அர்கம் இப்னு அபுல் அர்கம் ரழியல்லாஹு அன்ஹு
அர்கம் இப்னு அபுல் அர்கம் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி593-கி.பி675) அவர்கள் மக்சூம் கிளையைச் சேர்ந்தவர். அல் முகைராவின் சகோதரருடைய பேரராவார். பிரபலமான நபித் தோழரான அர்கம் (ரழி) அவர்கள் மிகவும் துவக்க காலத்தில் இஸ்லாத்தில் இணைந்து மார்க்கத்திற்காக அளப்பறிய தியாகத்தை செய்துள்ளார்கள். இவர் தனது இல்லத்தை நபி (ஸல்) அவர்களுக்கு இஸ்லாத்தின் செயலகமாக இருக்க இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் அர்பணித்தார்கள். இந்த வீடு தான் இஸ்லாத்தின் முதல் மதரஸா (கல்விகூடம்), தஃவா (அழைப்பு) பணிக்கான முதல் மையம், இஸ்லாம் துவங்கிய இடம்.
ஆரம்ப கால வாழ்வு
குறைஷி குலத்தில் மக்சூம் கிளையில் அபுல் அர்கம், என்றழைக்கபட்ட அப்துல் மனாப் இப்னு அஸத் இப்னு உமர் இப்னு மக்சூம் என்பவருக்கும், குஸாஆ குலத்தைச் சேர்ந்த அன்னை உமைமா பின்த் அல் ஹாரிஸ் என்பவருக்கும் மகனாக கி.பி 593 இல் மக்காவில் பிறந்தார்கள். இவருக்கு மிகவும் சக்தி வாய்ந்த பாம்பு என பொருள் படும் அர்கம் என அவரது பெற்றோர்கள் பெயரிட்டனர்.
நபி (ஸல்) அவர்களின் நுபுவத் (நபித்துவத்)திற்கு முன்னர் மக்காவிற்கு வரும் பயணிகளுக்கும், ஏழைகளுக்கும் சேவையாற்றிட உறுவாக்கிய ‘ஹில்ஃபுல் ஃபுழூல்’ என்ற சேவை அமைப்பில் இவர் சிறுவராக இருந்த காலத்திலேயே இணைந்து பணியாற்றினர்.
இஸ்லாத்தினை தழுவுதல்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரம் துவங்கிய காலத்தில் இவருக்கு வயது பதினாரு. இவர் இஸ்லாத்தில் இணைந்தவர்களின் ஏழாமவர் என்றும், பத்தாமவர் என்றும் இருவேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
அபூபக்ர் (ரழி) அவர்கள் வியாபார நிமித்தம் ஏமன் சென்று திரும்பிய சமயம், நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் வஹீ மூலம் இறைதூதராக அறிவித்த மறுநாள் தனது ஆருயிர் நண்பரை காண விரைந்து சென்று நபி (ஸல்) அவர்களை சந்திக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் நடந்த விபரங்களை சொல்லி, நான் அல்லாஹ்வின் தூதராகி விட்டேன், இப்பொழுது அல்லாஹ்வின் பக்கம் தங்களை அழைக்கின்றேன் என்று கூறிய உடனேயே, அபூபக்ர் (ரழி) அவர்கள், “அல்லாஹுவை தவிர வேறு நாயன் இல்லை, நீங்கள் அல்லாஹ்வின் தூதர்” என்று மொழிந்து இஸ்லாத்தினை ஏற்று, மறுநாள் இஸ்லாமிய அழைப்பை கொடுக்க தொடங்கினார்கள். முதல் இஸ்லாமிய அழைப்பாளர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இரண்டாவது இஸ்லாமிய அழைப்பாளராக அபூபக்ர் (ரழி) அவர்கள் அழைப்பு பணி தொடங்கி முதலில் உஸ்மான் இப்னு அஃப்பான் (ரழி), அடுத்து தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரழி) அடுத்து ஜுபைர் இப்னு அவ்வாம் (ரழி) அடுத்து ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) ஆகியோரை சந்தித்து இஸ்லாத்தில் இணைத்தார்கள். மறுநாள் அதாவது வஹீ வந்து நான்காவது நாள் சென்று அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ் (ரழி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி), அபூ ஸலாமா இப்னு அப்துல் அஸத் (ரழி) அவரது மனைவி உம்மு ஸலமா, கடைசியாக அர்கம் இப்னு அபுல் அர்கம்(ரழி) ஆகியோர் அபூபக்ர் (ரழி) அவர்கள் கையில் இஸ்லாத்தை தழுவிய “அஸ்ஸாபிகூனல் அவ்வலூன்” முந்தியவர்கள் முதலாமவர்கள் ஆவர்.
தொழுகை
இஸ்லாமிய மார்க்கத்தில் தொழுகையே முதலாவதாக கடமையாக்கப்பட்டது. இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்: மிஃராஜுக்கு முன்பே நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தொழுது வந்தார்கள் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால், ஐவேளைத் தொழுகை கடமையாவதற்கு முன் ஏதேனும் தொழுகைகள் கடமையாக்கப்பட்டிருந்ததா இல்லையா என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. சிலர் ‘‘சூரிய உதயத்திற்கு முன்பும் மறைவதற்கு முன்பும் தொழுது கொள்வது கடமையாக இருந்தது'' என்று கூறுகின்றனர்.
இப்னு ஹிஷாம் (ரஹ்) கூறுகிறார்: நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் கணவாய்களுக்குச் சென்று இரகசியமாகத் தொழுது வந்தார்கள். ஒரு முறை நபி (ஸல்)அவர்களும் அலீ (ரழி) அவர்களும் தொழும்போது அபூதாலிப் பார்த்து அதுபற்றிவிசாரித்தார். அவ்விருவரும் நற்செயலையே செய்கிறார்கள் என்று தெரிந்து கொண்டதும் அதில் நிலைத்திருங்கள் என்று கூறினார்.
தோழர்கள் பெரும்பான்மை குறைஷி குப்பார்களின் கொடுமைகள் தாங்கவியலாத அளவுக்கு இருந்த பொழுது, தங்களது தொழுகைகளை இறைவணக்கத்தை நிறைவேற்ற கண்களுக்கு தெரியாமல் இஸ்லாமிய கடமைகளை செய்ய ஊருக்கு வெளியில் ஓடைக்கு, பள்ளத்தாக்கு அல்லது கணவாய்களுக்கு சென்று கடமையாற்றி வருவதையும் குறைஷிகளில் சிலர் மோப்பம் பிடித்து பின் தொடர்ந்து வந்து தாக்குதல் சம்பவங்கள் நடக்க தொடங்கின.
இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்த்து முதல் தாக்குதல்
ஒருமுறை ஸஹாபிகள் ஒதுக்குப் புறமான இடத்தில் அமர்ந்து, இறைவணக்கத்தில் தங்களது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த பொழுது, மக்கத்து ரவுடிக் கும்பலொன்று இவர்களது இருப்பிடத்தை அடையாளம் கண்டு கொண்டு, அங்கே சிறியதொரு கலவரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அங்கே கீழே கிடந்த ஒட்டகத்தின் எலும்பை எடுத்து அவர்களை நோக்கி படுவேகமாக வீசியெறிந்தார்கள் ஸஅத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள். இவர்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனின் தலையில் அந்த எலும்பு பட்டு, படுகாயத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, இரத்தம் வழிந்தோட ஆரம்பித்தது. ஒரு சிறுவன் அடிபட்டதும் மற்ற அனைவரும் அந்த இடத்தை விட்டு வெருண்டோடி விட்டார்கள்.
ஆலோசனை
இந்த சம்பவம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரிய வரவும், தனது தோழர்களிடம் நமக்கு ஒரு இடம் வேண்டும் என்ற ஆலோசனையை தொடங்கினார்கள். அந்த இடம் கட்டாயம் பாதுகாப்பான இடமாக வேண்டும், அங்கிருந்து இஸ்லாமிய அழைப்பு தரப்பட வேண்டும், சேர்ந்தவர்களுக்கு பயிற்சி தரப்பட வேண்டும். சப்தம் இல்லாமல் அழைப்பு பணி செய்ய வேண்டும். என பல இடங்களை யோசிக்கின்றார்கள். ஆள் ஆளுக்கு எந்த இடத்தை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்த்திருக்கும் பொழுது, அலீ (ரழி) அவர்களை விட ஒரு சில வயது அதிகம் உள்ள துடிப்பு மிக்க அர்கம் (ரழி) அவர்கள் எழுந்து ”யாரசூலுல்லாஹ் எனது வீட்டை தேர்வு செய்யலாமே, சபா மலையின் அருகாமையில் கஃபத்துல்லாஹ்வுக்கு பக்கத்தில் இருக்கிற எனது வீட்டை நான் தருகிறேன்”, என்று சொல்ல, நபி (ஸல்) அவர்கள் அர்கமின் வீட்டை தேர்வு செய்தார்கள்
அர்கம் (ரழி) அவர்களின் வீட்டை தேர்வு செய்த காரணங்கள்
இஸ்லாம் வளர கூடாது என வெளியில் குப்பார்கள் அடித்து துவைக்க என்று சுற்றிக் கொண்டிருந்தார்கள். பெரும்பான்மையான குப்பார்களுக்கு உண்மையாகவே அன்றைக்கு ஒரு மைனாரிட்டி சமூகம் இவர்களை அஞ்சியும், அனுசரித்தும் வாழ வேண்டிய சூழ்நிலையில் தள்ளபட்டிருந்தது. எனவே நபி (ஸல்) அவர்கள் நிணைத்தார்கள் இந்த சிறுவருக்கு சொந்தமான வீட்டில் முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று கூடுவதில் ஊர் மக்கள் யாருக்கும் சந்தேகம் வராது.
அவர்கள் எல்லோரும் பெரிதாக முஹம்மது எங்கே? அபூபக்ர் எங்கே? உஸ்மான் எங்கே? என்று தான் தேடிக் கொண்டிருப்பார்கள். இந்த சிறுவரின் வீட்டில் இப்படி எல்லாம் ஒன்று கூடுகிறார்கள் என்று குரைஷிகளின் மனதில் எண்ணம் வராது, ஆகையால் இந்த வீட்டை நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தார்கள்.
அல்லாஹ்வின் ஏற்பாடு
அர்கம் மக்சூம் கோத்திரத்தை சேர்ந்தவர், நபி (ஸல்) அவர்கள் பனூ ஹாஷிம் கோத்திரத்தை சேர்ந்தவர்கள். இந்த பனூ ஹாஷிமுக்கு நேர் எதிர் இந்த மக்சூம் கோத்திரம், இஸ்லாத்தின் மாபெரும் எதிரிகள் அபூஜஹ்ல், வலீது பின் உகைரா, காலித் பின் வலீத் மேலும் பலரும் மக்சூம் கோத்திரத்தை சேர்ந்தவர்கள்.
அந்த மக்சூம் கோத்திரத்திலிருந்து தான் அல்லாஹ் ஒரு சிறியவரை மார்க்கத்திற்கு கொடுக்கின்றான். எந்த மக்சூம் கோத்திரம் இஸ்லாத்திற்கு தடையாக இருக்கிறதோ அதே மக்சூம் கோத்திரத்திலிருந்து இஸ்லாமிய வளர்ச்சிக்கு ஒருவரை காரணமாக்குகின்றான். இது அல்லாஹுவின் ஏற்பாடு. அவங்களுக்குள்ளேயே ஒரு வீட்டில் போய் உட்கார்ந்திருப்பதை அவர்கள் நிணைத்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் பார்வை முழுவதும் பனூ ஹாஷிம் மீது தான் பாயும்.
இஸ்லாத்தின் செயலகமாக இருந்த அர்கமின் வீடு
இவர் தாம் இவருடைய குடும்பத்தின் தலைவராக இருந்தமையின் இஸ்லாத்தின் செயலகமாக இருக்க இவர் தம் இல்லத்தை வழங்கினார். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்முடைய செயலகமாக இவருடைய இல்லத்தைத் தேர்ந்தெடுத்ததிலிருந்து இஸ்லாத்தின் வாழ்விலேயே ஒரு புதுத்திருப்பம் ஏற்பட்டது. முக்கியமானவர்களில் பலர் இக்காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவினர். இவ்வில்லம் ஸஃபா மலையின் அடிவாரத்தில் இருந்ததனால் முஸ்லிம்கள் தங்களின் தொழுகையை இங்கு தான் நிறைவேற்றினர். எனவே மக்கா வரும் வெளியூர்வாசிகள் இவ்வில்லத்திற்கு குறைஷிகளின் கண்களுக்கு தென்படாமல் அழைத்து வரப்பட்டனர்.
இங்கு முதல் வஹீயை சொல்லி கொடுத்த மற்றும் விளம்பிய இடம், முதல் மதரஸா அது, முதல் தொழுகை பள்ளிவாசல் அது, மக்காவில் முஸ்லிம்கள் கூடி கலந்தாலோசிக்க ஆறுதலாய் கிடைத்த இடம், ‘தாருஸ் ஸலாம்’ என்னும் புகழ் பெற்று விளங்கிய இவ் வில்லம் இன்றும் கஃபாவின் ஒரு அங்கமாக உள்ளது. இவ் வில்லத்தில் தான் அல்லாஹ்வின் சிங்கம் ஹம்ஜா (ரழி) அவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள். மறு நாள் இவ்வில்லத்தில் வைத்துத்தான் உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர். இவர்கள் இஸ்லாத்தில் இணைந்த 40 ஆவது நபர் ஆவார். இவரே பகிரங்கமான அழைப்பை கஃபாவில் பிரகடன படுத்தினார். இதன் பின் முஸ்லிம்கள் சற்று துணிவுடன் பகிரங்கமாகத் தங்களின் தொழுகையை நடத்தலாயினர். எனவே இதன் பின் இவ்வில்லம் கூட்டு (ஜமா அத்) தொழுகைக்குப் பயன் படுத்தப் படவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவ் வில்லத்தில் எவ்வளவு நாட்கள் தங்கியிருந்து இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தார்கள் என்று திட்டமாகத் தெரியவில்லை, எனினும் கி.பி.615-ஆம் ஆண்டிலிருந்து கி.பி.617-வரை அவர்கள் இங்குத் தங்கி இஸ்லாமியப் பிரச்சாரம் நடத்தினார்கள் என்று கொள்ளலாம்.
ஹிஜ்ரத்
முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குக் (ஹிஜ்ரத்) குடிபெயர்ந்த பொழுது அர்க்கமும் அவ்வாறே செய்தார். இவர் அங்கு பனூ ஸுரைக் குடும்பத்தினர் வாழ்ந்த பகுதியில் குடியேறி வாழ்ந்தார். இவர் ஆங்கு வாழ்ந்த இல்லமும் ‘அர்க்கமின் இல்லம்’ என்றே அழைக்கப்பட்டது.
அர்கம் (ரழி) அவர்களின் சிறப்புகள்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப கால இஸ்லாமிய அழைப்பு பணிக்கு, அர்கமுடைய வீட்டை தேர்ந்தெடுத்தார்கள். இது அவருக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று சொல்லலாம்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நுபுவத்திற்கு முன்னரே மக்காவில் “ஹில்ஃபுல் ஃபுழூல்” என்ற பொது சேவை இயக்கம் ஆரம்பித்து நிராதரவாக நிற்கும் எளியார்களுக்கு சேவையாற்றினார்கள் அல்லவா! அதில் சிறியவரான அர்கம் (ரழி) அவர்கள் இணைந்து பங்கு கொண்டார்கள்.
வஹீ வருவதை எழுதும் பாக்கியம் நிறைந்த பணி அவருக்கு கிடைத்தது. வஹீ எழுத்தராக பணி செய்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் சதாகாவுடைய பொருட்களை, அமானிதமும் நம்பிக்கையும் நிறைந்தவரை தான் பொறுப்பாளராக நியமிப்பார்கள். முஸ்லிம்களின் சதகாவுக்கு பொறுப்புதாரியாக அர்கம் (ரழி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள் என்றால் அவருடைய மனத்தூய்மை, நம்பிக்கை, அமானிதம் எல்லாம் பொருந்தியவராக இருந்தார்கள்.
ஹலரத் அர்கம் (ரழி) அவர்கள் பத்ரு போரில் பங்கு பெற்று திரும்பிய பொழுது, பத்ரு போரில் கிடைத்த பொருட்களை நபி (ஸல்) அவர்கள் பங்கீடு செய்து கொடுத்து கொண்டு இருந்தார்கள். அப்பொழுது அவர்களுடைய கையில் மிகச் சிறந்த வாள் எனப்படும் மர்துபான் வாள் வைத்திருந்த பொழுது அதை அர்கம் (ரழி) அவர்கள் கேட்டார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் உடனே கொடுத்து விட்டார்கள். பெருமானார் கையில் மர்துபான் வாளை பெற்ற பெரும் பெருமைக்குரிய சஹாபி.
உஹது போர், அகழ் போர் மற்றும் அனைத்து நபி (ஸல்) அவர்கள் பங்கு பெற்ற அனைத்து போர்களிலும் அர்கம் (ரழி) அவர்கள் பங்கு கொண்டார்கள்.
இறுதி வாழ்வும், இறப்பும்
அர்கம் (ரழி) அவர்கள் மதீனாவில் தனது 83 வது வயது வரையில் வாழ்ந்தார்கள். தனது முதுமையில் தனது மகன் அப்துல்லாஹ் இப்னு அர்கம் (ரழி) அவர்களை அழைத்து வஸீயத் (மரணத்திற்கு பின் செயலாற்ற) கூறினார்கள். எனது ஜனாஸா தொழுகையை அப்பொழுது உயிருடன் இருந்த மூத்த சஹாபி ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்களை கொண்டு நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். அதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஹிஜ்ரி 55 இல் தனது 83 ஆம் வயதில் முஆவியா (ரழி) அவர்களின் ஆட்சி காலத்தில் மரணமடைந்தார்கள்.
மதீனாவிற்கு அருகில் அகீக் என்ற இடத்தில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு செய்தி சொல்லிவிட பட்டது. அவர் அங்கிருந்து வர வேண்டும். எல்லோரும் மஸ்ஜித் அந்நபவியில் உள்ளனர். மதீனாவின் அன்றைய கவர்னர் மர்வான், இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு வீடு தானம் கொடுத்த சஹாபியின் ஜனாஸா தொழுகை வைக்க மதீனா கவர்னர் மர்வான் வருகிறார். அர்கம் (ரழி) அவர்களின் மகன் அவரிடம் “எனது தந்தையின் வஸீயத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்த வேண்டும் என்பது. அவருக்கு தகவல் கொடுத்து விட்டோம். இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள், நாங்கள் அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.” என்றார்கள்.
மர்வான் நான் தான் தொழுக வைப்பேன் என்று பிடிவாதமாக பேசவில்லை, ஆனால் அதற்கு மாறாக ”அல்லாஹ்வின் தூதர் அவர்களின் மிகச் சிறந்த தோழர் அர்கம் அவர்களுடைய ஜனாஸாவை காக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்களா? கண்ணுக்கு தெரியாத எங்கிருக்கிறார் என்று தெரியாத ஒரு சஹாபியின் வருகைக்காக வேண்டி நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதெல்லாம் தவறாகத் தெரியவில்லையா?” என பேச ஆரம்பித்தார். ”இல்லை தந்தையின் வஸீயத்து கொஞ்சம் பொறுக்கலாமே” என்றார் அர்கமின் மகன், மர்வான் கேட்கும் நிலையில் இல்லை. அங்கிருந்த மக்சூமிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து நின்று மர்வானை பார்த்து சத்தம் போட ஆரம்பித்தார்கள்.
”இது வந்து ஜனாஸா எங்கள் வீட்டுடையது, இது எங்களுடைய விருப்பம், அடக்கம் செய்வது மற்ற காரியங்களில் அரசு தலையீட வேண்டியது இல்லை. மர்வான் தயவு செய்து நீங்கள் விலகுங்கள்” எனக் கூறினார்கள். வார்த்தை சண்டை நடைபெற்று முடிவதற்க்குள் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் வந்து விடுகிறார்கள்.
மதீனா முனவ்வராவில் மஸ்ஜித் அந்நபவியில் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் தலைமையில் தொழுகை நடைபெற்று ஜன்னத்துல் பஃகீயில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கைஸுரானுடைய இல்லம்
கலீபா அல் மன்சூரின் காலம் வரை அர்க்கமுடைய வழித்தோன்றல்கள் மக்காவிலுள்ள அர்க்கமுடைய இல்லத்தில் வாழ்ந்து வந்தனர். ஆனால் அக்கலீபா தம்முடைய குடும்பத்தினர் வாழ்வதற்கு அதனைப் பெரிதும் விரும்பியதனால் அவர்கள் அதனை அவருக்கு விற்றனர். சில காலம் ஹாரூன் அல்ரஷீத் மன்னரின் அன்னை கைஸுரான் அதில் வாழ்ந்து வந்தார். எனவே அது ‘கைஸுரானுடைய இல்லம்’ என்றும் அழைக்கப் பட்டது.
பின்னர் சவுதி அரேபியா என நாடு உறுவாகிய பின் அந்த வீடு ‘தாருஸ் ஸலாம்’ அமைதி இல்லம் என அழைக்கப்பட்டது. அந்த வீட்டில் “ஹாதா தாருல் அர்க்கம்” என்ற வாசகம் அரபியில் பொறிக்கப்பட்டு இருந்தது. இன்றைய நிலையில் கஃபாவின் விரிவாக்க பணியால் கஃபாவுடன் இணைக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில் உள்ள வாசலுக்கு ‘பாபுல் அர்கம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...