Home


ஹன்ளலா இப்னு அபூ ஆமிர் ரழியல்லாஹ் அன்ஹு

ஹன்ளலா இப்னு அபூ ஆமிர் ரழியல்லாஹ் அன்ஹு (கி.பி.601 - கி.பி.625) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்(சஹாபி)களில் ஒருவர். திருமணம் ஆகி மணவறையில் இன்பம் துய்த்துத் தூய்மையற்ற நிலையைக் குளித்துக் களைவதற்குள் உஹுத் போர் களம் சென்று வீரமுடன் இணைவைப்பாளர்களின் அணிக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கிய வண்ணம் இணைவைப்பாளர்களின் தளபதியான ‘அபூ ஸுஃப்யானை' நெருங்கி கடுமையான போர் புரியும் சமயம் பின்னால் இருந்து தாக்கப்பட்டு வீர மரணமா(ஷஹீதா)னார். ‘கஸீல் அல்மலாயிக்கா’ ’மலக்குகளால் குளிப்பாட்டப் பட்டவர்கள்’ என்ற சிறப்புக்குரியவர்.

பிறப்பு

ஹன்ளலா (ரழி) மதீனா அன்சாரிகளில் பனூ அவ்ஸ் கோத்திரத்தை சேர்ந்தவர். இவர் கி.பி.601 இல் மதீனாவிற்கு அருகில் பிறந்தார். இவரது தந்தை போலிப் புரோகிதன் அபூ ஆமிர் ஆவார். இந்த அபூ ஆமிர் மதீனாவில் கிருஸ்தவத் துறவியாக கெளரவத்துடனும் செல்வாக்குடனுமிருந்து வந்தார் அங்கு பெருமானாருக்கு ஏற்பட்ட மேதை மரியாதைகளைக் கண்டு பொறாமையுற்று அங்கிருக்க மனமில்லாதவராய் மக்காவுக்கு வந்து குறைஷிகளைப் போர் செய்ய தூண்டி வந்தார். உஹுத் போர்களத்தில் குறைஷிகள் சார்பில் முதன் முதலாக தோன்றியவரும் இவரே. இவரை வெட்டி சாய்க்க முஸ்லிம் ஆன அவரது மகன் ஹன்ளலா (ரழி) பெருமானாரின் அனுமதியை வேண்டி நின்றார். ஆனால் ஒரு தந்தைக்கு எதிராக ஒரு தனயன் வெட்டுவதற்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி மறுத்தார்கள். மேலும் இவரை உஹுத் போர் புரிய படையிலும் சேர்க்கவில்லை.

இவருக்கு அன்று திருமணம் வயது 24, இவரது மனைவி பெயர் ஜமீலா, இவர் அப்துல்லாஹ் இப்னு உபை என்பவரின் சகோதரி. திருமணம் ஆகி மணவறையில் இன்பம் துய்த்துத் தூய்மையற்ற நிலையைக் குளித்துக் களைவதற்குள் உஹுத் களம் புகுந்தார். பின்னர் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பெயர் அப்துல்லாஹ் இப்னு ஹன்ளலா.

பொய்ச் செய்தி மற்றும் வதந்தி

        உஹுத் போர்க்களத்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் காலமாகி விட்டார்கள் என்ற பொய்ச் செய்தி காட்டுத் தீ போல் மின்னல் வேகத்தில் மதீனாவைச் சென்றடைந்தது. இதைக் கேள்வியுற்ற யூதர்களும், பிற வேடதாரிகளும் மகிழ்ந்து போனார்கள். குறைஷிகளின் தளபதி அபூசுஃப்யானிடம் ஒரு தூதரை அனுப்புவது என்று கூடிப் பேசிக் கொண்டார்கள். இந்த வதந்தி தந்த செய்தி கேட்டு அதிர்ந்து போன மதீனா வாழ் முஸ்லிம்கள் எவ்வித ஒழுங்குமுறையும் கருதாது போர்க்களம் நோக்கி விரைந்தார்கள். அவர்களுடன் ஹன்ளலாவும் இருந்தார். இப்பொழுது இவரது குறி முழுவதும் அபூசுஃப்யானை ஒழிப்பதில் இருந்தது.

மனைவியைப் பிரிந்து போர்க்களம் நோக்கி…

அன்றைய தினத்தில் ஆபத்துகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் களத்தில் துணிச்சலுடன் போர் புரிந்த வீரர்களில் ‘அல்கஸீல்' என்று அழைக்கப்படும் ஹன்ளலா (ரழி) அவர்களும் ஒருவர். இவர் முஸ்லிமல்லாதவர்களால் ‘துறவி' என்றும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் ‘பாவி' என்றும் அழைக்கப் பட்ட அபூ ஆமிரின் மகனாவார். ஹன்ளலா (ரழி) அன்று தான் திருமணம் முடித்திருந்தார்கள். தனது மனைவியுடன் தனித்திருந்த இவர்கள், போர்க்களத்தில் இருந்து பலத்த சப்தத்தைக் கேட்டவுடன் அதே நிலையில் போர்க்களத்தை நோக்கி ஓடோடி வந்து இணைவைப்பாளர்களின் அணிக்குள் புகுந்து எதிரிகளைத் தாக்கிய வண்ணம் முன்னேறி சென்றார்கள். இணைவைப்பாளர்களின் தளபதியான ‘அபூ ஸுஃப்யான்' என்ற ஸக்ர் இப்னு ஹர்பை நெருங்கி அவருடன் கடுமையான போர் புரிந்து அவரைக் கீழே வீழ்த்திக் கொல்வதற்கு நெருங்கிவிட்டார். அல்லாஹ் அவருக்கு வீர மரணத்தை முடிவு செய்யாமல் இருந்திருந்தால் இவர் அபூ ஸுஃப்யானை கொன்றிருப்பார். ஆனால், ஷத்தாத் இப்னு அஸ்வத் என்பவன் முதுகுப் புறத்திலிருந்து ஹன்ளலா (ரழி) அவர்களை ஈட்டியால் தாக்கியதில் அவர்கள் வீர மரணமடைந்தார்கள்.

மலக்குகளால் குளிப்பாட்டப் பட்டவர்

        நபி (ஸல்) அவர்கள், “நான் மலக்குகளைப் பார்த்தேன். ஹன்ளலா(ரழி) அவர்களை ஐஸ் தண்ணீரை வெள்ளிப் பாத்திரத்தில் வைத்துக் குளிப்பாட்டிக் கொண்டு இருந்தார்கள்.” என்று தங்கள் தோழர்களிடம் கூறினார்கள். பின்பு ”அவரது குடும்பத்தாரிடம் சென்று விபரம் அறிந்து வாருங்கள்” என்று கூறி அனுப்பினார்கள்.

        தோழர்கள் அவரது மனைவியிடம் விசாரிக்க : “ ஹன்ளலா (ரழி) முழுக்குடைய(குளிக்க வேண்டிய) நிலையில் யுத்தத்திற்கு புறப்பட்டு அதே நிலையில் வீர மரணம் அடைந்துள்ளார்கள்” என்று அந்த மனைவி கூறினார். அதே ஹன்ளலா(ரழி) அவர்களின் மனைவி முன்பு கனவில் பார்த்தார்கள்: வானத்திலிருந்து ஒரு கதவு திறந்தது. அதில் ஹன்ளலா (ரழி) அவர்கள் நுழைந்தார்கள். அவர்கள் நுழைந்ததும் கதவு அடைக்கப்பட்டது. இதைப் பார்த்ததும் அவர்களின் மனைவி விளங்கிக் கொண்டார்கள். ஹன்ளலா (ரழி) அவர்கள் இவ்வுலகை விட்டும் பிரிந்து விடுவார்கள் என்று. போர் முடிந்ததும் ஹன்ளலா (ரழி) அவர்களின் உடலைப் பார்த்த பொழுது தலையில் தண்ணீர் சொட்டு வடிந்து கொண்டு இருந்தது. அதனால் அவர்களுக்கு  ‘கஸீல் அல்மலாயிக்கா’ ’மலக்குகளால் குளிப்பாட்டப் பட்டவர்கள்’ என்று பெயர் வந்தது.

தியாகிகளின் உடல்களை நல்லடக்கம் செய்தல்

        உஹுத் போரில் உயிர் நீத்த தியாகிகளை முன்னோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நான் உங்களுக்கு சாட்சியாக இருப்பேன். அல்லாஹ்வின் பாதையில் காயமடைந்தவரை மறுமையில் அல்லாஹ் எழுப்பும் போது அவரது காயத்திலிருந்து இரத்தம் வடியும். அதன் நிறம் இரத்தத்தின் நிறமாகத்தான் இருக்கும்: ஆனால் அதன் மணமோ கஸ்தூரி போன்று இருக்கும்.”

                                                                                        (இப்னு ஹிஷாம்)

        நபி தோழர்களில் சிலர் தங்கள் குடும்பத்தில் கொல்லப்பட்டவர்களை மதீனாவிற்கு எடுத்துச் சென்றிருந்தனர். நபியவர்கள், அவர்களை மீண்டும் உஹுதுக்கு தூக்கி வரும்படி கூறி “அவர்களைக் குளிப்பாட்டக் கூடாது; அவர்கள் உடலிலுள்ள போருக்குரிய ஆயுதங்களைக் கழற்றிய பின், அவர்கள் கொல்லப்பட்ட இடங்களிலேயே அவர்களை அடக்க வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள்.

        அதன் படி ஹன்ளலா (ரழி) அவர்களின் நல்லுடல் நபி (ஸல்) அவர்களால் தொழவைக்கப்பட்டு  நல்லடக்கம் செய்யப்பட்டது.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...