Home


அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப்

 ரழியல்லாஹு அன்ஹு

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரழியல்லாஹு அன்ஹு (கி.பி.568- கி.பி.653) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தையார் ஆவார். இவர்கள் நபி (ஸல்) அவர்களை விட இரண்டு வயது மூத்தவர் என்று இப்னு ஹஜர் கூறுகிறார். இவர்கள் பெரிய வணிகராக மக்காவில் இருந்தனர். வாணிபத்தின் பொருட்டு அடிக்கடி வெளிநாடும் சென்று வந்தனர். மக்கா வரும் யாத்திரியர்களுக்கு தண்ணீர் அளிக்கும் பணி இவர்களுடையதாக இருந்து வந்தது. இவர்களின் மறு பெயர் அபுல் ஃபழ்ல் என்பதாகும். பத்ரு போரில் கைது செய்யப்பட்ட இவர், அதன் பின்னர் இஸ்லாத்தை தழுவினார்.

ஆரம்ப கால வாழ்வு

        மக்காவில் குறைஷித் தலைவராயிருந்த அப்துல் முத்தலிப் அவர்களின் மகனான இவர்கள் மக்காவில் கி.பி 568 இல் பிறந்தார்கள். இவரது தாயார் பெயர் நுதைலா என்பதாகும். இவர்களின் உடன்பிறந்தார் திரார் என்பவராவார்.

        ஒரு முறை ஒருவர் அப்பாஸ் (ரழி) அவர்களை நோக்கி, “தாங்கள் பெரியவரா? அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பெரியவரா? என்று வினவிய போது, “வயதால் நான் பெரியவன். தகுதியால் அவர் பெரியவர்” என்று அப்பாஸ் (ரழி) அவர்கள் பதிலிறுத்தனர்.

பணிகள் மற்றும் சேவை

        மக்காவில் பெரும் வணிகராக திகழ்ந்த இவர், வாணிபத்தின் பொருட்டு அடிக்கடி வெளி நாடுகளுக்கு சென்று பொருள் ஈட்டியும் வந்தார்கள். மக்கா வரும் யாத்திரிகர்களுக்குத்  தண்ணீர் அளிக்கும் பணி இவர்கள் பொறுப்பில்  இருந்து வந்தது. தாயிஃப்பில் இருந்த தம் தோட்டத்தில் விளைந்த கொடி முந்திரிப் பழங்களைத் தண்ணிரிலிட்டு, இவர்கள் யாத்திரிகர்களுக்கு வழங்கி வந்தனர்.

இஸ்லாத்தை ஏற்காமல் உதவி

        இவர்களின் மனைவி உம்மு ஃபழ்ல் ஏற்கெனவே இஸ்லாத்தைத் தழுவி இருந்த போதினும், இவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அதே சமயம் அவரது தந்தை அப்துல் முத்தலிபை போல நபி (ஸல்) அவர்களுக்கு உதவிகரமாகவும் அனுசரனையாகவும் இருந்துள்ளார்கள்.  தாம் குறைஷிகளிடம் கடன் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற இயலாது என்பதற்காக இவர்கள், தாம் இஸ்லாத்தைத் தழுவியதை மறைத்து வைத்திருந்தனர் என்று கூறுவர். மேலும் குறைஷிகளின் வற்புறுத்தலின் மீது பத்ரு போரில் கலந்து கொண்ட  இவர்கள், குறைஷிப் படையினருக்கு ஒரு நாளைக்கு உணவு வழங்குவதற்காக இருபது உக்கா தங்கத்தைத் தம்முடன் கொண்டு வந்திருந்தனர். எனினும் இவர்களின் முறைநாள் வராததனால் அது செலவழிக்கப்படவில்லை.

பத்ரு போர்

        பத்ரு போரில் நபி (ஸல்) முஸ்லிம்களுக்கு தனது இறுதிக் கட்டளையை அறிவித்தார்கள். ‘‘எதிரிகள் மீது பாயுங்கள்'' என்று கூறி, போர் புரிய முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டினார்கள். மேலும் கூறினார்கள், ‘‘முஹம்மதின் உயிர் எவன் கைவசமுள்ளதோ அவன் மீது ஆணையாக! இன்றைய தினத்தில் போர் புரிந்து சகிப்புடனும், நன்மையை நாடியும், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்தவராக யார் கொலை செய்யப்படுகிறாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைவிப்பான். வானங்களையும் பூமிகளையும் அகலமாகக் கொண்ட சொர்க்கத்தின் பக்கம் விரைந்தோடுங்கள்'' என்று கூறி போருக்கு ஆர்வமூட்டினார்கள்.

        எதிர்த்துத் தாக்க வேண்டுமென நபி (ஸல்) கட்டளைப் பிறப்பித்தவுடன் எதிரிகளின் மீது முஸ்லிம்கள் பாய்ந்தனர் அணிகளைப் பிளந்தனர் தலைகளைக் கொய்தனர். அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வேண்டும் என்ற தீராத தாகத்தில் இருந்த அவர்கள், எதிரிகளை நிலை தடுமாறச் செய்தனர். இதனால் எதிரிகளின் தாக்கும் வேகமும் குறைந்தது வீரமும் சோர்வுற்றது. எதிரிகளால் முஸ்லிம்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

அதுமட்டுமல்ல! அன்று நபி (ஸல்) கவச ஆடை அணிந்து, யாரும் நெருங்க முடியாத அளவு எதிரிகளுக்கருகில் நெருங்கி நின்று,

அதிசீக்கிரத்தில் இந்த கூட்டம் சிதறடிக்கப்படும். மேலும் (இவர்கள்) புறங்காட்டி ஓடுவார்கள். (அல்குர்ஆன் 54:45)

என்று உறுதியுடன் மிகத் தெளிவாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்களின் இக்காட்சியைப் பார்த்த முஸ்லிம்களுக்கு உற்சாகமும் ஆவேசமும் பன்மடங்கு பெருகின.

பத்ரு போரில் கைது

        அன்சாரிகளில் ஒருவர் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபை கைது செய்து நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார். அப்பாஸ் ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இவர் என்னை கைது செய்யவில்லை. என்னை கைது செய்தது சிறந்த குதிரையின் மீது அமர்ந்து வந்த மிக அழகிய முகமுடைய ஒருவர் தான். ஆனால், இப்போது அவரை நான் இந்தக் கூட்டத்தில் பார்க்கவில்லையே?'' என்று கூறினார். அதற்கு அன்சாரி ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் தான் அவரைக் கைது செய்தேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ‘‘நீங்கள் அமைதியாக இருங்கள்! அல்லாஹ் தான் சங்கைமிக்க ஒரு வானவரின் மூலம் உங்களுக்கு உதவி செய்தான்'' என்று கூறினார்கள்.

        இவர்கள் கைது செய்யப்பட்டு இவர்களின் பொருள்கள் அந்த இருபது உக்கா தங்கம் முஸ்லிம்களால் கைப்பற்றப்பட்டது. பத்ருக் களத்தில் சிறைசெய்யப்பட்டுத் தளைகளால் பிணைக்கப்பட்ட இவர்கள் துன்புற்று முனகியதன் காரணமாக அண்ணல் நபி(ஸல்) அவர்களுக்கு  உறக்கமே வரவில்லை. இது கண்டு நபித்தோழர்கள் இவர்களின் தளைகளைத் தளர்த்தி விட்ட பொழுது மற்றக் கைதிகளுக்கும் அவ்விதமே செய்யுமாறு பணித்தனர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

விடுதலை பணம் கட்டி, இஸ்லாத்தைத் தழுவியது

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள், விடுதலைப்பணம் வழங்கித் தம்மையும், தம் உறவினர் மூவரையும் விடுவித்துக் கொள்ளுமாறு இவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியபொழுது, ”அந்த் இருபது உக்கா தங்கத்திற்குப் பகரமாக எங்களை விடுதலை செய்யுங்கள்” என்றார்கள் இவர்கள். “முடியாது, அது இறைவன் எங்களுக்கு அளித்த அருட்கொடை” என்றனர் நபி (ஸல்) அவர்கள், “அவ்விதமாயின் என்ன செய்வது? என்னிடம் பணம் இல்லையே” என்று இவர்கள் கூற, “மக்காவிலிருந்து புறப்படுமுன் தாங்கள் உம்மு ஃபழ்லிடம் கொடுத்து வந்த பணம் என்னவாயிற்று? என்று மடக்கினர் நபி (ஸல்) அவர்கள். திரை மறைவில் நடந்த இதனை அணுவத்தனையும் விடாது நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு வியப்புற்ற இவர்கள், அவர்களிடமே இஸ்லாத்தைத் தழுவி விடுதலைப் பணம் நல்கித் தம்மையும் தம்மைச் சேர்ந்த மற்ற மூவரையும் விடுவித்துக் கொண்டனர்.

உஹது போருக்கு வர மறுப்பு

        இதன் பின் இவர்கள் மக்காவில் தங்கிக் குறைஷிகளின் நடவடிக்கைகளைப் பற்றி நபி (ஸல்) அவர்களுக்கு இரகசியமாகத் தகவல் தெரிவித்து வந்தனர். உஹத் போரில் கலந்து கொள்ளுமாறு குறைஷிகள் இவர்களை வற்புறுத்திய பொழுது, “பத்ருப் போரில் எனக்கு ஏற்பட்ட இழப்பே போதும், போதும் என்றாகிவிட்டது” என்று கூறி விட்டனர் இவர்கள்

ஹிஜ்ரத் செய்தவர்களில் இருதியானவர்

        உம்ரா செய்வதற்காக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்கா வந்த பொழுது தம் மைத்துனி மைமூனாவை அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு மணமுடித்து வைத்தனர் இவர்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் மக்கா படையெடுப்பின் போது, மதீனாவில் இருந்து மக்கா வரும் வழியில் ராபிக் என்ற இடத்தில் அப்பாஸ் (ரழி) அவர்களை உடைமைகளுடன் சந்தித்தார்கள். இவர்களைக் கண்டதும் பெரிதும் மகிழ்வுற்ற நபி (ஸல்) அவர்கள். “நான் நபிமார்களில் இறுதியானவர் போன்று தாங்கள் ‘ஹிஜ்ரத்’ செய்தவர்களில் இறுதியானவர்கள்” என்று கூறினர்.

இரத்தம் சிந்தாத மக்கா வெற்றி

        இவர்களின் உடைமைகளை மக்காவுக்குத் திருப்பி அனுப்புமாறு செய்து இவர்கள் மூலமாக மக்கா வெற்றியை இரத்தம் சிந்தாத வகையில் ஆக்கியருளுமாறு இறைவனிடம் இறைஞ்சினர். அப்பொழுது அபூசுஃப்யானுக்கு நபி (ஸல்) அவர்களிடம் அபயம் பெற்றுத்தந்த பெருமை இவர்களுக்கு உண்டு.

        மக்கா வெற்றியின் போது யாத்திரிகர்களுக்குத் தண்ணீர் வழங்கும் உரிமையை நபி (ஸல்) அவர்கள் அப்பொழுது இவர்களுக்கு உறுதிப்படுத்தி, “இது சாதாரணப் பதவியல்ல” என்று கூறினர்.

இவர்களது உரத்த குரல் வளம்

        ஹுனைன் போரில் இவர்கள் நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்று அவர்களைக் காத்தனர். இவர்கள் நபி (ஸல்) அவர்களின் ஆணைப்படி பெரும் குரல் கொடுக்கவே ஓடிய அகதிகளும், ஆதரவாளர்களும் திரும்பி வந்து வீரப் போர் புரிந்து இஸ்லாத்திற்கு வெற்றியை ஈட்டித் தந்தனர்.

        இவர்கள் உரத்த குரல் பெற்றிருந்தனர் என்றும் இரவில் மதீனாவின் அண்மையிலிருக்கும் ஸாலா என்னும் குன்றின் மீது ஏறி நின்று எட்டுக் கற்கள் தொலைவிலுள்ள அல்காபா என்னும் இடத்தில் வாழ்ந்து வந்த தம் அடிமைகளை உரத்த குரலிட்டுக் கூவி அழைப்பர் என்றும், ஒருமுறை எதிரிகள் வைகறையில் படையெடுத்து வந்த பொழுது, “ எதிரிகள் வருகிறார்கள். வாருங்கள் போருக்கு” என்று இவர்களிட்ட அழைப்பொலி கேட்டுப் பல பெண்களுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டு விட்டதென்றும் அல் முபர்ரத் தம் ‘காமில்’ என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.

தந்தையின் உடன்பிறந்தார் தந்தையைப் போன்றவராவர்

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவர்களுக்கு அதிக மதிப்பு அளித்து வந்தனர். இவர்களுடன் உரையாடும் பொழுது அவர்கள் தாழ்ந்த குரலிலேயே உரையாடினர். அதற்குக் காரணம் வினவப்பட்டபொழுது, “நீங்கள் எவ்வாறு என்னுடன் தாழ்ந்த குரலில் உரையாடுகின்றீர்களோ அவ்விதமே இவர்களுடனும் உரையாடுமாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் கூறினர்” என்றனர் நபி (ஸல்) அவர்கள்.

        ”எவர் என் தந்தையின் உடன்பிறந்தாருக்குத் துன்பம் இழைக்கின்றாரோ அவர் நிச்சயமாக எனக்குத் துன்பம் இழைத்தவராவர். ஒருவரின் தந்தையின் உடன்பிறந்தார் அவரின் தந்தையைப் போன்றவராவர்” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினர்.

பங்களிப்பு மற்றும் சிறப்புக்கள்

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறந்ததும் அவர்களின் உடலைக் குளிப்பாட்டுவதிலும் இவர்கள் பங்கு கொண்டனர்.

        பிறகு ரோமானியப் பேரரசை எதிர்த்து நடத்தப்பட்ட இஸ்லாமியப் படையெடுப்புகளுக்குப் பண உதவி நல்கினர்; மதீனாவின் பள்ளிவாயிலை விரிவுபடுத்துவதற்காகத் தம் வீட்டையும் அன்பளிப்பாக வழங்கினர். உமர் (ரழி) அவர்கள், இவர்களுக்கு அரசாங்கக் கருவூலத்திலிருந்து உதவி பணம் அளித்து வந்தார்கள்.

மழை பொழிய துஆ

        ஒரு முறை மதீனாவிலும், அதன் சூழலிலும் மழை பெய்யாது பஞ்சம் ஏற்பட்ட பொழுது உமர் (ரழி) அவர்கள் மக்கள் புடைசூழ ஊருக்கு வெளியே இவர்களை அழைத்துச் சென்று, “இறைவனே! உன்னுடைய திருத்தூதர் எங்களுடன் இல்லை. எனினும் அவர்களின் சிறிய தந்தையார் எங்களுடன் இருக்கிறார்கள். அவர்களின் பொருட்டாவது மழையைப் பொழியச் செய்வாயாக!” என்று இறைஞ்ச, அடுத்த கணமே மழை பொழிந்ததென இப்னு ஹல்லிகான் குறிப்பிடுகின்றார்.

        பிற்காலத்தில் சதக்கத்துல்லா அப்பா, ஸலாஹுத்தீன் அப்பா, மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆகியோர் தாங்கள் இயற்றிய மழை பைத்துகளில் இவர்களின் பொருட்டால் மழை பொழிந்தருளுமாறு உருக்கமாகப் பாடியுள்ளனர்.

முதுமை மற்றும் மரணம்

        முதுமையில் கண்ணொளி மங்கப் பெற்றிருந்த இவர்கள் கி.பி 653 ஆம் ஆண்டில் மதீனாவில் மரணமடைந்து, அவர்களது உடல் ஜன்னத்துல் பகீஃயில், பாத்திமா (ரழி) அவர்களின் அடக்கவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டனர்.

        கி.பி750ஆம் ஆண்டிலிருந்து கி.பி 1258 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த அப்பாஸியக் கலீபாக்கள் இவர்களின் புதல்வர் அப்துல்லாஹ்வின் வழித்தோன்றல்களேயாவர்.

        


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Badr

பத்ர் போர் மாபெரும் இஸ்லாமியப் போர்களில் முதலாவது போர், முழு விபரம்...