அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு
அம்மார் இப்னு யாஸிர் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி. 570 - கி.பி.657) அவர்களின் மற்றொரு பெயர் அபுல் யஹ்ஸான் என்பதாகும். இவர்களை இப்னு சுமையா என்றும் அழைக்கப்பட்டு வந்தனர். நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான இவர் இஸ்லாத்தை தழுவியதால் குறைஷிகளின் கடுமையான கொடுமைகளுக்கு ஆளாகியது மட்டுமின்றி, தனது தாய் சுமையா(ரழி), தந்தை யாஸிர்(ரழி) ஆகிய இருவரையும் குறைஷி அபூஜஹ்லின் உச்சகட்ட கொடுமைகளால், இஸ்லாத்திற்காக உயிர் நீத்த முதல் தியாகிகளின் வாரிசு இவர். திருக்குர்ஆனிலுள்ள 2:207, 3:62, 6:52, 122, 16:108-111, 29:2, 39:12 ஆகிய வசனங்கள் இவர்களையே குறிப்பன என்று கருதப்படுகிறது.
பிறப்பு மற்றும் ஆரம்ப கால வாழ்வு
இவர்களின் தந்தை யாஸிர் தம் உடன்பிறந்தார் ஒருவரைத் தேடித் தம்முடைய மற்றொரு உடன் பிறந்தாருடன் யமனிலிருந்து மக்காவிற்கு வந்து மக்ஸூம் கிளையைச் சேர்ந்த ஹுதைபாவின் ஆதரவில் அங்கேயே தங்கி வாழலானார். ஹுதைபா, தம் அடிமைப் பெண் சுமையாவை யாஸிருக்கு மணமுடித்து வைத்தார். இத்தம்பதியினருக்கு கி.பி. 570இல் அம்மார் (ரழி) மக்காவில் பிறந்தனர். பின்னர் ஹுதைபா, சுமையாவுக்கு விடுதலை நல்கவே சிறுவர் அம்மாருக்கும் விடுதலை கிடைத்தது.
இஸ்லாத்தை தழுவுதல்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அர்க்கத்தின் இல்லத்தில் வைத்து இரகசியமாக இஸ்லாமியப் பிரச்சாரம் செய்யும் பொழுது அம்மார் (ரழி) அவர்களும் இஸ்லாத்தைத் தழுவினர். பின்னர் இவர்களின் தந்தை யாஸிரும், தாயார் சுமையாவும் இஸ்லாத்தை தழுவினார்கள். அம்மார் இப்னு யாஸிர், யாஸிர், அவரது மனைவி சுமைய்யா (ரழியல்லாஹு அன்ஹும்) ஆகியோர் மற்ற கோத்திரத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களில் முதன்மையானவர்களாவர்.
குறைஷி அபூஜஹ்லின் கொடுமைகள்
அம்மார் இப்னு யாஸிர் (ரழி), அவர்களது தகப்பனார் யாஸிர், தாயார் சுமய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹுதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர். இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் 'அப்தஹ்' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடு மணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர். இதனைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவர்களின் வேதனைகளின் உச்சமாக இவர்களின் தந்தை யாஸிர் (ரழி) உடைய இரண்டு கால்களையும் இரண்டு ஒட்டகைகளின் பின்னங்கால்களில் இணைத்து அவற்றை எதிரும் புதிருமாக விரட்டி அவருடைய உடலை இரு கூறாகக் கிழித்து அவரைக் கொன்றொழித்தனர். வயது முதிர்ந்து இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் (ரழி) அவர்களை அபூ ஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணியாவார்.
அவர்களது மகனாரான அம்மாரை பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீரில் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர். ''முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழவேண்டும். அப்போது தான் உன்னை இத்தண்டனையிலிருந்து விடுவிப்போம்'' என்றும்கூறினர். வேதனை தாளாத அம்மார் (ரழி) அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார். அதற்குப் பின் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான். (இப்னு ஹிஷாம்)
(ஆகவே,) எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர், அல்லாஹ்வை (நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்.) அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்ப்பந்தத்தின் மீதும் அவன் (இவ்வாறு) நிராகரித்தால் (அவன் மீது யாதொரு குற்றமுமில்லை.) எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இவ்வாறு செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு. (அல்குர்ஆன் 16:106)
ஒரு முறை குறைஷிகள் இவர்களைத் தீயிலிட்டுத் துன்புறுத்திய பொழுது அவ்வழியே வந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள், “நெருப்பே! நீ இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு ‘ஸலாமத்’தாகக் குளிர்ந்தது போன்று அம்மாருக்கும் குளிர்ந்து விடு!!” என்று கூறினர்.
ஹிஜ்ரத்
குறைஷிகளின் கொடுமை தாங்க இயலாது முதன் முதலாக அபிஸீனியாவில் குடியேறியவர்களில் இவரும் ஒருவர். பின்னர் மதீனாவிற்கு வந்தார். குபா வந்து சேர்ந்த அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அங்குப் பள்ளி வாயிலை நிர்மாணிக்கத் துவங்கி அதனைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை இவர்களிடமே ஒப்படைத்துவிட்டு மதீனா புறப்பட்டனர். மதீனா பள்ளிவாயிலின் நிர்மாண வேலையிலும் இவர்கள் பெரும் பங்கு கொண்டனர். அப்பொழுது இவர்கள் இருவர் தூக்கும் பளுவைத் தூக்கிச் செல்வதைக்கண்ட நபி (ஸல்) அவர்கள், “அம்மாருக்கு சுவனத்தில் இரட்டிப்புக் கூலி கிடைக்கும்” என்று கூறினர்.
பிரியமானவர்
இவர்கள் மதீனா பள்ளிவாயிலின் நிர்மாண வேலையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, “ஒருவர் பள்ளிவாயில் எழுப்ப இரவு பகலாகப் பாடுபடுகிறார். மற்றொருவரோ வேலையைக் கழுப்பிக் கொண்டு வெருமனே அமர்ந்துள்ளார்” என்று பாடினார். அதை கேட்ட ஒருவர், தம் கையில் இருந்த கழியைக் காட்டி, “நீர் பாடுவதை நான் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். தொடர்ந்து பாடுவீராயின் உம்மூக்கை உடைத்து விடுவேன்” என்று கூறினார். இது அண்ணல் நபி (ஸல்) அவர்களின் செவிப்பட்டதும் அவர்கள் சினமுற்று, “என்ன! அவர் உங்களைச் சுவனத்தின் பக்கம் அழைக்கும் பொழுது நீங்கள் அவரை நரகத்தின் பக்கம் இழுக்க நினைக்கின்றீர்களா? அவர் எனக்கு என் முகம் போன்று பிரியமானவர். அவருக்குச் செய்யப்படும் எந்தத் தீங்கும் மன்னிக்கப்பட மாட்டாது” என்று கூறி இவர்களின் முகத்திலும், தலையிலும் உள்ள மண்ணைத் துடைத்தார்கள்.
சிறந்த போர் வீரர்
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நக்லாவுக்கு முதன்முதலாக அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷின் தலைமையில் அனுப்பிய குழுவிலும் இவர்கள் இருந்தனர். பத்ரு போரிலும் பங்கு பெற்றார்கள். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடத்திய எல்லாப் போர்களிலும் இவர்கள் பங்கு கொண்டுள்ளனர். அபூபக்ர் (ரழி) அவர்களின் கிலாஃபத்தின் போது நடந்த யமாமப் போரில் இவர்கள் தம் காது ஒன்றை இழந்தார்கள். இவர்களை ‘ஒற்றை காதினர்’ என்று ஒருவர் இழித்துரைத்த பொழுது, “நீர் என்னுடைய நல்ல காதையல்லவா இழித்துரைக்கிறீர்” என்று கூறித் தாம் ஒரு காதை இறைவனுக்காக இழந்ததைப் பெருமையாகக் கூறாமல் கூறினார்கள் இவர்கள்.
ஆளுநராக அம்மார் (ரழி)
ஹிஜ்ரி 21-இல் உமர் (ரழி) அவர்கள் இவர்களைக் கூஃபாவின் ஆளுநராக நியமித்தனர். ஓராண்டோ, ஈராண்டுகளோ இவர்கள் அப்பதவியில் இருந்தனர். உஸ்மான் (ரழி) அவர்கள் கலீபாவாக வருவதை இவர்கள் விரும்ப வில்லை. துவக்கத்திலிருந்தே இவர்கள் அலீ (ரழி) அவர்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள் என்றும் அபூபக்ர் (ரழி) அவர்களுக்குக் கூட இவர்கள் ‘பைஅத்’ செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.
அலீ (ரழி) அவர்களுக்கு ஆதரவு
அலீ (ரழி) அவர்கள் கலீபாவான பொழுது அவர்களின் வலக்கரம் போன்று விளங்கிய இவர்கள் கூஃபா மக்களை அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு செய்வதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டனர். உள்நாட்டுப் போர் ஏற்பட்ட சமயம், “உண்மை அம்மாரின் பக்கலிலேயே இருக்கும்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறிய வாசகம் அலீ (ரழி) அவர்களை எதிர்த்து நின்ற ஸுபைர் (ரழி) முதலானவர்களைக்கூடத் தங்களின் போக்கு சரியா, தவறா என்று ஐயுறுமாறு செய்தது.
ஸிஃப்ஃபீன் போரில் வீர உரை
ஹிஜ்ரி 37-இல் அலீ (ரழி) அவர்களுக்கும் முஆவியா (ரழி) அவர்களுக்கும் இடையே நடந்த ஸிஃப்ஃபீன் போருக்கு முன் இவர்கள் இராக் மக்களை நோக்கி, “அல்லாஹ்வைன் மீது ஆணையாகக் கூறுகிறேன்; நியாயம் நம் பக்கமே உள்ளது. அலீயின் படையணியில் சேர்ந்து போர் செய்தவருக்கே இவ்வுலகில் இஸ்லாத்திற்காக உயிர் நீத்த பேறும், மறுமையில் சுவனப் பெரு வாழ்வும் கிடைக்கும். எனவே என்னைப் பின்பற்றுங்கள்! சுவனத்து வாயில் திறந்து கிடக்கிறது. சுவனத்துக் கண்ணழகிகள் உங்களை வரவேற்கக் காத்து நிற்கின்றார்கள். நாம் இப்போரில் இறப்பெய்தின் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் சுவனத்தில் சந்திப்போம்” என்று வீர உரை ஆற்றினர்.
போரில் வீர மரணம் (ஷஹீது)
வீர உரை ஆற்றிய பின்னர் தாகத்தால் இவர்கள் தண்ணீர் கேட்க, தண்ணீருக்குப் பதிலாகப் பால் வந்தது. அதைக் கண்ட இவர்கள், ஒரு முறை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தம்மை நோக்கி, “இப்னு சுமையா! உம் கடைசி உணவு பாலாக இருக்கும்” என்று கூறியதை ஆங்கிருந்தோரிடம் எடுத்துரைத்து விட்டு, “இன்று நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் சந்திக்கப் போகிறேன்” என்று கூறிப் போர்களத்தில் பாய்ந்து வீரப் போர் செய்து கி.பி. 657 இல் இறப்பெய்தினர். இவர்களின் அடக்கவிடம் ஸிஃப்ஃபீனில் இருக்கிறது.
இவர்களுக்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ‘தையிபுல் முதையிப்’ என்று பெயரிட்டிருந்தனர். இவர்களிடமிருந்து அலீ (ரழி), அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) ஆகியோர் பல ஹதீதுகளைக் கேட்டறிந்து மக்களுக்கு அறிவித்துள்ளனர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...