள் நாடு திரும்பலாம்” என்று கூறிக் காணிக்கைகளையும் ஏற்க மறுத்து விட்டார்.

தோல்வியடைந்த குறைஷி தூதுவர்கள்

மறுநாள் அம்ருப்னுல் ஆஸ் மன்னரிடம் சென்று “முஸ்லிம்கள் இயேசுவை சாதாரண மனிதப் பிறவி என்கின்றனர்” என துர்ப்போதனை செய்தார். பின்னர், ஜஃபரை மறுபடியும் அழைத்து அது பற்றி விசாரித்த போது, அவர், “எங்கள் நபிகள் பெருமானாருக்கு இறைவனால் அறிவிக்கப் பட்டதின் படி, நாங்கள் இயேசுவை இறைவனின் அடியார் என்றும் அவனின் திருத்தூதர் எனவும் பரிசுத்த ஆவியாகவும், அவனது வார்த்தையாகவும், கன்னி மர்யம் அவர்களின் கர்ப்பத்தில் இறை ஆணைப்படி இடம் பெற்றார் எனவும் நாங்கள் விசுவாசிக்கின்றோம்” எனக் கூறினார். உடனே மன்னர், அருகில் தரையில் கிடந்த ஒரு சிறு குச்சியை எடுத்துக் காண்பித்து, “இறைவன் மீது ஆணையாக, மர்யமுடைய மகன் ஈஸா, நீர் சொன்னதைவிட இந்த குச்சியின் அளவு கூட அதிக மேன்மையுற்றவராக இருக்கவில்லை” எனக்கூறி, “செல்லுங்கள், யார் எதைக் கருதினாலும், நீங்கள் என் நாட்டில் பாதுகாப்புப் பெற்றவர்களாக இருந்து வருவீர்கள்!” எனக் கூறியனுப்பினார். அம்ருவும், அப்துல்லாஹ்வும் தங்கள் தூதில் தோல்வியைக் கண்டவர்களாக மக்காவுக்குத் திரும்பிச் சென்றனர்.

இஸ்லாத்தின் மீது நஜ்ஜாஷி கொண்ட அன்பின் காரணமாக அவருக்கு எதிராகப் புரட்சி ஏற்பட்ட பொழுது அவருக்கு ஆதரவு தரும் வகையில் இவர்களும் ஏனைய முஸ்லிம்களும் வாளேந்திப் போர் புரியத் தயாரானார்கள் என்றும், அதற்குள் நஜ்ஜாஷி அப்புரட்சியை அடக்கி விட்டார் என்றும் கூறப்படுகிறது.

நஜ்ஜாஷி  இஸ்லாத்தை ஏற்றது

நஜ்ஜாஷி, பின்பு ஜஃபர் (ரழி) அவர்களை அடிக்கடி அரண்மனைக்கு அழைத்து உரையாடி, இஸ்லாத்தைப் பற்றியும், பெருமானார் அவர்களைப் பற்றியும் அதிகம் கேட்டறிந்தார். சிறிது காலத்திற்குப் பின்பு அவர் இஸ்லாத்தைத் தழுவி அரசபாரந் துறந்து அண்ணலாரை நேரில் தரிசித்து மரியாதை செலுத்தி வர ஹிஜ்ரி 9ம் ஆண்டு ரஜப் மாதம் மதீனாவுக்குப் பயணமானார். கப்பலில் வரும்போது புயலில் சிக்கி அவர் கடலில் முழ்க நேர்ந்தது. இதனைத் தீர்க்க தரிசனத்தால் அறிந்த நபி (ஸல்) அவர்கள் மறைவான பிரேத (காயிபு ஜனாஸா) தொழுகை நடத்தி அவரின் மஃபிரத்துக்குப் பிரார்த்தனை புரிந்தார்கள்.

மதீனா திரும்பிய ஜஃபர் (ரழி)

பனிரெண்டு ஆண்டுகள் அபிசீனியாவில் வாழ்ந்த இவர்கள்,  கைபர் வெற்றியின் போது தான் நபி (ஸல்) அவர்களை மீண்டும் சந்தித்தார்கள். இவர்களைத் தொலைவில் வைத்தே இலக்குக் கண்டு கொண்ட நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சி மிகுதியால் இவர்களை நோக்கி ஒடோடிச் சென்று இவர்களைக் கட்டித் தழுவி இவர்கள் புருவ மத்தியில் முத்தமிட்டு, ‘கைபர் வெற்றி எனக்கு அதிக மகிழ்வு நல்குகிறதா, ஜஃபரைச் சந்தித்தது எனக்கு அதிக மகிழ்வு நல்குகிறதா என்பதை நான் அறியேன். நிச்சயமாக, ஜஃபரைச் சந்தித்தது தான் எனக்கு அதிக மகிழ்வு அளிக்கிறது.’ என்று மகிழ்ச்சி மொழி பகர்ந்தார்கள். கைபரில் கிடைத்த கொள்ளைப் பொருள்களுள் இவர்களுக்கும் நான்கு பங்குகள் அளித்தார்கள் அவர்கள்.

மூத்தா போரின் தளபதிகளில் ஒருவர்

மூத்தா போரில் ஸைத் இறந்ததும் இவர்கள் இஸ்லாத்தின் கொடியைத் தாங்கி வெற்றி பெறுவது அல்லது வீர மரணம் எய்துவது என்பதன் அறிகுறியாய்த் தங்கள் குதிரையின் கால்களையும் வெட்டி விட்டுக் கீழே இறங்கிப் போர் செய்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாறு முதன் முதலாய்ச் செய்தவர்கள் இவர்களேயாவார்கள். இவர்களது வலக்கை வெட்டப்பட்டதும் இடக்கையால் இஸ்லாத்தின் கொடியைத் தாங்கிப் பிடித்த வண்ணம் சமராடினார்கள். அதுவும் வெட்டப்பட்டதும்  தங்கள் நெஞ்சாலும் தம் கைகளில் எஞ்சியிருந்த பகுதியாலும் அதைப் பிடித்துக் கொண்டு போராடித் தங்கள் உடலில் எண்பது காயங்கள் பெற்றுக் காலமானார்கள்.

இவர்களது அடக்கவிடம் மூத்தாவில் உள்ளது. (தற்பொழுது இந்த இடம் ஜோர்டானில் உள்ளது) அதன் மீது மலிக்குல் முஅஸ்ஸம் ஈஸா கட்டடம் எழுப்பியுள்ளார்.

ஜஃபர் (ரழி) அவர்களின் சிறப்பு

இவர்கள் தங்களுடைய இரு கைகளுக்கும் பகரமாகச் சுவனத்தில் இரு சிறகுகள் அளிக்கப் பெற்று வானவர்கள் போன்று விளங்கியதைத் தாம் கண்டதாய் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாகவே ‘பறப்பவர்’ எனப் பொருள்படும் ‘தையார்’ என்ற சிறப்புப் பெயரும் ‘இரு இறக்கைகளுள்ளவர்’ எனப் பொருள்படும் ‘துல் ஜனாஹைன்’ என்ற சிறப்புப் பெயரும் இவர்களுக்கு ஏற்பட்டன. இவர்கள் ஏழை பங்காளராயிருந்தமையின் இவர்களுக்கு, ‘அபுல் மஸாகீன்’ (ஏழைகளின் தந்தை) என்ற பெயரும் இருந்தது.

ஜஃபர் (ரழி) அவர்களின் குடும்பம்

இவர்களுக்கு முஹம்மது என்றும் அப்துல்லாஹ் என்றும் இரு மக்கள் இருந்தார்கள். முஹம்மது தம் பெரிய தந்தை அபூதாலிபை ஒத்திருப்பதாயும், அப்துல்லாஹ் தம்மை ஒத்திருப்பதாயும்   நபி (ஸல்) அவர்கள் கூறி அவர்களுக்காக இறைவனிடம் இறைஞ்சினார்கள்.

இவர்களின் விதவை மனைவி அஸ்மா பின்த் உமைஸைப் பின்னர் அபூபக்ர் (ரழி) அவர்கள் மணமுடித்து வாழ்ந்தார்கள்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...